வெற்றியின் வேர்கள் – 23

172

– எம். சிதம்பரம்

மாத்தி யோசி!

“எட்டில் பாதி என்ன?” என்ற என் கேள்விக்கு மாணவர்கள் “நான்கு…” என்றனர் கோரஸாக.

மீண்டும் “எட்டில் பாதி என்ன?” என்றேன்.

அவர்கள் மீண்டும் “நான்கு…” என்றார்கள்.

“உங்கள் விடை தவறு. நன்றாகச் சிந்தித்துப் பதில் சொல்லுங்கள். எட்டில் பாதி என்ன?” என்று மீண்டும் கேட்டேன். எல்லோரும் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

“நான் கண்டுபிடிச்சுட்டேன். எட்டில் பாதி 3…” என்று எழுந்து நின்று உற்சாகமாகக் கூவினாள் மீனா. “சபாஷ் மீனா…” என்றேன். உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? எட்டை நெடுக்குவாட்டில் இரண்டாகப் பிரியுங்கள். 3 தானே வருகிறது.

“0…“ என்றான் மகேஷ். “அற்புதம்…” என்றேன். குறுக்கு வாட்டில் எட்டை பிரித்தால் 0 தானே வரும்?
மீண்டும் விடாமல் அதே கேள்வியையே கேட்கத் தொடங்கினேன். தொடர்ந்து அந்தக் கேள்விக்குப் பற்பல வித்தியாசமான பதில்கள் வந்துகொண்டே இருந்தன.

இப்படி ஒரே கேள்விக்குப் பலவித பதில்கள் உள்ளதுபோல், ஒரே பிரச்னைக்குப் பல்வேறு தீர்வுகள் உள்ளன.
எப்படி ஒரு பூட்டுக்குப் பல்வேறு சாவிகள் இருக்குமோ, அதேபோல் எல்லாப் பிரச்னைக்கும் தீர்வுகள் இருக்கும்.

எனவே பிரச்னைகளைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஒரு பிரச்னைக்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லையெனில், அதுகுறித்து நாம் பல கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும், சரியான தீர்வு கிடைக்கும்வரை. அப்படிச் செய்யும் போதுதான் நம் இரண்டு பக்க மூளையும் செயல்படத் தொடங்கும்.
அது எப்படி என்று கேட்கலாம். எட்டில் பாதி என்ன என்ற என் கேள்விக்கு எல்லோரும் நான்கு என்ற பதிலையே அளித்தனர். நான் திரும்பத் திருப்பக் கேட்டபோது, சிந்திக்கத் தொடங்கினர். தொடர்ந்து வித்தியாசமான விடைகளை அளிக்கத் தொடங்கினர். நான்கு என்ற பதிலைச் சொன்ன போது இடது பக்க மூளை மட்டுமே (லாஜிக்) முன்னிறுத்தப்படுகிறது. வித்தியாசமான பதில்களைத் தந்தது எல்லாம் வலது பக்க மூளையின் செயல்பாடுகளே. சிலருக்கு அது உடனே இயங்கத் தொடங்கும். வேறு சிலருக்கு வெகுநேரம் ஆகலாம்.ஆனால், எல்லோராலும் வலது பக்க மூளையை இயங்கவைக்கமுடியும். பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.
பல கேள்விகளுக்கான விடைகள் அந்தக் கேள்விக்குள்ளேயே உள்ளன. எட்டில் பாதி என்ன என்ற கேள்விக்கான விடை அந்த எட்டிலேயே ஒளிந்திருந்தது.

ஆனால், பொத்தாம் பொதுவாக சாதாரணமாகப் பார்த்தால், அது நம் கண்களுக்குத் தெரிவதில்லை. பல பிரச்னைகளுக்குத் தீர்வுகள் நமக்கு வெகு அருகிலேயே இருக்கும். நம் புலன்களுக்கு அவை புலப்படுவதில்லை.

இதோ ஒரு பயிற்சிப் பட்டறையின் நிகழ்வு அதனை உங்களுக்குப் பறைசாற்றும்.

மாணவர்களை ஆறு குழுக்களாகப் பிரித்தேன்.

A முதல் Z வரையிலான எழுத்துகளில் தொடங்கும் பொருள் ஒன்றை எழுதச் சொன்னேன். அதில் முக்கியமான நிபந்தனை என்னவென்றால், மாணவர்கள் எழுதும் அந்தப் பொருள் அந்த அறைக்குள்ளேயே இருக்கவேண்டும்.
“அத்தனை எழுத்துகளுக்கும் உண்டான அத்தனைப் பொருட்களும் இந்த அறைக்குள் எப்படி இருக்கும் சார்?” எனப் பலரும் புலம்பினார்கள்.

ஆனால், என்ன ஆச்சரியம், ஐந்து நிமிடத்துக்குள் அத்தனை குழுக்களுமே ஏதாவது ஒரு பொருளை அந்த அறைக்குள்ளேயே கண்டுபிடித்து எழுதி விட்டிருந்தார்கள். இது எதனைக் காட்டுகிறது?

Problems are plenty! More solutions!!

பிரச்னைகள் அதிகம்தான். தீர்வுகள் அதைவிட அதிகம். எனவே பிரச்னைகளைக் கண்டு அஞ்சாமல் எல்லாப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்ற தன்னம்பிக்கையோடு மாற்று யோசனையுடன் அவற்றை அணுக வேண்டும். அப்படி அணுகிதான் அவர்கள் ஆங்கில எழுத்துகளுக்கான பொருட்களின் பெயர்களை எழுதினார்கள்.
உதாரணமாக, ஒரேபொருள் பல பெயர்களுக்குப் பொருந்துவதாக இருக்கும். அதாவது, ஒரு மாணவி அணிந்திருந்த தங்கத்தோடு. (Earring, Gold, Metal, Jewel, Ornament) என்று ஐந்து எழுத்துகளுக்கும் பயன்படுவதாக இருக்கிறதல்லவா. இப்படித்தான் நம் பிரச்னைகளை ஆராய்ந்தால், அனைத்துக்கும் காரணம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும்.

அதற்கு நாம் மேலே சொன்னதுபோல் கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால், நம் அனைத்துப் பிரச்னைகளுக்குமான மூல காரணம் தெரிந்துவிடும்.

ஒரு மாணவன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவில்லையென்று வைத்துக்கொள்வோம். ஏன் பெறவில்லை? சரியாகப் படிக்கவில்லை!

ஏன் சரியாகப் படிக்கவில்லை? படிக்க நேரமில்லை!

ஏன் நேரமில்லை? படிப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை!

ஏன் நேரம் ஒதுக்கவில்லை? படிப்பதற்கு ஆர்வமில்லை!

இப்போது புரிகிறதா அத்தனை பிரச்னைக்கும் மூலகாரணம்? அந்த மாணவன் படிப்பதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டால் நிச்சயம் அத்தனைப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தேர்வில் அவனால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.

சில ஆங்கில எழுத்துக்களுக்கு அந்த எழுத்தில் தொடங்கும் பொருட்கள் ஆங்கில அகராதியிலேயே இல்லை. Q என்ற எழுத்தில் தொடங்கும் எந்தப் பொருளுமே இல்லை. சிலர் Que என்று எழுதி வரிசை கட்டி நின்றனர். Queen என்று சில மாணவிகள் எழுதி நான் ராணி போல் கம்பீரமானவள் என்று எழுந்து நின்றார்கள்.

Que, Queen எல்லாம் ஒரு பொருள் இல்லைதான். என்றாலும் விடையை, தீர்வை எப்படியாவது கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானதால், வலது பக்க மூளை விடையைத் தேடி பல்வேறு திசைகளில் சிந்தனைச் சிறகுகளை விரிக்கிறது. பல புதிய கோணங்களில் அந்தப் பிரச்னையை நம் மூளை அணுகுகிறது. Que, Queen என்று பலவிதமான தீர்வுகளை, விடைகளை அது தந்துகொண்டே இருக்கிறது.

ஒரு பிரச்னையை வித்தியாசமாக அணுகும்போதுதான் வித்தியாசமான பதில்கள் மட்டுமல்ல, வித்தியாசமான தீர்வுகளும் மிகச்சரியான தீர்வுகளும் கிடைக்கின்றன.

ஒரு பிரச்னையை வித்தியாசமாக அணுகும் போது, சிக்கலான பிரச்னைகளுக்கும் எப்படி சுலபமான தீர்வுகள் கிடைக்கிறது என்று பார்ப்போமா?

ஒரு வகுப்பில் நான் கேட்ட கேள்விகளும் அதற்கு மாணவர்கள் அளித்த பதில்களும் இதோ.

1. எந்த ஆங்கில எழுத்து ஒரு காய்கறியைக் குறிக்கும்?
P (Pea)
2. எந்த எழுத்து ஒரு பானத்தைக் குறிக்கும்?
T (Tea)
3. எந்த எழுத்து ஒரு கேள்வியைக் குறிக்கும்?
Y (Why)
4. எந்த எழுத்து ஒரு பதிலைக் குறிக்கும்?
S (Yes)
5. எந்த எழுத்து வரிசையைக் குறிக்கும்?
Q (Que)
6. எந்த எழுத்து உங்களைக் குறிக்கும்?
I (I)
7. எந்த எழுத்து எதிரிலிருப்பவரைக் குறிக்கும்?
U (You)
8. எந்த எழுத்து நம்மைக் குறிக்கும்?
V (We)

இப்படி சிக்கலான விஷயங்களை உடனே தீர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் வரும்போது, பதறாமல், நிதானமாய், வித்தியாசமாய் அணுகினால் சரியான தீர்வு கிடைக்கும். மேலே நாம் பார்த்த உதாரணங்கள்போல், இன்னும் 6 உதாரணங்கள் இதோ.

1. கோன் ஐஸ்க்ரீம் பிறந்த கதை சுவாரஸ்யமானது. 1904ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு கண்காட்சியில் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். ஐஸ்க்ரீம் வியாபாரம் படுசூடாக நடந்துகொண்டிருந்தது. ஆனால், சோதனையாக ஐஸ்க்ரீம் கப் தீர்ந்துவிட்டிருந்தது. கப் இல்லாததால் ஐஸ்க்ரீம் கொடுக்க வழியில்லை. வாடிக்கையாளர்கள் ஐஸ்க்ரீம் கேட்டு நச்சரிக்கிறார்கள். செய்வதறியாது திகைத்து நின்றபோது, பக்கத்துக் கடைக்காரர்தான் விற்றுக்கொண்டிருந்த மாவுத் தின்பண்டத்தை கோன் வடிவில் மாற்றி, அதற்குள் ஐஸ்க்ரீமை நிரப்பிக்கொடுத்தார். மக்கள் மகிழ்ச்சியோடு சாப்பிட்டுச் சென்றார்கள். இந்த வலது பக்க மூளையின் செய்கையால், பிரச்னைக்குத் தீர்வு மட்டுமல்ல, வேகமாக வியாபாரமாகக் கூடிய கோன் ஐஸ்க்ரீம் என்ற புதிய சந்தைப் பொருளும் அறிமுகமானது.

2. பொதுவாக வாலி பால் விளையாட்டை இரண்டு கைகளால்தான் ஆடுவார்கள். ஆனால், ஒரு விளையாட்டு வீரர் நாம் அடிக்கும் ஷாட் இன்னும் வலுவாக அமைய என்ன செய்யலாம் என்று யோசித்தார். தனக்கு வந்த பந்தை ஒரே கையால் ஓங்கி எதிரணியினருக்கு அடித்தார். அன்று உருவானதுதான் Smash என்னும் Shot.

3. ஒரு தந்தை தன் மகனோடு ஒரு பொருட்காட்சிக்குச் சென்றார். மகனோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் கிடைக்க மூன்று நாட்கள் ஆகும் என்றனர். ஏன் மூன்று நாட்கள் ஆகவேண்டும்? உடனே ஏன் கிடைக்கக்கூடாது என கேள்வி கேட்டபோது, வந்த விடைதான் போலராய்டு கேமரா.

4. கிரிக்கெட்டில் புதிய பந்துதான் ஸ்விங் ஆகி மட்டையாளர்களைத் தடுமாறச் செய்யும். பந்து பழையதாகிவிட்டால், பந்தை எதிர்கொள்வது சுலபமாகி விடும். ஏன் பழைய பந்தை ஸ்விங் செய்யக்கூடாது என்று யோசித்ததன் விளைவே ரிவர்ஸ் ஸ்விங்.

5. அக்காலத்தில் பறவை இறகால் மை தொட்டுதான் எழுதிக் கொண்டிருந்தனர். ஒரு முறை முக்கியமான டாக்குமெண்ட்டை எழுதிக் கொண்டிருந்தபோது, அதிலிருந்த மை டாக்குமெண்ட்டில் கொட்டி அதனை வீணாக்கிவிட்டது. மை கொட்டாமல் எழுத முடியுமா என்று யோசித்ததன் விளைவே ஃபவுண்டன் பேனாவைக் கண்டுபிடிக்க வைத்தது.

6. ஆண்கள் முகச்சவரம் செய்ய கத்தியையே பயன்படுத்தி வந்தனர். அப்படிச் செய்யும்போது, சிலசமயம் காயங்கள் ஏற்பட்டது. காயமின்றி எப்படி முகச்சவரம் செய்யலாம் என்று யோசித்ததன் விளைவே இன்றைய சேஃப்டி பிளேடு.

இக்கட்டான சூழ்நிலைகளில்தான் ஒரு தெளிவு பிறக்கும். வலதுபக்க மூளை பிரகாசமாக இயங்கி எதிர்பாராத வித்தியாசமான தீர்வை அளிக்கும். அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண DAASA என்ற வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள் மாணவர்களே.

D – Define the problem (பிரச்னை என்ன என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள்).

A – Analyse the problem (பிரச்னையை அக்குவேறு ஆணி வேறாக ஆலசி ஆராய்ந்து, பிரச்னையை எப்படி அணுகுவது என்று தீர்மானியுங்கள்).

A – Alternatives (பிரச்னைக்கு உள்ள பல்வேறு வித்தியாசமான தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்).

S – Select (நம்மிடமுள்ள தீர்வுகளில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். எந்தத் தீர்வில் அதிக நன்மையும் குறைந்த ரிஸ்க்கும் உள்ளதோ அதனைத் தேர்வு செய்யவேண்டும்).

A – Act (தேர்ந்தெடுத்த தீர்வைச் செயல்படுத்த வேண்டும்).

Strategic Thinking என்னும் உத்தியை கையாண்டால், எந்தப் பிரச்னையையும் வெற்றியோடு எதிர்கொள்ளலாம். Strategic என்பது ஒரு கிரேக்க வார்த்தை.

அதன் அர்த்தம் ஒரு ராணுவத்தை முன்னேற்றிச் செல்வது. இதில் இரண்டு விஷயங்கள் அடக்கம். அவை என்ன?
Strategic thinking = Creative thinking (வலது பக்க மூளையின் செயல்).

Critical thinking = இடது பக்க மூளையின் லாஜிக்கல் செயல்பாடு.

எனவே ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் போது, அதற்கு எத்தனை வகையான தீர்வுகள் உண்டோ, அவற்றை வலது பக்க மூளையின் உதவியோடு அறிந்துகொண்டு, அந்தப் பல்வேறு தீர்வுகளில் மிகச் சரியான சிறந்த தீர்வு ஒன்றை இடது பக்க மூளையின் உதவியுடன் தேர்வு செய்து செயல்பட்டால் பிரச்னைகள் எளிதில் விலகி ஓடிவிடும்.

– தொடர்ந்து வெல்லுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here