தேங்கி கிடக்குது உள்ளாட்சி பாக்கி வைப்பதா நல்லாட்சி?

153

-சு. வீரமணி

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து வெற்றிபெற்றவர்கள் பதவியேற்று விட்டனர். ஆனால், பெரும்பான்மை ஊர்களில் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. காரணம், ஊழியர்களுக்கு சம்பளம் போடவே நிதியில்லை என கை விரிக்கிறார்கள்!

ஏன் இப்படியொரு நிலை உருவானது?

தமிழக உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது. அதைக் கேட்டு தமிழகம் பலமுறை வலியுறுத்திவிட்டது. தேர்தல் நடந்தால்தான் தரமுடியும் என விதிகளை காட்டி கூறிவந்த மத்திய அரசு, இப்போது தேர்தல் முடிந்தபின்னும் தாமதம் செய்து வருகிறது. உள்ளாட்சிக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காத காரணத்தால், உள்ளாட்சி நிர்வாகம் செயல்பட முடியாத நிலையில் முடங்கி இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர்.

தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?

கடந்த நான்கு ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்காத காரணத்தால் பல்வேறு அடிப்படை சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சீர்செய்யப்படாமல் தவிக்கின்றனர் மக்கள். இந்நிலையில், தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நேரில் சந்தித்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னர் இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “மத்திய அரசின் 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி தமிழக நகர்ப்புறம் மற்றும் உள்ளாட்சித் துறைகளுக்கு 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை செயலாக்க மானியத் தொகை வகையில் ரூ. 2029 கோடியும், 2019-20 ஆண்டுகளுக்கான அடிப்படை மானியத் தொகையில் ரூ. 4,345 கோடி என மொத்தம் ரூ.6,374.69 கோடியை விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது மத்திய அரசு.

மேலும், தமிழக ஊரக பகுதிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 2019-20ஆம் ஆண்டுக்கு ஊதியம் மற்றும் கட்டுமான நிர்வாகச் செலவுகளுக்கு மத்திய அரசால் கொடுக்கப்படும் இரண்டாவது தவணைத் தொகையான ரூ. 2,939 கோடி, இதே வகையில் 2020 பிப்ரவரி 10ஆம் தேதி வரையிலான ரூ. 609.18 கோடி சேர்த்து ரூ.3, 548 கோடி நிதி என மொத்தம் ரூ. 9922.69 கோடியை விடுவிக்க வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

இதேபோல தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர்
ஓ.பன்னீர்செல்வமும் உள்ளாட்சிஅமைப்புகளுக்கான மேற்சொன்ன நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 15வது நிதிக்குழு பரிந்துரைகளின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ள மானியங்கள் 31 சதவீதம் குறைந்துள்ளது என்றும், 15வது நிதிக்குழு கையாண்ட தவறான கணக்கீட்டு முறையே இத்தகைய மானிய குறைவிற்கு காரணம் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அழுத்தம் கொடுக்காத மாநில அமைச்சர்கள்!

இதுபற்றி நம்முடன் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சி.மகேந்திரன், “பஞ்சாயத்து ராஜ்யம் என்பது மூன்றாவது அரசு. அதாவது நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு இணையானது பஞ்சாயத்து ராஜ்ய அமைப்பு. அதற்கான கட்டுமானத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் முறையாக நிதியை வழங்கவேண்டும் என்பதுதான் பஞ்சாயத்து ராஜ்ய சட்டத்தின் சாராம்சம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் பஞ்சாயத்து ராஜ்யத்தின் பெயரில் வரும் நிதியை தங்களுக்கான திட்டங்களுக்காக செலவு செய்துவிடுகின்றனர். உள்ளாட்சிகளுக்கு நிதியை கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து கடைசியில் அந்த நிதியே இல்லையென்று மத்திய அரசு சொல்லிவிடுகிறது. அதைத்தான் இப்போதும் மத்திய அரசு சொல்கிறது.

இன்று இருக்கும் அதிமுக அரசு முதுகெலும்பில்லாத அரசு. மத்திய ஆட்சியாளர்கள் தயவில்தான் ஆட்சி நடத்துகிறது, அதனால், அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிதி வரவில்லை என்றால் அப்போதே இதற்கு கடுமையான எதிர்வினையாற்றியிருக்க வேண்டும். ஆனால், இப்போதுதான் இவர்கள் கோரிக்கையே வைக்கிறார்கள்.

மத்திய அரசு வேண்டுமென்றே உள்ளாட்சி நிதியை கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறது, அதனை தட்டிக்கேட்கும் திராணியில்லாமல் மாநில அரசு இருக்கிறது. இப்போது உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பதவியேற்றபிறகு வேறு வழியில்லாமல் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத காரணத்தால் சாலைவசதி, கட்டுமானங்கள், குடிநீர் வசதி, சுகாதார வசதி என்று பல்வேறு பணிகள் தேங்கி கிடக்கிறது. இப்போது உள்ளாட்சி பிரதிநிதிகளும் பதவியேற்றபிறகு அவர்களிடம் மக்கள் கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர், எனவே, மத்திய அரசின்மீது பழிபோட்டு தப்பிக்கலாம் என்றுதான் இப்போதும்கூட மாநில அரசு கோரிக்கை வைக்கிறது” என்கிறார் காட்டமாக.

தொடர்ந்து இதுபற்றி பேசும் திமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், “உள்ளாட்சி தேர்தலை நடத்தினால்தான் இந்த பாக்கித்தொகையை வழங்குவோம் என்று மத்திய அரசு சொல்லி வந்தது. ஆனால், இப்போது உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தபிறகும் அந்த நிதியை கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர்.

உள்ளாட்சி நிதி மட்டுமில்லாமல், மாநிலத்திற்கு கொடுக்கவேண்டிய பல்லாயிரம் கோடி நிதியையும் தராமல் மத்திய அரசு இழுத்தடிக்கிறது. இவ்வாறு நிதியை தராமல் மத்திய அரசு இழுத்தடிக்கும்போதும் அதனை தட்டி கேட்கும் நிலையில் மாநில அதிமுக அரசு இல்லை.

கடந்த காலங்களில் கலைஞர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து மாநில அரசிற்கான நிதியை பெறுவார்கள். ஆனால், இப்போது மத்திய அரசின் தயவால் இந்த ஆட்சி நடப்பதால், இவர்களால் அழுத்தம் கொடுத்து நிதியை கேட்கமுடியவில்லை. மாநில அரசின் அமைச்சர்களின் ஊழல் பட்டியல், ஆவணங்கள் மத்திய அரசின் கையில் இருப்பதாலும் இந்த அமைச்சர்களால் எந்த அழுத்தமும் கொடுக்க முடிவதில்லை.

மத்திய அரசை சேர்ந்தவர்கள் மாஸ்டர்ஸ் போலவும், அதிமுக அரசை சேர்ந்தவர்கள் ஊழியர்கள் போலவும் சென்று மாதாமாதம் பெயருக்கு கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்கள் அதற்கு எந்த பதிலும் சொல்வதில்லை. வறட்சி நிவாரணம், புயல் நிவாரணம், கஜா புயல் போன்ற நிவாரணங்களுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் நிதிவேண்டும் என்று மாநில அரசு தொடர் கோரிக்கை வைத்தும் அதில் பத்து சதவீதம்கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை.

உள்ளாட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் தேங்கிக் கிடக்கிறது. ஆனால், அதனை செய்வதற்கு நிதி இல்லாமல் தவிக்கிறார்கள். இதேநிலை தொடர்ந்தால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த பணியுமே செய்யமுடியாமல் முடங்கும் சூழல் உருவாகும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் சாசனத்தின் 72வது பிரிவின்படி கட்டாயம் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கவேண்டும். ஆனால், இவர்கள் இப்படி நிதி தராமல் இழுத்தடிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்கிறார்.

அதிமுக என்ன சொல்கிறது?

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசும் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், “மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள் இல்லையென்றாலும்கூட மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சிறந்த முறையில் உள்ளாட்சி நிர்வாகம் நடந்தது. அதுபோல இனியும் சிறப்பான நிர்வாகம் நடக்கும். நமக்குக் கிடைக்க வேண்டிய மத்திய அரசின் நிதி என்பது நமது உரிமை. அதனை கேட்டு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு எடுத்துவருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பணிகளை செய்ய தொடங்கிவிட்டனர். அவர்களின் பணியை சிறப்பாக செய்ய மாநில அரசு எப்போதும் துணைநிற்கும்” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here