அதிகரிக்கும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் ஆர்வம் எப்படி உள்ளது?

337

– சுந்தரபுத்தன், மோ. கணேசன்

சமீபத்தில் சென்னையில் தனியார் கல்லூரிப் பதிவாளர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபோது, ஊரடங்கு பற்றிப் பேச்சு வந்தது.

அப்போது அவர் கூறிய தகவல்கள் ஆச்சரியமளித்தன. “ஊரடங்கு காரணமாய் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறோம். மாணவர்கள் ஆர்வமாக அட்டெண்ட் செய்கிறார்கள். நேரடி வகுப்புகளைவிட, ஆன்லைன் வகுப்புகளுக்குத்தான் வருகைப்பதிவும் அதிகமாக இருக்கிறது” என்றார்.

உண்மையில், மாணவர்களிடம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதா? என்பதை அறிந்துகொள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பேசினோம்.

ஆன்லைனில் இயற்பியல் பாடங்களை நடத்தி வரும் சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் பிரபாகர், “மாணவர்களிடையே ஆன்லைன் பாடங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர்களுக்கு புதிய அனுபவமாகவும் உள்ளது. வீட்டில் நான்கு சுவர்களுக்குள் இருந்து சலித்துப்போய்விட்டது. கேம் விளையாடியும் சலித்துவிட்டார்கள். பெற்றோர்கள் வீட்டிலேயே இருப்பதால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்கு அவர்கள் ஊன்றுகோலாக இருக்கிறார்கள். வகுப்புகளில் பிள்ளைகள் பங்கேற்கிறார்களா என்று கண்காணிக்கிறார்கள். சாதாரண நாட்களாக இருந்தால் பெற்றோர்கள் சொல்லிவிட்டு வேலைக்குப் போய்விடுவார்கள். மாணவர்கள் ஏமாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இன்று அப்பா, அம்மா எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள். காலையில் 9 மணிக்கு வகுப்பு இருக்கிறது என்று பெற்றோர்களிடம் சொல்லிவிட்டால், அவர்கள் தயாராகி விடுகிறார்கள்.

இன்னொரு விதமான மாணவர்களுக்கு பொழுதே போகவில்லை. கொஞ்ச நேரம் சினிமா, பாட்டு, மியூசிக், டிராயிங் செய்வான். ஒற்றைக் குழந்தையாக இருப்பவர்கள் வீட்டுக்குள் எவ்வளவு நேரம் விளையாட முடியும். ஆன்லைன் மூலம் வகுப்பு நண்பர்களைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆன்லைன் வகுப்புகள் இருவிதமாக இருக்கின்றன. பையன்கள் பேசுவதை லாக் செய்துவிட்டு வகுப்பு நடத்தலாம். சிலநேரங்களில் லாக் செய்யாமல் வகுப்பு எடுத்தால். பையன்கள் பேசிக்கொள்ளலாம். ஆன்லைன் வகுப்பு என்று சொல்லிவிட்டு மற்ற பையன்களுடன் பேசுவதற்கான வாய்ப்பும் இதில் உண்டு. எனவே ஆன்லைன் வகுப்புகளில் பலமும் பலவீனமும் இருக்கிறது. எங்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் 100 சதவீதம் மாணவர்களின் பங்கேற்பு கிடைத்திருக்கிறது” என்கிறார்.

சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் எம். முருகன், “பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பைக் காணமுடிகிறது. கூகுள் ஹேங்க் அவுட், ஜூம், ஸ்கைப், கூகுள் கிளாஸ்ரூம், மூக் போன்ற மென்பொருள்களை ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். அசைன்மெண்ட்ஸ், பிளேமெண்ட்ஸ் வகுப்புகளுக்கும் அது தேவைப்படுகிறது. ஏஐசிடிஇ NEAT என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. அதில் பொறியியல் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. அதேபோல மனிதவளத்துறையின் ஸ்வயம் இணையதளமும் புரொபஷனல் படிப்புகளுக்கான ஆன்லைன் வகுப்பறைகளை வைத்துள்ளது.

நாஸ்காம் அமைப்பு பியூச்சர் ஸ்கில்ஸ் என்ற ஆன்லைன் பாடங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் வகுப்பறைகளில் லாக் இன் செய்து மாணவர்கள் உள்ளே வரவேண்டும். ஒரே நேரத்தில் மாணவர்கள் பேசினால் வகுப்பு தடைபடும் என்பதால், இன்ட்ராக்சனை மியூட் செய்துவைத்து வகுப்பு எடுக்கவேண்டும். ஒவ்வொருவராக சந்தேகங்களை ஆன்லைனில் கேட்கும் வசதிகள் இருக்கின்றன. இதுபோன்ற தொடர் ஊரடங்கு நாட்களில் கல்வி தடைபடாமல் கற்பதற்கான நல்ல வாய்ப்பாக ஆன்லைன் வகுப்புகள் இருக்கின்றன” என்கிறார்.

நாசிக்கைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பத்மப்பிரியா, “கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியில் பணியாற்றுகிறேன். கடந்த இரு வாரங்களாக வீட்டிலிருந்து மாணவர்களுக்கு ஜூம் என்ற மென்பொருள் வழியாக ஆன்லைன் வகுப்புகள் எடுத்துவருகிறேன். ஒரே நேரத்தில் 300 மாணவர்களுக்கு வகுப்பெடுக்க முடியும்.

எனது வகுப்பில் 30 மாணவர்கள். 28 பேராவது தினமும் வந்துவிடுவார்கள். நேரடி வகுப்பறையில் நிறைய கவனச்சிதறல் இருக்கும். ஆன்லைன் வகுப்பறையில் சாத்தியமில்லை.

40 நிமிட வகுப்பு என்றால், 25 நிமிடங்கள் எடுப்பேன். அவரவர் வீட்டிலிருந்து மாணவர்கள் வகுப்பைக் கவனிப்பார்கள். சந்தேகம் ஏற்பட்டால் ’கையை தூக்கு’ என்ற ஒரு பட்டன் இருக்கும். அதை சொடுக்கினால் போதும். சாட்டிங் ஆப்ஷனும் உண்டு. அதில் சந்தேகத்தை கேள்வியாகவும் டைப் செய்து அனுப்பலாம். பாடம் தொடர்பான பவர் பாயிண்ட் பிரசன்டேசன், ஆடியோ, வீடியோ, கிராப் என எதை வேண்டுமானாலும் இந்த மீடியத்தில் எடுத்துக்காட்ட முடியும். இதனால் மாணவர்களுக்கு எளிதாகப் புரியும். பல புதுமைகளுடன் கற்றல் இனிமையாகவும் இருப்பதால், மாணவர்கள் வகுப்பறையைவிட ஆன்லைன் வகுப்பறையை அதிகம் விரும்புகிறார்கள்” என்று உற்சாகத்துடன் பேசுகிறார்.

சத்தியமங்கலம் காந்தி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தீனதயாளன், “இன்றைய ஊரடங்கு நிலையில் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளோம். இந்த வகுப்புகளுக்கு 65 சதவீத மாணவர்கள் மட்டுமே வருகிறார்கள். ஆன்லைனில் வகுப்பு எடுக்கும்போது தனித்தனியே மாணவர்களிடம் கவனம் செலுத்தமுடியாது. யார் பாடம் நடத்துகிறார்களோ, அவர் எல்லோரையும் கண்ட்ரோல் செய்வார். இந்த அவசர சூழலுக்கு ஆசிரியர்களுக்கு பாடத்தை முடித்தாக வேண்டிய கட்டாயம். மாணவர்களும் படிக்க வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமாகின்றன” என்கிறார்.

“வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. எவ்வளவு நேரம்தான் டிவி பார்ப்பது, மொபைல் பார்ப்பது.

எல்லாமும் அலுத்துவிட்டது. பள்ளிக்கூடம் எப்ப திறப்பாங்கன்னு யோசிக்கிறேன். வேற வழியில்லை. ஆன்லைனிலாவது என்னோட ஆசிரியரையும், நண்பர்களையும் பார்க்கமுடியுது. பாடத்தைக் கவனிக்கறேன். அதுக்காகத்தான் ஆன்லைன் வகுப்புகளை அட்டென்ட் செய்றேன்” என்கிறான் பெயர் சொல்ல விரும்பாத ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்.

பிடெக் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் சென்னை மாணவர் பாலாஜி, “நாங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்த நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நேரத்தை வீணடிக்காமல் படிப்பதற்கு உதவுகின்றன. பேராசிரியர்கள் ஜூம் ஆப் மூலம் வகுப்புகளை எடுக்கிறார்கள். எங்களுக்குத் தேவையான பாடக்குறிப்புகளை ஸ்கிரீன் ஷேரிங் மூலம் பிபிடி, பிடிஎப் வடிவில் கொடுத்துவிடுகிறார்கள். கணிதப் பாடத்தில் கணக்குகளை சால்வ் செய்து அனுப்பிவைப்பார்கள். அதை வைத்துக்கொண்டு நாங்கள் வீட்டில் கணக்குகளை சால்வ் செய்து பார்ப்போம். நேரடி வகுப்பறைகளைவிட ஆன்லைன் வகுப்புகள் பிடித்தமாக இருக்கின்றன. நாம் எந்த இடத்தில் இருந்துகொண்டும் லேப்டாப்பை வைத்துக்கொண்டோ செல்போனை வைத்துக்கொண்டோ வகுப்பில் கலந்து கொள்ளமுடியும். இது எங்களுக்கு வசதியாக இருக்கிறது” என்கிறார்.

மாநகர மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொழில்நுட்ப வசதிகளால் எளிதாக மாறியிருக்கின்றன. அதேநேரத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இணையதளவசதிகள் சரளமாக கிடைக்காத நிலையில், அதனைப் பயன்படுத்த இயலாத நிலையே தொடர்கிறது. எதிர்காலத்தில் தொழில் நுட்பம் கைகொடுக்கும்போது கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லாமல் ஆன்லைன் கல்வி கற்கும் வசதி மேம்படும்.

தனியார் கல்லூரி மாணவர் மணிமதன், “நான் சத்தியமங்கலத்தில் பி.காம். சிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். என்போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமா என்று தெரியவில்லை. பல மாணவர்களிடம் லேப்டாப் இல்லை. நான் மொபைல் போனைத்தான் பயன்படுத்துகிறேன். ஒரு நேரத்தில் நான்கு பேர் மட்டுமே ஸ்கிரீனில் தெரிவார்கள். ஆசிரியர் போர்டில் எழுதிப்போடுவதை மொபைல் வழியே பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. வீடியோ மூலம் பாடம் என்பதால், மொபைலில் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும். அதைவிட முக்கியம் செல்போன் சிக்னல் கிடைக்க வேண்டும்” என்று கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஆன்லைன் கல்வி

நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் கல்வி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஆன்லைன் கல்வியை புதுமையாக மாற்றுவதுடன், ஸ்வயம் இணையதளத்தில் உள்ள படிப்புகளையும் மேம்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் தொடர்பாக மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வழியாக அவர் கலந்துரையாடினார். அப்போது, சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தும் வழிமுறைகளை மத்திய பல்கலைக்கழகங்கள் முறையாகக் கடைப்பிடிக்கவேண்டும். கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கான மருத்துவ வசதிகளை நிர்வாகங்கள் ஏற்படுத்துவதுடன், மாணவர்களுக்கு ஏற்படும் மனநலச் சவால்களையும் எதிர்கொள்ளவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here