-தொகுப்பு மோ. கணேசன்
கோவிட் 19- வைரஸ் பற்றி வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவிக்கொண்டிருப்பதால் எது உண்மை? எது பொய் என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம், இதுகுறித்த உண்மைத் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதிலிருந்து…
தகவல்:கொரோனா வைரஸ் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவாது. குளிர்ப் பிரதேசங்களில் பரவும். அதிக வெப்பநிலை பரவும் இடங்களில் இந்த வைரஸ் பரவாது.
உண்மை:குளிர்ப் பிரதேசங்கள் மட்டுமின்றி வெப்ப மண்டல பிரதேசங்களிலும் பரவும் தன்மை கொண்டது.
தகவல்:சுடுநீரில் குளித்தால் வைரஸ் பரவாது.
உண்மை:மனித உடலின் வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ். சுடுநீரில் குளித்தால் வைரஸ் அழியாது. உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் மட்டுமே தற்காத்துக்கொள்ள முடியும்
தகவல்:கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும்.
உண்மை:கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது.
தகவல்:Hand Dryers பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்கலாம்.
உண்மை:ஹேண்ட் ட்ரையர்ஸை பயன்படுத்தினால் கையில் இருக்கும் ஈரத்தைத்தான் போக்குமோ தவிர, வைரஸை அழிக்காது.
தகவல்:அல்ட்ரா வயலெட் டிஸ்இன்ஸ்பெக்ஷன் பல்பினை பயன்படுத்துவதன் மூலம் இந்த வைரஸை அழிக்கலாம்.
உண்மை:இதன் மூலம் கொரொனோ வைரஸை அழிக்க முடியாது. தோலில் அரிப்போ, பாதிப்போதான் ஏற்படும்.
தகவல்:தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனா பாதிப்பில் இருப்பவர்களைக் கண்டறிய முடியும்.
உண்மை:கண்டறிய முடியும். கொரொனா பாதித்தவர்களுக்கு காய்ச்சல், இருமல் என்பவையே முதல் அறிகுறி என்பதால், உடல் வெப்பநிலையைக் கண்காணிப்பதன் மூலம் எளிதில் கொரோனோ பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தலாம்.
தகவல்:எல்லா காய்ச்சலும் கொரோனா பாதிப்புதான்?
உண்மை:எல்லா காய்ச்சலும் கொரோனா பாதிப்பு இல்லை. சாதாரண காய்ச்சல், சளி, இருமல் என்பதை கொரோனா பாதிப்பு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதற்காக, சாதாரண காய்ச்சல்தான் என்று வீட்டிலேயே இருந்திடவும் கூடாது. உடனே அரசு மருத்துவமனையை நாடவேண்டும்.
தகவல்:நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்
உண்மை:நிமோனியா தடுப்பூசி மட்டுமல்ல, எந்த ஒரு தடுப்பூசியும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாது.
தகவல்:மூக்கில் உறிஞ்சிக்கொள்ளும் சலைனைப் பயன் படுத்தினால் கொரோனாவைத் தடுத்துவிடமுடியும்.
உண்மை:இதில் உண்மை இல்லை. அது சளியைத்தான் கட்டுப்படுத்தும். கொரோனாவைத் தடுக்கமுடியாது.
தகவல்:பூண்டு சாப்பிடுவதால் கொரோனாவைத் தடுக்கலாம்?
உண்மை:பூண்டு சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால் கொரோனாவைத் தடுக்கும் என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் ஏதுமில்லை.
தகவல்:குழந்தைகளையும் வயதானவர்களையும் மட்டுமே கொரோனா தாக்கும்.
உண்மை:இதில் உண்மையில்லை. குழந்தைகளையும், பெரியவர்களை மட்டுமல்ல, இளைஞர்களையும், நடுத்தர வயதுடையோரையும் தாக்கும். குறிப்பாகச்சொல்ல வேண்டுமென்றால், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்த அனைத்துத் தரப்பினரையும் கொரோனா தாக்கும்.
தகவல்:கொரோனா வந்தால் தப்பிக்க முடியாது?
உண்மை:இதில் உண்மை இல்லை. கொரோனா பாதித்தவர்களில் 80 சதவீதம் பேர் விரைவில் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
தகவல்:அருகருகே பேசுவதன் மூலம், பயணிப்பதன் மூலம் கொரோனா பரவாது?
உண்மை:கொரோனோ தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து 1 மீட்டர், அதாவது மூன்றரை அடி தூரம் தள்ளி நின்று பேசினால்தான் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்கிறது மருத்துவ உலகம். அத்தகைய நபரோடு பயணம் என்பது நோய்த்தொற்றைத்தான் உருவாக்கும்.
தகவல்:காற்றில் கொரோனா வைரஸ் உயிரோடு கலந்திருக்கும்
உண்மை:அதில் உண்மை இல்லை. இத்தொற்று உள்ளவர்களின் எச்சில், சளி போன்றவற்றின் மூலமாகவே அடுத்தவருக்கு பரவும். கொரோனா வைரஸானது, உயிர் வாழ சார்புயிரி தேவை. அந்த வைரஸிற்கு இப்போது ஏற்ற சார்புயிரி மனிதன்தான். அதனால் அது மனிதனின் உடலுக்குள் சென்றால்தான் உயிர்வாழ முடியும்.
அடிக்கடி ஏன் சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள சொல்கிறார்கள் தெரியுமா? இந்த வைரஸானது கண், மூக்கு, வாய் ஆகியவற்றின் வழியேதான் உள்ளே செல்கிறது. நாம் கண்ட இடங்களில் கைவைத்து விட்டு, கையைக் கழுவாமல் கண், மூக்கு, வாய் போன்ற உடல் பாகங்களை நம்மை அறியாமல் தொடும்போது, எளிதில் அந்த வைரஸ் உடலுக்குள் சென்றுவிடும்.
சோப்பில் இருக்கும் கொழுப்புப்பொருட்கள், வைரஸின் செல்சுவரை சிதைத்துவிடுவதால்தான் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கையைக் கழுவச்சொல்கிறார்கள். சோப்பு இல்லாதவர்கள் சானிடைஸர் பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்வதைத் தவிர்த்து 14 நாட்கள் தனித்தே இருப்பது நல்லது. காரணம் இந்த வைரஸின் வாழ்நாள் காலம் 14 நாட்கள்தான்.
நன்றி: https://www.who.int