-சு. வீரமணி
கொரோனா முடக்கத்திலிருந்து மீள அரசு தரும் உதவிகள் ஊழிக் காலம் போல ஊரடங்கு ஊர் முழுவதையும் முடக்கிப்போட்டுள்ளது.
பெரு, சிறு தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் தொடங்கி தனியார் நிறுவன தொழிலாளர், தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட அனைவரும் கையறுநிலையில் இருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மத்திய, மாநில அரசுகளின் உதவிகள் கை கொடுக்குமா?
மத்தியஅரசுஉதவிகள்
கொரோனோ பாதிப்பு மற்றும் நிவாரணத்திற்காக மத்திய அரசு 1.75 இலட்சம் கோடிகளை ஒதுக்கியுள்ளது எனக் கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அவர் அறிவித்துள்ள பல்வேறு சலுகைகளின் சுருக்கமான தொகுப்பினை பார்ப்போம்.
மாதம் 10 கிலோ அரிசி / கோதுமை
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜன திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 80 கோடி மக்கள் அனைவருக்கும் ஏற்கனவே 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்து வரும் மூன்று மாதங்களில் மேலும் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 கிலோ பருப்பு வகை ஒன்றும் வழங்கப்படும்; இந்த பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
100 நாள் வேலை திட்டம் சம்பளம் உயர்வு
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இரண்டாயிரம்
கிஸான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அது 2000 ரூபாய்களாக பிரித்து மூன்று கட்டமாக வழங்கப்படும். இந்நிலையில், அடுத்த தவணை 2000 ரூபாய் உடனடியாக தற்போது வழங்கப்படும்; நாடு முழுவதும் உள்ள 8.69 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த பணம் செலுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பெண்களுக்கு மாதம் 500 ரூபாய்
ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் என அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும். இதனால் நாட்டில் 20 கோடி பெண்கள் பயன் அடைவர்.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
அறுபது வயதைக் கடந்தவர்கள், விதவைகள், ஏழை மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வங்கி நேரடி பண செலுத்தும் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஒருமுறை 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.
கட்டிட தொழிலாளர்களுக்கு உதவி
கட்டிட தொழிலாளர்களை பொறுத்தமட்டில் அவர்களுக்கென்று நல நிதி உள்ளது. அந்த வகையில் கட்டிட தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு ரூ.31 ஆயிரம் கோடி நிதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிடும். இதன்மூலம் மூன்றரை கோடி கட்டிட தொழிலாளர்கள் பலன்பெறுவார்கள்.
மூன்று சிலிண்டர்கள் இலவசம்
பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன.
மருத்துவர்களுக்கு 50 இலட்சம் காப்பீடு
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நோயாளிகளை காப்பாற்று வதில் போர் வீரர்கள்போல் முன்னின்று துணிச்சலுடன் செயல்படுகிற டாக்டர்கள், நர்சுகள், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள், சார்பு மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
மாதத் தவணைகள் தள்ளிவைப்பு
வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய எல்லா வகையான கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து கட்ட வேண்டும். அதோடு, தவணை செலுத்த வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாசக் காலத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக் கடனாகவும் சேர்த்துவிடக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சுய உதவிக் குழுக்களுக்கு உதவி
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜன திட்டத்தின் கீழ் வரும், சுய உதவிக் குழுக்களுக்கு தீன் தயாள் கடன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட உள்ளது
பிஎஃப் நிதியை அரசு செலுத்தும்
வருங்கால வைப்புநிதி பங்களிப்பில் இருக்கும் நிதியில் 70% பணத்தை ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம் அல்லது மூன்று மாத சம்பளத்தை எடுத்துக்கொள்ளலாம். இதனால் 4.8 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள். அதை திரும்ப செலுத்தத் தேவையில்லை. இதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிமுறைகளில் தேவையான திருத்தம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும். அதாவது நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் 12% தொகை, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து செலுத்தப்படும் 12% என மொத்தம் 24% தொகையையும் அரசே செலுத்தும். 100 பணியாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் மாத வருமானம் ரூ. 15,000க்கு குறைவாக இருக்கும் பணியாளர்களுக்கு இது பொருந்தும்.
கடன் வட்டி விகிதம் குறைப்பு
மக்களின் கையில் பணம் எளிதில் கிடைக்கும் வகையில் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 75 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
மாநில அரசு உதவிகள்
‘கொரோனோ தடுப்புப்பணிகள் மற்றும் நிவாரணப்பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில் 3780 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
குடும்ப அட்டைக்கு ரூ. 1000
தமிழகத்திலுள்ள அனைத்து ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும். மேலும், அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும். பொது வினியோகக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க இந்நிவாரணம், டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் வினியோகிக்கப்படும்.
இந்த ரூ.1,000 நிவாரணம் மற்றும் விலையில்லாப் பொருட்களை பெற விருப்பம் இல்லாதவர்கள், இதற்கான வலைதளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறியிருப்பின், ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்.
தொழிலாளர்களுக்கு உதவி
கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா ரூ.1,000-ம் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய்யும் வழங்கப்படும்.
வெளிமாநிலத்தவருக்கு இலவச உணவுப்பொருட்கள்
தற்போது தமிழ்நாட்டில் சிக்கித்தவிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளம் கண்டு, அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
ஆதரவற்றோருக்கு உணவு
எந்த வசதியும் இல்லாதோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே, சூடான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும். இதற்கென தேவைக்கு ஏற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம்
கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.
எந்நேரமும் இயங்கும் அம்மா உணவகம்
தமிழகம் முழுவதும் நாள்முழுவதும் அம்மா உணவகத்தின் மூலமாக சூடான, சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும்.
நடைபாதை வியாபாரிகளுக்கு உதவி
பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப்படும் 1,000 ரூபாயுடன் கூடுதலாக ரூ.1,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.
100 நாள் வேலைக்கு கூடுதல் சம்பளம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு, 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும்.
விளைபொருட்களை இலவசமாக சேமிக்கலாம்
விவசாயிகள் விளைவித்த விளைபொருட்கள் வீணாகாமல் தடுக்க தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஒருமாதத்துக்கு இலவசமாக விளைபொருட்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் மீது கவனம்
அடுத்த இரண்டு மாதங்களில் பிரசவிக்க இருக்கும் ஒன்றரை இலட்சம் கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ அலுவலர்கள் மூலம் தனிக்கவனம் செலுத்தப்படும். அந்த கர்ப்பிணிகளுக்கு தேவையான உதவிக்கு 102, 104 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.
தடையில்லா மின்சாரம்:
144 ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர், இதனால் வீடுகளின் மின்தேவை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஒரு நிமிடம்கூட தடை இல்லாத மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக மின் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.