கொரோனா: தென்கொரியா எப்படி கட்டுப்படுத்தியது? அமெரிக்கா ஏன் திணறுகிறது? இந்தியா என்ன செய்யவேண்டும்?

272

– ராம் சங்கர்

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, ஈரான், பிரான்ஸ் என முன்னேறிய நாடுகளே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்தி சீனாவுக்கு அடுத்ததாக உலகை வியப்படையச் செய்துள்ளது தென் கொரியா!

தென்கொரியா எப்படி கட்டுப்படுத்தியது?

தென்கொரிய பேராசிரியர் ஆரோக்கியராஜுடன் பேசி னோம். “தென்கொரியாவில் கொரோனா வைரஸுக்காக கிட்டதட்ட10 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனாலும், அதிலிருந்து மீண்டு வந்து உலக சுகாதார அமைப்பின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது, தென்கொரியா. இத்தனைக்கும், இங்கு நிலைமை கட்டுக்குள் வர ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறக்கப்படவில்லை. ஆனாலும், கொரோனாவை வென்றுள்ளது தென் கொரியா. இதற்கு ஒரே காரணம் மக்களின் ஒத்துழைப்பும் சமூக விலகலும்தான்.

கொரோனா இருந்தால் சமுகம் நம்மை எப்படி பார்க்கும் என்ற உளவியல் பிரச்சனை இருக்கும்; அதனால் பலர் பரிசோதனைக்கு வராமல் இருப்பர். ஆனால், அதனைப் போக்கும் வகையில் கொரியா அரசு அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கொரோனா பரிசோதனை வசதியை அமைத்தது. வாகனத்தில் இருந்து கீழே இறங்காமலே நமது உடல்நலம் பரிசோதிக்கப்படும்.

இப்படி அரசும் – தனியார் நிறுவனங்களும் இனைந்து செயல்பட்டு, இதுவரை 2,86,716 மக்களுக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 9583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் அரசு ஊரடங்கு அறிவிக்கவில்லை. இன்றும் இயல்பு வாழ்க்கை சீராக நடைபெற்றுத்தான் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சமூக விலகலை மக்கள் சரிவர பின்பற்றியதுதான். விதிக்கப்பட்ட விதிகள் அனைத்தையும் மக்கள் பின்பற்றினர்.

எதையும் மூடி மறைக்காமல் கொரோனோ பாதிப்பு பற்றிய விவரங்களை அரசு வெளிப் படையாக மக்களுக்கு சொன்னது; தொடர்ந்து சொல்கிறது. இதனால் உண்மை நிலவரத்திற்கேற்ப அரசும் மக்களும் இணைந்து செயல்பட முடிகிறது. ஒரு பகுதியில் கொரோனா தொற்று உறுதியானால் அப்பகுதி மக்கள் அனைவரின் கைபேசி எண்ணிற்கும் தகவல் சென்றுவிடும். இதனால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருப்பர்” என்கிறார் ஆரோக்கியராஜ்.

சரி, சிறிய நாடான தென்கொரியாவே சாதிக்கும்போது, உலகின் பெரியண்ணன் அமெரிக்காவால் ஏன் முடியவில்லை?

அமெரிக்கா ஏன் திணறுகிறது?

அமெரிக்காவில் ஓக்கஹாமா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவி ஒருவரிடம் பேசினோம். (பெயர், புகைப்படம் வெளியிட விரும்பவில்லை) “இங்கு தற்போதைய நில வரத்தைப் பொறுத்தவரையில் பாதிப்பு 1 லட்சத்து 64 ஆயிரத்து 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அமெரிக்காவில்தான் அதிகம். இதுவரை 3178 பேர் உயிரிழந்துள்ளார்கள். ஆனாலும், இங்கு இதுவரை முழு ஊரடங்கு அமல்படுத்தவில்லை. மக்கள் தங்கள் பணிகளை தடையின்றி செய்துவருகின்றனர்.

கொரோனாவுக்காக இரண்டு வாரம் கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் வீட்டிலேயே இருக்கும்படி எந்த ஆணையுமில்லை. அரசு மக்களை சமூக விலகல் குறித்து கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை; யாரும் பின்பற்றவுமில்லை. சமூக விலகலை விட்டு விலகிச் சென்றதால்தான் அமெரிக்கா இந்தளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது” என்கிறார்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

“அமெரிக்காவின் இன்றைய நிலை இந்தியாவுக்கு ஒரு பாடம். இந்தியாவின் தற்போதைய நிலவரத்தை பார்த்தால் சற்று நிம்மதி தருகிறது. இன்றைய தேதியில் 1251 பாதிப்புகள்தான்; 32 பேர் மட்டும்தான் உயிரிழந்துள்ளார்கள். நம் தமிழகத்திலும் பாதிப்பு மிகக் குறைவுதான். ஆனால், அமெரிக்கா நிலை இந்தியாவுக்கோ தமிழகத்துக்கோ வரவிடாமல் தடுக்க மக்கள் மனம் வைத்தால் மட்டுமே சாத்தியப்படும். இந்தியா முழுவதும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களையும், தமிழகம் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களையும் அரசு தனிக்கவனம் எடுத்து பரிசோதிக்க வேண்டும்” என்கிறார், ஓக்கஹாமா பல்கலைக்கழக மாணவி.

பிலிப்பைன்ஸில் துணை மருத்துவராக இருக்கும் சுந்தரிடம் பேசினோம். “இந்தியர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு இருக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். ஆனால், அதை அவர்கள் உணர்ந்துகொண்டது போல் தெரியவில்லை. அவர்கள் நடந்துகொள்வதைப் பார்த்தால் வருத்தமளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நேரடி மருந்துகள் இல்லை என்பதால் குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆகையால், இப்போது சமூக விலகலே நோயை விலக்கும்.

கடந்த ஜனவரி மாதமே கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியது. வருமுன் காப்போம் என்ற முறையில் அப்போதே சீனாவில் இருந்து இந்தியா வரும் விமானங்களைத் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி இருந்தால் இந்தியாவில் கொரோனா பாதிப்பே இருந்திருக்காது.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1251 என்றுள்ளது. ஆனால், உண்மையில் இதைவிட அதிகம் இருக்கலாம் என்றே உலகம் சந்தேகிக்கிறது. இந்தியாவில் அறிகுறிகள் ஏற்பட்டு அவர்களே மருத்துவமனைக்கு வந்தால்தான் கொரோனா இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. இது தவறு, இதனாலே நிறைய பாதிப்புகள் வெளிவராமல் உள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகளவிலான பரிசோதனை மையங்கள் அவசியம்.

நெருக்கமான நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. ஆகையால், பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக கூடவே வாய்ப்பு அதிகம். மிகுந்த கண்காணிப்பில் இருக்கும் அதிபர்களுக்கே வரும்போது, எனக்கெல்லாம் கொரோனா வராது என அலட்சியத்துடன் இருக்கும் இந்தியர்கள் எம்மாத்திரம். எனவே, கவனம் கவனம் கவனம்” என்கிறார் அழுத்தமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here