வைரஸ்களைப்பற்றிபடிக்கலாமா?

221

-மோ.கணேசன்

மனித குலத்தையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்குபவை வைரஸ்கள். இன்றைய சூழலில் எச்.ஐ.வி. வைரஸ், ஹண்டா வைரஸ், கொரோனா வைரஸ் என வைரஸ்களின் ஆதிக்கமே மனித உயிர்களின் அச்சுறுத்தலுக்கு காரணியாக இருக்கின்றன.

தற்போது உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் அதிதீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்காலத்தில் இத்துறையில் போதிய வல்லுநர்கள் இல்லாததன் பலனை அறிவியல் உலகமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். எதிர்காலத்தில் வைரஸ் குறித்த ஆய்வாளர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும்.

இந்நிலையில் வைரஸ்கள் குறித்து படிக்க வேண்டும், ஆய்வில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் நமது மாணவர்களிடையே தோன்றியிருக்கும். அவர்களுக்கு வழிகாட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பி.எஸ்சி. மைக்ரோபயாலஜி

பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிர்தொழில்நுட்பவியல் ஆகியவற்றை எடுத்துப் படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் இந்த படிப்பை தேர்வு செய்யலாம். இந்த பட்டப்படிப்பில் ஜெனரல் மைக்ரோ பயாலஜி, மைக்ரோ பயல்பிஸியாலஜி, இம்யூனாலஜி, மைக்ரோபயல் ஜெனிட்டிக்ஸ், மாலிக்யூலர் பயாலஜி, ஜெனிடிக் என்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி, பயோ இன்ஸ்ட்ரூமென்டேஷன், பயோ இன்பர்மேட்டிக்ஸ், பயோ-ஸ்டாட்டிஸ்டிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயோ பிஸிக்ஸ், செல் ஸ்ட்ரக்ச்சர், மைக்ரோ பயல் க்ரோத் அண்ட் ரீபுரடக்சன், டிஷ்யூ கல்ச்சர், வைராலஜி ஆகியவற்றை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். இதில் கடைசியாக குறிப்பிட்டுள்ள வைராலஜி என்பது வைரஸ்களை பற்றி படிக்கும் பாடமாகும்.

மைக்ரோ பயாலஜி அண்ட் இம்யூனாலஜி, பயோ டெக்னாலஜி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளிலும் இதுகுறித்து கற்றுத்தரப் படுகிறது. இவற்றில் ஒருசில பாடங்கள் மட்டும் வேறுபடலாம். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பி.எஸ்சி. வைராலஜி என்ற தனிப்பட்டப் படிப்பே உள்ளது.

எம்.எஸ்சி. வைராலஜி

இளநிலைப் பட்டப்படிப்பில் மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, பேச்சுலர் ஆஃப் வெட்னரி சயின்ஸ், மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, எம்பிபிஎஸ் படித்து முடித்தவர்கள் எம்.எஸ்.வைராலஜி படிப்பில் சேரலாம். இப்படிப்பு பிரத்யேகமாக வைரஸ்களை பற்றி மட்டுமே முழுக்க முழுக்க கற்றுத்தரும் படிப்பாகும். இப்படிப்பில் வைரஸ், வைரஸின் அமைப்பு, வகைகள், பரவும்முறை, இனப்பெருக்க முறை, வைரஸினால் பரவும் நோய்கள், கட்டுப்படுத்தும் முறைகள், வைரஸ் பிரித்தெடுத்தல், ஆய்வு செய்தல் போன்றவை கற்றுத்தரப்படும்.

முடித்தவர்கள் மருத்துவ ஆய்வுக் கூடங்கள், வேளாண்மை ஆய்வுக் கூடங்கள், கால்நடை மருத்துவ ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ‘வைராலஜிஸ்ட்’ ஆகபணியாற்றலாம்.

முதுநிலைப் படிப்பை முடித்தவர்கள் வைரலாஜி துறையில் பிஎச்டி படிப்பையும் தேர்வுசெய்து ஆய்வில் ஈடுபடலாம். இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்கள் வைராலஜி குறித்த பிஎச்டி படிப்பை வழங்குகின்றன.

ஐஐஎஸ்சியில் சிறப்பு படிப்பு

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் பிஎஸ்சி பயாலஜி எனும் நான்காண்டு பட்டப் படிப்பில் சேர்ந்தால், பயோ கெமிஸ்ட்ரி, பயோ பிசிக்ஸ், கேன்சர் பயாலஜி, செல் பயாலஜி, கம்ப்யூட்டேஷனல் அண்ட் சிஸ்டம்ஸ் பயாலஜி, டெவலப்மெண்டல் பயாலஜி, ஜெனிடிக்ஸ், எகாலஜி அண்ட் என்விரான்மென்டல் பயாலஜி, இம்யூனாலஜி அண்ட் வேக்ஸினாலஜி, மைக்ரோ பயாலஜி, மாலிக்யூலர் பயாலஜி, நியூரோ சயின்சஸ், பிளாண்ட் டெவலப்மென்டல் பயாலஜி, புரோட்டீன் என்ஜினீயரிங், ரீபுரடக்டிவ் பயாலஜி, சிக்னல் ட்ரான்ஸ்டக்சன் அண்ட் ஸ்ட்ரக்ச்சுரல் பயாலஜி, யூஸ்டைவர்ஸ் எக்ஸ்பரிமெண்ட் மாடல் சிஸ்டம்ஸ் ஆகியவற்றை பற்றி விரிவாகப் படிக்கலாம்.

நான்காம் ஆண்டில் வைரஸ்கள் குறித்த ஆய்விலும் ஈடுபடலாம். விரிவாக சொல்வதெனில் மனிதன், எலி, மீன், பழவண்டு, புழு, தாவரம், ஈஸ்ட், பாக்டீரியா, செல்/டிஸ்யூகல்ச்சர் ஆகியவற்றில் ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நான்காண்டு சிறப்புப் படிப்புக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விண்ணப்பிப்பதற்கு வரும் ஏப்ரல் 30 கடைசி தேதியாகும்.

இதேபோல ஐஐஎஸ்இஆர் எனப்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிறுவனங்களில் பிஎஸ்-எம்எஸ் எனப்படும் ஐந்தாண்டு டூயல் டிகிரி படிப்பில் பயாலஜிக்கல் சயின்ஸ் படிப்பு கற்றுத்தரப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகளில் அடிப்படை அறிவியல் குறித்தும், மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டுகளில் பயாலஜி குறித்து பிரத்யேகமாகவும் கற்றுத்தரப்படும். ஐந்தாம் ஆண்டில் பயாலஜி துறையில் ஆய்வினை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படும். இதிலும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோல இந்தியாவில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மைக்ரோ பயாலஜி, வைராலஜி குறித்த படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. உங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து படிக்கலாம். எதிர்காலத்தில் ஆகச்சிறந்த வைரஸ் ஆராய்ச்சியாளராக உருவாகி பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தலாம். இந்த துறையில் சிறப்பாக செயல்பட்டால் நோபல் பரிசையும் வெல்லலாம். தயாராகுங்கள் மாணவர்களே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here