ஏப்ரல் 15-க்கு பிறகு என்ன செய்யப் போகிறோம்?

271

-ஜஸ்டின் துரை

இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு ஏப்ரல் 15ஆம் தேதி முடிவுக்கு வருகிறது; அதன்பின்னர் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. சரி, ஏப்ரல் 15க்கு பிறகு எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடுமா?

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் பாதிப்பு நிலவரங்களை நோக்கும்போது கொரோனாவின் சீற்றம் தணிவதற்கான அறிகுறி இல்லை. இந்தியா போலவே ஒவ்வொரு நாடும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் வெல்ல உச்சபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு கடுமையாக போராடி வருகின்றன. இருப்பினும் கிருமித் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

காட்டுத்தீ போல் பரவும் கொரோனா தொற்றை தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் மட்டும்தான் என்பதால், கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே ‘லாக் டவுன்’ எனப்படும் முழுமையான முடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. இச்சூழலில் மார்ச் 24-ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 15 அதிகாலை வரை 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

31-3-2020 அன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஏப்ரல் 15-ம் தேதிக்குள் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைத்தெறிந்து விடமுடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இத்தொடர்பாக மருத்துவர்கள் சிலரிடம் கேட்டோம்.

வைரஸ்தான் முடிவு செய்யும்!
சென்பாலன், மருத்துவர்

“”இந்த புதுவகை கொரோனா வைரஸுக்கும் நமக்குமான பந்தம் சற்றேறக்குறைய மூன்று மாதங்கள்தான். இதற்கு முன் இந்த வைரஸை எதிர்கொண்ட அனுபவம் இல்லை. இது முதன்முதலில் கொள்ளை நோயாக பரவிய சீனாவின் வுஹான் நகரத்தில் சீன அரசு மொத்த முடக்கத்தை நடைமுறைப்படுத்திய பின் நோய் கட்டுக்குள் வந்தது.

அதன் பிறகு உலகமெங்கும் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்த போது, யாருக்கும் ஆற அமர யோசிக்க அவகாசம் இல்லை. ஏற்கனவே சீனா பின்பற்றி ஓரளவு வெற்றி பெற்ற முடக்கத்தை அனைத்து நாடுகளும் கையில் எடுத்தன. அப்படித்தான் உலகத்தை கொரொனா முடக்கியது.

பிரிட்டன் மட்டும் ஆரம்பத்தில் நோயை பரவ விட்டு சமூக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை கட்டுப்படுத்தலாம் என வித்தியாசமாக யோசித்தது. ஆனால், நோய் பரவலின் வீரியத்தைக் கண்டவுடன் ஓரிரு தினங்களிலேயே தன் கருத்தை மாற்றிக்கொண்டு முடக்கத்தை கையில் எடுத்தது. நோய் அதிக அளவு பாதித்துள்ள அமெரிக்கா முழுமையாக முடங்கவில்லை என்றாலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவும் 21 நாள் முழுமையான முடக்கத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த 21 நாள் முடக்கத்தின் போது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வைரஸ் பரவுவது தடைபட்டு கொள்ளை நோய் முடிவுக்கு வரும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், சீனாவில் 99 சதவிகிதம் முடக்கத்திலிருந்த வுஹான் நகரத்தில் இந்நோய் கட்டுப்பாட்டிற்கு வர மூன்று மாதங்கள் ஆனது. அதன் பிறகும் சோதனை முயற்சியாக சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதே தவிர முழுமையாக முடக்கத்திலிருந்து விடுபடவில்லை.

இந்நிலையில் இன்னும் காய்கறிக் கடையில் கூட்டம் அலைமோதும் இந்தியாவில் 21 நாள் முடக்கம் போதுமானதா என்பது கேள்விக்குறிதான்.

அமெரிக்க தொற்று நோய் பிரிவின் தலைவர் அந்தோனி பாஸியிடம், “முடக்கம் எப்போது தளர்த்தப்படும்?” என பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, “அதை வைரஸ்தான் முடிவு செய்யும். நாம் அல்ல” என்று பதிலளித்தார். தற்போதைய சூழ்நிலையின் உண்மை நிலவரம் இதுதான். நோய் தொற்றை மக்கள் தீவிர பிரச்சினையாக கருதவில்லை எனில் ஆறு மாத முடக்கம் கூடத் தேவைப்படலாம் என ஆஸ்திரேலியா அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவும் சோதனை முயற்சியாகத்தான் 21 நாள் முழுமையான முடக்கத்தை அறிவித்துள்ளது. 21 நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமா என்பதற்கு யாரிடமும் உத்திரவாதமான பதில் கிடையாது. ஆனால், உடனடியாக கொள்ளை நோயாக பரவி அதிக இழப்பை உண்டாக்கும் நிலைமையைத் தவிர்க்கலாம்.

முடக்கத்தின் வெற்றி மக்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தே அமையும். 21 நாட்களுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது மீண்டும் பரவல் அறிகுறி தெரிந்தால் மீண்டும் முடக்கப்படலாம். அல்லது இந்த 21 நாட்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனில் தளர்த்தப்படாமலே நீட்டிக்கப்படலாம். பொருளாதார இழப்பு, பட்டினி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சில சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

ஊரடங்குக்கு 21 நாள் ஏன்?
ஃபரூக் அப்துல்லா, பொதுநல மருத்துவர்

“இந்த கொரோனா கிருமித் தொற்றின் காத்திருப்பு காலம் (Incubation Period) அதிகபட்சம் 14 நாட்கள். ஒருசிலருக்கு இது 27 நாட்கள் வரை நீண்டுள்ளது. எனவே, 28 நாட்கள் என்பதைத் தனிமைப்படுத்துதலின் முறையான காலமாக வகுத்துள்ளோம்.

கொரோனா சங்கிலித்தொடரில் ஏ, பி, சி, டி என நான்கு வகையான மக்கள் இணைகிறார்கள். உதாரணத்திற்கு, கொரோனா அதிகமாக பரவும் ஒரு நாட்டிலிருந்து ஒரு நபர் விமானம் மூலம் வந்து இறங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு விமான நிலையத்தில் கிருமித் தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்று சோதிக்கப்பட்டு அவருக்கு அறிகுறிகள் இல்லை என்பது உறுதியானதும் அவருக்கு 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுரை கூறி அவரிடம் இருந்து சுயப் பிரமாணம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கிறோம்.

அவர் வீட்டில் இருக்கிறார். இதற்கு நடுவில் அவரது வீட்டிற்கு சில உறவினர்கள் வந்து அவரை பார்த்து செல்கின்றனர். அவரும் தனக்கு எதுவும் பிரச்சினை இல்லை என்று கருதி அருகில் உள்ள வீடுகளுக்கு செல்கிறார். இன்னும் ஒரு வாரம் சென்ற பிறகும் அவருக்கு காய்ச்சல் எதுவும் வராததால் அவருக்கு பிரச்சினை இல்லை என்று முடிவு செய்து அவரது குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கித்தர சூப்பர் மார்க்கெட்டுக்கு, மனைவியுடன் கோயிலுக்கு கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கும் சென்று வந்திருப்பார். இப்போது இரண்டாவது வாரத்தின் இறுதியில் அவருக்கு காய்ச்சல் அடிக்கும். உடனே பயந்து சுகாதாரத்துறைக்கு போன் செய்வார். அவரை உடனே தனிமைபடுத்தும் வார்டில் அட்மிட் செய்து நோய் தொற்று அறியப்படும். இவரே டைப் ‘ஏ’ ஆவார்.

இவருடன் நேரடி தொடர்பிலிருந்த இவரது குடும்பத்தார் மற்றும் இவர் சென்று பார்த்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அந்த திருவிழாவில் அவர் கண்ட அவரால் அடையாளம் காண முடிந்த உறவினர்கள், அவர் சென்ற சூப்பர் மார்க்கெட் பணியாளர்கள் இவர்கள் அனைவரும் டைப் ‘சி’.

மேற்சொன்னவர்கள் அனைவரைப் பற்றியும் நமக்கு தெரிந்திருப்பதால் நம்மால் அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும். எனவே, இது நம் கையில் இருக்கும் விஷயம். இப்போது நம் கையில் இல்லாத டைப் ‘பி’ மற்றும் டைப் ‘டி’ மக்களுக்கு செல்வோம்.

யாரெல்லாம் டைப் ‘பி’? அந்த நபர் சூப்பர் அங்காடி சென்ற போது அவர் அருகில் நின்று வேறு பொருட்கள் வாங்க வந்த நபர்கள், அந்த திருவிழாவில் அவருக்கு இதுவரை தொடர்பில் இல்லாமல் இவர் அருகில் வந்து சென்ற மக்கள்.. இப்படி அடையாளம் காண முடியாத மக்கள் அனைவரும் டைப் ‘பி’.

இந்த டைப் ‘பி’ மக்களை அந்த பாதிக்கப்பட்ட டைப் ‘ஏ’ நபரால்கூட அடையாளம் கூற முடியாது. மேலும், அந்த டைப் ‘பி’ நபர்களுக்கும் தாங்கள் நோயைப் பெற்றுள்ளோம் என்பது தெரியாது. இவர்கள் சமூகத்தில் தங்களை அறியாமல் தொற்றைப் பரப்பிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மூலம் தொற்றைப் பெறுபவர்கள்தான் டைப் ‘டி’ மக்கள். இந்த டைப் ‘டி’ மக்களிடம் இருந்து நோய் தொற்றை பெறுபவர்கள் ‘பி1’, ‘பி2’ என்று சாரை சாரையாக உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

சரி, இந்த கொள்ளை நோய் சங்கிலித்தொடரை எப்படி முறிப்பது? சமூகம் தனித்திருப்பதனால் மட்டுமே இதனை செய்ய முடியும். காரணம் டைப் ‘ஏ’ மற்றும் டைப் ‘சி’-யை மட்டும் தனிமையில் வைத்திருந்து, டைப் ‘பி’ மற்றும் டைப் ‘டி’ வெளியில் உலாவிக்கொண்டிருந்தால் கொள்ளை நோய் வீரியமாக காட்டுத்தீ போல் பரவும்.
எனவே, அனைவரையும் வீட்டில் இருக்கச்சொல்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த டைப் ‘பி’ மற்றும் டைப் ‘டி’ மக்கள் தங்களுக்கு அறிகுறிகள் ஆரம்பித்த உடன் வெளியே மருத்துவமனைகளை நாடுவார்கள். உடனே அவர்களது வீட்டை முழுமையாக இன்னும் கடினத்தன்மையுடன் தனிமைப்படுத்திட வேண்டும்.

இப்படியாக நோயின் காத்திருப்பு காலமான 14 முதல் 21 நாட்களை நாம் கடந்தால் முழுமையாக டைப் ‘பி’ மற்றும் டைப் ‘டி’ மக்களை வெளியே கொண்டு வந்து கண்டறிந்து தனிமைப்படுத்திட முடியும். இதனால் கொரோனா சங்கிலித்தொடர் அறுபட்டுப் போகும். இதுவே இந்த 21 நாள் ஊரடங்குக்குப் பின்னால் உள்ள சூத்திரம்.

வெளியே செல்பவர்களுக்கு சில டிப்ஸ்

•நமக்கு தேவையான அவசியமான பொருட்களை மூன்று நாட்களுக்கு சேர்த்து வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

•தினமும் வாங்க வேண்டிய சூழல் இருந்தால் வீட்டுக்கு ஒருவர் மட்டும் நாளுக்கு ஒரு முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் மட்டும் வெளியே வர வேண்டும்.

•நீங்கள் பொருட்கள் வாங்கச்செல்லும் இடங்களில் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே கட்டாயம் ஆறு அடி தூர இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த ஆறடி தூரம் என்பது தொற்றுள்ள ஒருவர் இருமினாலும் தும்மினாலும் அந்த சளித்துகள்கள் நம்மை வந்தடையாது.

•கடைக்கு செல்பவர்கள் கட்டாயம் எந்த இடத்தையும் தொடக்கூடாது. தேவையற்ற இடங்களைத் தொடுவதால் அங்கிருக்கும் வைரஸ் தொற்றை நாம் நம் கைகளுடன் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது

•வெளியே சென்ற இடத்தில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாராக இருந்தாலும் ஆறடி இடைவெளிக்குள் சென்று பேசுவது / கைகள் குலுக்குவது என்பது சமூக இடைவெளிக்கு எதிரானது.

•இரண்டு, மூவராக ஒரு பைக்கில் அல்லது காரில் சேர்ந்து சுற்ற வேண்டாம்.

•தெருக்கள், குடியிருப்புகள், பக்கத்து வீடுகளில் இருப்பவர்களோடு அருகருகே நின்று பேசி நேரம் கழிக்காதீர்கள்.

•வீட்டுக்குள் நுழையும் முன் கால்களை சோப் போட்டு நன்றாக தேய்த்துக் கழுவவும். பிறகு கைகளை நன்றாக சோப் போட்டு தேய்த்துக் கழுவவும். பிறகு முகத்தை கழுவவும்.

•எப்போதும் வெளியே சென்று வர அந்த உடையை மட்டும் பயன்படுத்தவும். அந்த உடைகளை நன்றாக துவைத்து வெயிலில் காயப்போடவும். பிறகு அதையே மீண்டும் பயன்படுத்தவும்.

•எப்போதும் வீடுகளுக்குள்ளும் உறுப்பினர்களுக்கு இடையே ஆறடி இடைவெளி இருப்பது சிறந்தது.

•வயதானவர்கள் எளிதில் கிருமித் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்பதால் வெளியே சென்று வருபவர்கள் அவர்களிடமிருந்து எப்போதும் விலகியிருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here