வதந்திகளை புறக்கணிப்போம்!
அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினால் கொரோனா ஆளைக் கொல்லும்தான். அதைவிடக் கொடுமை கொரோனா குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலும் அது உயிரையே குடிக்கும்.
இதற்கு உதாரணம் மதுரையைச் சேர்ந்த ஓர் இளைஞரின் மரணம். இவர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது வீடியோ எடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு சோதனை முடிந்து அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று உறுதிப்படுத்தி அனுப்பி விட்டார்கள். அதற்குள் அங்கு எடுக்கப்பட்ட அந்த வீடியோவும் அவருக்கு கொரோனா என்ற வதந்தியும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி விட்டது.
செய்தி அறிந்த இளைஞர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன் விபரீத விளைவாக சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு விட்டார். உலுக்கிப் போட்டிருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம். சொல்லித் தீராத சோகம். ஆற்ற முடியாத துயரம்.
இந்த தருணத்தில் அரசுக்கு ஒரு கோரிக்கை. கொரோனா குறித்த வீண் வதந்திகளை பரப்பி மக்களின் உயிரோடு விளையாடும் விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களது சமூக வலைதள கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட வேண்டும்.
மக்களுக்கு ஒரு வேண்டுகோள்: காதில் விழும் அரைகுறை தகவல்களை, வந்து சேரும் விபரீத வதந்திகளை, போலிப் பேர்வழிகள் பரப்பும் முறையற்ற சிகிச்சைகளை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். அதேசமயம் அரசு வழங்கும் அறிவுரைகளை, அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை மட்டுமே கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
உரிய விழிப்புணர்வும் முறையான மருத்துவ சிகிச்சையும் இருந்தால் எவ்வித தொற்றும் நம்மை அணுகாது; எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது!