(வீட்டிலேயும்) வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்!

278

– ராம் ஷங்கர்

எப்படி இருக்கிறது Work from Home?

சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்களுக்கு ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ புதிதல்ல. ஆனால், கொரோனா அச்சத்தால் இன்று அனைத்து துறையினரும் தொழில்நுட்ப வளர்ச்சி தரும் இந்த வசதியை பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள். ஊரடங்கில் வீட்டில் முடங்கினாலும் வேலைகள் முடங்கவில்லை. ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ அனுபவம் எப்படியுள்ளது? சிலரிடம் கேட்டோம்.

ராஜ வாழ்க்கை!
பா.ராகவன், எழுத்தாளர்- வசனகர்த்தா

அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதைவிட வீட்டிலிருந்து வேலை பார்த்தால் கவனம் கூடும் என்பதுதான் என் தனிப்பட்ட அனுபவம். ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும்போது சில ஒழுக்கங்கள் அவசியம். வேலைக்காக ஒதுக்கும் நேரத்தில் வேறெதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். நான் எழுதிக்கொண்டிருக்கும்போது போன் வந்தால் எடுக்கமாட்டேன். ஃபேஸ்புக் பார்க்க மாட்டேன். வீட்டுக்கு யாராவது வந்தாலும் காத்திருக்கச் சொல்லிவிட்டு, எழுதி முடித்த பிறகுதான் போய் வணக்கம் சொல்வேன்.

எழுதிக் கொண்டிருப்பதை முடித்த பிறகு பத்து நிமிடம் ஃபேஸ்புக். அழைத்தவர்களைத் திரும்ப அழைத்தல். ஏதாவது புத்தகத்தை எடுத்து ஒரு நான்கு பக்கம். அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட், ஹாட்ஸ்டார் எதிலாவது, ஏதாவது ஒரு நகைச்சுவைக் காட்சி. மீண்டும் வேலையில் இறங்கிவிட்டால் முடிக்கும்வரை ஒன்றுமில்லை.
வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, வேலை செய்யும் இடத்தை வேலைக்கான மூட் உருவாக்கும்படியாகச் செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். நடிகைகள் படம் எதிரே இருந்தால் நன்றாக வேலை செய்ய முடியும் என்றால் மனைவியிடம் அனுமதி பெற்று வைத்துக்கொள்ளலாம். தவறே இல்லை. அதேபோல, எனக்கு உணர்வெழுச்சி தரக்கூடிய சில புத்தகங்களை எப்போதும் கண்ணில் படும்படியாக வைத்துக்கொள்வேன். பிடித்த நேரம் படித்துக்கொள்வேன்.

வீட்டில் இருப்பது ஒரு ராஜ வாழ்க்கை. இந்த சொகுசுக்கு நிகரே சொல்ல முடியாது. இந்தக் கட்டாய வீட்டிலிருந்து வேலை செய்தாக வேண்டிய தினங்களில் அதை முழுதாக அனுபவிக்க வேண்டும்.

நடைமுறை சிக்கல்கள் ஏராளம்!
சிவசுப்பிரமணியன், ஐடி ஊழியர்

எனக்கு ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்” முதல்முறையல்ல. தேவையிருப்பின் அதனை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு ஏற்கனவே இருந்தது. பொதுவாக வெளியில் இருப்பவர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்பதை கேட்க குளுமையாக இருக்கும். ஆனால், அதுவல்ல நிதர்சனம்.

அலுவலகம் என்ற ஒன்று கட்டமைக்கப்பட்டதே இணைந்து பணியாற்றத்தான். ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ என்பதில் இந்த அடிப்படையே தகர்கிறது. அவசியத்தின் பேரில் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்றால் நடைமுறை சிக்கல் ஏராளம். முதலில் நேர மேலாண்மை. அலுவலகத்தில் எல்லாம் திட்டமிட்ட படி நடக்கும். ஆனால், வீட்டில் அதில் சாத்தியமற்றது. ஐடி துறை என்பதால் கோடிங் சம்மந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் கையாள சற்று கடினமாக இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் வசதிகளில் பாதிகூட வீட்டில் இருக்காது. குறிப்பாக இணையதள வேகம், தொழில்நுட்ப இடைஞ்சல்கள் என ஏற்படும்.

வீட்டில் வைத்து பணிபுரியத் தேவையான உபகரணங்கள் இல்லாதோருக்கு நிறுவனம்தான் அதைத் தரவேண்டும். நிறுவனத்தின் கோணத்தில் பார்த்தால் அது அவர்களுக்குச் சுமைதான்.

பெண்களுக்கு பயனுள்ளது!
ப்ரியா, தனியார் நிறுவன ஊழியர்

வீட்டில் இருந்து பணியாற்றுவது ஒருவித புத்துணர்வைத்தான் தருகிறது. பயண நேரத்தை பயனுள்ளதாகச் செலவழிப்பது போலான எண்ணம் ஏற்படுகிறது. அலுவலகம் செல்ல வேண்டும் எனத் தயாராவது பெண்களுக்குச் சற்று சிரமமானதை. அது இல்லாததில் மகிழ்ச்சி.

கொரோனா பிரச்சினை முடிந்தபின்னரும் இந்த வசதியை பெண்களுக்கு தரலாம். குறிப்பாக, இரவு நேர வேலைகளை முழுவதுமாக வீட்டிலிருந்து செய்ய பெண்களை அனுமதிக்கலாம். தகுந்த நேரத்திற்கு வேலை நிவர்த்தி செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

சில நிறுவனங்கள் இணையச் செலவுகளையும் தந்து விடுகின்றனர். எனவே, அனைத்தும் எளிதில் நிறைவு பெறுகிறது. வீட்டிலிருந்து பணிபுரிவதில் ஒரே ஒரு மைனஸ் கற்றுக்கொள்ளும் நேரமில்லாமல் போகிறது.

திட்டமிட்டு செய்தால் சிறப்பு!
சுவிதா, தனியார் நிறுவன ஊழியர்

இதனை ஒரு சிரமமாகவே கருதுகிறேன். குறிப்பாக குடும்ப சூழலில் வாழ்பவர்களுக்கு இது மிகவும் கடினமான ஒன்று. அலுவலகங்களில் இருக்கும் உபகரணங்களும் வீட்டில் பயன்படுத்துவதும் ஒன்றல்ல. வேலை பழுவைத் தாங்காமல் லேப்டாப் திணறியதால் என்னால் பணி செய்ய இயலவில்லை. மேலும், உயர் அதிகாரி சொல்லச் சொல்ல பணி செய்வதால் ஒவ்வொரு முறையும் அழைப்புக்காகக் காத்திருப்பது, நேர விரயம் போன்றவை எரிச்சலூட்டுகிறது.

கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்கு இது பெரும் துன்பமாக அமையும். இணையதள வசதி சரியாக இருக்காது, வேலையை துவங்குவது கடினம் என்ற நிலை ஏற்படும். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அனைத்து வசதிகளும் சரிவரச் செய்து தரப்பட்டால் எல்லாம் சாத்தியமே.

.வீட்டிலிருந்து பணிபுரிவோர், படுக்கை அறையில் கடைசி நிமிடம் வரை தூங்கிவிட்டு நேராக லேப்டாப் முன் அமருவதைத் தவிர்க்க வேண்டும். எப்போதும் அலுவலகம் செல்லும்போது எப்படி தயாராவீர்களோ அதில் பாதியேனும் தயாராவது அவசியம். அப்போதுதான் பணியாற்றும் மனநிலை ஏற்படும்.

•ஒரு திட்டமிடல் இல்லாமல் நினைத்த நேரத்தில் பணிசெய்வதைத் தவிர்த்து, உணவு இடைவேளை இத்தனை மணிக்கு, இந்த வேலை எப்போது என்ற சரியான திட்டமிடல் ஒரு புத்துணர்வை தரும்.

•வீட்டில்தானே இருக்கிறோம் என்று நடுவில் கொஞ்ச நேரம் உலாவது, வீட்டு வேலைகளை ஐக்கியப்படுத்திக் கொள்வது போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும். வேலை நேரத்தின் போது உங்கள் சக பணியாளர்களோடு இணைப்பில் இருப்பது அவசியம். பணி குறித்த ஐயப்பாடுகள் ஏற்பட்டால் எப்படி அருகில் இருப்பாரை அழைப்போமோ அதேபோல் அலைபேசியில் அழைப்பது நல்லது.

•வீட்டிலிருந்து பணி செய்வது ஒருவகையில் அறிவியல் வளர்ச்சி, இயற்கை பேரிடரின் போது பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்திடவும் பணிசெய்யவும் இது ஒரு நல்ல வாய்ப்பும். இருக்கும் வாய்ப்புகளை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொண்டால் எல்லாம் நலமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here