‘‘படுபாதகம் செய்றீங்களே பாவிமக்கா!

349

கலீல்ரஹ்மான்

தொடரும் பெண்சிசுக் கொலை

கொள்ளை நோயான கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் காப்பாற்ற உலகமே போராடிக் கொண்டிருக்கிறது; புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்ற நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது என்று எல்லோரும் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். ஆனால், இன்னொரு பக்கமோ பிஞ்சுக் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் கொடூரம் சத்தம் இல்லாமல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது!

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகில் உள்ள மீனாட்சிபட்டியில் நடந்த பெண்சிசுக் கொலை பற்றி, 19 மார்ச் 2020 தேதியிட்ட ‘புதிய தலைமுறை’ இதழில் ‘மீண்டும்… கொலைகார கள்ளிப்பால்!’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருந்தோம். அடுத்த இதழ் அச்சாவதற்குள் இன்னொரு பெண்சிசுக் கொலை அரங்கேறி அதிர்ச்சி அளித்துள்ளது.

முதல் சம்பவம் மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகில் உள்ள மீனாட்சிபட்டியில் நிகழ்ந்தது. இந்த ஊரைச் சேர்ந்த வைரமுருகன் – சௌமியா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கர்ப்பமுற்ற சௌமியாவுக்கு இரண்டாவதாகவும் பெண்குழந்தை பிறந்தது. கல்லுடைக்கும் தொழில் செய்யும் இந்த தம்பதி வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைக்கு தாங்களே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தனர்.

இந்த செய்தி மதுரை மாவட்டத்தை மட்டுமல்ல தமிழகத்தையே உலுக்கியது. அப்போது நம்முடன் பேசிய மீனாட்சிபட்டியைச் சேர்ந்த சாந்தி, “குழந்தைய வளர்க்க முடியாமல் கொல்கிறதுக்கெல்லாம் வறுமை ஒரு காரணமாக இருக்காது. குழந்தையை வளர்த்து, படிக்க வைத்து கட்டிக்கொடுக்கிறது ரொம்ப கஷ்டம்.

கிராமத்தில் கொஞ்சம் வசதியாக உள்ளவர்கள் ஒருகிலோ நகை போட்டுக்கூடக் கல்யாணம் கட்டிக் கொடுப்பார்கள். ஆனால், எங்களைப்போல வசதியில்லதவர்கள் கையில் இருக்குறதை போட்டு கட்டிக் கொடுப்போம். அதுவும் இப்போது தங்கம் விற்கிற விலைக்கு பத்து பவுனோ இருபது பவுனோ எப்படிப் போட்டு கட்டிக்கொடுக்க முடியும்?

அப்படியே கட்டிக் கொடுத்தாலும், கட்டிக்கிட்டு போறவுங்க கொஞ்ச நாளைக்குதான் அமைதியாக இருப்பார்கள். அப்புறமா, “ஏண்டி நீ என்னத்தை போட்டுக்கிட்டு வந்த? உங்க ஆத்தா என்னத்தை போட்டு ஒன்னைய அனுப்பி வைத்தா? வெறும்பய மகளேன்னு வாய்க்கு வந்தபடி கேவலமா பேசி குத்தி குத்தி காமிப்பாங்க.

பெண் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கலாமென்று கடனை வாங்கி படிக்க வைத்தா வேற சாதிக்காரன் கூட்டிக்கிட்டு ஓடிவிடுறான். இதற்கெல்லாம் பயந்துதான் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை கொன்னுட்டான்னு நினைக்கிறேன்” என்றார்.

கடைசியாக ரகசியம் சொல்வதுபோல் சத்தத்தைக் குறைத்து, “பெண் சிசுக் கொலை எல்லா ஊர்களிலேயும் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொல்லாத நேரம் இவர்கள் மாட்டிக்கொண்டார்கள்” என்று சாந்தி சொல்ல நாம் அதிர்ந்தோம்.

சாந்தி சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளது, ஆண்டிபட்டி மொட்டனூத்து அருகில் உள்ள ராமநாதபுரத்தில் நடந்துள்ள பெண் சிசுக் கொலை. இந்த ஊரில் சுரேஷ் – கவிதா தம்பதிக்கு முதலில் பெண்குழந்தை பிறந்தது. இரண்டாவதாகக் கர்ப்பமுற்ற கவிதாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. ஆகையால் கர்ப்பத்தடை செய்துகொள் என்று அவருடைய மாமியார் செல்லம்மாள் சொல்லியுள்ளார். ஆனால், “எனக்கு ஆண் குழந்தை வேண்டும்” என்று கவிதா மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மூன்றாவதாகக் கர்ப்பமுற்ற கவிதாவுக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் வீட்டிற்குச் சென்ற கவிதாவை மாமியார் செல்லம்மாள் மிரட்டியுள்ளார். “நான் ஒரு விஷேசத்துக்கு வெளியே போகிறேன்.

திரும்பி வருவதற்குள் இந்த குழந்தையைக் கொன்றுவிடு. இல்லையென்றால் வீட்டைவிட்டு உன்னைத் துரத்திவிடுவேன்” என்று சொல்லவும், பயந்துபோன கவிதா அருகில் இருந்த எருக்கஞ்செடியை பறித்துவந்து அதில் இருந்த பாலை எடுத்து குழந்தைக்கு ஊற்றிக்கொடுத்துவிட்டார்.

கவிதாவின் மாமனார் வந்து கேட்டபோது, “குழந்தைக்கு வாந்தி வயித்தாலை போனதால் இறந்துவிட்டது” எனக் கூறியுள்ளார். சரியென்று அந்த குழந்தையை வீட்டின் அருகிலேயே புதைத்துவிடுகின்றனர்.

இந்நிலையில், கிராமங்களில் வீடு வீடாகச் சென்று குழந்தைகளைப் பரிசோதனை செய்யும் செவிலியர் கவிதாவிடம், ‘குழந்தை எங்கேம்மா’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு கவிதா, “குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்துவிட்டது” என்று மாமனாரிடம் சொல்லியதையே சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த பதிலில் திருப்தியடையாத செவிலியர், மாவட்ட குழந்தைகள் நலம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் ஆண்டிபட்டி வட்டாட்சியருக்குத் தகவல் கொடுத்தார்.

மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் வந்து விசாரித்தபோது கவிதாவும் செல்லம்மாளும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினரின் விசாரணையில் மூன்றாவதும் பெண்குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

தற்போது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனாட்சிபட்டியைச் சேர்ந்த கவிதா நம்மிடம் சொன்ன வார்த்தைகள் இப்போதும் காதுக்குள் ஒலிக்கிறது. “பெண் பிள்ளை என்பதற்காக பத்து மாதம் சுமந்து பெற்ற பிஞ்சை எருக்கம்பாலை ஊற்றி கொல்கிறதற்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ? பச்சமண்ணு என்ன பாடுபட்டுச்சோ?

கொழந்தைய வளர்க்கிறதுக்கு என்ன கஷ்டம்? அட அப்படியே வளர்க்க முடியாவிட்டால் ஆஸ்பத்திரியில் இருக்கிற தொட்டியில் போய் போட்டிருக்கலாமே. இந்த காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு அரசாங்கம் என்னென்ன திட்டமெல்லாமோ கொண்டு வந்திருக்கிறது. எவ்வளவோ சலுகையெல்லாம் செய்கிறது. அதையெல்லாம் பயன்படுத்தாமல் பாவி பெற்ற கொழந்தையை கொன்னுட்டாளே” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டார், கவிதா.

தொடர்ந்து மேலும், “அரசு திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி பெண் குழந்தைகளை ஆண்களுக்குச் சமமாக மதித்து பேணிக்காக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் கொல்லும் படுபாதக செயலை செய்யும் கயவர்களைத் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்றார், கோபமாக.

அரசு நடவடிக்கைகள்!

பெண் சிசுக் கொலை கொடுமையை முடிவுக்குக் கொண்டு வரவும், மக்களின் எண்ணப் போக்கை மாற்றவும், பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகப் பல சட்ட திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது.

அதில் சில…

வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1961,
கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரான சட்டம்,
பெண் கல்விக்கு ஆதரவான சட்டம்.
பெண்ணுரிமைக்கு ஆதரவான சட்டம்.
பெண்ணுக்கும் சொத்தில் சம பங்கு தரும் சட்டம்.
ஏழைப் பெண்கள் அரசு நிதியுதவித் திட்டம்
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்.
டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்.
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here