வென்று காட்டுவோம்!
பற்றிப் பரவி தொற்றித் தொடர்கிறது கொரோனா வைரஸ். உலகமே அச்சத்தில் உறைந்து கிடக்கிறது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது பொன்மொழி. இப்போதைய சூழலில் சம்பந்தப்பட்டவரும் சுற்றியுள்ளவர்களும் தனித்திருந்தால்தான் வாழ்வு என்றாக்கிவிட்டது கொரோனா.
இந்த பயங்கரம் எப்போது முடியுமோ, பொழுது நல்லபடியாக என்று விடியுமோ என தனிமைப்படுத்திக்கொண்டு தவிதவிக்கிறார்கள் மக்கள்.
நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. மக்கள் நலன் சார்ந்த அக்கறையான அறிவிப்பு. அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடக்கும் என்ற உத்தரவாதம் பெரும் ஆறுதல். அதேசமயம் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்க ஆவன செய்யவேண்டும்.
சரிந்த வாழ்வு உயரும். நலிந்த தொழில்கள் நிமிரும். சந்தேகமே இல்லை. இதுபோன்ற கொடூர நோய்களின் கோரத் தாண்டவங்களையும், நிலைகுலைய வைத்த இயற்கைப் பேரிடர்களையும் பலமுறை சந்தித்து மீண்டு எழுந்த வெற்றி வரலாறு நமக்கு உண்டு. இந்த சவாலையும் வென்று காட்டுவது உறுதி.
இல்லங்களில் இருந்தபடி நம்மை தனிமைப்படுத்திக் கொள்வோம்; உள்ளங்களால் இணைந்து இந்த உயிர்க்கொல்லி கொரோனாவை வீழ்த்தி வெல்வோம்!