கைக்கு எட்டாத காய்…கறி!

220

-எம்.கலீல்ரஹ்மான்

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது அரசு. ஆனால், அத்தியாவசிய பொருட்களின் விலையோ, கொடூர கொரோனாவை காரணம் காட்டி, சாமானியர்களால் வாங்க முடியாத அளவு உச்சத்தைத் தொட்டுள்ளது!

அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்க மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தற்காலிக காய்கறி சந்தைகளை அரசு தொடங்கியுள்ளது. காலை ஏழுமணி முதல் ஒன்பது மணிவரை மட்டுமே இயங்கும் இந்த காய்கறி சந்தையில் மக்களுக்குத் தேவையான அனைத்து காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் மக்களோ, அடுத்து எப்போது கிடைக்குமோ என்ற பதற்றத்தில், வீட்டிற்குத் தேவையானதைவிட அதிகமாகவே அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனாலும் டிமாண்ட் அதிகமாகி அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அசைவம் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்ற வதந்தியால் கடுமையாக குறைந்திருந்தது கோழி இறைச்சி, மட்டன். இதனால் எல்லாம் கொரோனா பரவாது என மருத்துவர்கள் கொடுத்த ஊக்கத்தில், மீண்டும் மக்கள் இறைச்சிக் கடைகளில் குவிய, இப்போது மட்டன், சிக்கன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை என்பதால் மீன்வரத்து குறைந்து மீன்கள் விலையும் உயர்ந்துள்ளது.

“கொரோனா தாக்குதலில் இருந்துகூட தப்பிவிடலாம்; ஆனால், இந்த கொள்ளை விலையேற்றத்திலிருந்து தப்ப முடியவில்லை” என்று மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

இந்த அநியாய விலை உயர்வை சமாளிக்க, தேனி உழவர் சந்தையில் கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், அவரை, முருங்கை, பீன்ஸ், பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு, சௌசௌ, கேரட், நூக்கல், முள்ளங்கி என பதினெட்டு வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

மற்ற பகுதிகளில் ஏன் இவ்வளவு விலை உயர்வு?

காரணம் அறிய காய்கறி மார்க்கெட்டில் இருந்த சக்திவேலிடம் பேசினோம். “ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து கேரள மாநிலத்துக்கு காய்கறிகள் அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. காரணம், அதிக விளைச்சல் இருந்தால் அதிக அளவில் காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படும்; இப்போது விளைச்சல் குறைவு; அதேபோல தமிழகத்தின் தேவையும் அதிகமாக இருக்கிறது. அதனால், கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

விளைச்சல் அதிகமாக இருந்தால் விலை குறைவாக இருக்கும். ஆனால், இப்போது விளைச்சல் குறைந்து தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானதுதான். போகப் போக காய்கறிகளின் விலை குறையும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here