அங்கன்வாடி புரட்சி!

13

-சுந்தரபுத்தன்

கிராமப்புற மாணவர்களுக்கு நவீன பாலர் பள்ளிகளை உருவாக்கிய ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி
ஜார்க்கண்ட மாநிலம் ஜாய்பாசா நகரில் அது செப்டம்பர் மாதத்தின் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது. அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வளர்ச்சி அதிகாரி ஆதித்ய ரஞ்சன், பழங்குடிகள் வாழும் ஊரில் பள்ளிகளைப் பார்வையிடச் சென்றார். பொக்காராவில் வளர்ந்தவருக்கு மாநில கல்வித்துறையில், குறிப்பாக குக்கிராமங்களில் உள்ள வசதி குறைவுகள் தெரிந்திருந்தது. ஆனால் அவரோ கடுமையான அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.

சிதிலமான கட்டடங்களுடன் காட்சியளித்த அங்கன்வாடிகள் (பாலர்பள்ளிகள்), சுற்றித்திரிந்த குழந்தைகளும் வருகைதராத ஆசிரியர்களுமாக ஒரு நம்பிக்கையற்ற வரவேற்பையே வழங்கின. “அங்கன்வாடிகளில் பல திறந்திருக்கவில்லை. நல்ல கட்டடங்களிலும் சரியான கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை. மதிய உணவுக்கு மட்டுமே குழந்தைகள் வந்தார்கள். ஒவ்வொரு அங்கன்வாடியிலும் ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்காக அரசால் உருவாக்கப்பட்ட மாதா சமிதிகள் இல்லை” என்று நினைவுளைப் பேசுகிறார் ரஞ்சன்.

நூற்றுக்கும் அதிகமான அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் சகிக்கமுடியாத மிகப் பெரிய பலவீனங்களைக் கண்ட ரஞ்சன், மிகுந்த மன உளைச்சலை அடைந்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி திட்டமிட அவருக்கு இரண்டு நாட்களே பிடித்தன.

முன்மாதிரி பள்ளி

முதல் இலக்காக யாராலும் கவனிக்கப்படாத கிடிலிப்பி அங்கன்வாடியைத் தேர்ந்தெடுத்து, அதை மாநிலத்தின் ஒரு முன்மாதிரி மையமாக மாற்றுவதில் உறுதியாக இருந்தார். தனது ஊதியத்தின் கணிசமான ஒரு பகுதியை அதற்காகச் செலவிட்டார். பள்ளிச் சுவர்களுக்கு வண்ணப்பூச்சு, பிளாஸ்டர் மற்றும் நவீன கழிப்பறைகள் என பள்ளிக்கட்டங்களை புதுப்பிப்பதில் தொடங்கி பாடத்திட்டத்தை மாற்றுவது வரையில் ரஞ்சனுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டன.

அந்த ஆண்டு 2018 இப்படி ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள 650க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்களில் ஆச்சரியப்படும் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தினார். அந்தப் பிராந்தியத்தில் முழு அங்கன்வாடி அமைப்பிலும் வெற்றிகரமான அமைதிப்புரட்சியை உருவாக்கியிருந்தார் ரஞ்சன். மொபைல் அறிவியல் ஆய்வகம், டிஜிட்டல் கல்விப் பட்டறைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான சுகாதார நிலையங்கள் எனப் பல பாராட்டத்தக்க முயற்சிகளையும் தொடங்கினார். மக்கள் மகிழ்ந்தனர். குழந்தைகள் கொண்டாடினர்.

2015 ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக உருவான ரஞ்சன், குழந்தைகளுக்கான கல்வியில் சிறந்த ஆர்வத்தை வளர்த்துக்கொண்டிருந்தார். முதன்முதலில் தியோகர் மாவட்டத்தில் பணியில் சேர்ந்த அவர், உள்ளூர் குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் நடத்தத் தொடங்கினார். அடுத்து சிங்க்பூம் மாவட்டத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த பள்ளிக்கல்வியின் எதார்த்த நிலையை அறிந்து தனது முயற்சிகளை தீவிரப்படுத்தினார்.

சிறப்புப் பயிற்சி

உடல் நலம், ஊட்டச்சத்து மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த கவனம் செலுத்தி, மாவட்ட கல்வித்துறையில் அவர் அறிமுகப்படுத்திய மாற்றங்கள் அதிகம். ‘சாய்பாசா நகரில் நான் பார்வையிட்ட பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள், குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் கற்றல் குறித்து மிகவும் அலட்சியமாக இருந்தனர். எனவே புதுமையாக வடிவமைக்கப்பட்ட கிட்லிப்பி மையத்தில் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் சிறப்புப் பயிற்சிகள் வழங்க முயற்சி செய்தேன். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இருந்து அனுபவம்வாய்ந்த ஆரம்ப குழந்தைப்பருவ நிபுணர்களால் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது” என்று அனுபவத்தைப் பேசுகிறார் ரஞ்சன்.

அங்கன்வாடி குழந்தைகளுக்குப் புதிய சீருடைகள், நகவெட்டி, சீப்பு, டிஷ்யூ பேப்பர் உள்பட சுகாதாரத்திற்கான பொருட்கள் வழங்கப்பட்டன. குழந்தைகளின் உடல்நலனில் அக்கறைகாட்டவேண்டும் என அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரஞ்சன் கண்டிப்புடன் அறிவுறுத்தினார். “குழந்தைகளை அதிக அக்கறையுடன் அவர்கள் கவனித்துக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. பள்ளி வளாகத்திலேயே அவர்களைச் சுத்தப்படுத்தி, சில நேரங்களில் குளிக்கவைத்தும்குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்தனர். அதன்மூலம் குழந்தைகள் சுகாதாரமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை பெற்றோர்களும் உணர்ந்தனர்” என்கிறார் ரஞ்சன்.

கல்வியைப் பொறுத்தவரையில் பாடப்புத்தகங்கள், எழுது பொருள்கள், கற்பதற்கான பொம்மைகள், வகுப்பறைக்குத் தேவையான உபகரணங்கள் ஆகியன வழங்கப்பட்டன. அங்கன்வாடி மையங்களின் சுவர்களில் குழந்தைகள் தேசியக் கொடியையும் மயில் படத்தையும் ஆர்வத்துடன் வரையத் தொடங்கினர். கிட்லிப்பி மையத்தில் வளர்ந்த குழந்தைகள் தங்களுடைய தாய்நாட்டைப் பற்றியும் அதன் வரலாறு, புவியியல் அமைப்பு மற்றும் கலாச்சாரம் பற்றியும் அறிந்துகொண்டனர். வழக்கமான மண் தரை மையம், மதிய உணவு, விவசாயக் குடும்பங்களைத் தாண்டி முதன்முறையாக வேறு உலகங்களை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.

புதுமை அங்கன்வாடிகள்

கிட்லிப்பி அங்கன்வாடி மையத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, மாவட்டம் முழுவதும் அதேபோன்ற புதுமையான மையங்களை அமைக்க ரஞ்சன் திட்டமிட்டார். இன்று மேற்கு சிங்க்பூம் மாவட்டத்தில் 650 அங்கன்வாடி மையங்கள் புத்துணர்ச்சியுடன் கல்வி கற்பிக்கும் பள்ளிகளாக செயல்படத் தொடங்கின. ஏப்ரல், மே மாதங்களில் மேலும் 350 மையங்களைத் திறப்பதற்கு திட்டம் வைத்திருக்கிறார் ரஞ்சன்.

அங்கன்வாடி மையங்களில் ரஞ்சனின் உத்தரவுகளை முறையாக செயல்படுத்துவதையும் பராமரிப்பதையும் கண்காணிப்பதற்காக செல்போன் செயலி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். அதில் அன்றாடச்செயல்பாடுகள் பற்றிய தரவுகளை ஊழியர்கள் பதிவேற்றம் செய்கின்றனர்.

அறிவியல் கல்வி மீதான ஆர்வத்தை குழந்தைகளிடம் பரப்புவதற்காக நடமாடும் அறிவியல் ஆய்வகத்தை ஏற்படுத்தினார். இந்த ஆய்வகம், பத்தாம் வகுப்புக்குப் பிறகு அறிவியல் பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க விரும்பிய கிராமப்புற மாணவர்களின் கவலைகளைத் தீர்த்துவிட்டது. இங்குள்ள அரசுப் பள்ளிகளில் நிதி மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக அறிவியல் ஆய்வகம் என்பது எட்டாக்கனியாக இருந்துவந்தது. அந்த தருணத்தில் மாணவர்களுக்கு ரஞ்சன், ஒரு மீட்பராகத் தெரிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here