அஞ்சறைப் பெட்டியில் இருக்கிறது அருமருந்து

394

-சு. வீரமணி

வழிகாட்டும் சித்த மருத்துவர்கள்

கொரோனோ தொற்றுக்கு மருந்து இல்லை என்பதுதான் இவ்வளவு களேபரத்துக்கும் காரணம். இந்நிலையில், நமது உடலின் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துவதன் மூலம் இந்த நோய் தாக்குதலை ஓரளவு சமாளிக்க முடியும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? இங்கே வழிகாட்டுகின்றனர் சித்த மருத்துவர்கள்.

“இப்போதைக்கு மிக வேகமாக கொரோனோ பரவி வருவதால், பரவலைத் தடுப்பதற்காக மக்களை தனிமைப்படுத்துவதுதான் மிகச்சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. எனவே, மக்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்பட்டு இருந்து பாதுகாப்பான இடைவெளியை கடைபிடித்தால் கொரோனோ பரவலை தடுக்கலாம்” என்பதுதான் சித்த மருத்துவர்கள் அனைவரின் முதல் ஆலோசனையும்கூட.

நோய் எதிர்ப்பாற்றல் என்பது என்ன?

மனிதர்களுக்கு இருவித நோய் எதிர்ப்பாற்றல் இருக்கும். பிறக்கும்போதே உருவாகும் எதிர்ப்பு சக்தி என்பது INNATE IMMUNITY. அடுத்ததாக வளர, வளர ஏற்படுவது ADAPTIVE IMMUNITY. இதுபோல உடலில் உள்ள எதிர்ப்பு சக்திதான் நம்மை பல்வேறு நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. இப்போது தோன்றியுள்ள கொரோனோ போன்ற வைரஸ்களிடமிருந்து நம்மை காக்கவும் நோய் எதிர்ப்பாற்றல் வேண்டும், நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் இருந்தால் நம்மால் நோயிலிருந்து எளிதாக மீளமுடியும்.

கொரோனா என்பது என்ன?

வறட்டு இருமல், தும்மல், உடல் வலி, உடல் பலவீனம், அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிக்கல் ஆகியவைதான் ஆகியவை கொரோனாவின் அறிகுறிகள் என கூறப்பட்டுள்ளது. சித்த மருத்துவம், உடலில் ஏற்படும் சுரங்களை வாதசுரம், பித்தசுரம், கபசுரம் என பிரிக்கிறது. கொரோனோ வைரஸ் தாக்கப்பட்ட மனிதனின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுவதாலேயே மூச்சுவிடுவதில் சிரமமும் தொண்டையில் வலியும் ஏற்படும். இது சித்த மருத்துவத்தில் கபசுரம் என்ற வகையில்தான் வருகிறது.

திட உணவை தவிர்க்கலாம்

இது தொடர்பாக நம்முடன் பேசிய இயற்கை மருத்துவ வல்லுனர் கோ. சித்தர், “அதிக அளவில் திட உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம். கஞ்சி போன்ற எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள், கீரைகள், உலர்ந்த பழங்கள் போன்றவற்றை நிறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் இதனால் உடலில் நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும். வேகவைத்த காய்கறிகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த நாட்களில் டீ, காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது, அதற்கு பதிலாக நமது வீட்டிலுள்ள அஞ்சறைப்பெட்டி பொருட்களான சீரகம், மிளகு, மல்லி, கிராம்பு, ஏலக்காய், பட்டை, இஞ்சி, எலுமிச்சைப்பழம், மஞ்சள் போன்ற பொருட்களில் நீங்கள் விரும்பும் பொருட்களை வெந்நீருடன் தேன் அல்லது உப்பு அல்லது கருப்பட்டி கலந்து குடிக்கலாம். இல்லையென்றால் ரசமோ சாறோ செய்து குடிக்கலாம். இவ்வாறு தினமும் செய்தால் உடலில் நன்மை செய்யும் உயிரிகள் அதிகரிக்கும்.

தினமும் பூவன் அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் சேர்த்துக்கொள்ளவேண்டும். மற்ற வாழைப்பழங்கள் வீட்டில் விளைந்தாலும் சாப்பிடலாம். உடலில் அதிக வெப்பம் அல்லது அதிக குளிர்ச்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் மூச்சுப் பயிற்சி செய்வது உடலை திடப்படுத்தும்.

கொரோனாவோடு வைரஸ்கள் தாக்கம் எல்லாம் முடிந்துவிடப் போவதில்லை. மாறிவரும் தட்பவெப்பநிலைக் காரணமாக இனிவரும் நாட்களில் இதுபோல பல வைரஸ்கள் வரலாம். எனவே, நாம் இயற்கையோடு இணைந்த வாழ்வியலையும் உணவுப் பழக்கவழக்கத்தையும் ஏற்படுத்தி சிறப்பான நோயெதிர்ப்பாற்றலுடன் இருந்தால் எது வந்தாலும் அதனை எதிர்கொள்ளலாம்.

நமது உடலுக்கு, மனதுக்கு, இயற்கைக்கு எது இயல்போ அதனை நாம் செய்தாலே எல்லா சிக்கல்களிலிருந்தும் மீளமுடியும். தனிமனித ஒழுக்கம் சிதைந்து நுகர்வும் அதிகரித்ததன் காரணமாகத்தான் நமக்கு இத்தனை சிக்கல்கள் என்பதை நாம் உணரவேண்டும்” என்கிறார்.

நோயெதிர்ப்பு ஆற்றலை வளர்ப்பது எப்படி?

இதுபற்றி பேசும் உளுந்தூர்பேட்டை ஜே.எஸ்.ஏ. சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் கண்ணன், “பாரத பிரதமர்கூட இப்போது கொரோனோவுக்கு சித்த மருத்துவத்தில் ஏதேனும் தீர்வுகள் உள்ளதா என்று ஆலோசித்துள்ளார். சித்த மருத்துவம் சார்பாக இப்போது நாங்கள் கொரோனோ முன்னெச்சரிக்கையாக கபசுர குடிநீரை பரிந்துரைக்கிறோம். ஆனால், இது இப்போது பல இடங்களிலும் தீர்ந்துவிட்டது. அதனால், நோய் எதிப்பாற்றலை அதிகப்படுத்தும் வேறு சிலவற்றையும் நான் சொல்கிறேன்.

•தேன் – இஞ்சி சாறு கலந்து காலை எழுந்தவுடன் குடிக்கலாம். அதுபோல் வெந்நீரில் எலுமிச்சை பழம் கலந்து குடிக்கலாம்.

•பிரண்டை தண்டை பாலில் அவித்து, பிறகு பிரண்டை தண்டுகளை எடுத்து அந்த பாலிலேயே சாறுபிழிந்து, அதில் மிளகு மற்றும் திப்பிலி பொடியினை தலா 10 கிராம் அளவு கலந்து, அந்த பாலை பத்து நாட்கள் வெயிலில் காயவைத்தால் அது பொடியாக மாறிவிடும். இதனை சாப்பிடலாம்.

•நெல்லிக்காயை எடுத்து தண்ணீரில் அவித்து, அதனை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். இஞ்சித் தேனூறலும் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து.

•ஆடாதொடா இலையுடன் இரண்டு மிளகினை தட்டிப்போட்டு காய்ச்சி குடித்தால் தொண்டைவலி, சளி பிரச்சினைகள் தீரும். இதுபோன்ற மருந்துகளை பெரியவர்கள் 60 மிலி அளவும் குழந்தைகள் 15 மிலி அளவும் கொடுக்கலாம்.

•கிருமி நாசினிகள் எனப்படும் வேப்பிலை, மஞ்சளை தண்ணீரில் போட்டு அதன் மூலமாக கைகளை கழுவினால் அதுவே சிறப்பான சானிடைசர்தான்.

•வெந்நீர் குடிக்கலாம். அந்த நீரில் சீரகம் போட்டு குடிப்பது இன்னும் நல்லது. வயதானவர்களுக்கு சூடான உணவுகளை மட்டும் கொடுக்கலாம்.

•கொரோனோவுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்க ஆய்வுகள் செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

•உடலை சீர்படுத்தும் உணவுகள்

•இதுபற்றி பேசும் திருபெரும்புதூர் வேலுமயிலு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, “உடலில் நோயை ஏற்படுத்துவது வாதம், பித்தம், கபம்தான். இது மூன்றையும் நீக்குவதே நோயெதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். காலையில் இஞ்சியை சாறெடுத்து தேன்கலந்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும்போது நமது உடலில் உள்ள பித்தம் காணாமல் போகும்.

•மதிய உணவுக்கு பிறகு சுக்கினை பொடிசெய்து அதில் தேன்கலந்து சாப்பிட்டால் செரிமானத்தை அதிகப்படுத்தும். கபத்தை சரிசெய்யும். அதுபோல மாலையில் கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதனை வெந்நீரில் கலந்து குடித்தால் அதிகப்படியான வாயு உடலில் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்.

•தினமும் நெல்லிக்காய் சாறுடன் தேன் அல்லது கல் உப்பு கலந்து குடிக்கலாம். எலுமிச்சைப்பழ சாறுடனும் கல் உப்பு கலந்து குடிக்கலாம்.

•காலை வெறும்வயிற்றில் சிறிய அளவு வேப்பிலையை சாப்பிடலாம் அல்லது அரைத்து விழுங்கலாம். அதுபோல உணவில் மஞ்சளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். வால்மிளகிணை பொடிசெய்து அதில் அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து பாலில் கலந்து குடிக்கலாம். இது தொண்டை வறட்சி, மார்புச்சளி ஆகியவற்றை நீக்கும். பொதுவாக காய்கறிகள், கீரைகள் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. நோய் எதிர்ப்பாற்றலை பெருக்க முருங்கைக் கீரையை சாறாகவோ சமையலிலோ அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது, முருங்கைக் கீரையில் இரும்புசத்து, கால்சியம் அதிகம் உள்ளது.

•திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் திரிபலா எனப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்ற காயகல்ப மருந்துகளை உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்பாற்றல் கூடும். மேற்சொன்ன அனைத்தையும் எடுக்க முடியாது என்றாலும் எதுவெல்லாம் உங்களுக்கு கிடைக்குமோ அதனை மட்டும் பயன்படுத்தினாலே போதுமானது.

•நிலவேம்பு குடிநீர் அல்லது கபசுரகுடிநீர் எது கிடைத்தாலும் குடிக்கலாம். மேலும் வெந்தயம், சீரகம் இரண்டையும் சேர்த்துக்கொள்ளலாம். முக்கியமாக இந்த சூழலில் உணவுமுறைகளை சீர்செய்துகொள்ள வேண்டும். நேரத்திற்கு சாப்பிட வேண்டும். எளிதில் சீரணமாகாத உணவுகள், துரித உணவுகள், அதிக மசாலா உணவுகள், எண்ணெய் பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here