சந்தையில் தாண்டவமாடிய கொரோனா!

244

-சு. வீரமணி

கொரோனா பாதிப்பின் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது.
மருந்து பொருட்கள், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதா? பல்வேறு ஊர்களிலும் நிலவரம் என்ன? வணிகர்களுடன் பேசியது ‘புதிய தலைமுறை’ டீம்

சுகந்தி, செருப்பு கடை வியாபாரி, தென்காசி

மக்கள் நடமாட்டம் குறைஞ்சதால ஒரு வாராமாவே வியாபாரம் ‘டல்’லாதான் இருந்தது. அதன்பிறகு மெடிக்கல், காய்கறி, பால், பலசரக்கு தவிர்த்து மற்ற கடைகள மூடச் சொல்லிட்டாங்க. ஒரு நாள், ரெண்டு நாள்ன்னா பரவாயில்ல. இப்ப21 நாட்கள் முட வேண்டியிருக்கு அப்புறமா என்ன சொல்லப் போறங்களோ தெரியல. இப்படி நாள்கணக்கா வியாபாரம் பண்ணலானா எங்க நிலை என்ன ஆகுறது? குடும்பச் செலவுக்கு என்னதான் பண்றது? கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமை புரியுது. அதேசமயம் அன்றாட செலவுக்கு வழி வேண்டுமே. எங்களைப் போன்ற சிறுகுறு வியாபாரிகள் எல்லோருமே கடுமையா பாதிக்கப்பட்டிருக்காங்க. இந்த காலத்துல அரசாங்கம் எங்களுக்கு தேவையான நிதியுதவி பண்ணனும்.

சுரேந்திரன், தென்காசி

முழு ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு மக்கள் நடமாட்டமும் இல்லை. இனிமேல் என்ன செய்யப் போறோம்னு ஒன்னும் தெரியலங்கய்யா. வேற வேலைக்கு இப்போ போக முடியாது. இயல்பு நிலை எப்போ திரும்பும் என்கிறதும் தெரியல. அதுவரைக்கும் அரசாங்கம் ஏதாச்சும் உதவி பண்ணுனாதான் எங்களால பிழைப்பு நடத்த முடியும். இல்லனா எங்க பாடு ரொம்ப திண்டாட்டம்தான்.

மாநிலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரிப்பால் விலைவாசியும் அதிகரித்தே இருக்கிறது. சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று வலம்வந்த வாட்ஸ்-ஆப் பீதியால் ஒருகிலோ சிக்கன் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. விற்பனையும் குறைந்து இருந்தது. இதனால், சிக்கன் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பண்ணையாளர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பரவும் என்பது வதந்தியே இதில் உண்மை இல்லை என் விளம்பரம் செய்து சிக்கன் விற்பனை அதிகரிக்க உதவியது. இதன் மூலம் இன்று சிக்கன் விலை ஒருகிலோ நூறு ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது.

அசைவ உணவு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என்ற பீதியால் தமிழகத்தில் பரவலாக அசைவ உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட கூடாது வேண்டுமானால் பார்சல் வாங்கிச் செல்லலாம் என்ற தமிழக அரசின் உத்தரவால் தமிழகத்தில் பல இடங்களில் சைவ உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

சக்திவேல், கமிஷன் மண்டி உரிமையாளர், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விளையக்கூடிய கத்தரிக்காய், சுரக்காய், பாகற்காய், தக்காளி, முருங்கை போன்ற காய்கறிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் அதிக அளவில் அனுப்பப்படுகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இப்போது கர்நாடகாவில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் அங்கே அனுப்புவது குறைந்துள்ளது. ஆனால், வழக்கம்போல கேரளாவுக்கு எப்போதும் அனுப்புவதுபோல் இல்லாமல் சற்று குறைவாகவே அனுப்புகிறோம். தேவை அதிகரித்து இருப்பதால் விலை சற்று கூடியே இருக்கிறது. கொரோனா பாதிப்பால் காய்கறி விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை.

சக்தி முருகன், செல்ல பிராணிகள் கடை உரிமையாளர், புதுச்சேரி

புதுச்சேரி நகர பகுதியில் செல்ல பிராணிகள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளேன். அடுத்து வரவுள்ள கோடை விடுமுறைக்காக என் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெவ்வேறு வகையிலான நாய்க் குட்டிகளை வாங்கி விற்பதற்காக முதலீடு செய்துள்ளேன். இந்த நேரத்தில்தான் கொரோனா வைரஸ் பரவலால் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்தையும் மூடச் சொல்லி அரசாங்கம் உத்தரவு போட்டுள்ளது. அதை நடைமுறைபடுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளது.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று அபாயம் இந்த வைரஸில் இருப்பதால் ஒரு இந்திய குடிமகனாக விபரீதத்தை உணர்ந்து கொண்டு அரசாங்கம் சொல்வதற்குள் நானாகவே என் கடையை அடைத்துள்ளேன். இருந்தாலும் அடுத்த மாதத்திற்கான கடையின் வாடகை கொடுப்பதில் ஆரம்பித்து, கையில் உள்ள குட்டிகளை விற்பது வரை நிறைய சவால்கள் உள்ளன. இப்போதைக்கு என் தொழிலில் இழப்பு என்றாலும் இந்த ஊரடங்கு உத்தரவு நம் சமூகத்தின் எதிர்காலத்திற்கான சேமிப்பாக நான் பார்க்கிறேன்.

சங்கர், மொபைல் கடை உரிமையாளர், புதுச்சேரி

சைனாவில் கொரோனா வைரஸ் பரவியத்திலிருந்தே என்னை மாதிரியான தொழிலில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் இறங்குமுகம்தான். எங்கள் கடையில் மொபைல் ரீச்சார்ஜ், மொபைல் அஃக்சஸரீஸ் விற்பனை மற்றும் மொபைல் போன் சர்வீஸ் செய்து வருகிறோம். மொபைல் சர்வீஸ் செய்தால்தான் எங்களுக்கு வருமானமே.
மொபைல் ரீசார்ஜுக்கும், அஃக்சஸரீஸிக்கும் பிரச்சனை எதுவும் இல்லை. அது வழக்கம் போல்தான் இயங்கி வந்தது. ஆனால், மொபைல் போன் சர்வீஸுக்கான உதிரிபாகங்கள் கிடைப்பதில் பிப்ரவரி மாதத்திலிருந்தே சிக்கல்தான். டிஸ்பிளே, டச் மாதிரியான உதிரிபாகங்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் விலையை கூட்டிவிட்டனர். கேட்டால் சைனாவில் உற்பத்தி நிறுத்தப்பட்டதை காரணமாக சொல்கின்றனர். இந்த நிலையில் தான் தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என்கிறார்கள்.

மொத்தமாக முதலீடு செய்திருந்தாலும் நானும் தினக்கூலி போலத்தான். தினமும் கடையை திறந்தால்தான் வருமானமே. என் பாடு திண்டாட்டம்தான். வீட்டு வாடகை, கடை வாடகை மாதிரியான செலவுகளுக்கு என்ன செய்வதென்பது புரியாத புதிராக இருக்கிறது.

சிவசங்கர், தலைவர், புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு

மத்திய மாநில அரசுகள் போட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ஒவ்வொரு வியாபாரியும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இது நாட்டுக்காக நாம் செய்கின்ற தியாகமாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டுள்ளோம்.

பொதுவாக வியாபாரம் செய்பவர்கள் பத்து சதவிகிதத்தினர் தங்களிடமுள்ள கையிருப்பைக் கொண்டு வர்த்தக பணிகளை செய்வார்கள். அடுத்த நாற்பது சதவிகிதத்தினர் வங்கியில் கடன் வாங்கி வியாபாரம் செய்கின்ற நடுத்தர வியாபாரிகள். அதற்கடுத்துள்ள ஐம்பது சதவிகித வியாபாரிகள் குறு மற்றும் சிறு தொழிலை செய்பவர்கள். அவர்கள் தினந்தோறும் தொழிலை கவனித்தால்தான் வருமானமே. அதை வைத்துதான் அவர்களது தேவைகளை கவனித்தாக வேண்டும். அரசாங்கம் எப்படி பேரிடர் நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மானியம் கொடுக்கிறதோ அதே போல கடைகளை அடைத்து வீடுகளில் இருக்கின்ற வியாபாரிகளுக்கு மானியம் அல்லது இழப்பீடு மாதிரியானவற்றை அறிவிக்க வேண்டுமென்பது எங்கள் கூட்டமைப்பின் கோரிக்கை.

ஜெயக்குமார், வணிகர் சங்க பிரதிநிதி, தஞ்சாவூர்

இந்த ஊரடங்கு உத்தரவு யாருமே எதிர்பார்க்காத ஒன்றுதான். பெரும் நிறுவனங்கள் தொடங்கி சிறு கடைகள் வைத்திருப்போர் வரை அனைவருக்குமே எங்கள் பகுதியில் இந்த 144 உத்தரவால் பெருத்த நட்டம்தான். பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன, இதனால் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது.
சிறிய கடைகள், நடைபாதை கடைகள், தரைக் கடைகள் வைத்துள்ளவர்கள் அனைவரும் அன்றாடம் தொழில் செய்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும். அப்படி இருக்கையில் சுமார் இரண்டுவாரம் தொழில் செய்யாமல் அவர்களால் எப்படி வாடகை கொடுக்க முடியும்? எப்படி குடும்பத்தை நடத்த முடியும். எனவே, அரசு ஒவ்வொரு தொழிலுக்கும் தக்கவாறு இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும். அதுபோல வங்கிக் கடன்களை இந்த நெருக்கடி காலம் முடிந்து, இயல்பு நிலை திரும்பும் வரைக்கும் வசூலிக்கக்கூடாது.

ராஜா, வணிகர் சங்க பிரதிநிதி, திருச்சி

காய்கறிகள், உணவுப் பொருட்கள், முட்டை, பிராய்லர் கோழி போன்ற சீக்கிரம் அழியும் பொருட்களை வணிகம் செய்யும் வணிகர்கள் பெருத்த தொழில் நட்டத்தில் சிக்கித் தவிக்கின்றனர். கொரானாவில் இருந்து அவர்கள் தப்பினாலும் இப்போது ஏற்பட்டுள்ள இழப்பிலிருந்து அவர்களால் நிச்சயம் தப்ப முடியாது. எனவே, அரசு அவர்களுக்கு முறையான தொழில் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கோரோனா நெருக்கடி முடிந்த பிறகு மீண்டும் இந்த வியாபாரிகள் தொழில் செய்ய அரசு உதவி செய்யவேண்டும். அதுபோல சிறு, குறு தொழில் செய்யும் கடைகள், நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பையும் ஈடுகட்டி உதவி செய்ய வேண்டும்.

ரமேஷ், பேன்சி கடை பணியாளர், தஞ்சாவூர்

இப்போது ஒரு வாரமாக கடை அடைத்திருந்தாலும், கொரோனாவால் கடந்த பத்து நாட்களாகவே வியாபாரமே இல்லை. இதனால், என்னை பத்து நாட்களாகவே வேலைக்கு அழைக்கவில்லை. எப்படியும் இந்த மாதம் பாதி சம்பளம்கூட கிடைக்காது. வருகின்ற மாதம் பிறந்தால் வீட்டுக்கடன், வண்டிக்கடன் டியூ எல்லாமே வந்துவிடும். அதனை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. கடந்த பத்து நாட்களாகவே வேலை இல்லாத காரணத்தால் கைச்செலவுக்குக்கூடக் காசு இல்லை, இதே நிலை நீடித்தால் எப்படி வாழ்க்கை நடத்துவது என்றே தெரியவில்லை.

எம். கலீல் ரஹ்மான், ஜஸ்டின் துரை, எல்லுச்சாமி கார்த்திக் உதவியுடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here