டாஸ்மாக் மதுபான கடை!

24

-பூ.சர்பனா

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் புதுவிதமான ஒரு சமூகச் சிக்கலை உருவாக்கி இருக்கின்றன. திடீரென்று நிறுத்துவதால் குடிநோயாளிகள் அதிதீவிர மனநெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கேரளாவில் இதுவரை 7 குடிநோயாளிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதனைத் தடுக்க ‘மருத்துவர் பரிந்துரை சீட்டுகளுடன் வருவோருக்கு மது வழங்கலாம்’ என்று அறிவித்திருக்கிறார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

தமிழ்நாட்டிலும் குடிநோயாளிகள் அதிகம் உண்டு. இவர்களின் நிலை என்ன? இவர்களுக்கும் இவர்கள் குடும்பத்திற்கும் ஆபத்துகள் வராமல் தடுத்து பாதுகாப்பது எப்படி? மனநல மருத்துவர்களிடமும் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவரிடமும் பேசினோம்.

மூன்று விளைவுகள்

இது தொடர்பாக நம்முடன் பேசிய மனநல மருத்துவர் டி.வி அசோகன், “ஒரு மருத்துவர் என்ற முறையில் குடிநோயாளிகளுக்கு மது கொடுக்கவேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், மது அருந்துபவர்கள் திடீரென அப்பழக்கத்தை 100 சதவீதம் நிறுத்தும் நிலை ஏற்பட்டால், மூன்று விளைவுகள் ஏற்படும். ஏனென்றால், மது ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. தினமும் அருந்துவதால் உடல் ரீதியாகவும் மன நீதியாகவும் அதற்கு அடிமையாகி இருப்பார்கள்.

முதல் விளைவு என்பது, சுமாரான பிரச்சினைதான். இவர்களுக்கு, எரிச்சல், கோபம், கை, கால் நடுக்கம், பதற்றம், ஓரிடத்தில் நிற்க முடியாமை, மதுவையே திரும்பத் திரும்ப நினைப்பது, அதனை சாப்பிட்டால்தான் உடல்நிலை சரியாகும் என்று நினைப்பது, சரியாக பேசமுடியாமை; தூக்கம் வராமை; சரியாக சாப்பிட முடியாமை போன்றவை ஏற்படும்.

இரண்டாவது விளைவு கொஞ்சம் தீவிரமாக இருக்கும். இதற்கு பெயர் தன்னிலை பிறழ்ந்த ஆவேச குழப்ப நிலை என்போம். இவர்கள் பகலில் சுமாராக இருப்பார்கள். ஆனால், இரவில் மிகவும் ஆவேசமாக காணப்படுவார்கள். தாங்கள் எங்கே இருக்கிறோம்? யாரிடம் பேசுகிறோம் என்பது தெரியாது. பார்க்கும் பொருட்கள் வித்தியாசமாக தெரியும். ஒரு சின்ன பல்லி அனகோண்டா மாதிரியும், ஒரு எறும்பு யானை போலவும் தெரியும். அதோடு, பாம்பு உடம்பில் ஊறுவதுபோல், போலீஸ் துரத்துவதுபோல், காதுகளில் குரல் கேட்பது, மனிதர்களின் முகமே விலங்குகள் தலைபோல் தெரியும்.

இவர்களுக்கு மிகப்பெரிய பயம் வரும். கேட்கும் குரல் பேய் குரல் மாதிரி கேட்கலாம். யாராவது தொட்டுப் பேசினால்கூட பாம்பு கடிப்பது போல் இருக்கும். வித்தியாசமான ஸ்மெல் வரும். திடீரென எழுந்து ஓடுவார்கள்; குதிப்பார்கள். அப்போது, இவர்களுக்கு ஊசி போட்டு சாந்தப்படுத்தி கல்லீரல் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து, கோமா நிலைக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்கு சிகிச்சை அளிப்பார்கள்.

மூன்றாவது விளைவு, முழுமையாக மனநோய் பாதிப்புக்கு உள்ளாவது. இதற்கு பெயர் மனநலம் பிறழ்ந்த நிலை. வித்தியாசமாக பேசுவது, தன்னிடமே பேசிக்கொள்வது, உருவங்கள் தெரிவது, திடீரென ஓடுவது, செத்துப்போய்விடுவேன் என்று சொல்வது போன்று மனநோய் வந்துவிடும். ஏற்கனவே, மனநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கண்ட்ரோலில் இருக்கும்போது, இப்போது திடீரென குடிப்பதை நிறுத்தும்போது இன்னும் மனநோய் அதிகமாகிவிடும். பல்வேறு நோய்களும் வந்துவிடும்.

இப்போது டாஸ்மாக் மூடப்பட்டிருப்பதால் குடிநோயாளிகள் மதுவுக்கு எங்கே செல்வார்கள்? இவர்களால் வீட்டிலும் இருக்க முடியாது. குடும்பத்தாரிடம் ஏதாவது பிரச்சினை செய்துகொண்டே இருப்பார்கள். கட்டுப்பட முடியாது. வெளியில் சென்றால் அடி வாங்குவார்கள். தவறு செய்வார்கள். சண்டை போடுவார்கள்.

சென்னையில் குடிநோயாளிகளுக்கு இதுபோன்ற பிரச்சினை இருந்தால் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்து அயனாவரம் மனநல காப்பகத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அதற்கு வேண்டிய வழிமுறைகளும் குடி நோய்க்கான மாத்திரைகளும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட மாத்திரை இருக்கும்.

அதனால், அரசு நான்கைந்து இடங்களில் குடிநோயாளிகளை தனியாக ஒரு கேம்ப் வைத்து சிகிச்சை கொடுக்க வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். வயதான குடிநோயாளிகள் வெளியே சென்றால் மறதியில் தொலைந்துபோகவும் விழுந்துவிடவும் வாய்ப்புள்ளது. யாரும் கவனிக்கவும் மாட்டார்கள். அதனால், மனநல சிகிச்சை அளிக்கும் மொபைல் கேம்ப்களை நடத்த அரசு அறிவிக்க வேண்டும்.

வீட்டிலேயே இருப்பதால் பொதுவாகவே இப்போது கணவன் – மனைவிக்குள் சண்டை வரும். கடந்தகால பிரச்சினை குறித்தெல்லாம் பேசுவார்கள். இதில், குடிநோயாளிகளாக இருந்தால், இன்னும் அதிகமாகும். அதனால், குடும்பத்தினர் மது அருந்துபவர்களிடம் பாஸிட்டிவ் அப்ரோச்சை கையாளவேண்டும். ஆரம்ப காலத்திலிருந்த, அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை எடுத்துக் கூறவேண்டும்.

மேலே சொன்ன மூன்று விளைவுகளில், முதலாவது விளைவு என்றால் கொஞ்சம் சமாளித்துக்கொள்வார்கள். ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையில் இருப்பவர்களுக்குத்தான் மிகவும் கடினம். எது இருந்தாலும் தைரியமாக காவலர்களிடம் வந்து தெரிவிக்க வேண்டும்.

குடிப்பதற்காக வழி கேட்பவர்களை சிகிச்சைக்கான வழியை ஏற்படுத்தவேண்டும். இந்த 21 நாட்கள் குடி மற்றும் சிகரெட் பழக்கங்களை விடுவதற்கு மிக அருமையான சந்தர்ப்பம். அதனால், பல நல்ல விஷயங்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் நடக்கும். இதற்கு அரசே உதவி செய்வது நல்லது” என்கிறார்.

பேசுங்கள் நிறைய பேசுங்கள்!

மனநல மருத்துவர் ஆர்.கே. ருத்ரன், “வீட்டின் உள்ளேயே இருப்பது இப்போது பலருக்குப் பெரும் உளைச்சலாக மாறி வருகிறது. மது இயல்பு வாழ்வில் இன்று ஓர் அங்கமாக ஆகிவிட்ட நிலையில், சமூகக் கட்டுப்பாட்டின் போது ஏற்கனவே மனச்சோர்வுக்கு ஆளானவர்கள், இப்படி ‘செத்து விடலாம்’ என்று முடிவெடுப்பது அரிதான விஷயம் அல்ல. இது மது இல்லாததால் மட்டுமே எடுக்கும் முடிவு அல்ல, உள்ளே குமைந்து கொண்டிருந்த மன அழுத்தத்தின் வெளித்தெறிப்பு.

தனிமை என்பதை ஒரு சுகமாக அனுபவித்திருந்தவர்கள்கூட சுயவிருப்பின்றி, இந்த ஊரடங்கில் அது ஒரு நிர்ப்பந்தமாக அமைந்ததில் அமைதி இழந்திருக்கிறார்கள். மனம் அழுத்தத்திற்கு ஆளாக இன்னும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும் என்று நினைத்ததற்கு மாறாக முதல் ஐந்து நாட்களிலேயே பலரும் தடுமாறுகிறார்கள். இதற்குக் காரணம் எல்லாமும் விரைவாக அமைந்துவிட்ட இன்றைய சமுதாய இயக்கம்தான். சுகமோ வருத்தமோ அதிக நேரம் அனுபவிக்காத ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. பொறுமை நிதானம் இரண்டுமே குறைந்து வருகிறது. எல்லாவற்றிலும் வேகத்தையே அனுபவித்தவர்கள் இந்த முடக்கத்தில் தடுமாறுகிறார்கள்.

ஒரு வாரம் இருந்துவிடலாம் என்று மனதளவில் தீர்மானித்த மக்கள், மூன்று வாரங்கள் என்றதும் ஆரம்பத்தில் மலைத்திருந்தார்கள். தயார்நிலையில் வீட்டில் வாங்கிவைத்த மது, சிகரெட் மூன்று வாரங்கள் தாங்காது எனும் பதைப்பு, பதட்டமாக எரிச்சலாக மாற ஆரம்பிக்கிறது. இது அத்தியாவசியமான உணவு, மருந்து போன்றது இல்லை என்றாலும் இவற்றுக்குப் பழகியவர்களுக்கு இது திடீரென்று ஏற்பட்ட ஓர் இழப்பாக மனதுள் உளைச்சல் தருகிறது.

மிகத்தீவிரமாக மதுவிற்கு அடிமையாகி, காலையிலேயே குடிக்க வேண்டும் இல்லாவிட்டால் முடியாது எனும் நிலையில் இருப்பவர்களுக்குத்தான் மதுவிலக்குச் சிகிச்சை செய்ய முடியும். அவ்வப்போதோ, தினமும் கொஞ்ச அளவிலோ குடிப்பவர்களுக்குப் பெரிதாக சிகிச்சை தர முடியாது. ஏனென்றால், இதனால் அவர்களது வாழ்வு, செயல்பாடு, சிந்தனை, உறவுகள் பாதிக்கப்படுவதாய் நாம் எடுத்துச் சொல்லி மதுவை விடவைக்க அவர்களை மனதளவில் தயார் செய்ய முடியாது. இவர்கள்தான் இந்த சமூக-சுயதனிமைக் கட்டுப்பாட்டில் தடுமாறுகிறார்கள்.

ஆலோசனை தருகிறேன் என்று இவர்களிடம் படம் வரைந்து பார், பாடு, படி, என்று சொல்வதெல்லாம் பலிக்காது. ஏற்கனவே அவற்றில் ஆர்வமோ ஈடுபாடோ இல்லாதவர்களுக்கு அது ஒரு மாற்றாக அமையாது. இவர்களுக்குத் தேவை சகமனிதர்கள்தான். இப்படி யாராவது இருந்தால் அவர்களைத் தொடர்புகொண்டு பேசுங்கள். உங்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் குரல் வழி அந்த நெருக்கத்தை அவர்கள் உணர்வார்கள். தொடாதே, நெருங்காதே என்பதுதான் கொரோனா தடுப்பு. தொலைபேசி மூலம் பேசாதே என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. யார் மீதெல்லாம் உங்களுக்கு அக்கறை இருக்கிறதோ அவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.

வெட்டி அரட்டைகூட நேரத்தின் இறுக்கத்தைக் குறைக்கும். இறுக்கம் குறைய நாம் யார் வேண்டுமானாலும் உதவலாம். ஆனால், மனச்சோர்வு ஒரு நோய் நிலையிலிருந்தால் மருத்துவ உதவிதான் பலன் தரும்” என்கிறார்.

அன்பையும் ஆதரவையும் காட்டுங்கள்

குடிநோயாளிகளின் குடும்பத்தினருக்கு ஆலோசனைகளை வழங்கும் உளவியல் நிபுணர் டாக்டர் நப்பின்னை சேரன், “குடியை நிறுத்தியதால் குடிநோயாளிகளுக்கு மனச்சிதைவு நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. இந்நேரத்தில் குடிநோயாளிகளின் குடும்பத்தினர், “நான் எத்தனையோ முறை சொன்னேன். ஆனால், குடிப்பதை நீ நிறுத்தவில்லை. இப்போது வசமா மாட்டிக்கிட்ட. இப்படியெல்லாம் தடை போட்டால்தான் நீ அடங்குவ” என்று குடிநோயாளிகளை எரிச்சல் படுத்துவதுபோல் பேசக்கூடாது.

இதுதான் நல்ல வாய்ப்பு என்று நினைத்துக்கொண்டு அவர்களின் மனதை கோபப்படுத்தித் திட்டக்கூடாது. மாறாக, ‘குடிக்காமல் இருக்கும்போது எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம்; குழந்தைகள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள். குடிக்காமல் இருக்கும்போது உங்களை எல்லோருக்கும் எவ்வளவு பிடித்திருக்கிறது’ என்று பாஸிட்டிவாக பேசுவது அவசியம். மனது விட்டுப்பேசி அன்பையும் ஆதரவையும் கட்டாயம் கொடுக்கவேண்டும்.

குடிநோயாளிகளை மூச்சுப் பயிற்சி, சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்ய வைத்தால் மனது லேசாகும்” என்கிறார்.

மறுவாழ்வு மையங்கள் தேவை

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன், “தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61.4 சதவீதம் (4 கோடி பேர்) மதுகுடிப்பவர்கள் இருக்கிறார்கள். அதில், 8 சதவீதம் பேர் பெண்கள். இந்த 61 சதவீதத்தில் முழுநேர குடிகாரர்கள் 30 சதவீதம் பேர். தினமும் 100 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் மது விற்பனையாவதிலிருந்தே இதனை உறுதிபடுத்திக்கொள்ளலாம். எனவே, கொரோனா முகாம் திறப்பதுபோல குடிபோதை மறுவாழ்வு மையங்களும் இப்போது ஏற்படுத்தவேண்டும்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஒரு மருத்துவர் மதுவை பரிந்துரை செய்தால் அவரின் உரிமத்தை ரத்துசெய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. எந்த மருத்துவருக்கும் மதுவை பரிந்துரை செய்ய அதிகாரம் கிடையாது. அதனால், உடனடியாக குடிபோதை மறுவாழ்வு மையங்களைத் திறப்பதுதான் நல்லது” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here