பிஸினிஸ் பிரம்மா – 22

21

– கேரவான் எம்.அருணாச்சலம்

திகைக்க வைத்த ட்விஸ்ட்!

காற்றடைத்த பந்தை தண்ணீருக்குள் அழுத்தி ஒளித்து வைக்க முடியுமா? எப்படியும் அது வெளியே வந்துதான் ஆகும். அப்படியொரு கதைதான் இது.

தனது நேர்மையின்மையால் பணியிலிருந்து விலகிச்சென்ற அந்த நெடுநாள் ஊழியர், தான் சென்ற சில நாட்களிலேயே புதிதாகப் போட்டி நிறுவனம் தொடங்கியதும், அதற்கான வேலைகளைப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கியிருந்ததும் மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்திருந்தது. அவர் போனதோடல்லாமல் தனக்கு விசுவாசமான ஊழியர்களில் சிலரையும் அடுத்த சில வாரங்களில் பிரித்து வரவைத்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்டார்.

இது எதுவுமே புதிதல்ல; எல்லா நிறுவனங்களிலும் நடப்பதுதான். ஆனால், புதிய பணியாளர்களை தேர்வு செய்து, பயிற்சியளித்து, நமக்கேற்றவாறு தயார் செய்வது சற்று நீண்ட, கடினமான, நமது வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவாமல் தேக்கி விடுகிற ஒன்று. என்றாலும், அதுதான் நிதர்சனம் என்பதைப் புரிந்துகொண்டு நமது தொடர் வேலைகளை தொய்வில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதில் இன்னொரு முக்கியமான, கவனிக்க வேண்டிய விஷயமும் இருக்கிறது. பணி விலகிச் சென்ற மேலாளருடன் விசுவாசிகள் சிலரும் உடன் சென்றார்கள் இல்லையா? அவர்களில் இரண்டு பேர், இரண்டே மாதங்களில், அங்கிருந்த பணிச்சூழல் பிடிக்காமலோ, சம்பளம் கட்டுப்படியாகாமலோ ஏதோ ஒரு காரணத்துடன் எங்களிடமே திரும்பி வந்தார்கள். அதற்கான பல நியாயங்களை எடுத்து வைத்தார்கள்.

ஆனால், “தாய்க் கழகத்துக்கே திரும்பி வந்த எங்களை அன்னையின் அரவணைப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றெல்லாம் பிரகடனப்படுத்த அரசியல் விளையாட்டு அல்ல இது. முழுக்க முழுக்க வியாபாரமும் தொழிலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடும் களம். எனவே, உறுதியாக அவர்களை மறுத்துவிட்டோம். அப்போது இது தொடர்பாக நடந்த, இன்றளவும் பெருநிறுவன ஊழியர்களிடையே வியப்புடன் விவாதிக்கப்படுகிற ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது இது. இந்திய அளவில் பெயர்பெற்ற, தனித்துவமான நிகழ்ச்சிகளால் தங்களை முன்னிறுத்திக்கொண்ட இரண்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையே நடந்த இந்த நிகழ்வு எதிர்பார்க்கவே முடியாத திருப்ப முடிச்சுக்களை கொண்டது.

தமிழகத்தை (பிராந்திய) தலைமையிடமாகக் கொண்ட அந்த தொலைக்காட்சி முதலிடத்தில் எப்போதும் தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதில் அதிக கவனம் செலுத்தும். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களே எதிர்பாராத வண்ணம் அகில இந்திய அளவில் முன்னணியிலிருந்த, இன்றளவும் இருக்கிற அந்தக் கடைசி எழுத்துத் தொலைக்காட்சி தமிழில் தடம் பதிக்க முடிவெடுத்து உடனே செயலிலும் இறங்கியது.

வந்த வேகத்தில் அப்போது திரைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த முக்கியமான ஆளுமைகளை அவர்களே எதிர்பாராத கைம்மாறுகளை வழங்கி ஈர்க்க ஆரம்பித்திருந்தது. ஆனால், அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர், தமிழக திரை, அரசியல் சூழல்களைப் பற்றி சிறிதளவும் ஞானம் அற்றவர்.

எனவே, தகுதியற்றவர்களுக்குகூட பணத்தை அள்ளி இறைத்து தொலைக்காட்சியை நிலை நிறுத்தப் போராடிக் கொண்டிருந்தார். அதனால், இதே துறையில் நீண்ட கால அனுபவம்மிக்க, அனைவருக்கும் நன்கு பரிச்சயமான, திறமையான ஒரு நபரைத் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தனர். இதற்கெனவே இடைத் தரகர்கள் சிலரையும் களத்தில் இறக்கி வலைவீசிக் கொண்டிருந்தது அந்தப் புதிய தொலைக்காட்சி.

இதே காலகட்டத்தில் தமிழில் முதலிடத்திலிருந்த அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிமுக்கியப் பொறுப்பிலிருந்த, ஒரு உயர் பதவி ஊழியருக்கு, அந்த நிறுவனத் தலைவருடன் மனஸ்தாபம் ஏற்பட்டு, அவர்களது உறவில் மெல்லிய விரிசல் விழ ஆரம்பித்திருந்தது. இத்தனைக்கும் அந்த நிறுவனத் தலைவருக்கும், அந்தக் குறிப்பிட்ட ஊழியருக்கும் இடையேயான பந்தம் என்பது பல படி நிலைகளைக் கடந்தது.

வெற்றிபெற்ற தொலைக்காட்சிக்கு முன்பாக, அதே குழுமம் வீடியோ பத்திரிகை உட்பட இரண்டு பரிசோதனை முயற்சிகளைக் கையாண்டு, தோல்வியடைந்து சோர்ந்து போயிருந்த நிலையில்கூட பல வருடங்கள் உடன் பயணித்தவர் அந்த ஊழியர். அப்போதுகூட ஏற்படாத விரிசல், விருட்சமாய் வளர்ந்த பிறகு புதிதாய் முளைத்த சில இடைப்பட்ட நபர்களின் கைங்கரியத்தால் இருவருக்குமிடையில் மனக்கசப்புக்களைப் பரவ விட்டிருந்தது.
இந்தத் தகவல் மெல்ல வெளியே கசிய, அகோரப் பசியுடன் வலைவீசிக் கொண்டிருந்த நம் இடைத் தரகர்களில் ஒருவரின் காதுகளையும் வந்தடைந்தது.

துள்ளிக் குதித்த தரகர், விஷயத்தை போட்டித் தொலைக்காட்சிக்குக் கடத்தினார். செய்தி மும்பையிலிருக்கும் அகில இந்திய தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டதும், ஆச்சரியத்தின் உச்சிக்கே போன தலைவர், “என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை. அவரை வளைப்பதற்கான அனைத்து வேலைகளையும் முடுக்கி விடுங்கள். தரகருக்கும் அவர் எதிர்பாராத தொகையை அள்ளி விடுங்கள். இது நடந்தே தீர வேண்டும்”, என்று உத்தரவு பிறப்பித்தார்.

காய்கள் நகர்ந்தன. கடும் முயற்சிகளுக்குப் பிறகு, மும்பையிலிருக்கும் அந்தக் குறிப்பிட்ட ஊழியரின் உறவினர் ஒருவர் மூலமாக கோவாவில் சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் நோக்கத்தை விளக்கியதும் மெல்ல புன்னகைத்த அவர், “நீங்கள் தவறான ஆளிடம் வந்திருக்கிறீர்கள். எனக்கும் எங்கள் தலைவருக்குமிடையே ஆயிரம் மனஸ்தாபங்கள் வரும் போகும். அதற்கெல்லாம் விலக முடிவெடுத்திருந்தால் இந்நேரம் சுமார் ஐம்பது முறைகளாவது நான் வெளியேறியிருக்க வேண்டும். இப்போதைய சூழலைவிட சிக்கலான, குழப்பமான நேரங்களை நான் முன்பே பலமுறைகள் சந்தித்திருக்கிறேன். எனவே, அதற்கு இப்போது அவசியம் இல்லை” என்றார்.

பின்னர், தனது உறவினர் பக்கம் திரும்பி, “இந்தச் சந்திப்பை சென்னையிலேயே நடத்தியிருக்கலாம். நீ ஏதோ வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் என்றல்லவா சொன்னாய். அதற்காகத்தான் வந்தேன். இது சரியாய் வராது. நீங்கள் வேறு ஆளைப் பாருங்கள்” என்று கூறிவிட்டு, அடுத்த விமானத்திலேயே சென்னை திரும்பிவிட்டார்.

உறவினர் முகம் வெளிறிவிட்டது. கடைசி எழுத்து தொலைக்காட்சி நிறுவனத் தலைவரிடம் நேரில் சென்று, தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், ஒரு பெரிய தொகைக்குக் காசோலை எழுதி அவரிடம் நீட்டினார் அவர். சற்றே ஆச்சயர்த்துடன், “என்னால்தான் இந்தக் காரியத்தை முடிக்க முடியவில்லையே, எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்துவிட்டதே. இந்தத் தொகையை எப்படி நான் வாங்கிக்கொள்ள முடியும்?” என்றார்.

மர்மமாய்ச் சிரித்த அவர், “யார் சொன்னது இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்று? உண்மையில் உங்களின் முயற்சியே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பமே நமக்கு சாதகமாக அல்லவா துவங்கியிருக்கிறது? அதற்கான முன் பணம்தான் இது. நமது காரியம் கச்சிதமாக முடிந்ததும் மீதி பணமும் உங்களுக்கு வந்து சேரும்” என்கிறார்.

“எனக்குப் புரியவில்லையே” என்கிறார் உறவினர். அதற்கு பதிலளித்த தலைவரின் புத்திசாலித்தனத்திற்குப் பின்னே ஒளிந்திருக்கிறது அவர் நிறுவன வெற்றியின் சூட்சுமம்.

(Charging)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here