ஜெ. ஜெயரஞ்சன் என்னும் நான்!

255

-ஜஸ்டின் துரை

தமிழகத்தின் புதிய பிரபலம் ஜெ. ஜெயரஞ்சன். பொருளாதார நிபுணர் என்கிற அடையாளத்துடன் செய்தித் தொலைக்காட்சி விவாதங்களின் வாயிலாக பரவலாக அறியப்பட்டவர். விவாதங்களில் இவர் எடுத்துரைக்கும் வாதங்களின் எளிமையும் ஆழமும் அவற்றின் பின்னிருக்கும் தார்மீகக் கோபமும் சோஷியல் மீடியாவில் இவரை ஏக பிரபலம் ஆக்கின. யார் இந்த ஜெயரஞ்சன்? பின்னணி என்ன? அவரிடமே கேட்டோம்.

“நான் பிறந்தது தஞ்சை மாவட்டத்தில். என் தந்தை அரசுப்பணியில் இருந்ததால், பணி மாறுதலாகிக்கொண்டே இருப்பார். அதனால் எந்த ஊரிலும் நிலையாக இருந்ததில்லை. பள்ளிக்கூடங்கள் மாறிக்கொண்டே இருப்பேன். இளங்கலைப் படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயின்றேன். கணிதவியல் பொருளாதாரத்தில் முதுகலை முடித்துவிட்டு, சென்னை எம்.ஐ.டி.எஸ். ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றேன்.

அதன்பின் புதுச்சேரியில் உதவிப் பேராசிரியராக சிலகாலம் பணிபுரிந்துவிட்டு, சென்னையில் மாற்று வளர்ச்சி மையம் என்கிற ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினேன். தற்போதுவரை அதன் இயக்குநராக இருந்து வருகிறேன்.”

விவாதங்களில் நீங்கள் வைக்கும் வாதங்களில் திராவிடம் மற்றும் இடதுசாரி சார்பு தெரிகிறதே?
நான் திராவிடம், இடதுசாரி, வலதுசாரி உள்பட எந்த சிந்தனையாளரும் கிடையாது. நான் பொருளாதாரம் பயின்றவன். பொருளாதாரத் துறையில் ஆய்வு செய்தவன்; அதனடிப்படையில் அணுகி என் பார்வையில் வாதங்களை முன்வைக்கிறேன். எது சரி, எது தவறு என்பதை மக்களே முடிவு செய்துகொள்வார்கள். அவ்வளவுதான்.

நான் மற்றவர்களைப் போன்று புள்ளிவிவரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பொருளாதாரம் பற்றி பேசுவதில்லை. என்னுடைய பொருளாதாரம் தொடர்பான எழுத்துக்கள் மற்றும் கருத்துக்களில் வரலாறு சமூகவியல், மானுடவியல் கலந்திருக்கும். அதனால் பார்ப்பதற்கு திராவிடம் அல்லது இடதுசாரி சார்பு தெரியும்.

மேலும், நான் எல்லா விவாதங்களிலும் கலந்துகொள்வதில்லை. பத்து அழைப்புகளில் இரண்டு அல்லது மூன்று அழைப்புகளை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். தலைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டுதான் சம்மதிப்பேன்; அதுவும் ஊடக நண்பர்களின் கட்டாய அழைப்பின் பேரிலே.

டிவி விவாதங்களில் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக காத்திரமான வாதங்களை முன்வைப்பதால் ஒருசாரர் உங்களை பாஜக எதிர்ப்பாளர் என்கிறார்களே?

நான் பல ஆண்டுகளாகவே விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறேன். சமீபகாலமாகத்தான் இவை யூடியூப் போன்ற தளங்களில் பகிரப்படுவதால், என்னை பாஜக எதிர்ப்பாளாராக பலரும் பார்க்கின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியின்போதும் அப்போதைய பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.

உங்கள் ‘புதிய தலைமுறை’ டிவியில் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் அழகிரியும் நானும் கலந்துகொண்ட ஒரு விவாத நிகழ்ச்சியில் கல்வி தனியார்மயமாக்கலை குறித்து காத்திரமான விமர்சனங்களை முன்வைத்தபோது, “உங்கள் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்’’ என என்னைப் பார்த்து ஆவேசமாக கேட்டார் அழகிரி. நான் ஒரு நிபுணர். குறைகளை சுட்டிக்காட்டுவதும், விமர்சனம் பண்ணுவதுதான் எனது வேலை. யாருக்கும் ஜால்ரா அடிக்க எனக்குத் தெரியாது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில், குறிப்பாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கிவிட்டது என்று சொல்லப்படுவதை புள்ளி விவரங்களுடன் மறுத்து, தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளது எனச் சொல்கிறீர்கள். உங்களை திராவிட சார்புடையவராக பார்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம்?

இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு இவ்வளவு வளர்ந்த மாநிலமாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம் சமூக நீதிதான். அது இல்லை என்றால் கேரளம், தமிழ்நாடு தவிர்த்து ஏனைய மாநிலங்களில் இருப்பதுபோல் வெகுசிலருக்கான வளர்ச்சியாக மட்டுமே இருந்திருக்கும். அதுதான் மக்களை அடுத்த அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியபடி போய்க்கொண்டே இருக்கிறது. அப்படி நகர்த்தும்போது அவர்கள் பல பிரச்சினைகளிலிருந்து விடுபடுகிறார்கள்.

அப்படி விடுபடும்போது அவர்களுடைய பணமும் சக்தியும் நேரமும் அவர்கள் அடுத்த கட்டங்களை நாடிச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது. அதைவிடப் பெரிய விஷயம் சாப்பாட்டுக்காக யாரும் யாரிடமும் போய் நிற்கத் தேவையில்லை என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது. திராவிட இயக்கத்தின் சாதனைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. எனவே, அதனை மறுத்து உண்மையை பேசுகிறேன்.

பொருளாதாரத்தைப் பற்றி எல்லோருக்கும் புரியும்வகையில் பேசுவதுடன் எழுதியும் வருகிறீர்கள். பணமதிப்பு நீக்கத்தின்போது நீங்கள் எழுதிய ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ நூல் பரவலான வரவேற்பைப் பெற்றது. நீங்கள் எழுத ஆரம்பித்தது எப்படி?

மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள்தான் என்னை எழுத வைத்தன. 1980களில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவனாக இருந்தேன். என்னைச் சந்திக்க வரும் ஊடக நண்பர்கள் பொருளாதாரத்தைப் பற்றிக் கட்டுரை கேட்பார்கள். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக, வேளாண் துறையையும் அதன் பொருளாதாரத்தையும் பற்றி அதிகம் எழுதினேன். நான் மாணவனாக இருந்தபோது காவிரிப் பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது காவிரியைப் பற்றி எழுதினேன். இதெல்லாம்தான் தொடக்கப் புள்ளி.

அதற்குப் பிறகு, முப்பதாண்டு காலம் தேசிய, சர்வதேச அளவிலான ஆய்வு நிறுவனங்களில் முழுநேர ஆய்வுப் பணியில் இருந்துவிட்டேன். ஆனால், வெகுஜன மக்களுக்குப் பொருளாதார சிந்தனையைக் கொண்டுசெல்லாமல் மேல்மட்ட நிலையிலேயே பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்தேன். அந்தச் சூழலில், தொலைக்காட்சி ஊடகங்கள் என்னை இழுத்துக்கொண்டுபோய் விவாதங்களில் உட்கார வைத்தன.

அதன் தொடர்ச்சியாக, பணமதிப்பு நீக்கத்தின்போது 60 நாட்களில் 100 கட்டுரைகள் எழுதினேன். பின்னால், அது புத்தகமாகவும் வந்தது. நான் எழுதிய பிற பொருளாதாரக் கட்டுரைகளையும் தொகுத்து ‘இந்தியப் பொருளாதார மாற்றங்கள்’ என்றொரு புத்தகத்தையும் வெளியிட்டோம்.

டிவி விவாதங்களில் பொருளாதார நிபுணர் என்கிற அடையாளங்களோடு பலர் அமர்கிறார்களே?
பொருளாதாரம் என்பது மிகப்பெரிய சப்ஜெக்ட். அதில் பல கூறுகள் உள்ளன; எல்லா மட்டங்களிலும் பொருளாதார நடவடிக்கைகள் இருக்கின்றன. உதராணமாக தற்போதைய கொரோனா நோய்த் தொற்று பரவலின் தாக்கத்தில்கூட ஒரு பொருளாதாரம் உள்ளது. அதனால் இவர்தான் நிபுணர், அவர்தான் நிபுணர் என்பதெல்லாம் கிடையாது. ஒருவர் நிதி ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார். ஒருவர் பட்டயக் கணக்காளாராக இருப்பார்; ஒருவர் பேராசிரியராக இருப்பார்.

ஆனால், அவர்கள் பொருளாதார நிபுணராக உட்கார்ந்திருப்பார்கள். ஒரு துறையில் நிபுணர் என்று தனியே யாரும் கிடையாது. அந்தந்த துறையில் அனுபவம் உடைய அனைவருமே நிபுணர்கள்தான்.

உலகப் பொருளாதாரத்தை புரட்டி போட்டு வருகிறது கொரோனா பரவல். இது எங்கே போய் முடியும்?
எங்கே போய் முடியும் என்பது இப்போது தெரியாது. ஒரு பெரிய அலை வருகிறது. அது எந்தளவுக்கு வாரி சுருட்டிக்கொண்டு போகும் என்பது அது ஓய்ந்த பின்புதான் தெரியும். இதுதான் இப்போதுள்ள நிலை. ஆனால், உலகப் பொருளாதாரம் இன்னமும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது மட்டும் உறுதி. மனிதகுலம் தோன்றி பொருளாதாரத்திலும் சமூகத்திலும் வளர்ந்த பின்பு, இதுபோன்ற ஒரு பொருளாதார சிக்கலை கண்டதில்லை.

இந்தியப் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது?

கொரோனா உருவாகுவதற்கு முன்னரே இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில்தான் இருந்தது. இப்போது அதைவிட படுமோசமான நிலையில் இருக்கிறது. கொரோனா பாதிப்பால் பட்ஜெட்டில் சொல்லப்பட்ட அறிவிப்புகள், கணக்குவழக்குகள் எதுவுமே செல்லுபடியாகாது. இங்கே மட்டுமல்ல. உலகம் முழுவதும் இதே கதிதான். அதனால், பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டீர்களே, அது என்னவாயிற்று? பொருளாதார வளர்ச்சிநிலை எப்படியிருக்கிறது? என்று ஒப்பிட்டு பேசுவதற்கு தகுந்த நேரம் இதுவல்ல. அந்த சூழ்நிலை வேறு, இப்போதிருக்கும் சூழ்நிலை வேறு. இது மக்களின் உயிர்போகும் காலம். இப்போதைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டியது, கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவது எப்படி என்பதை பற்றியதாகவே இருக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பால் எந்தெந்த துறையினர் அதிகம் பாதிக்கப்படுவர்?

சிறு, குறு, நடுத்தர, பெரிய என எல்லாத் தொழில் துறையினருக்குமே இது பெருத்த அடி. தள்ளுவண்டி வைத்திருப்பவரில் இருந்து விமானம் உற்பத்தி செய்பவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

உதாரணமாக கீரை பயிரிட்டவர் அதை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாது. விமான நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் இருக்கின்றன. இதுதான் இன்றைய நிலை கொரோனா தாக்கத்தையொட்டி கேரளா அரசு எடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் பாராட்டைப் பெற்றுள்ளது. அதை ஒரு இந்திய மாடலாக விரிவுபடுத்த முடியுமா?

கேரளா பெரிய அளவில் நிதி நெருக்கடியில் இருக்கக்கூடிய மாநிலம். மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதியே அவர்களுக்கு வரவில்லை. இந்த நிதி நெருக்கடியிலும் இவ்வளவு வேலைகளை பார்த்துள்ளார்கள் என்பது பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஒரு மாநில அரசுக்கு இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் மத்திய அரசுக்கு கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியை அவசரக் காலங்களில் எடுத்து பயன்படுத்துவதுதான் சரியான முறை.

ஆனால், மத்திய அரசானது சென்ற ஆண்டே ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை எடுத்து செலவழித்துவிட்டது. இப்போது கொரோனாவை எதிர்கொள்வதற்கு மாநில அரசாங்கங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here