உயிரோடு இருப்பதே மகத்தான பரிசு!

239

– பூ. சர்பனா

மறுபிறவி எடுத்த மனுஷ்யபுத்திரன்

“இந்த வருட என் பிறந்த நாள் நான் சாவின் விளிம்பிலிருந்து மீண்டுவந்த நாளின் பிறந்த நாள். அதனால் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாழ்த்தும் பரிசும் விலை மதிப்பற்றதாக இருந்தது. வாழ்வதும் உயிரோடு இருப்பதும் எவ்வளவு மகத்தான பரிசு; எவ்வளவு பேர் நான் இதயங்களில் இருக்கிறேன் என்பதை உணர்ந்த பிறந்த நாள். சண்டையிட்டுக் கொண்டவர்கள்கூட வாழ்த்தினார்கள்” என்று நெகிழ்கிறார், கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

செய்தி சேனல்களின் விவாதங்களில், திமுக சார்பாக ஆளுங்கட்சிக்கு எதிராக அனல் கக்க விவாதம் செய்துகொண்டிருப்பவர், மனுஷ்யபுத்திரன். இடைவிடாமல் அரசியல், இலக்கியம் என இயங்கிக்கொண்டே இருப்பவர் சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் ஓய்வு எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்த்தால் இன்னும் அதிக வேகத்துடன் சுழன்றுகொண்டிருக்கிறார். 11 புத்தகங்கள், 1000க்கும் மேற்பட்ட கவிதைகளை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எழுதியிருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தோம்.

முன்பிருந்த அளவிற்கு தொலைக்காட்சி விவாதங்களில் நீங்கள் அதிகம் கலந்துகொள்வதில்லையே, ஏன்?

இதய அறுவை சிகிச்சை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இடைவெளியாகிவிட்டது.

அதில்லாமல் மாதத்தில் பாதி நாளுக்கு மேல் சினிமா நடிகர்களின் உளறல்களைச் சுற்றி விவாதங்கள் நடப்பதால் ஒரு பிரதான கட்சியைச் சேர்ந்தவன் என்ற முறையில் அதில் நான் பங்கேற்க ஒன்றுமில்லை. அதில்லாமல் பொதுவாக ஊடகங்களில் திமுக தரப்பிற்கு குறைந்த பிரதிநிதித்துவமே தரப்படுகிறது. எங்கள் குரல் முடிந்தவரை சுருக்கப்படுகிறது.

கவிஞர் – எழுத்தாளர் – பத்திரிகை ஆசிரியர் – அரசியல்வாதி – பேச்சாளர் என எப்படி உங்களால் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது?

இதுதானே என் வேலை. உங்கள் அக்கறையும் ஈடுபாடும் பரந்ததாக இருந்தால் அதற்கான நேரமும் தானாக உருவாகும். சும்மா இருந்தால்தான் நேரமே கிடைக்காது. பல்வேறு துறைகளில் ஆர்வமுடையவராக இருந்தால் மட்டும் போதாது. அந்ததுறைகளுக்கு தேவைப்படும் நபராக உங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதற்கான உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் முக்கியம். மேலும், பல்வேறு துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுவதால் எனது உலகின் எல்லைகள் விரிகின்றன. எனது கவிதைகளுக்கு அவை புதிய உள்ளடக்கங்களை தருகின்றன. அது எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது. பத்து வேலை செய்தால் பத்து வாழ்க்கையை வாழ்வதுபோல. ஒரே வேலை செய்தால் சலிப்பே நம்மைக் கொன்றுவிடும்.

இடதுசாரிக் கொள்கைப்பிடிப்புடன் அரசியல் பயணத்தை தொடங்கிய நீங்கள் தற்போது திமுக கட்சியில் இணைந்துள்ளீர்கள். எதனால் இந்த மாற்றம்?

சாதியத்தை எதிர்கொள்ளாமல் இங்கு சமத்துவத்தைக் கொண்டுவர முடியாது என்ற புரிதலே இடதுசாரி அரசியலிருந்து திராவிட அரசியலுக்கு என்னைக்கொண்டு வந்தது. சமூக நீதிக்கொள்கைகளின் வழியாகவே சாதியக் கட்டமைப்பை வலிமையிழக்கச் செய்யமுடியும் என்பதை கண்டேன். இன்றும் சாதி மூர்க்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், அது பண்பாட்டுத்தளத்தில்தான் மூர்க்கமாக இருக்கிறது. பொருளாதார, நிலவுடைமை சார்ந்த தளத்தில் தன் பிடியை இழந்துவிட்டது. இது திராவிட இயக்கத்தின் சாதனை என்று நினைக்கிறேன். வர்க்கப்புரட்சி இந்தியாவில் சாத்தியமாகாத நிலையில் சமூக நீதிக்கோட்பாடுகள் சார்ந்த சீர்திருத்தங்களே மாற்றத்தைக்கொண்டு வரும்.

இந்தியா முழுக்க இடதுசாரி அரசியலின் பின்னடைவிற்கு சாதியம் குறித்த போதுமான புரிதலின்மையே காரணம். வர்க்க முரண்பாடுகளை சாதிய முரண்பாடுகள் கூர்மையிழக்கச் செய்துவிடுகின்றன. இதை இடதுசாரிகளை கவனிக்கத் தவறிவிட்டார்கள். மற்றொன்று பிராந்திய அரசியல், மொழி அரசியல் போன்றவற்றில் இடதுசாரிகளால் ஒரு தெளிவான நிலையை எடுக்க முடியவில்லை. பிராந்தியக் கட்சிகளிடம் இடதுசாரிகள் தங்கள் களத்தை விட்டுக்கொடுத்தது இதனால்தான். மற்றொன்று பாஜகவின் மதவாத அரசியலை எதிர்கொள்வதற்கான ஒரு மாற்றுத்திட்டம் காங்கிரஸைபோலவே இடதுசாரிகளுக்கும் இல்லை.

ஆனால், திமுக இடைநிலைச் சாதியினருக்கான கட்சி என்று தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறதே?

தலித்துகளின் கல்வி, வேலை வாய்ப்பு, அவர்கள்மேல் இழைக்கப்பட்ட சாதிக் கொடுமைகளை ஒழித்தல் என எல்லாவற்றிலும் திமுக செய்ததற்கு நிகரான ஒன்றை இந்தியாவில் இடதுசாரிகள் உட்பட எந்தக் கட்சியும் செய்தது கிடையாது. அம்பேத்கரின் கனவுகளை பெரியாரின் சீடர்கள்தான் இங்கு நிறைவேற்றினார்கள்.

பிரஷாந்த் கிஷோரை வைத்து தேர்தல் வியூகம் வகுக்கும் அளவுக்கு திமுகவின் நிலை மாறிவிட்டது என்றுகூறப்படும் விமர்சனங்களுக்கான உங்கள் பதில்?

பிரஷாந்த் கிஷோரை நான் சந்தித்திருக்கிறேன். அவர் மிகச்சிறந்த ஒரு தேர்தல் உத்தி வகுப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய புதிய தொழில்நுட்பயுகத்தில் அதன் அனைத்து சாத்தியங்களையும் பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. சில விஷயங்களில் பிரஷாந்த் கிஷோர் போன்றவர்களின் ஆலோசனைகள் எங்களுக்குத் தேவை. மேலும், ஒரு கட்சி தனது வெற்றிக்கு எல்லா உத்திகளையும் பயன்படுத்தும். இதில் மற்றவர்களுக்கு என்ன கவலை? இதில் சட்டவிரோதமான, கொள்கை விரோதமான அம்சம் ஏதும் இருக்கிறதா?

தற்போது மக்களால் எதிர்க்கப்படும் பல திட்டங்கள் திமுக ஆட்சிக் காலத்தில் கையெழுத்திடப்பட்டதுதான் என்று அதிமுக சொல்கிறது?

இது ஒரு பொய்யான பரப்புரை. இதற்கு நாங்கள் விரிவான பதில்களை தொடர்ந்து ஊடகங்களில் அளித்து வந்திருக்கிறோம். உதாரணமாக நீட்டிற்கு நாங்கள் விலக்குப்பெற்றோம் என்பதை மறைத்துவிட்டு திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நீட் வந்தது என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

குடியுரிமைச் சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கூறி வருகிறதே, எப்படி பார்க்கிறீர்கள்?

இது ஒரு பொய். குடியுரிமை சட்டத்திற்கு கீழ் வரும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்க பயன்படுத்தப்படும். அதன் அடிப்படையில் அஸ்ஸாமில் நிகழ்ந்ததுபோல சந்தேகத்திற்குரிய குடிமக்கள் பட்டியல் ஒன்று உருவாக்கப்படும். யார் வேண்டுமானாலும் ஏதேனும் ஒரு அற்பக்காரணத்தைக் காட்டி சந்தேகத்திற்குரிய குடிமக்களாகப்படக்கூடும். இது பெரும்பாலும் இஸ்லாமியர்களையும் அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்ப்பவர்களையும் நோக்கி ஏவப்படும். இதுதான் அவர்களின் நீண்டகால திட்டம்.

ஆனால், மக்கள்தொகை பதிவேடு எடுப்பதை தற்காலிகமாக தமிழக அரசு நிறுத்திவைத்திருக்கிறதே?
மத்திய அரசின் ஒரு சட்டத்திற்கு எதிராக ஒரு மாநில அரசு செயல்படமுடியாது. சட்டப்பூர்வமாக என்.பி.ஆர். கணக்கெடுப்பிற்கு விலக்குபெறுவதே ஒரே தீர்வு. அதற்கான போராட்டத்தை நடத்தும் முதுகெலும்பு அதிமுக அரசிற்குக் கிடையாது.

உங்கள் இளம் வயதில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனும், பின்னர் சுஜாதாவும் உங்களை ஊக்கப்படுத்தினார்கள். அதுபோல் தற்போது புதிதாக எழுதவரும் கவிஞர்களை ஊக்கப்படுத்துவது யார்?

இப்போதெல்லாம் கவிஞர்கள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வது எப்படி என அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதோடு மூத்த எழுத்தாளர்கள் சிலர் யாரையாவது பாராட்டினால் அது தன் மடத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையாகவோ அல்லது தன் மடத்தைச் சேர்ந்தவரை குஷிப்படுத்தும் வேலையாகவோ இருக்கிறது. இதுமாதிரி இலக்கிய ஊழல்களைப்பற்றிப் பேசினால் அது பெரிய பிரச்சினையில் போய் முடியும், எனவே வேண்டாம்.

எந்த மாதிரியான சூழல்கள் உங்களை அதிகமாக கவிதை எழுத வைக்கும்?

எனக்கு எழுத தனிப்பட்ட சூழல் என்று எதுவும் இல்லை. எல்லா சூழலிலும் எல்லா மனநிலையிலும் நான் கவிதைகள் எழுதுவேன். அதுதான் ஒரு எழுத்தாளனின் இயல்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எந்நேரமும் வேட்டைக்கு விழித்திருக்கும் மிருகத்தின் புலன்கள்போல.

பூண்டு – வெங்காயம் இல்லாத இஸ்கானின் காலை உணவு திட்டத்தை எழுத்தாளர் ஜெயமோகன் ஆதரித்து எழுதியிருக்கிறாரே?

ஜெயமோகன் அந்த சமயத்தில் எது ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அதைப் பற்றி எதையாவது ஒன்றை ‘ப்ரொவோக்கிங்க்’காக சொல்வார். அது அவர் அபிப்ராயமாகக்கூட இருக்காது. நூறு பேர் நம்மைத் திட்டினால் நாம் ‘லைம் லைட்’டில் இருக்கிறோம் என்று இன்பம் அடைவார். இதை அவர் ஒரு டெக்னிக்காகவே நீண்ட காலமாக பயன்படுத்தி வந்திருக்கிறார். அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றபடி எளிய மனிதர்களுக்கு தரும் உணவில் நீ இதைத்தான் சாப்பிடவேண்டும் என்று சொல்வதை ஆதரிப்பவன் ஒரு இனவாத ஃபாசிஸ்டாகத்தான் இருக்க முடியும்.

ஜெயமோகன், ராமகிருஷ்ணன் உட்பட பல தீவிர எழுத்தாளர்கள் இன்று சினிமாவிலும் இயங்குகிறார்கள். உங்களுக்கு சினிமாவுக்கு எழுதும் ஆசையில்லையா?

தமிழ் சினிமா எந்த எழுத்தாளனையும் எழுத்தாளனாகவே பயன்படுத்தவில்லை. வெறும் வசனகர்த்தாவாகவேதான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர்கள் சினிமாவிற்கு போய் அங்கு ஒரு உதவி இயக்குநர் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலை அவலமானது. ஒரு எழுத்தாளனின் சிறந்த கதைகளை அல்லது அவனது படைப்புத்திறனை சினிமா பயன்படுத்திக்கொள்ளாதவரை ஒரு எழுத்தாளன் அங்குபோய் வேலை செய்வதில் எந்த மாற்றமும் நிகழ்ப்போவதில்லை; அவருக்கு கொஞ்சம் பணம் கிடைக்கலாம், அவ்வளவுதான்.

ஆனால், கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற உங்கள் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், ஏன் சினிமாவில் தொடர்ந்து பாடல்கள் எழுதவில்லை? அதுபோல் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு பிறகு நடிப்பையும் தொடரவில்லை, ஏன்?

உண்மையை சொன்னால் இரண்டிலுமே எனக்கு ஆசையும் ஈடுபாடும் இருக்கிறது. ஆனால், வாய்ப்புகளை தேடிப்போக கூச்சமாக இருக்கிறது. சினிமாவில் வாய்ப்புகளை பின்தொடர்ந்தால்தான் அதில் நாம் நம் இடத்தைப்பெற முடியும். வாய்ப்புகள் வரும்போது நிச்சயம் இரண்டையும் செய்வேன்.

எப்போது தேர்தலில் போட்டியிடப்போகிறீர்கள்?

கட்சி முடிவு செய்யும்போது.

கொரோனா அச்சத்தால் உலகமே அதிர்ந்து கொண்டிருக்கிறது. உங்கள் அன்றாடப் பணிகள் எப்படி போகிறது?

நான் பெரும்பாலும், தனிமைப்படுத்தப்பட்ட சூழலில்தான் பணி செய்பவன் என்பதால் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால், இது மனித குலம் இதுவரைக் காணாத பேரழிவாக மாறக்கூடுமோ என்று அஞ்சுகிறேன். இது ஒரு சுனாமியைப் போன்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here