மின் சிக்கனத்தின் நாயகன்

237

-சங்கமி

நூற்றுக் கணக்கான சிறப்புக் குழந்தைகளுக்கு ஆந்திராவைச் சேர்ந்த மதுபாபுவும் அவரது மனைவி வரிஜாவும் பாதுகாப்பு அரண்களாக இருக்கின்றனர்.

சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களான இவர்கள், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கான பெற்றோர் அமைப்பு என்ற புதுமையான முயற்சியின் வழியாக நம்பிக்கையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் வெகுஜன வெளிச்சத்தில் இருந்து விலகி, எரிசக்தி பாதுகாப்பில் தேசிய அளவில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார் மதுபாபு.

பள்ளிக் குழந்தைகளை தினசரி வாழ்க்கையில் மின்சாரம் சேமிக்க ஊக்குவிப்பதன் மூலம் பாபுவின் முயற்சி, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புப் பணிக்கு 2012 முதல் 6 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்தி உள்ளது. நிதி அடிப்படையில் ஆண்டுதோறும் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரக் கட்டணம் சேமிக்கப்பட்டுள்ளது.

சிறிய யோசனையின் வெற்றி

“எங்கள் திருப்பதி நகரம் உட்பட நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினைகள் 2012 ஆம் ஆண்டில் மிகப் பரவலாக இருந்தன. கிராமங்கள், டையர் ஒன் நகரங்கள் வரை இந்தப் பிரச்சினையில் இருந்து யாரும் தப்பிக்கவில்லை என்பதைக் கண்டறிந்தேன். கிராமங்களில் 12 மணி நேரமும், டையர் 2 நகரங்களில் 4 மணி நேரமும், மெட்ரோ நகரங்களில் ஒரு மணி நேரமும் மின்வெட்டை தினமும் மக்கள் அனுபவித்தனர்” என்று பேசுகிறார் பாபு.

மக்களின் வீடுகளிலிருந்து தொடங்கி எரி சக்திப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிக்கலைத் தீர்ப்பதற்கான அரசின் உத்தியாக இருந்தது. “எரிசக்திப் பாதுகாப்பு தொடர்பான தேசிய அளவிலான ஓவியப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் நடைபெற்றதை நான் அறிந்தேன். மின்சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அதை முதல் படியாக பார்த்தேன். ஆனால் அந்த யோசனை என்னைக் கவரவில்லை. எரி சக்தியைப் பாதுகாப்பதற்கான அபரிமிதமான ஆற்றல் குழந்தைகளிடம் இருப்பதாக உணர்ந்தேன். இதுதொடர்பாக ஒரு புதுமைத் திட்டத்துடன் வந்தேன்” என்று விவரிக்கிறார்.

திருப்பதியில் நடந்த ஓவியப் போட்டியில் பங்கேற்ற பள்ளிக் குழந்தைகளுக்காக சில அட்டைகளை அச்சிட்டார். அப்போது மதுபாபு ஒரு தன்னார்வலராக இருந்தார். அந்த நிகழ்வின் முடிவில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர் அட்டையை கொடுத்து, அந்தக் கருத்தை சுருக்கமாக விளக்கினார்.

அந்த அட்டை எளிமையானது. ஒரு மாணவர் அறையைவிட்டு வெளியேறும்போது விளக்குகளை அணைப்பது, பகலில் இயற்கை ஒளியை அனுமதிப்பது போன்று வீட்டில் பின்பற்றவேண்டிய சில அவசியமான எரிசக்தி சேமிப்புக் குறிப்புகளை பாபு அட்டையின் முதல் பக்கத்தில் எழுதியிருந்தார். தங்களது மீட்டர் அளவீடுகளை தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் பதிவு செய்து பயன்பாடு குறைவதைக் கவனிக்க மறுபுறத்தில் இடம் விட்டிருந்தார்.

“இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதிக எரிசக்தி சேமிப்பாளருக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவித்தேன். இப்படித்தான் சிறந்த எரிசக்தி சேமிப்புப் போட்டி தொடங்கியது. இப்போது இந்தியாவின் எட்டு மாநிலங்களில் நடத்தப்பட்டுவருகிறது” என்கிறார் பாபு.

அபூர்வமான தாக்கம்

அட்டையின் தாக்கம் உடனடியாக நிகழ்ந்தது. தன்னைச் சுற்றியுள்ள பள்ளிக்குழந்தைகள் விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை சரியான நேரத்தில் அணைப்பதில் ஆர்வமாக ஈடுபடுவதைக் கவனித்தார் பாபு. அவர்களது பெற்றோர்களும் அதே உத்திகளைப் பின்பற்றவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, விரிவான மீட்டர் அளவீடுகளுடன் 183 அட்டைகளை மாணவர்கள் சமர்ப்பித்தனர். மேலும், அவர் மீட்டர் அளவுகளை கவனத்துடன் ஆராய்ந்தார். ஒரு மாதத்தில் மட்டும் சராசரியாக சுமார் 22 யூனிட் மின்சக்தி சேமிக்கப்பட்டிருந்தது.

இது எப்போதும் இல்லாத சாதனை. இந்த வியக்கத்தக்க வெற்றிக்காக பாபுவின் பெயர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

பள்ளி மாணவர்கள் தங்களால் முடிந்தவரை மின்சாரத்தைச் சேமிக்கத் தயாராக இருப்பதால், மின்சிக்கனப் போட்டி பற்றிய தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. முதல்கட்டமாக பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே ஒரு தன்னார்வக் குழுவை உருவாக்கினார்.

ஒவ்வொரு நாளும் பள்ளிகளுக்குச் சென்று அன்றாட வாழ்வில் எரிசக்திப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அவர்கள் ஏற்படுத்தினார்கள்.

ஆனால், அவரது மின்சேமிப்புத் திட்டம் நிறைய சவால்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. விரைவாக பெற்றோரிடமிருந்து புகார்கள் வரத் தொடங்கின. தனது மகள், பகல் நேரத்தில் இயற்கை ஒளிக்காக ஜன்னல் திரைச்சீலைகளைத் திறந்துவைப்பதால் அனைத்து தூசுகளும் வீட்டுக்குள் வந்து விடுகின்றன என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி புகார் தெரிவித்தார்.

விளக்குகளை அணைப்பதில் மகனின் அதிக உற்சாகம், அவரது தாத்தாவைக் காயப்படுத்தியதாக மற்றொரு குடும்பத்தினர் கூறினர். இந்தப் புகார்களுக்கு மத்தியில், அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பாபுவுக்குப் பாராட்டுகளும் குவிந்தன. குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் அவரது முயற்சிகள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கின்றன என்பதை பாராட்டுகளும் புகார்களும் அவருக்கு உணர்த்தின. மின் சிக்கனத்துக்காக ஒரு குழந்தைக்கு 10 ரூபாய் மட்டுமே அவர் செலவழிக்க வேண்டியிருந்தது.

திருப்பதியின் எல்லைகளைக் கடந்தும் போட்டியை பிரபலப்படுத்த வேண்டும் என்று பாபு கனவுகண்டார். விரைவிலேயே ஆந்திரா முழுவதும் உள்ள மாவட்டங்கள், நகரங்களில் மின்சேமிப்புப் போட்டி பிரபலமானது. தனது முயற்சிகள் நாடு தழுவிய அளவில் செல்லவேண்டும் என விரும்பினார். ஆனால், அதற்கு நிதி போதவில்லை. இங்கிலாந்தில் செயல்படும் மோட் மெக்டொனால்ட் நிறுவனம் உதவிக்கரம் நீட்ட முன்வந்தது.

தற்போதைய நிலவரப்படி ஆந்திரா, ராஜஸ்தான், கோவா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் அவ்வப்போது பாபுவின் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்று நாடு தழுவிய அளவில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here