மூன்றெழுத்தில் நம் மூச்சிருக்கும்!

397

-ஜஸ்டின் துரை

21 நாட்கள் & தனிமை அது தனிமை

கோவிட்-19… கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணிய கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகையும் ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. 195 நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு நாளையும் அச்சத்திலேயே கடக்கின்றனர் மக்கள். உலகப்போரை விட மோசமான ஒரு பாதிப்பு நிகழுமோ என்று கவலை தெரிவிக்கின்றனர் உலகத் தலைவர்கள். பல கோடி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளதுடன், உழைப்பாளர்களின் வாழ்வாதாரத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது, கொரோனா!

இத்தனை களேபரத்திலும் நம்பிக்கையூட்டும் ஒரு செய்தி, முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய சீனாவில் தற்போது நோயின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இன்னொரு பக்கம் பயங்காட்டுகிறது, உலகின் மிகச்சிறந்த சுகாதாரத்தை கொண்ட ஐரோப்பிய நாடுகளே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருவது.

குறிப்பாக இத்தாலி, கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. ஸ்பெயின், ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கொரோனாவின் தாக்கத்தால் விழிபிதுங்கி நிற்கின்றன. கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்நாடுகள் கொரோனாவுக்கு எதிராக பெரும் சுகாதார யுத்தத்தையே முன்னெடுத்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா தாக்கம்

கொரோனா பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அதன் பரவல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 24-3-2020 அன்று நிலவரப்படி 23 மாநிலங்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிகளவிலான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15. இவர்களில் மதுரையைச் சேர்ந்த 54 வயது நிரம்பிய ஒருவர், எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். வெளிநாட்டுத் தொடர்பற்ற ஒருவருக்கு தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக கொரோனா வைரஸ் பரவும் விதத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நான்கு கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது.

முதல் கட்டம்: இறக்குமதி பரவல் (கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோருக்கு கொரோனோ வைரஸ் தொற்று கண்டறியப்படுவது)

இரண்டாம் கட்டம்: உள்நாட்டு பரவல். (வெளிநாட்டில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது)

மூன்றாம் கட்டம்: சமூகப் பரவல். (உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவுவது)

நான்காம் கட்டம்: தொற்றுநோய் பரவல் (எங்கு எவர் மூலமாகப் பரவியது என அறிய முடியாத அளவிற்கு உள்நாட்டிற்குள் அதீத அளவில் பரவும் அபாயக் கட்டம். சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய நாடுகள் நான்காம் கட்டத்தில் உள்ளன)

மதுரையில் வெளிநாட்டுத் தொடர்பற்ற நபர் நோய் தொற்றுக்கு ஆளாகியிருப்பதன் மூலம், தமிழகம் கொரோனா தொற்றின் மூன்றாவது நிலையான சமூகப் பரவலை எட்டியுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், கொரோனா தொற்று அபாயக் கட்டத்திற்கு பரவாமல் தடுக்கப்படுமா? மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைவு என்றாலும், ஒருவேளை நிலைமை மோசமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?

கொரோனோவை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாரா? கொரோனா தொற்றை தவிர்ப்பது எப்படி? மருத்துவர்கள் பலரிடமும் பேசினோம்.

சமூகப் பரவல் தொடங்கிவிட்டது!
டாக்டர். சிவபாலன்

இந்தியாவில் மூன்றாம் கட்டமான சமூக பரவுதல் நடக்கவில்லை என்று சொல்லி வருகிறார்கள். ஆனால், அனைத்து உறுதிசெய்யப்பட்ட கொரோனா நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்போது எப்படி புது நோயாளிகள் சமூகத்திலிருந்து உருவாகிறார்கள்? உலகளாவிய அட்டவணைகளை பார்க்கும்போது ஒவ்வொரு மூன்றாவது நாளும் நோய்த்தொற்று வந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக மாறுகிறது.

அதே நிலைதான் இந்தியாவிலும் இருக்கிறது. சமூகத்தில் இந்த நோய் பரவியிருந்தால்தான் இது சாத்தியம்.
அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்று வராத அல்லது சென்று வந்தவர்களை சமீபத்தில் சந்திக்காத, நோய் அறிகுறிகளுடன் உள்ள நபர்களுக்கு பரிசோதனையை செய்யும்போதுதான் உண்மையில் சமூகத்தில் கொரோனா பரவி இருக்கிறதா இல்லையா என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் இதுவரை 11 ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தென்கொரியாவில் ஒரு நாளுக்கு 20 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அப்படி செய்யப்பட்டதன் விளைவாகத்தான் 30 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கு மிக அதிகமாக தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ஆனால், அவர்கள் நோய்க்கான அறிகுறிகள் இல்லாமல் இருந்தார்கள். அதனால் எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி சமூகத்தில் இயங்கி வந்தார்கள். அவர்களிடமிருந்துதான் நோய் தொற்று பெரும்பாலும் பரவுகிறது. இவர்களிடமிருந்து முதியவர்களுக்கு பரவும்போது முதியவர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.

பெரும்பாலான 30 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அறிகுறியற்ற நிலையில் நோயை பரப்புகிறார்கள் என்பதை நாம் உணர்ந்தால்தான் இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இவர்களிடம் இருந்து முதியவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

மொத்தமாக முடக்குவதுதான் சிறந்த வழி!
டாக்டர். சென்பாலன்

கொரோனா தடுப்புமுறையை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று கான்டாக்ட் டிரேசிங் (Contact Tracing). நோய் தொற்றியவர்களிடம் தொடர்பு உடையவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவது. நோய் பரவுதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது, அதாவது வெளியில் இருந்து வருபவர்களால் மட்டும் நோய் பரவும் போது இந்த கான்டாக்ட் டிரேசிங் முறை பலனுள்ளதாக இருக்கும். சிங்கப்பூர் இம்முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி நோய் பரவுதலை பல நாட்களாக கட்டுப்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது இம்முறை சாத்தியப்படாது. அப்போது இரண்டாவது முறையான மொத்தமாக நகரங்களையே முடக்குவது தேவைப்படும்.

இந்தியா தற்போது ‘கான்டாக்ட் டிரேசிங்’ முறையில் இருந்து நகரங்களை முடக்கும் நிலைக்கு வந்துள்ளது. சமூகப் பரவல் நிகழும் போது அல்லது நிகழ்ந்துவிட்டதாக சந்தேகம் இருக்கும் போது மொத்தமாக முடக்குவதுதான் சிறந்த வழி. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது நோய் பரவுதல் தடைபடும். புதிதாக நோயாளிகள் உருவாவது நின்று கொள்ளை நோய் முடிவுக்கு வரும். சீனா, தென்கொரியாவில் இப்படித்தான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

ஆனால், வெறும் அறிவிப்பு மட்டும் மக்களை வீட்டிற்குள் முடக்காது. உணவுப் பற்றாக்குறை, பொருளாதார இழப்பு ஆகியவற்றை சரி செய்தால் மட்டுமே நகரங்களை முடக்குவது சாத்தியம். இல்லையென்றால் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காது, அதன்பின் இராணுவம் வந்தாலும் சிரமம்தான்.

இந்தியா உள்ளிட்ட அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் மருத்துவம், உணவு விநியோகம், மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பணிகளில் பணியாற்றுவோரே லட்சக்கணக்கில் இருப்பர். இவர்களை முற்றிலும் முடக்கவும் முடியாது. இவர்களில் குறைந்த சதவீதத்தினருக்கு பாதிப்பு வந்தாலே நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரங்களில் வரும்.

இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். செயற்கை சுவாசம் அளிக்கும் வெண்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளைத் தயாராக வைக்க வேண்டும். மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்களும் பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும். தனியார் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

நோய் பரவுதல் வேகம் எடுத்துள்ள இந்நிலையில் இவற்றை எல்லாம் தாமதமின்றி உடனே செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆனால், கொரொனாவிற்கு எதிராக இப்போதுதான் நாம் எழுந்து ஓடத் தொடங்கியுள்ளோம். புலிப்பாய்ச்சலில் துரத்தும் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க இந்த வேகம் போதுமா என்பதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.

தனிமைப்படுவது அவசியம்!
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவிக்கொண்டே இருக்கும் வரை அதை நாம் வெல்ல முடியாது. அதனால் இந்த நோயை வென்றுள்ள சீனா செய்த ஒட்டுமொத்த தனிமைப்படுத்துதலை தற்போது இந்தியா தனது தீர்வாக எடுத்துள்ளது. அதாவது, ஒரே நேரத்தில் முடிந்த வரை ஒட்டுமொத்த தேசத்தையும் வீடுகளுக்குள் தனிமைப்படுத்துவது. கிருமித்தொற்று கொண்டவர் ஆரோக்கியமான ஒருவரைக் காணும் வாய்ப்பை முடிந்த வரை குறைத்தல். இதனால் அவருக்கு ஏற்பட்ட கிருமித்தொற்று அவருக்குள்ளேயே இருந்து இறந்து விடும். இதனால், நோய் பரவும் சங்கிலித்தொடர் உடைபடும்.

சோசியல் டிஸ்டெண்சிங் எனப்படும் சமூகத்திடம் இருந்து துண்டித்துக்கொள்ளல் என்பது தொற்று நோயின் சங்கிலியை முறிக்கும் செயலில் முக்கியமானது. ஒரு நாட்டில் இருப்பவர்கள் இன்னொரு நாட்டுக்கு போகாமல் இருப்பது; ஒரு மாநிலத்தில் இருப்பவர்கள் இன்னொரு மாநிலத்துக்கு போகாமல் இருப்பது; ஒரு ஊரில் இருப்பவர்கள் இன்னொரு ஊருக்கு போகாமல் இருப்பது; ஒரு ஏரியாவில் இருப்பவர்கள் இன்னொரு ஏரியாவுக்கு போகாமல் இருப்பது; ஒரு வீட்டில் இருப்பவர்கள் இன்னொரு வீட்டுக்கு போகாமல் இருப்பது; ஒரு அறையில் இருப்பவர்கள் இன்னொரு அறைக்கு போகாமல் இருப்பது (தொற்றுக்கான அறிகுறி இருப்பவர் அடுத்த அறைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்) என்று இதை நாம் கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்க வேண்டும்.

கோவிட்-19 நோயின் அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, உடல் அசதி இருந்தால் உங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். கழிப்பறை வசதி கொண்ட தனி அறை இருந்தால் அதில் நீங்கள் மட்டும் உங்களது அறிகுறிகள் குணமாகும் வரை இருங்கள். இதற்குப் பெயர்தான் தனிமைப்படுத்தல்.
மேற்சொன்ன சாதாரண அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம் தோன்றினால், தமிழக அரசின் 24 மணிநேர கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு (104) தொடர்புகொள்ளலாம்.

கோவிட்-19 பாதிக்கப்பட்டோரில் 80 சதவிகிதம் பேருக்கு சாதாரண தொற்றாக இது கடந்து சென்று விடும். எனவே, சாதாரண அறிகுறிகள் இருப்பவர்கள் பொது மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு வருவதை தவிர்த்துவிட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டில் பாராசிட்டமால் மாத்திரை எடுத்து, வெந்நீர் பருகி, கஞ்சி குடித்து, ஒய்வு எடுத்து வந்தாலே போதும். பாராசிட்டமால் மாத்திரை என்பது உலகம் முழுவதும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இன்றி கிடைக்கும் மாத்திரைதான். காய்ச்சல் இருக்கும் நபர்கள் ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை பாராசிட்டமால் எடுக்கலாம். குழந்தைகளுக்கு மட்டும் டோஸ் மற்றும் கொடுக்கும் இடைவெளியை மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளலாம்.

மீதமுள்ள 20 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அசாதாரண அறிகுறிகளான மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத்திணறல் ஆகியவை தென்படும். அவர்கள் மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் கொரோனாவுக்கு என்று பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் தனி வார்டுகளில் சேர வேண்டியதிருக்கும்.

சமூக விலகலே ஒரே தீர்வு!
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொறுப்பு உண்டு. இப்போதைய சூழலில், தமிழக அரசு சார்பாக எடுக்கப்படும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளோடு பொதுமக்கள் கரம் கோர்த்தால் நிச்சயம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும். அரசு கேட்டுக்கொண்டுள்ளபடி சமுதாயத்திலிருந்து தனிமைப்படுதலே இப்போதைய தேவை. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்வது; பொதுப் போக்குவரத்தை வெகுவாக குறைத்துக்கொள்வது; தனிமனித சுகாதாரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது; ஒவ்வொருவரும் கொரோனா குறித்த விழிப்புணர்வை சக மனிதர்களிடம் மேற்கொள்வதும் மிகப்பெரிய பலனைக் கொடுக்கும். ஆரோக்கியமான உணவியல் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை வலுவாக வைத்துக்கொள்வதும் பலன் தரும். நவீன மருத்துவ தடுப்பு முறைகளோடு சேர்த்து, சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள நோய்க் காப்பு முறைகளையும் உணவியல் முறைகளையும் பின்பற்றினால் உடல் மற்றும் மன பலம் சாத்தியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here