நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர் – 22

402

-சேவியர்

புராஜக்ட் மேனேஜர்களின் மிகப்பெரிய ஆயுதம் தகவல்தான். தகவல்களால் கட்டமைக்கப்பட்டதுதான் அவர்களுடைய பணி. தகவல்கள் இல்லையென்றால் ஒரு புராஜக்ட் மேனேஜர் தன்னுடைய திறமையையோ, இருப்பையோ வெளிக்காட்டவே முடியாது.

“ஒரு விஷயம் கேட்ட உடனே எல்லா டேட்டாவையும் புட்டு புட்டு வெக்கிறான் பாரு” எனும் விமர்சனம்தான் ஒரு புராஜக்ட் மேனேஜருக்குத் தேவை. கிடைக்கின்ற அத்தனை தகவல்களையும் போட்டு அலசி ஆராய்ந்து தான் அவருடைய பெரும்பாலான வேலைகள் நடக்கும். எனவே தகவல்களை பெறுவதும், அதைப் பாதுகாப்பதும், அதை சரியான வகையில் பயன்படுத்துவதும் புராஜக்ட் மேனேஜரின் மிக முக்கியமான பணிகளாகும்.

இன்றைய தொழில்நுட்பம் நமக்கு முன்னால் ஏகப்பட்ட மென்பொருட்களை நீட்டுகிறது. அவற்றின் உதவியுடன் தகவல்களை சேமிப்பதும், அலசுவதும் எளிதாகிவிடுகின்றன. பெரிய ஹைடெக் புராஜக்ட்களில் டேட்டா சயின்ஸ் என ஒரு தனி பிரிவே இருக்கும். அவர்கள் தகவல்களை அலசி ஆராய்ந்து அது என்ன சொல்கிறது என்பதை நமக்குச் சொல்பவர்கள்.

ஆனால் அதே நேரத்தில் ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் இருக்கிறது என்பதற்காக தகவல்களின் நேர்த்தியெல்லாம் பக்காவாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது. பழைய காலத்தில் பெரியவர்களெல்லாம் பாக்கெட்டில் ஒரு சின்ன டைரி வைத்திருப்பார்கள். அத்தனை கணக்கு வழக்குகளும் அதில் கண்ணுக்குத் தெரியாத குட்டி குட்டி எழுத்துகளால் எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஒரு விஷயம் தேவை என்றால் அதை சட்டென உருவி நிமிட நேரத்தில் விஷயங்களைச் சொல்லி விடுவார்கள். பல தொழில்நுட்பங்கள் இருக்கின்ற நாம் பல வேளைகளில் சட்டென தகவல்களை எடுக்க முடியாமல் சிரமப்படுவோம்.

ஒரு தகவலின் மதிப்பு, சரியான நேரத்தில் அது பெறப்படுவதுதான். அதற்கு முதலில் சரியான தகவல்கள், சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மூன்று விஷயங்களும் புராஜக்ட் மேனேஜரின் தலையில் விழுந்த கடமை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக ஒரு புராஜக்டில் உள்ள பணியாளர்களின் வேலை நேரம் ஒரு தகவலாய்க் கிடைக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்கின்ற பணிகள் இன்னொரு தகவலாய்க் கிடைக்கின்றன. இந்த இரண்டு தகவல்களையும் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பணியாளரின் ஆவரேஜ் உற்பத்தித் திறனைக் கண்டுபிடிக்கலாம். அதைக் கண்டுபிடித்தால், எந்த நாளில் அவர்களுடைய உற்பத்தித் திறன் அதிகமாய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம். எந்த நாளிலெல்லாம் அவர்களுடைய உற்பத்தித் திறன் குறைவாய் இருக்கிறதோ அந்த நாட்களிலெல்லாம் என்ன வேலை செய்தார்கள்? எப்படி அவர்களை உற்சாகமூட்டுவது? அல்லது அந்த நாளில் வேறு விதமாகப் பணி செய்யலாமா என்றெல்லாம் பல முடிவுகளை எடுக்கலாம்.

இது ஒரு சின்ன உதாரணம். வெறும் இரண்டு செட் தகவல்களை வைத்து நாம் செய்யக் கூடிய விஷயங்களில் ஒரு சில. அதேபோல ஏகப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கும்போது அதை வைத்துக்கொண்டு புராஜக்டை மிக நேர்த்தியாகவும், திறமையாகவும், வேகமாகவும் கொண்டு செல்ல முடியும்.

பெரும்பாலான புராஜக்ட்களுக்கு பெரிய பெரிய மென்பொருட்கள் ஏதும் தேவை இல்லை. எக்ஸல் ஷீட் இருந்தாலே முக்கால்வாசி புராஜக்ட் வேலைகளையும் முடித்து விடலாம். அதிலுள்ள மேக்ரோ ஆப்ஷன்களை நேர்த்தியாகப் பயன் படுத்தினால் எந்த ஒரு பெரிய மென்பொருள் சாதிப்பதையும் அது சாதித்துவிடும் என்பதுதான் உண்மை. அதேபோல எம்.எஸ். வேர்ட், பவர் பாயின்ட், சின்ன டேட்டாபேஸ் இவையெல்லாமே போதுமானவை.

இன்னொரு முக்கியமான விஷயம் நாட்கள்! ஒரு புராஜக்ட் மேனேஜர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் நாட்கள். எந்த நாளில் எந்த வேலை ஆரம்பித்தது.

எந்தெந்த நாட்களில் யாரெல்லாம் வேலை செய்தார்கள். எந்த நாட்களில் புராஜக்ட் முக்கியமான மைல் கற்களை எட்டியது. எந்த நாளில் முடிக்க வேண்டும். எத்தனை நாள் வேலை பாக்கியிருக்கிறது. இப்படி எல்லா நாட்களும் புராஜக்ட் மேனேஜருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அத்தனை நாட்களையும் நினைவில் வைத்துக்கொள்வது இயலாத காரியம். ஆனால் இவற்றையெல்லாம் புராஜக்ட் மேனேஜர் நேர்த்தியாக எழுதி வைத்திருக்க வேண்டும். அதற்கு இத்தகைய மென்பொருட்கள் உதவும்.

தகவல்கள் என்பதில் பல வகை உண்டு. ஒன்று புராஜக்ட்டை இயக்கிக் கொண்டிருக்கத் தேவைப்படுகின்ற தகவல்கள். இவை டிசிஷன் மேக்கிங் டேட்டா எனப்படும். இன்னொரு வகை தகவல்கள் நடந்து போன விஷயங்களை சேமித்துவைக்கின்ற தகவல்கள்.

இவை ஹிஸ்டாரிக்கல் டேட்டா எனப்படும். இன்னொரு வகை அடுத்து செய்ய வேண்டியவையோ, அல்லது நாம் நினைத்திருக்கின்றவையோ தகவல்களாக இருக்கும். இவை பிரடிக்டிவ் டேட்டா அல்லது பிளான்ட் டேட்டா எனப்படும். இப்படி பல வகையான தகவல்கள் உண்டு. தகவல்களை அதனதன் தன்மைக்கேற்ப சேமிக்க வேண்டும்.

ரிப்போர்ட்களை சேமித்து வைப்பது, தொடர்கின்ற புராஜக்ட்களுக்கும் பயனளிக்கும். அது எந்த சின்ன ரிப்போர்ட்டாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் பயனளிக்கும். இவை மென் ரிப்போர்ட்களாக இருப்பதே சிறப்பானது. அதேபோல, பலரும் தவற விடுகின்ற தகவல்கள், “மின்னஞ்சல் தகவல்கள்” மற்றும் “தொலைபேசி தகவல்கள்”. நாம் மின்னஞ்சல் மூலம் பகிர்கின்ற தகவல்களையும் பத்திரமாகச் சேமித்து வைக்க வேண்டும். அதேபோல, கேட்கின்ற தகவல்களையும் எழுதி வைத்துப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் அவை பயனுள்ளவையாக மாறும்.

புராஜக்ட் மேனேஜ்மென்ட் மென்பொருட்களை உயர்மட்ட அளவில் இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று தனித்து இயங்குகின்ற ஸ்டான்ட் அலோன் மென்பொருட்கள்.

நீங்கள் கொடுக்கின்ற தகவல்களை அது வைத்துக்கொள்ளும். நீங்கள் விரும்பும் வகையில் அதை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் விரும்பும் நேரத்தில் அதை எடுத்துக்கொள்ளலாம்.

இன்னொரு வகை பல மென்பொருட்களோடு இணைந்த மென்பொருள்.இதை இன்டகிரேட்டர் சாஃப்ட்வேர் என்பார்கள். எந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறோம் என்பதல்ல, எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.

ஒரு புராஜக்டின் அத்தனை நிலைகளையும் கவனிக்கக் கூடிய புராஜக்ட் மேனேஜ்மென்ட் மென்பொருட்கள் உண்டு. இலவசமான ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் முதல், கோடிக்கணக்கான பணம் செலவு செய்ய வேண்டிய என்டர்பிரைஸ் மென்பொருட்கள் வரை இன்றைக்கு சந்தையில் உண்டு. அதில் நிறுவனத்துக்குத் தேவையானது எதுவோ அதைப் பயன்படுத்துவதே உசிதம். அதிக விலையுடையது என்பதற்காக வாங்குகின்ற பொருட்கள் பெரும்பாலும் பயனற்றுப் போவதுண்டு.

இத்தகைய புராஜக்ட் மேனேஜ்மென்ட் மென்பொருட்கள் ஒரு புராஜக்டின் இனிசியேஷன், பிளானிங், எக்சிகியூஷன், மானிட்டரிங் அண்ட் கன்ட்ரோல் – குளோசிங் என அனைத்து நிலைகளிலும் பயன்படும். ஒரு புராஜக்ட் துவக்கம் முதல் முடிவு வரை என்ன நடந்தது என்ற அத்தனை தகவல்களையும் இந்த மென்பொருளில் சேமித்து வைப்பதன் மூலம் தகவல்கள் ஏதும் தொலைந்து விடாமல் நாம் காத்துக் கொள்ள முடியும்.

இன்றைய உலக மயமாக்கலினால் புராஜக்ட்கள் எல்லாம் குளோபல் மயமாகிவிட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற மக்கள் இணைந்து பணியாற்றுவதோ, நாட்டின் பல பகுதிகளிலுள்ள பல மொழி பேசும் மக்கள் இணைந்து பணியாற்றுவதோ, சர்வ சாதாரணமாகிவிட்டது. அத்தகைய சூழல்களில் மின்னஞ்சல், இன்டகிரேட்டர் புராஜக்ட் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர் போன்றவை பெருமளவு கை கொடுக்கும்.

– திட்டமிடுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here