வாவ் ஐந்தறிவு – 32

20

வாவ் ஐந்தறிவு – 32
-ராஜேஷ் குமார்

விலங்குகளின் விந்தை உலகம்!

புரவிப் புயல்

அந்தக்கால மன்னர்களின் போர்ப்படையில் இரண்டே இரண்டு விலங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருந்தன. அதில் ஒன்று யானை. மற்றொன்று குதிரை. இந்த இரண்டு விலங்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட காரணம் இதுதான். யானை வலிமைக்கும், குதிரை வேகத்திற்கும் பெயர் பெற்றது.

ஒரு மன்னரின் போர்ப்படையில் யானைப்படை கூட இல்லாமல் போகலாம். ஆனால் குதிரைப்படை கண்டிப்பாக இடம்பிடித்திருக்கும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு குதிரை மட்டுமே. மன்னர்களின் காலத்திற்குப் பிறகு குதிரை என்கிற ஒரு விலங்கு மனிதனின் போக்குவரத்திற்கும், மேலைநாடுகளின் கிராமப்புறங்களில் ஏர் உழுவதற்கும் பயன்பட்டு வந்தது. பின்னாளில் குதிரைகளை வைத்துக் கொண்டு பந்தயங்களும் நடத்தப்பட்டன. இப்போதும் நடத்தப்பட்டுவருகின்றன.

குதிரை என்பது ஒரு காரணப் பெயர். அது குதித்து குதித்து ஓடியதால் அந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. குதிரைக்குப் புரவி, பரி என்ற பெயர்களும் உண்டு. புரவி என்றால் காற்று. பரி என்றால் வேகமாக ஓடுவது என்று பொருள். ஆங்கிலத்தில் ‘ஹார்ஸ்’ என்று அழைக்கப்படும் குதிரையின் விலங்கியல் பெயர் ஈக்வஸ் ஃபெரஸ் கேபிலஸ் (EQVUS FERUS CABALLUS) என்பதாகும்.

இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. ப்யூர் வெஜிடேரியன். இதன் ஃபேவரைட் டிஷ் பசும்புல்லும் வேகவைத்த கொள்ளும். ஒரு குதிரையை புல்வெளியில் கொண்டு போய்விட்டால், அது வயிறு நிரம்புவது கூடத் தெரியாமல் நாள் முழுவதும் மேய்ந்துகொண்டே இருக்கும். அந்த அளவுக்கு இரையில் நாட்டம் கொண்டது.
பொதுவாக எந்த ஒரு விலங்காக இருந்தாலும், அதன் குட்டிகளுக்கு ஒரே ஒரு பெயர்தான் இருக்கும். ஆனால் குதிரைகள் மட்டும் அதன் வயதிற்கு ஏற்றார்போல பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

ஒரு வயதுக்கும் குறைவான ஆண் பெண் குதிரைகள் ஃபோல் (FOAL) என்று அழைக்கப்படுகின்றன. ஒரு வயது முதல் இரண்டு வயது வரையுள்ள ஆண், பெண் குதிரைகளை யார்லிங் (YEARLING) என்ற பெயரிலும், நான்கு வயதுக்குட்பட்ட குதிரைக் குட்டிகளை கோல்ட் (COLT) என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். ஆனால், இந்த கோல்ட் என்ற பெயரானது, இளம் ஆண் குதிரைகளை மட்டுமே குறிக்கும். அதே நேரத்தில் இளம் பெண் குதிரைகளை ஃபில்லி (FILLY) என்று அழைத்து அடையாளப் படுத்திக்கொள்கிறார்கள்.

குதிரைகளுக்கான இந்தப் பெயர்கள் இத்தோடு நின்றுவிடாமல் மேலும் தொடர்கிறது. பொதுவாக குதிரைகள் நான்கு வயதிற்குமேல் பருவம் அடைகின்றன. பருவமடைந்த ஆண்களுக்கு ஸ்டாலியன் (STALLION) என்றும் பெண் குதிரைகளுக்கு மேர் (MARE) என்றும் பெயர். ஆண்மைத்தன்மை நீக்கப்பட்ட குதிரைகளை கேல்டிங் ஹார்ஸ் (GELDING HORSE) என்றும் அழைக்கிறார்கள்.

ஒரு குதிரையின் ஆயுட்காலம் 25 ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே. ஒரு பெண் குதிரையின் கருக்காலம் பதினோரு மாதங்கள். அதாவது 330 முதல் 365 நாட்கள் என்ற அளவில் உள்ளது. குட்டிகள் பிறந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுகின்றன. ஐந்தாவது ஆண்டில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடுகின்றன. பொதுவாக குதிரைகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். வெகு அரிதாக மட்டுமே கருப்பு மற்றும் தூய வெண்மை நிறத்தில் குட்டிகள் பிறக்கின்றன. நம் நாட்டில் உள்ள குதிரைகளுக்கும் வெளிநாட்டில் உள்ள குதிரைகளுக்கும் இடையில் உயிர்வாழும் ஆண்டுகாலம் வித்தியாசப்படுகின்றன.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள குதிரைகள் 40 ஆண்டுகள் வரை கூட உயிர்வாழும் திறன் பெற்றவையாக உள்ளன. பதிவு செய்யப்பட்ட ஓர் ஆவணத்தின் மூலமாக 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஓல்ட் பெல்லி’ என்று அழைக்கப்பட்ட குதிரையானது சுமார் 62 வயது வரை வாழ்ந்துள்ளது என்கிற உண்மை தெரியவந்துள்ளது. ஆனால் 13 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2007-ஆம் ஆண்டு, தனது 56 வயதில் உயிரிழந்த ‘சுகர் பஃப்’ என்னும் குதிரையே உலகில் வயதான குதிரையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
குதிரையின் உடல் அமைப்பு

ஒரு குதிரையின் சராசரி உயரம் 5 அடி ஆகும். அதன் கழுத்தும் உடலும் சேரும் பகுதியில் இருந்துதான் அதன் உயரம் கணக்கிடப்படுகிறது. குதிரை ஓடுவதற்கும், மற்ற விலங்குகள் ஓடுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது மற்ற விலங்குகள் ஓடும்போது, அதன் தலை மேலும் கீழும் அசையும். ஆனால் குதிரையின் தலை, உடம்பின் அசைவைப் பொறுத்து ஓடும்போதும் சரி, நடக்கும் போதும் சரி அதன் தலை அசைவது இல்லை. இந்தப் பண்புக்கு ஏற்ற வகையில் குதிரையின் உடம்பும் அதன் எலும்பு மண்டலமும் அமைந்துள்ளது.

குதிரையின் உடலில் சராசரியாக 205 எலும்புகள் உள்ளன. ஒரு மனிதனின் எலும்பு மண்டலத்திற்கும் குதிரையின் எலும்பு மண்டலத்திற்கும் உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், குதிரைக்கு காரை எலும்பே இல்லை என்பதுதான். இவற்றின் கால் மூட்டுப் பகுதியில், மனிதனுக்கு இருப்பது போல் பந்து கிண்ண மூட்டு (BALL BOWL JOINT) என்ற எலும்புப்பகுதி இல்லை. இந்த அமைப்பு இல்லாததன் காரணமாகத்தான் குதிரைகளால் நின்றுகொண்டே தூங்கமுடிகிறது. மேலும், குதிரைகளின் கால் முட்டிக்குக் கீழே தசைகள் இல்லை. அதற்குப் பதிலாக தோல், தசைநார்கள், சவ்வுகள் ஆகியவை எலும்புகளைச் சூழ்ந்துள்ளன. கால்களும் குளம்புகளும் குதிரைக்கு மிக முக்கியமான உறுப்புகள் ஆகும்.

குதிரையின் குளம்புப் பகுதி மனிதனின் நகம் போன்ற கடினமான அமைப்பைக் கொண்டதாக இருந்தாலும், குதிரைகள் ஓடும்போது, அதன் குளம்புகள் தேய்ந்து போகும் வாய்ப்புகள் அதிகம். குதிரைகளை பயன்பாட்டில் வைத்து இருப்பவர்கள் அவற்றின் குளம்புகள் தேய்ந்துவிடாமல் இருப்பதற்காக இரும்பாலான லாடங்களைப் பொருத்துவார்கள். குதிரைகள் வளரும்போது அதனுடைய குளம்புகளும் வளர்வதால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை லாடங்களை மாற்ற வேண்டி இருக்கும். குதிரைகள் ஆடு மாடுகளைப் போல் புல் வகைத் தாவரங்களை உணவாக எடுத்துக்கொண்டாலும், அசைபோடுவது இல்லை. இதற்கு ஒரே ஒரு இரைப்பை இருப்பதால் அசைபோடும் வேலைக்கு அவசியம் இல்லாமல் போகிறது.

இதனுடைய இரைப்பை சிறியதாகவும் அதே சமயத்தில் அதன் பெருங்குடல் நீண்டதாகவும் உள்ளது. இப்படிப்பட்ட அமைப்பு இருப்பதால் சாப்பிடும் உணவு சீக்கிரமே இரைப்பையில் நிரம்பி, பெருங்குடலுக்குப் போய் அங்கே ஜீரணிக்கப்பட்டு, உடம்புக்கு சீரான சத்து கிடைக்கிறது. நன்கு வளர்ந்த ஒரு குதிரை, ஒரு நாளில் சராசரியாக 10 கிலோ உணவை உண்ணும்.

குதிரையின் குடல் பாகத்திற்கு முன்பாக குதிரைக்கு ஒரு சிறப்பான ஜீரண உறுப்பு உள்ளது. இதற்கு சீக்கம் (CECUM) என்று பெயர். இந்த சிறப்பான ஜீரண உறுப்பு இருப்பதால் குதிரைகள் எதுமாதிரியான தாவர வகைகளை உண்டாலும், அதில் உள்ள ‘செல்லுலோஸ்’ என்ற வேதிப்பொருளையும் ஜீரணித்துவிடுகிறது. குதிரைகளால் ஒரு உணவை செரிக்க முடியாவிட்டால், அதனால் வாந்தி எடுக்கமுடியாது. அந்த செரிக்காத உணவே விஷப் பொருளாகி குதிரையின் மரணத்திற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

குதிரையின் பார்வை

நிலப்பரப்பில் வாழும் பாலூட்டி மிருகங்களில் குதிரைகளின் பார்வைத்திறன் மேம்பட்ட ஒன்று. கண்களும் பெரிய அளவு கொண்டவை. அதனுடைய இரு கண்களாலும் 70 டிகிரி வரை பார்க்கமுடியும். குதிரை, தன் ஒற்றைக் கண்ணை மட்டும் பயன்படுத்தி 360 டிகிரி வரையிலும் பார்க்கமுடியும் என்பது விலங்கியல் வல்லுனர்களை வியக்க வைக்கிற விஷயங்களில் ஒன்று. இப்படிப்பட்ட அதீத பார்வைத்திறன் காரணமாகத்தான் வண்டிகளில் பயன்படுத்தும் குதிரையின் கண்களுக்கு பக்கவாட்டு திரைகள் மாட்டப்படுகின்றன. இவற்றால் இரவிலும் நன்கு பார்க்க முடியும். குதிரைகளால் வண்ணங்களைப் பிரித்து பார்க்க முடியாது. வெள்ளை கருப்பு நிறங்களை மட்டுமே அவற்றால் இனம் கண்டுகொள்ள முடியும். அதன் கேட்கும் திறனும் அசாத்தியமானது.

ஒரு குதிரையால், தன்னுடைய காதுகளை மட்டும் 180 டிகிரி வரைக்கும் திருப்ப முடியும். இப்படிப்பட்ட திறமை இருப்பதன் காரணமாகவே குதிரை, தன்னுடைய தலையை திருப்பாமல் எந்த திசையில் இருந்து எது போன்ற சத்தம் வருகிறது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் செயல்படும். இவற்றின் தொடுதிறனும் மேம்பட்டவை. தன்னுடைய உடம்பின் மேல் ஒரு சிறு பூச்சி வந்து உட்கார்ந்தாலும் கூட காதுகளை அசைத்து, உடம்பை சிலிர்க்கவைத்து அந்தப் பூச்சியை விரட்ட முற்படும்.

குதிரைகளின் தூக்கம்

குதிரைகள் பெரும்பாலும் நின்று கொண்டும், சில சமயங்களில் அதாவது நோய்வாய்ப்பட்டுள்ள சமயங்களில் மட்டும் படுத்துகொண்டும் தூங்குகின்றன. லாயங்களில் உள்ள குதிரைகள் பாதுகாப்பு உணர்வோடு இருப்பதால் நன்கு தூங்கும். ஆனால் தனியாய் இருக்கும் ஒரு குதிரை எதிரிகளால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தின் காரணமாக சரிவர தூங்குவதில்லை. பொதுவாக குதிரைகள் ஒரு நாளில் நான்கு மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை நின்று கொண்டு ஓய்வெடுக்கின்றன.

நாள் ஒன்றுக்கு 45 லிட்டர் தண்ணீர் குடிக்கின்றன. குதிரையின் சிறுநீர் மருத்துவத் தன்மைவாய்ந்தது என்பதால் அதன் சிறுநீரில் இருந்து ஒரு வகை நொதி பிரித்தெடுக்கப்பட்டு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் குதிரையின் ரத்தத்தில் இருந்து பாம்புக் கடிக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தை தயாரிப்பதற்காக முதலில் குதிரையின் உடம்புக்குள் பாம்பின் விஷத்தை ஊசி மூலம் செலுத்துவார்கள். குதிரையை விஷப் பாம்பு கடித்தால் மட்டுமே குதிரை மரணமடையும். பாம்பின் விஷத்தை அதன் உடம்பில் செலுத்தினால், குதிரையின் ரத்தத்தில் விஷம் கலந்து நஞ்சு எதிர்ப்புகள் சுரக்கத் தொடங்கும். அந்த ஸீரத்தை குதிரையின் ரத்தத்தில் இருந்து தனியாகப் பிரித்தெடுத்து மருந்து தயாரிக்கின்றனர். இந்த மருந்தை பாம்பு கடித்தவருக்கு கொடுக்கும்போது விஷ முறிவு ஏற்பட்டு, அவர்கள் உயிர் பிழைக்கிறார்கள்.

பந்தயக் குதிரைகள்

இந்தியாவில் புனே, மும்பை, டெல்லி, ஆமதாபாத், சென்னை போன்ற நகரங்களில் குதிரைப் பண்ணைகள் உள்ளன. இங்கே உயர்ந்த ஜாதிக் குதிரைகள் உருவாக்குவதற்காக வெளிநாடுகளிலிருந்து ஆண், பெண் குதிரை ஜோடிகள் விமானம் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை ஸ்டாலியன் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இவற்றின் மூலம் இன விருத்தி செய்யப்படும் குதிரைகள்தான் பந்தயத்தில் ஓட விடப்படுகின்றன.

குதிரைக்கு இரண்டு வயது ஆனதும் கிளாஸ் ஒன் ரேஸில் (இஃஅகுகு ONஉ கீஅஇஉ) களமிறக்கப்பட்டு ஓடவிடப்படும். ஓட்டத்தில் திறமைகள் மதிப்பிடப்படும். பண்ணையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு குதிரைகளைக் கொண்டு செல்வதற்கு ‘ஹார்ஸ் ஃப்ளோட்’ எனப்படும் பெரிய வேன் போன்ற விசேஷ வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஹார்ஸ் ஃப்ளோட்டில் ஆறு குதிரைகள் வரை நிறுத்தமுடியும்.

உலகின் டாப்-10 குதிரைகள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ள செக்ரிடேரியேட் எனப்படும் த்ரோப்ரெட் (கூஏகீக்எஏஆகீஉஈ) அமெரிக்க குதிரையானது மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. இந்த குதிரையின் விலை ஒரு லட்சம் டாலர் முதல் 3 லட்சம் டாலர் வரை என்றால், நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

(வாவ் வளரும்…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here