பூட்டு போட வா… பூட்டு கேட்க வா!

242

– எம்.கலீல் ரஹ்மான்

கொரோனா கடையடைப்பால் களைகட்டும் பூட்டுத் தொழில்

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் தொடங்கி கோயில்கள் வரை நடை சாத்தப்பட்டு பூட்டுகள் தொங்குகின்றன; ஆனால், இவ்வளவு நாட்களும் அடைத்துக்கிடந்த பூட்டு செய்யும் தொழிற்கூடங்களோ இப்போது வாசல்களைத் திறந்து முன்பைவிட வேகமாக இயங்கி வருகின்றன. என்னதான் நடக்கிறது திண்டுக்கல்லிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்.

“உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசுகள் உத்தரவுபடி மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள், நகை கடைகள் என வியாபார நிறுவனங்கள் கேளிக்கை விடுதிகள் அனைத்தும் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்குதல் இறை இல்லங்களையும் விட்டு வைக்கவில்லை. பக்தர்களின் வருகையை குறைப்பதற்காக கோவில், மசூதி, சர்ச் என அனைத்து மத புனித ஸ்தலங்களும் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி எங்க கம்பெனியையும் பூட்டுபோட்டு பூட்ட நினைத்தார்கள். ஆனால், இந்த சமயத்தில்தான் பூட்டுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகிறது” என பேச ஆரம்பித்தார் திண்டுக்கல் பூட்டு தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க செயலர் (பொறுப்பு) மனோகர பாண்டியன்.

தொடர்ந்து, “உலகப் புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக அதலபாதாளத்தில் இருந்த இந்த தொழில் இன்று மீண்டுவரத் தொடங்கியுள்ளது.

500 – 600 ஆண்டுகளுக்கு முன்பாக பரட்டையன் ஆசாரி என்பவரால் இந்த பூட்டுத் தொழில் திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரிடம் வேலைபார்த்த வேலையாட்களும் பூட்டுத் தொழிலை குடிசை தொழிலாக செய்து வந்தனர். திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள நாகல் நகர், நல்லாம்பட்டி, வேடப்பட்டி போன்ற பகுதிகளில் இந்த தொழில் இன்றளவும் குடிசை தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் திண்டுக்கல் பூட்டுகள் இயந்திரங்களின் துணையின்றி கைகளால் மேனுவலாக மட்டுமே செய்யப்படுகிறது. இரும்பு மற்றும் பித்தளையை கொண்டு நாங்கள் இந்த பூட்டுகளை செய்கிறோம். உதிரி பாகங்கள அனைத்தும் பித்தளையால் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், திண்டுக்கல் பூட்டு நீண்ட காலம் உழைக்கும். இந்த பூட்டை இதற்கான சாவியின்றி திறப்பது மிகவும் கடினம்.

மிகவும் நுட்பமாக செய்யப்படும் திண்டுக்கல் பூட்டுக்கு உலக அளவில் மவுசு அதிகம். அதனால், திண்டுக்கல் பூட்டு தொழிலை மேம்படுத்துவதற்காக 1958ஆம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 105 பேர் உறுப்பினர்களாக இருந்த இந்த சங்கத்தில் இப்போது வெறும் ஐந்து பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். மொத்தமாக ஆர்டர் வரும்போது எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுப்போம். அவ்வாறு நாங்கள் கொடுக்கும் வேலையை வீட்டிலிருந்தபடியே செய்து கொடுக்கிறார்கள். இதற்கான கூலியை செக் போட்டு கொடுத்துவிடுவோம்.

நாங்கள் செய்யும் மாங்கா பூட்டு பாரம்பரியமானது. இதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்து வந்தோம். அதன்பிறகு கால மாற்றத்திற்கு ஏற்ப புதிதாக சதுரமான பூட்டை உருவாக்கினோம். இந்த பூட்டும் இரும்பு மற்றும் பித்தளையால் செய்யப்படுகிறது.

அனைத்து வகையான பெட்டி பூட்டுகளை எல்லா அளவுகளிலும் செய்கிறோம். கோவில் உண்டியல், கேஸ் பாக்ஸ் செய்கிறோம். மிகவும் பிரமாண்டமான லண்டன் லாக் செய்கிறோம். ஒரு பூட்டுடைய விலை மூவாயிரம் ரூபாய். இந்த பூட்டை பெரிய பெரிய குடோன்களுக்கும் வங்கிகளுக்கும் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

ரயில்வே லாக் செய்கிறோம் இது இரண்டு சாவி போட்டு இரண்டு பக்கமா திறக்கக் கூடியது. ஒரு சாவியை வைத்துத் திறக்க முடியாது. இந்த பூட்டுக்கு இப்ப நிறைய ஆர்டர் வருகிறது” என்றார் பெருமையுடன்.
சரி, இவ்வளவு பெருமைகள் கொண்ட இந்த பூட்டுத் தொழில் இடையில் நலிவடையக் காரணம் என்ன?

“பூட்டுக்கான தேவை அதிகரித்து ஆர்டர்கள் அதிக அளவில் வந்தாலும் குறைவான கூலி காரணமாக வேலையாட்கள் கிடைப்பதில்லை. அதேபோல லட்சக்கணக்கில் செலவுசெய்து வீடு கட்டுபவர்கள் அந்த வீட்டுக்கு பூட்டு வாங்கும்போது பூட்டு அழகா இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். பூட்டு தரமாக இருக்கிறதா என்று பார்ப்பதில்லை.

வீட்டிற்கு தரமான திண்டுக்கல் பூட்டை போட்டால் எப்படிப்பட்ட கைதேர்ந்த திருடனாக இருந்தாலும் சாவி இல்லாமல் பூட்டை திறக்கவே முடியாது. திண்டுக்கல் பூட்டை மேனுவலாக செய்தால்தான் தரமாக இருக்கும். மாறாக இயந்திரத்தைப் பயன்படுத்தி பூட்டு செய்தால் தரமானதாக இருக்க வாய்ப்பில்லை.

அழியும் நிலையில் இருந்த இந்த தொழில் மக்களின் ஆதரவோடும் மத்திய மாநில அரசின் உறுதுணையோடும் இப்போது வளர்ச்சி அடைந்து வருகிறது” என்றார்.

பூட்டுத் தொழிலாளி முருகன், “அலிகார் பூட்டுகள் வந்ததற்குப் பிறகு திண்டுக்கல் பூட்டுத் தொழில் ரொம்பவே முடங்கிப் போயிருந்தது. ஆனால், இப்ப கொஞ்சம் பரவாயில்லை. திண்டுக்கல் பூட்டுடைய தரத்துக்கு என்றும் அலிகார் பூட்டால் ஈடுகொடுக்க முடியாது.

அலிகார் பூட்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால், மிகவும் ஆபத்தானது. இயந்திரம் மூலமாகத் தயாரிக்கப்படும் அலிகார் பூட்டுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். எந்தப் பூட்டுக்கு எந்த சாவியை போட்டாலும் திறந்துவிடும். ஆனால், திண்டுக்கல் பூட்டு, ஆயிரம் பூட்டு செய்தாலும். ஒரு பூட்டுடைய சாவியை அடுத்த பூட்டுக்குப் போட்டு திறக்க முடியாது.

ஒவ்வொரு பூட்டுடைய லீவர் செட்டப்பும் வேறவேற மாதிரி ரொம்ப நல்லா இருக்கும். பூட்டு செய்ய பித்தளை உதிரி பாகங்களை பயன்படுத்துவதால் பூட்டு தரமானதாகவும் இருக்கும்.

திண்டுக்கல் பூட்டின் பெயரை கெடுப்பதற்காக அலிகார் பூட்டில் திண்டுக்கல் பெயரை போட்டு விற்பனை செய்கிறார்கள். இதற்கு காரணம் வியாபாரிகள்தான். அதிக லாபத்துக்காக இந்த வேலையை செய்கிறார்கள்.
இந்த தொழிலை நம்பி இருக்கும் நாங்கள் ஒரு நாளைக்கு முந்நூறு நானூறு சம்பாதிப்பதுகூட ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அழிந்து வரும் நிலையிலிருந்த இந்த பூட்டுத் தொழிலுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு கொடுத்தபிறகு தொழில் சற்று வளர்ச்சி அடைந்திருக்கிறது. மொத்த விற்பனையும் சில்லறை விற்பனையும் அதிகரித்து இருக்கிறது” என்றார் நம்பிக்கையுடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here