முககவசம் யார் அணிய வேண்டும்? எப்படி அணிய வேண்டும்?

305

– ராம்சங்கர்

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் பல வழிமுறைகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள். ஆனால், வைரஸை விட வதந்திகள் வேகமாகப் பரவுவதால், எது சரியான தற்காப்பு முறைகள் என்பதில் மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அனைவருமே முக கவசம் அணிகிறார்கள். இதனால் பலன் உண்டா? யார், யார் முக கவசம் அணிய வேண்டும்? எப்படி அணியவேண்டும்?

“எல்லோருமே முக கவசம் அணிய வேண்டியதில்லை. குறிப்பாக ஆரோக்கியமான உடல்நிலையோடு ஆரோக்கிய சூழலில் வசிப்பவர்களுக்கு அவசியமே இல்லை. இது தெரியாமல் அனைவரும் முக கவசம் அணிவதால், தட்டுப்பாடு ஏற்பட்டு, உண்மையில் முகக்கவசம் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் அணிபவர்களும் எப்படி முக கவசம் அணிய வேண்டும்? ஒரு முகக்கவசத்தை எவ்வளவு நேரம் அணியலாம் என்று தெரிந்துகொள்ளாமல் பயன்படுத்துவதால் அதனால் உபயோகம் இல்லை” என்கிறார், கொரோனா கிருமி குறித்து ஆராய்ச்சி செய்துள்ள டாக்டர் பவித்ரா.

சரி, முக கவசம் அணிவது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன?

சளி, இருமல் ஏற்பட்டால் முக கவசம் அணிவது அவசியம். மேலும் பத்து வயதுக்கு உட் பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் அணிவது நல்லது. அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்களும் அணிந்துகொள்ள வேண்டும்.

கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் முகக்கவசம் அணிவதால் உபயோகம் இல்லை.
நாம் அணியும் முக கவசம் ஈரமாகி விட்டால், அதனை உடனடியாக மாற்றிவிடுவது நல்லது.
முக கவசத்தை மாற்றும்பொழுது முன் பகுதியில் கை வைப்பதைத் தவிர்த்திட வேண்டும்.

காற்றோற்றம் இல்லையென நாடி பகுதியிலோ அல்லது தலைக்கு மேலோ வைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஒருவர் அணிந்த முக கவசத்தை மற்றவர்கள் கையால் தொடுவதைக்கூட தவிர்க்க வேண்டும்.
முக கவசத்தில் தங்கியிருக்கும் கிருமிகள் உள்ளே செல்லும் அபாயம் உள்ளதால் முக கவசம் அணிந்திருக்கும்போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

இரண்டு வகையான முக கவசம் உள்ளது. ஒன்று சர்ஜிக்கல் முக கவசம். இது காற்றை வடிகட்டும் ஆற்றல் கொண்டது. அது ஒருமுறை பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்தும் வகை சார்ந்தது. பிறரின் இருமல், தும்மல் வாயிலாக தொற்றுகள் நம்மை தாக்கிவிடாமல் இருக்க இதனைப் பயன்படுத்த வேண்டும். இது நாம் சுவாசிக்கும் காற்றை வடிகட்டும் வல்லமை மட்டுமே உள்ளது. நேர்த்தியான இடைவெளியில் இதனை மாற்றிட வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரையில் சர்ஜிக்கல் முக கவசம்தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அவைகள் துணிகளால் செய்யப்பட்டிருப்பதால் காற்றில் உள்ள மாசுகளை வடிகட்ட வசதியாக இருக்கும். குழந்தைகளுக்கு சர்ஜிக்கல் முகக்கவசம் அணிவதே சிறந்தது.

இன்னொரு முக கவசம், ரெஸ்பிரேட்டர் முகக்கவசம். கொரோனோவால் பெரிதும் பாதிக்கப்பட்ட சூழலில் வசிக்கும் மக்கள், மருத்துவர்கள், பரிசோதகர்கள் இந்த வகை கவசங்களை அணிவது அவசியம். இது பல தடுப்பு படிநிலைகளைக் கொண்டது. சர்ஜிக்கல் முக கவசத்தைக் காட்டிலும் இது கூடுதல் பாதுகாப்பளிக்கிறது. ஆனால், பொதுமக்களுக்கு இந்த முக கவசம் தேவையற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here