கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவாக இருக்க என்ன காரணம்?

227

-எல்லுச்சாமி கார்த்திக்

கொரோனா வைரஸ் பரவும் வேகம் உலகம் முழுவதும் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தாலும், இந்தியாவில் அதன் வேகம் குறைவாக இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது, அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரைக் கடந்துள்ள நிலையில், இந்தியாவில் ஆயிரம் நபர்களைத்தான் கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் குறைவாக இருக்க காரணம் என்ன?

அண்மையில் வெளியான கொரோனா சம்பந்தமான ஆய்வறிக்கை ஒன்று, “பல்வேறு விதமான தொற்று நோய்கள், நாட்பட்ட வியாதிகள், சுகாதாரமற்ற குடிநீர், மாசடைந்த காற்று, அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றிற்கு பழக்கப்பட்டுபோன இந்தியர்களின் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதுதான் 135 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக் குறைவாக பரவ காரணமாக இருக்கலாம்” என சொல்லப்பட்டுள்ளது.

ஹைஜீன் ஹைப்போதீசிஸ்

இது உண்மையா? மருத்துவர் கமலிடம் கேட்டோம். “மருத்துவ ரீதியாக இதனை ஹைஜீன் ஹைப்போதீசிஸ் என சொல்வார்கள். ஆனால், இது இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தை பருவ நோய்த்தொற்று மற்றும் மாசடைந்த சூழல் அதிகமாக இருக்கும் மூன்றாம் தர உலக நாடுகளில் வாழும் அனைவருக்குமே பொருந்துகின்ற பொது விதி. வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல நோய் தொற்றிற்கு ஆளானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருக்கும்.

அது இந்த நாடுகளில் பிறந்து, வளரும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினரையும் தொற்று நோய்களுக்கு ஆளாக்கக்கூடும். ஒரு சில தொற்று நோய்கள் நோய்வாய் பட்டவர்களுக்கே கூட தெரியாமல் கடந்து போகலாம். அப்படி தொற்றிற்கு ஆளானவர்கள் மிக குறுகிய காலத்தில் அதிலிருந்து விடுபடலாம். அதே நேரத்தில் எதிர்காலத்தில் இதே போன்ற தொற்று நோய்களிலிருந்து இந்த தோற்று பாதுகாக்கிறது. ஏனென்றால், பொதுவாக நோய்த் தொற்று ஏற்படும் போது உடலை பாதுகாக்கும் புரதங்களை உருவாக்குகிறது. அதனால், இயற்கையாகவே இந்தியா மட்டுமல்லாது இது மாதிரியான நாடுகளில் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமிருக்கும்.

ஆனால், கொரோனா வைரஸ் (கோவிட்-19) விவகாரத்தில் இந்த சக்தி எந்தளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை. ஒட்டுமொத்த மனித இனமும் இப்போதுதான் இந்த வைரஸை முதன்முறையாக எதிர்கொள்கிறது. அதனால் இந்த வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இனிதான் உருவாகும். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தை தீர்மானிக்க இன்னும் கொஞ்சம் காலமெடுக்கலாம்” என்கிறார்.

மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் ஆய்வறிஞர்கள் பலர் இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்தான் என சொல்கின்றனர். அதேநேரம், ஒரு சிலர் இந்த கோட்பாடு விஞ்ஞானபூர்வ மாக இருந்தாலும் அதன் பலனை சந்தேகிக்கின்றனர்.

சமூக விலகல் மட்டுமே கைகொடுக்கும்

தெற்காசியாவில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் மனித உரிமை ஆர்வலரும் பத்திரிகையாளருமான மார்டினஸ், “இந்திய மக்கள் தொகையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வெறும் 8 சதவிகிதத் தினர்தான். இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள கொடிய விளைவுகளை இந்தியா இன்னும் எதிர்கொள்ளவில்லை. இத்தாலியின் மொத்த மக்கள் தொகையில் 23 சதவிகித மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதன் காரணமாகத்தான் அதிக இறப்பு விகிதங்கள் அங்கு ஏற்படுகின்றது. இருந்தாலும் இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 10 கோடி என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பொது சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற 22 சதவிகிதம் மக்கள் தொகை மேலே குறிப்பிடம் கோட்பாட்டை இல்லாமல் ஆக்கிவிடும். எனவே, சமூக விலகலை முறையாக கையாள்வதுதான் இந்தியர்களுக்கு இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அஸ்திரம்.
உலக அளவில் அதிகளவிலான இளைஞர்கள் வாழும் இந்திய மக்களை பொறுத்துத்தான் வைரஸின் தாக்கம் அமையும்” என்கிறார்.

தீவிர கண்காணிப்புகள் அவசியம்

“போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடித்தாலே இதிலிருந்து அதிகப்படியான தாக்கமின்றி கடக்கலாம். முக கவசம், கையுறை, பாதுகாப்பு உபகரணங்களை பதுக்கி வைப்பது சுகாதார ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. பலவீனமான சுகாதார கட்டமைப்பு, நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் சவாலாக இருக்கலாம்.

இதுவரை நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் நாம் இன்னுமே சரிவையே காணவே இல்லை. அதனால், அரசு சொன்னபடி மக்கள் பொறுப்புணர்வோடு செயல்படுவதும், உலக பொது சுகாதார மையம் சொல்லியுள்ள வழிமுறைகளை கடைப்பிடிப்பதும்தான் இதற்கு வழி. அரசும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்கிறார் மருத்துவர் கிரிதர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இருந்தாலும் வைரஸ் பரவலை கட்டுக்குள் வைக்க மேலும் சில நாட்கள் மக்களை ஊரடங்கில் வைப்பது ஓரளவுக்கு இந்தியாவிற்கு உதவலாம் என்கின்றனர் சமூக மருத்துவத்தில் அனுபவமுள்ள மருத்துவர்கள். ஆனால், உலக பொது சுகாதார மையம் இந்தியாவுக்கு அதிக ஆபத்து உள்ளதாகவே எச்சரிக்கிறது.

உலக பொது சுகாதார மையம் சொல்வது என்ன?

“உள்நாட்டு அளவில் நோய் தொற்று பரவும் அபாயத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் இருக்கின்றன. இந்தியா, தாய்லாந்து, இந்தோனீஷியா, இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு மற்றும் மியான்மர் மாதிரியான நாடுகள் தற்போது இதை எதிர்கொண்டு வருகின்றன.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க போதுமான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்த ஏற்பாடு இரண்டாம் நிலை தொற்றை குறைக்க உதவும்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் இருப்பவர்கள் உலக சுகாதார மையம் மற்றும் உள்நாட்டில் சொல்லப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இந்த நோய் தொற்று சிலருக்கு தீவிரமான பாதிப்புகளை கொடுக்கலாம். வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய் கொண்டிருப்பவர்கள் அபாயகரமான கட்டத்தில் இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருப்பவரை அவரது ரத்த மாதிரிகளை கொண்டு ஆய்வுக் கூடங்களில் ஆய்வுக்குட்படுத்திய பின்னர்தான் அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். ஆனால், நோய் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் மற்றும் சந்தேகத்துடனான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் கொரோனா நோய் தொற்று அறிகுறிகளோடு இருந்தவர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டதே இது வேகமாகப் பரவ காரணமாக இருந்துள்ளது” என்கிறது உலக பொது சுகாதார மையம்.

புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன?

மற்ற உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் பரவலான நோய் தொற்றை இந்தியாவும் எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தற்போதைய சூழலில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு இறப்பு விகிதம் 2.5 சதவிகிதமாக உள்ளது.

பாதிக்கப்பட்ட ஆயிரம் நபர்களில் 25 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சீனாவில் 3.2, இத்தாலியில் 2.8, அமெரிக்காவில் 3.6 மற்றும் பிரிட்டனில் 1.9 பாதிக்கப்பட்ட முதல் ஆயிரம் நபர்களின் இறப்பு விகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், பின்னர் இந்த இறப்பு விகிதம் இத்தாலியில் 11, பிரிட்டனில் 6.2, சீனாவில் 4, அமெரிக்காவில் 1.7 என மாறியுள்ளது. எனவே, இந்தியாவுக்கு ஆபத்து இல்லை என்னும் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here