நாம் இருக்க பயமேன்!

297

-எல்லுச்சாமி கார்த்திக்

கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகியுள்ள சூழலிலும் மனிதத்தை தாங்கி நிற்கின்றனர் நல்லுள்ளம் படைத்த சமூக சாமுராய்கள். கடந்த காலங்களில் பேரிடர் சமயங்களில் சாமானியர்கள் எப்படி அடுத்தவர்களுக்கு உதவ ஒன்றுகூடினார்களோ அதே மாதிரியான தற்போதும் செய்து வருகின்றனர். முககவசம் அணிந்து தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு களத்தில் நிற்கும் அந்த நிஜ நாயகர்களில் சிலருடன் பேசினோம்.

இலவசமாக முக கவசம்!
அண்ணாமலை, தையல் கலைஞர், சிதம்பரம்

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க நாம எல்லாரும் முக கவசம் அணிய வேண்டும் என்கிற விஷயத்தைச் செய்திகள் மூலமா தெரிந்துகொண்டேன். அதே நேரத்தில் முக கவசங்களுக்கு மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறதையும் பார்த்தேன். நாப்பது வருஷமா தையல் வேல செய்துகிட்டு வருகிறேன். பேண்ட், ஷர்ட், ஸ்கூல் யூனிபார்ம்னு நிறைய துணிகள் தைத்திருக்கிறேன். நமக்கு தெரிந்த கலை மூலமா மக்களுக்கு இந்த அவசர நேரத்தில் உதவவேண்டுமென்று முடிவு செய்தேன்.

அதனால் முககவசத்தோட அவசியத்தை தெரிந்துகொண்டு, கடந்த இரண்டு வாரமா எங்கள் தையல் கடையில் எங்கள் சொந்த செலவில் கதர் துணியால் முக கவசம் தைத்து ஊர் மக்களுக்கு இலவசமா கொடுத்துக்கிட்டு வருகிறேன்.

மக்கள் நலனே முக்கியம்!
பாண்டித்துரை, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்

நாட்டில் இருக்கிற நமது பாதுகாப்புக்காக, இராணுவம் அவர்களுடைய உயிரைப் பணயம் வைத்து நேரம் காலமெல்லாம் பார்க்காமல் எல்லையில் நிற்கிறார்கள். அது மாதிரிதான் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலையும். கொரோனா வைரஸ் தீவிரமாகி இருக்கிற இந்த சமயத்தில், மக்களின் உயிர் காக்கும் இந்த பணியை நான் ரொம்பவும் நேசிச்சுதான் செய்கிறேன். பாதுகாப்புக்காக மாஸ்க், கிளவுஸ்லாம் போட்டிருக்கிறேன். இப்போது இருக்கிற நிலைமையில் எங்கள் உடல் நலத்தைவிட சமூகநலன்தான் முக்கியம். ஆம்புலன்ஸ் டிரைவர் வேலையை விட்டு வந்திடுமாறு என் பெற்றோர் அழைத்ததற்கு மறுத்துவிட்டேன்.

செய்தியைக் கொண்டு சேர்க்கிறேன்!
சரவணன், செய்தித்தாள் விநியோகிப்பவர், புதுச்சேரி

ஊரடங்கு அமலில் இருக்கிற நேரத்தில் பல சிரமங்கள் தாண்டித்தான் வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகித்துக்கொண்டு வருகிறேன். வழக்கமா வெளியாகிற பேப்பர்களை காட்டிலும் இப்போ குறைவாகத்தான் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. என் கைக்கு கிடைக்கிற பேப்பர்களை என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறேன்.

நியூஸ் பேப்பர் மூலமா கொரோனா வைரஸ் பரவுமென்பது வதந்தி. அதை மக்கள் நம்ப வேண்டாம். இன்றும் பேப்பர் மூலமாகவே செய்திகளைத் தெரிந்துகொள்ளும் மக்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் அன்றாட செய்திகளை நியூஸ்பேப்பரில் படித்துத் தெரிந்துகொள்ள உதவுகிறதும் ஒரு சமூக சேவைதான்.

முடங்கி இருப்போர்க்கு உதவுகிறோம்!
ஆனந்தன், பூரணாங்குப்பம், புதுச்சேரி

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக மக்கள் வீடுகளில் தனித்திருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சமூக விலகலை கடைப்பிடிக்க முடியாமல் ஒரே நேரத்தில் கடைகளில் குவிகின்றனர். சிலர் அதைத் தவிர்ப்பதற்காக வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். அதிலும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் அவசர தேவைக்காகத் திண்டாடி வருகின்றனர். அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகப் புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதி இளைஞர்களின் ஒத்துழைப்போடு மருந்து, மாத்திரை, மளிகை பொருட்கள், உணவு என அனைத்தையும் அவர்கள் வீடு தேடி விநியோகித்து வருகிறோம். கண்ணுக்கு தெரியாத கிருமியான கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் நல்லுள்ளம் படைத்தவர்களான மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், கேஸ் சிலிண்டர் விநியோகிப்பவர்கள், சமூக சேவகர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் எனப் பலர் மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்களோடு ஒப்பிடும்போது என் பணி சிறியதுதான்.

கொரோனா நோய் தடுப்பு நிதி

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திறம்பட சிகிச்சை கொடுப்பதற்காகவும், வறியவர்களுக்கு உதவுவதற்காகவும் கணிசமான நிதி தேவைப்படுவதால் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தன்னார்வலர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியுதவியைக் கொடுத்து உதவுமாறு தமிழ்நாடு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

நிதி கொடுக்க விருப்பமுள்ளவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்தலாம். காசோலை, வரைவோலை மூலம் நிதி கொடுத்து உதவலாம். ஆன்லைன் மூலமாகவும் நிதி கொடுக்கலாம்.

விவரங்களுக்கு : http://ereceipt.tn.gov.in/cmprf.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here