இணைய தளத்தில் இணையற்ற வாய்ப்புகள்

262

-முனைவர். அ. முகமது அப்துல்காதர்

கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்குக் காலத்தை மாணவர்கள் வீணடிக்காமல், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக மாற்றி கொள்ளலாம். மாணவர்களில் மிகப் பெரும்பாலோரின் மனோபாவம் இதுபோன்ற திடீர் விடுமுறை காலங்களில் பொழுதைப் போக்குவதில்தான் நாட்டம் அதிகமாக உள்ளது. ஆனால், பொழுதை போக்குபவர்களாக இல்லாமல், பொழுதை பயனுள்ள வகையில் ஆக்குபவர்களால் தான் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய வாய்ப்புகளை வெற்றியாகவும் மாற்றமுடியும்.

வீட்டிலிருந்தபடியே படிப்பதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. கல்லூரி மாணவர்கள் தங்களது துறை ரீதியான பாடங்களை NPTEL என்ற ஆன்லைன் வகுப்புகள் மூலமாக படித்துத் தெரிந்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவல்களை பெற http://nptel.iitm.ac.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

தொழில்முனைவோராக வேண்டும் என்ற இலக்கில் இருப்பவர்களுக்கு Indian Institute of Entrepreneurship (IIE) என்ற மத்திய அரசு நிறுவனம் தொழில்முனைவோர்களுக்கான நிறைய பாடங்களை http://www.iie.nic.in என்ற இணையதளத்தில் தருகிறது. அனைத்து பிரிவு கல்லூரி மாணவர்களும் பயன்பெறும்விதத்தில் ஐ.ஐ.டி மும்பை ஸ்போக்கன் டுடோரியல்ஸ் (MOOCS) என்ற இலவச ஆன்லைன் வகுப்புகளை www.iitb.ac.in என்ற இணையதளத்தில் நடத்துகிறது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள் அந்தத் துறையில் தங்களது திறன்களை மேம்படுத்தி கொள்ள w3schools செயலி உதவுகிறது. சி, சி++, ஜாவா, சி.எஸ்.எஸ், எச்.டி.எம்.எல், பூட்ஸ்ட்ராப், போன்ற மொழிகளை பற்றிய நுணுக்கங்களை கற்று கொள்ள இந்த செயலி உதவுகிறது.

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் தேசிய அளவில் National Educational Alliance for Technology (NEAT) என்ற அமைப்பு ஆன்லைன் மூலமாக நவீன தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை கற்றுதருகிறது.

பொறியியல் மாணவர்கள் படிக்கும்போதே நிறுவனங்களுக்குச் சென்று இண்டர்ன்ஷிப் என்ற தொழில்பயிற்சி எடுத்துக்கொள்வது அவசியம். எனவே மாணவர்கள் விடுமுறைக்காலங்களில் AICTE இணையதளத்திலுள்ள www.internship.aicte-india.org என்ற தளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொண்டால் துறைரீதியான ஏராளமான நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பெற வாய்ப்புகளை பெறலாம். விடுமுறை முடிந்த பிறகு நிறுவனங்களுக்குச் சென்று பயிற்சி எடுக்க தோதாக அமையும்.

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை தேடும் மாணவர்கள் விடுமுறை நேரங்களில் தங்களது சுயவிவரக்குறிப்பு, பணியிடத்திலோ, கல்லூரியிலோ குறிப்பிடும் படியாக நீங்கள் செய்த சாதனைகளை லின்க்டுஇன் என்ற கணக்கைத் தொடங்கி பகிர்ந்து கொள்ளலாம். வேலை தரும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கும் இலவச வலைதளமாக லின்க்டுஇன் உதவுகிறது.

மத்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதள முகவரி http://www.ncs.gov.in என்ற இணையத்தை வேலை தேடும் இளைஞர்கள் தங்களை பற்றிய தகவல்களை கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் பதிவு செய்யலாம். வேலை தேடுவோரையும் வேலை தரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் செயல்படுகிறது. விடுமுறை நேரங்களில் பட்டதாரி இளைஞர்களும், இறுதி ஆண்டு மாணவர்களும் தங்கள் விவரங்களை பதிவு செய்து பயன் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here