எழுவர் விடுதலை தடைபடுவது ஏன்?

261

-திருமுருகன் காந்தி

ஏழு தமிழர்களான நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய நிரபராதிகளின் விடுதலை தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. இவர்களின் மீது விசாரணை நடத்திய அதிகாரிகள் வெளிப்படையாகவே இவர்கள் தவறாக குற்றஞ்சாட்டப்பட்டுவிட்டார்கள் என தெரிவித்து எட்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இவர்களது விடுதலையை தமிழ்நாடு சட்டசபை ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றி ஆறு ஆண்டுகளாகிவிட்டது. இதன் பின்னரும் தொடர்ந்து வழக்குகள், தடைகள் என மத்திய இந்திய அரசின் தடைகளால் இத்தமிழர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பாஜக அரசு தனது மாநில ஆளுநர் எனும் பிரதிநிதி வழியாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த விடுதலைத் தீர்மானத்தை நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்த ஏழு தமிழர்கள் மீதான விடுதலைத் தடையை ஒரு சனநாயக மறுப்பு அரசியல் முடிவாகவே பார்க்கமுடியும். ஒரு சிறைவாசியின் விடுதலை என்பது அவரது மனித உரிமை. ஒருவர் தனது குற்றத்திற்காக தண்டிக்கப்படுவதற்காக சிறையிலடைக்கப்பட்ட பின்னர் அவர் சிறைவாசி எனப்படுகிறார். அதற்கு பின்னர் அவர் குற்றவாளி என்பதாக அவரை வரையறை செய்ய இயலாது. அவரது சிறைவாசத்தின் காலகட்டத்தில் சிறைவாசிகளுக்கான முழு மனித உரிமையை பெறக்கூடியவராகிறார். அவ்வகையில் அவரது விடுதலையை நிராகரிக்கும் உரிமை மனித உரிமை மீறலாகவே பார்க்க இயலும்.

ஏழு தமிழர்களும் தங்களது 28 ஆண்டுகால சிறைவாச காலத்தில் எவ்விடத்திலும் நன்னடத்தை அற்றவர்களாக எந்த சிறை அதிகாரிகளாலும் குற்றம்சாட்டப் பட்டவர்களில்லை. இவர்களின் சிறைவாசத்தில் சக சிறைவாசிகளின் படிப்பு, மனமாற்றம் உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வ விடயங்களில் பெரும் பங்காற்றியவர்கள். இப்படி பலவகைகளில் விடுதலைக்கு தகுதி வாய்ந்தவர்கள் ஏழு தமிழர்கள்.

ஆளுநர் என்பவர்

மத்திய தில்லி அரசினால் நியமனம் செய்யப் பட்டவர்கள்தானே தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அல்ல. கொள்கை சார்ந்த முடிவுகளில் மக்களின் பிரதிநிதிகளுக்கே அதிக முன்னுரிமை உண்டு. இந்திய துணைக்கண்டம் குடியரசான பின்னர், குடிமக்களும் அதன் பிரதிநிதி களுமே ஆட்சியை முன்னகர்த்தும் உரிமை பெற்றவர்கள். தமிழக ஆளுநர்கள் என்பவர்கள் எவ்வகையிலும் தமிழ்நாட்டோடும் தமிழர்களோடும் தொடர்புகொண்டவர்களாக இருந்ததில்லை.

ஆளுநர், தமிழ்நாட்டு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல், மத்திய அரசினால் நியமனம் செய்யப்படுகிறார். இதுவரை ஆளுநர்கள், தங்களது அதிகாரங்களைத் தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளில், மத்திய அரசின் நிலைப்பாட்டினை திணிப்பதை தவிர்த்து, முற்போக்கான விடயங்களை, மக்கள் நலத் திட்டங்களை முன்மொழிந்ததாக வரலாறு கிடையாது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசாங்கம் இந்த எழுவரின் விடுதலைக்கான தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி, ஆளுநரிடம் அனுப்பியும், ஆளுநர் எழுவரின் விடுதலையைத் தடுத்து கிட்டதட்ட 20 மாதங்களை கடந்துவிட்டது. இந்த இருபது மாதங்கள் என்பது சட்டவிரோத சிறையாகும்.

இருபத்தெட்டு வருடங்களாக அநியாயமாக தவறான குற்றச்சாட்டினால் சிறைப்படுத்தப்பட்ட இந்த ஏழு தமிழர்களும் தங்களது எஞ்சிய காலகட்டத்தில் தங்களது குடும்பத்தினரோடும் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடனும் வாழ அனுமதிப்பதே மனித நேயம் கொண்ட எந்த அரசும் செய்யும் நகர்வு. 28 வருடங்களாக ஒருவரை சிறையில் அடைத்து வைத்துவிட்டு அவர்களது சட்டபூர்வ உரிமையைக்கூட தடுத்து வைக்கும் கல்நெஞ்சம் நேர்மையான மனிதர்களுக்கு வருவதில்லை. இது கருணையின் அடிப்படையில் நாம் வைக்கும் கோரிக்கையல்ல, சட்டவிதிகளின் அடிப்படையில் நாம் கேட்கும் நமது உரிமை.

இந்த 28 ஆண்டுகளில் இந்த ஏழு தமிழர்களின் குடும்பத்தினரும் சந்தித்த இழப்புகள், ஏமாற்றங்கள் என நீளும் துயரங்களுக்கு இனிமேலாவது நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தோழர் செங்கொடியின் தியாகத்தை இக்கணத்தில் நாம் நினைவில்கொண்டு இவர்களது விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

இவர்களது விடுதலையைத் தடுப்பதை மத்திய பாஜக அரசு தனது கொள்கை முடிவாகவே கொண்டிருக்கிறது என்பது அதனது வழக்கறிஞர்களால் பலமுறை நீதிமன்றங்களில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கின்போது மத்திய அரசு, மாநில அரசின் சட்டசபை தீர்மானம் என்பது மதிப்பற்றது என்றும், தங்களது ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுதலை செய்ய இயலாது என்றும் சொன்னதை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறார் நளினி. தாம் உள்ளிட்ட வர்களின் விடுதலையை தடுத்து வைப்பது சட்டவிரோதம் என்கிற வாதத்தினை நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கிற்கான தீர்ப்பில், ஆளுநரின் கையெழுத்தில்லாமலேயே ஒரு சிறைவாசியை விடுதலை செய்யலாம் எனத் தீர்ப்பு கொடுத் திருப்பதை நாம் கவனத்தில்கொண்டே இவர்களது சிறைவாசம் சட்டவிரோதம் என்கிறோம். கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் தேதியே சட்டசபை தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த நாளே நிறைவேறி இருக்க வேண்டிய இவர்களது விடுதலை இன்று வரை தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த சட்டமன்ற அறிவிப்பு வெளிவந்த காலகட்டத்தில், நான் வேலூர் சிறையில் 2018இல் இருந்த பொழுதில், முருகனையும் சாந்தனையும் சந்தித்திருக்கிறேன். தங்களது வாழ்க்கையைப் புத்தம் புதிதாக தொடங்கும் கனவுகளோடும் நம்பிக்கைகளோடும் உற்சாகத்தோடும் இருந்த அவர்களது முகங்கள் இன்றும் என்னைத் துன்புறுத்துகிறது. மனித நேயத்தை நேசிக்கும் எவரும் எந்த நிரபராதி மனிதனின் விடுதலையையும் தடுக்க மாட்டார்கள்.

காந்தியடிகளின் கொலையாளிகளை 14 வருடத்தில் விடுதலை செய்த இந்திய அரசு, நிரபராதிகளான இந்த எழுவரின் விடுதலையைத் தடுப்பதன் மர்மம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here