நீதிதேவன் மயக்கம்!

81

– பூ. சர்பனா

மரபை மீறுகிறார்களா ஓய்வுபெற்ற நீதிபதிகள்?

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்.பி.யானது நாடு முழுவதும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஓய்வு பெறும் நீதிபதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்கக்கூடாது என்பது நீதித்துறை மரபு. ஆனால், ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற்ற மூன்று மாதங்களிலேயே பொறுப்பேற்றுக்கொண்டது நீதித்துறை வட்டாரத்திலும் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளின் கருத்துகள் இங்கே.

தார்மீக அடிப்படையிலும் சட்டப்படியும் தவறு!
கே. சந்துரு (மேனாள் நீதிபதி)

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரு புதிய உறுப்பினர் பொறுப்பேற்கும் அன்றே, அவையில் அவரது செயலை ‘வெட்கம் வெட்கம்’ என்று கூறி வெளிநடப்பு செய்த நிகழ்வு, அதன் 68 வருட வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. இத்தனை எதிர்ப்புகளுக்கிடையேயும் மிகப் பெருமையுடன், “நான் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதற்கு வெட்கப்படத் தேவையில்லை. நான் விரும்பியிருந்தால் முன்னர் வகித்த தலைமை நீதிபதி பதவிக்கு இணையான அந்தஸ்தில் வேறொரு பொறுப்பை பெற்றிருக்கமுடியும். எனது நியமனம் சட்டத்திற்கு எவ்விதத்திலும் புறம்பானது அல்ல. இதற்கு முன்னரும் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் நியமன உறுப்பினர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று, நீதிபதி கோகாய் கூறினார்.

உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகளாக பதவியேற்பவர்கள் அரசமைப்பு சட்டத்தின் மூன்றாவது அட்டவணையிலுள்ள உறுதிமொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். “எப்பொழுதும் விருப்பு வெறுப்பின்றி எவ்வித மாச்சரியங்களும் இல்லாமல் அரசமைப்பு சட்டத்தை தூக்கிப் பிடிப்பேன்” என்று அவ்வுறுதி மொழியில் கூறப்பட்டுள்ளது. அதைத் தவிர இதர அரசு ஊழியர்கள் (கீழமை நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) அவர்களுக்காக வகுக்கப்பட்டுள்ள நடத்தை விதிகள் எதுவும் இந்த நீதிபதிகளுக்குப் பொருந்தாது.

உயர் நீதிமன்ற பதவியில் இருப்பவர்களுக்கு பணிப்பாதுகாப்பு கொடுக்கவேண்டுமென்ற எண்ணத்தில் அந்த நீதிபதிகளை நாடாளுமன்றத்தின் கண்டனத் தீர்மானத்தின் மூலம் மட்டுமே பதவி நீக்கம் செய்ய முடியும் என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது. இப்படி நடத்தை விதிகள் ஏதுமில்லாத நீதிபதிகள் எத்தகைய கட்டுப்பாட்டுக்குள் செயல்படுவார்கள் என்ற கேள்வி தொடர்ந்து பொதுவெளிகளில் எழுப்பப்பட்டு வந்ததது. இதன் காரணமாக பெங்களுரில் நடைபெற்ற நீதிபதிகளின் கூட்டமொன்றில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

அதையொட்டி 1997ஆம் வருடம் நீதி வாழ்வில் மீள் உரைக்கப்பட்ட விழுமியங்கள் உருவாக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டம் முழுமையாக ஏற்றுக்கொண்டதுடன் மாநிலங்களிலுள்ள பல உயர் நீதிமன்றங்களும் இவற்றை தங்களது நெறிமுறையாக ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்த விழுமியங்களில் உள்ள 16 நெறிமுறைகளில் கடைசியாகக் கூறப்பட்டிருப்பது: “நீதிபதிகள் எப்பொழுதும் தாங்கள் மக்கள் பார்வையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறக்கலாகாது. தங்களது கண்ணியத்திற்குக் குறைவான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது” என்பதாகும். இதன்படி தார்மீக அடிப்படையில் பார்த்தால் ரஞ்சன் கோகாய் பதவியேற்றிருக்கக்கூடாது.

சட்டப்படி பார்த்தால், மாநிலங்களவை நியமன உறுப்பினருக்கான பிரிவு 80(3)ன் கீழ் உறுப்பினர் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் கலை, இலக்கியம், அறிவியல், சமூகப்பணிகளில் புலமையோ, நீண்டகாலம் பணியாற்றியவர்களாகவோ இருக்கவேண்டும் என்றுள்ளது. இந்த நான்கு வகையறாக்கள் எதிலும் நீதிபதி கோகாய் தகுதி படைத்தவரல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

கோகாய் பதவியிலிருக்கும்போதே ஒரு அறக்கட்டளை சொற்பொழிவில், “நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என்று அறிவுரை வழங்கியவர். அஸ்ஸாம் உயர் நீதிமன்றம், மண்ணின் மைந்தர் என்ற முறையில் அவருக்கு அளிக்க முன்வந்த சலுகைகளை புறந்தள்ளியவர். இப்படிப்பட்ட ஒருவர் திடீரென்று தனது அந்தஸ்துக்குக் குறைவான ஒரு நியமனப் பதவியை பெற்றுக்கொண்டார் என்பது வருத்தத்தையளிக்கிறது.

இதற்கு முன்னரும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம் பெற்றுள்ளார்கள் என்ற முன்னுதாரணம் இப்போது சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், அவையெல்லாம் 1997க்கு முன் நீதிபதிகளே உருவாக்கிய விழுமியங்களுக்கு முன்னரே ஏற்பட்ட நிகழ்வுகள்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசு, அரசியல் பதவிகளை வகிக்க முன்வரும்போது, இவர்களெல்லாம் பதவியிலிருக்கும்போதே இப்படிப்பட்ட ஓய்வு கால பதவிகளைப் பெறுவதற்கு முயற்சி செய்திருப்பார்களோ? தங்களது சுதந்திரமான நீதி பரிபாலன செயல்பாடுகளை சமரசம் செய்து கொண்டிருப்பார்களோ? என்ற சந்தேகம் எழுவது நியாயமானதே.

பதவியின் இறுதி காலத்தில் நீதிபதி கோகாய் சில முக்கியமான தீர்ப்புகளை வழங்கியிருந்தார். அஸ்ஸாமில் குடியுரிமைப் பதிவேடு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு, ரஃபேல் விமானங்களை வாங்குவதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட பற்றிய வழக்கு – இப்படிப் பல வழக்குகளில் மத்திய அரசுக்கு ஆதரவான தீர்ப்புகள்தான் அளிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி கோகாய் செயல்பாட்டில் திருப்தி அடைந்திருந்தாலொழிய ஆளும் கட்சி அவரது பெயரை நியமன உறுப்பினருக்கு பரிந்துரைத்திருக்கமாட்டார்கள். காங்கிரஸ் கட்சி இப்படிப்பட்ட முன்னுதாரணங்களை ஏற்படுத்தியிருந்தார்கள் என்று சொல்லி பாஜகவினர் தப்பித்துக்கொள்ள முடியாது. ஏனெனில், அவர்கள் கட்சியைச் சேர்ந்த மறைந்த அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்ற அவையில் பேசும்பொழுது, “ஓய்வுபெற்ற நீதிபதிகள் புதிய பதவியை ஏற்றுக்கொள்வது ஊழல் செயல்” என்று கண்டித்துள்ளார். மேலும், காங்கிரஸ் அரசின் கொள்கைகளை மறுத்து புதிய ஆட்சியை தருவோம் என்று சொல்லி பதவிக்கு வந்தவர்கள், காங்கிரஸ் செய்ததையே செய்யக்கூடாது.

இந்திய ஜனநாயகக் குடியரசின் 70 ஆண்டுகால வரலாற்றைக் கடக்கப் போகும் நாம் புதிய விழுமியங்களை உருவாக்க வேண்டுமேயொழிய பழைய பல்லவிகளை இசைக்கக் கூடாது. அரசாங்கத்திடமிருந்து நீதித்துறை முற்றிலும் பிரிந்து செயல்பட வேண்டுமென்று அரசமைப்பு சட்டம் பிரிவு 50இல் விதிக்கப்பட்டிருக்கும் கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்றால், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஓய்வு காலத்தில் அரசு அளிக்கும் புதிய அரசியல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே ஒரே வழி.

நீதித்துறைக்கே களங்கம்!
அரி பரந்தாமன் (மேனாள் நீதிபதி)

ரஞ்சன் கோகாய், எம்.பி. ஆக பதவியேற்றது நீதித்துறைக்கு மிகப்பெரிய களங்கம். நீதித்துறை சுதந்திரத்தையே பெரிய அளவில் பாதித்திருக்கிறது.

ஆரம்பத்தில் எல்லோருக்கும் பெரிய போர்வீரராகத் தோன்றினார் ரஞ்சன் கோகாய். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்த, அந்த நான்கு நீதிபதிகளில் ஒருவரான குரியன் ஜோசப், “அப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே” என்று இப்போது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதே ரஞ்சன் கோகாயே, “ஓய்வுக்குப் பிறகு அரசுப் பதவிகளை எடுத்துக்கொள்வது நீதித்துறைக்கு களங்கம்” என்று கூறியுள்ளார். ஆனால், இப்போதோ சுயமுரண்பாட்டின் மொத்த வடிவமாக மாறியுள்ளார்.

இதனால், அவர் வழங்கிய தீர்ப்பே கேள்விக்குறியாகி உள்ளதோடு மக்களுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கை முழுவதுமாக இழந்துள்ளது. நீதித்துறை எதையும் செய்யாது என்ற எண்ணத்துக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
நீதித்துறையின் மீது ஒட்டுமொத்த தரப்புக்கும் நம்பிக்கை வரவேண்டும் என்றால், அவர்கள் ஓய்வுக்குப் பிறகு எந்தவிதமான அரசுப் பதவிகளை ஏற்காமல் இருக்க சட்டத்திருத்தம் கொண்டுவருவது சிறப்பாக இருக்கும்.

காங்கிரஸ் காலத்திலும் இது நடந்துள்ளது!
வள்ளிநாயகம் (மேனாள் நீதிபதி)

நீதிபதி ரஞ்சன் கோகாய் சிறிதுகாலம் காத்திருந்திருக்கலாம்; அவசரப்பட்டுவிட்டார் என்பதுதான் என் கருத்து. ஆனால், இதற்காக அவரை மட்டும் குறை சொல்ல முடியாது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 90 சதவீதம் பேர் அரசு பதவிகளை வகிக்கிறார்கள். பெரும்பாலான நீதிபதிகள் ஏதாவதொரு ஆணையத்தின் தலைவராக பதவி வகித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் ஓய்வுபெற்ற உடனேயே கேரளாவின் ஆளுநர் ஆனார். அவருக்குப்பின் வந்தவர்கள் பலர் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவி, ரயில்வே ஆணையத்தின் தலைவர், சட்ட ஆணையத்தின் தலைவர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் காலத்தில் நிறைய நீதிபதிகள் எம்.பி. மட்டுமல்ல அமைச்சரே ஆகியுள்ளார்கள். ஆனால், இப்போது பாஜக செய்வதை மட்டும் குறை சொல்கிறார்கள். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, “நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 62இலிருந்து 68 ஆக்குகிறோம். ஆனால், ஓய்வுபெற்ற பிறகு எந்த பதவிக்கும் செல்லக்கூடாது” என்றார். அதற்கு நீதித்துறையினர் ஒப்புக்கொள்ளவில்லை.

பதவியை பெற்றுக்கொண்டதால் நீதிபதி ரஞ்சன் கோகாய் பாஜகவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துவிட்டார் என்று பார்க்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் தனிப்பட்ட நீதிபதிகள் மட்டுமே தீர்ப்பு கொடுக்க முடியாது. ஒவ்வொரு அமர்வுக்கும் குறைந்தபட்சம் இரண்டு நீதிபதிகள் இருப்பார்கள். இரண்டு பேருமே தீர்ப்பு முரண்பட்டால் அது மூன்றாவது நீதிபதிக்கு செல்லும். அதன்படி பார்த்தால், இவர் வழங்கிய தீர்ப்புகளில் மற்ற நீதிபதிகள் முரண்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இது இழுக்கு!
ராஜா சொக்கலிங்கம் (மேனாள் நீதிபதி)

ரஞ்சன் கோகாய் எம்.பி.யாகியுள்ளது, அவரது பணிக்கால நேர்மையை சந்தேகப்படும்படி ஆக்கியுள்ளது. அவர் வழங்கிய தீர்ப்பு குறித்து தற்போது யோசிக்க வைத்துள்ளது. இமாலய உயரத்தில் இருந்தவர் தற்போது கீழிறங்கிவிட்டார். எம்.பிக்கள் மட்டுமல்ல நாட்டின் பிரதமரையே கேள்விகேட்கும் தலைமை நீதிபதியாக இருந்துவிட்டு நியமன எம்.பியாக ஆவது எவ்வளவு பெரிய இழுக்கு? காங்கிரஸ் கட்சியிலும் இப்படி நியமித்துள்ளார்கள். ஆனால், 6 வருடங்கள் கழித்துத்தான் நியமனம் செய்தார்கள். இவரோ மூன்றே மாதத்தில் பதவிக்குப் போய்விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here