நீங்களும் ஒரு ஆர்க்கிடெக்ட்

402

-சுந்தரபுத்தன்

நேட்டா தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது

நவீன சமகால கட்டடக்கலை உத்திகள், பழம்பெரும் வடிவமைப்புகள், எழில்மிகு கட்டுமானங்கள் பற்றிய படிப்பாக ஆர்க்கிடெக்சர் இருக்கிறது. கலைகள் மீதான ஆர்வம், கலை ரசனை, படைப்பாளுமை, ஓவியத் திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் திறமை கொண்ட மாணவர்களின் தேர்வாக பி.ஆர்க் உள்ளது. கட்டடக் கலை படிப்புகளில் சேருவதற்கு நேஷனல் ஆப்டியூட் டெஸ்ட் இன் ஆர்க்கிடெக்சர் எனப்படும் நேட்டா தகுதித் தேர்வை எழுதவேண்டும்.

பி.ஆர்க் படிப்பை முடித்த பட்டதாரிகள் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அமைப்பில் பதிவு செய்தபிறகு, கட்டடவியல் வடிவமைப்பாளர்களாக பணியாற்றலாம். தனியார் கட்டுமான நிறுவனங்கள், அரசு பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கட்டடவியல் துறையில் தேவையான அனுபவம் பெற்ற பிறகு சொந்தமாக நிறுவனம் தொடங்கலாம்.

கல்வித்தகுதி

நேட்டா தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு கணிதம் மட்டும் படித்திருந்தால் போதும் எனச் சொல்லப் பட்டது. 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம். பத்தாம் வகுப்புப் படித்துவிட்டு கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு, மூன்று ஆண்டு டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் லேட்டரல் என்ட்ரி மூலம் பி. ஆர்க் படிப்பில் சேரமுடியாது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ 2000. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 1700. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், பேமெண்ட் கேட்வே மூலம் கட்டணம் செலுத்தலாம்.

நுழைவுத்தேர்வு

நேட்டா தேர்வில் பகுதி ஏ ஆன்லைன் வழியாகவும், பகுதி பி எழுத்துத் தேர்வாகவும் நடத்தப்படும். கணிதம், இயற்பியல் வேதியியல், ஜெனரல் ஆப்டியூட் மற்றும் டிராயிங் தொடர்பான கேள்விகள் என 200 (125 + 75) மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுக்காலம் 3.15 மணி நேரம். பிளஸ் டூ தேர்ச்சிபெற்ற பிறகு நேட்டா தேர்வு எழுதிய மாணவர்கள், அந்த மதிப்பெண்களை வைத்துக்கொண்டு விரும்பும் கல்வி நிலையங்களில் பி. ஆர்க் படிப்பில் சேரமுடியும்.

சென்னை வண்டலூர் கிரசண்ட் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் தலைவர் ஜெயலெட்சுமி, “சமூகத்தில் தனித்துவம் படைக்க விரும்பும் இளைய தலைமுறையினருக்கான படிப்பு ஆர்க்கிடெக்சர். கட்டடக்கலை நிபுணர்களுக்கு கட்டடங்களை சிறந்த கலைப்படைப்புகளாக உருவாக்குவதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. மனிதர்களின் மனோபாவங்களை கட்டமைப்பதாக கட்டடங்கள் உள்ளன. காற்றோட்டமும் இயற்கை வெளிச்சமும் இல்லாத இடங்களில் பணியாற்றுபவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். ஆனால் பரந்துவிரிந்த அழகிய இடங்களில் உற்சாகமாக வேலை செய்கிறார்கள். கட்டடங்களுக்கு உயிர் இருக்கிறது. வேறு எந்த படிப்பையும்விட ஆர்க்கிடெக்சர் படித்துமுடித்ததும் வேலை கையில் வந்துவிடும்” என்கிறார்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 15.4.2020
தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
விவரங்களுக்கு: www.nata.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here