வெற்றியின் வேர்கள் – 25

333

– எம். சிதம்பரம்

எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்போம்!

நான் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று கொண்டிருந்த காலம். சில மாணவர்கள் நடேசன் என்கிற மாணவனின் பேனாவை ஒளித்துவைத்துவிடுவார்கள். அவனுக்குத் தெரியாமல் அவன் பாட்டிலில் உள்ள தண்ணீரை கீழே கொட்டிவிடுவார்கள்.அவனை அழவைத்து மகிழ்ச்சி காண்பார்கள். அது மகிழ்ச்சியா?
இல்லவே இல்லை. அது வெட்கப்பட வேண்டிய அற்பமான செயல். பின் நாட்களில் அவர்களுக்கு மனமுதிர்ச்சி வரும்போது, அதையெல்லாம் நினைக்கும்போது, குற்ற உணர்ச்சியே மேலிடும்.

புத்தாடை அணிந்து உங்கள் பிறந்தநாள் அன்று நீங்கள் பள்ளிக்குச் சென்றால் எப்படி இருக்கும்? பேச்சுப் போட்டியில் பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? பிட்சா, பிரியாணி, பர்கர் போன்ற உணவுகளை உண்டால் எப்படி இருக்கும்? உங்களுக்குப் பிடித்த அணி, போட்டியில் வென்றால் எப்படி இருக்கும்? மகிழ்ச்சியாக இருக்கும் என்று பலர் சொல்வீர்கள். இவையெல்லாம் உண்மையிலேயே மகிழ்ச்சிதானா? இவையெல்லாம் தொடர்ந்து நிகழ்ந்தால்தான் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? மற்ற நேரங்களில் சோகமாகத்தான் இருப்பீர்களா?
ஒரு மாணவன் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டான். “ஏன்?” என்று கேட்டவுடன் “நான் 5 போட்டிகளில் கலந்துகொண்டு முதல் பரிசு வென்றேன்…” என்றான்.

“அட… வெரிகுட். அப்புறம் ஏன் சோகமாய் இருக்கிறாய்?”

என்று கேட்டபோது, “ஆறாவதாகக் கலந்துகொண்ட போட்டியில் ஆறுதல் பரிசுகூட கிடைக்கவில்லை…” என்று அலுத்துக் கொண்டான்.

இந்த மாதிரி மாணவர்களுக்கு ஆறுதல் கூறவே முடியாது.

சொன்னாலும் பயன்கிட்டப்போவதில்லை. இவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணங்களில் கூட, சோகத்தைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள். மதிய உணவைச் சாப்பிடாமல் இரவுக்கு உணவு கிடைக்குமா என்று கவலையில் உழல்பவர்கள்.

இன்னொரு ரகம் உண்டு. இவர்கள் எதற்கும் வருத்தப்படவே மாட்டார்கள். வருந்த வேண்டிய பொழுதுகளில் கூட மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.

மாணவர்களே, நீங்கள் ஓடும் அத்தனைப் போட்டிகளிலும் வெற்றிபெற முடியுமா? போட்டியில் ஓடும் அத்தனைப் பேரும் வெற்றிவாகை சூட முடியுமா? வெற்றி பெற்றால்தான் மகிழ்ச்சியா? இல்லை. மகிழ்ச்சிதான் வெற்றி.
எந்த நிலையிலும் மனதை மகிழ்ச்சியாய் வைத்திருப்பதே வெற்றி. இதை என் வகுப்பறையில் நான் இப்படிச் சொல்வேன்.

‘I may not win every day. But, I will be happy every day!‘

வெற்றி பெறுவது என்பது நம் கையில் மட்டும் இல்லை. ஆனால், மகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் மட்டும்தான் இருக்கிறது.

இன்று வெற்றிபெற்றீர்களா? மகிழ்ச்சியாக இருங்கள். வெற்றிபெறமுடியவில்லையா? அதைவிட மகிழ்ச்சியாக இருங்கள். வெற்றி பரிசுகளைத் தரும். தோல்வி பாடங்களைத் தரும். வாழ்வில் வெற்றிபெற பல உயர்ந்த பாடங்கள் தேவை.

நம் வாழ்வில் மூலமுதற் காரணமே மகிழ்ச்சிதான். நாம் பிறக்கும்போதுதான் எத்தனை பேருக்கு மகிழ்ச்சி. உட்காரத் தொடங்கும்போது எத்தனை கைத்தட்டல்கள். நடக்கத் தொடங்கும் போது வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி. நம் வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் நமக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி. மகிழ்ச்சியே வாழ்க்கை. அதுவே தவம்.

சிலர் குழந்தை இல்லையே என்று வருந்துவர். சிலர் நிறைய குழந்தைகள் உள்ளனரே என்று வருந்துவர். சிலர் குழந்தைகள் இருந்தாலும் இல்லையென்றாலும் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.

சில மாணவர்கள் பள்ளிக் கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வார்கள். கிடைக்காதபோது வருந்துவார்கள். வெகுசிலர்தான் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் வெகு இயல்பாய் இருப்பார்கள்.

நான் ஏழாவது பயின்றபோது, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடினேன். போட்டி தொடங்கியதும் சிறிதுநேரம் வேகமாக ஓடினேன். ஆனால், தொடர்ந்து அதேவேகத்தில் என்னால் ஓட முடியவில்லை. மூச்சு வாங்கியது. சிறிது நேரத்தில் ஓடவே முடியவில்லை. செய்வதறியாது திகைத்தேன். புறப்பட்டு வந்த திசையிலேயே திரும்பி ஓடினேன். அது மிக எளிதாக இருந்தது – மிகக்குறைவான தூரமாக இருந்ததால். முன்னே ஓடுவது கஷ்டமாக இருந்தது – அதிக தூரமாக இருந்ததால்.

கஷ்டங்கள் நீண்ட காலம் இருக்கவேண்டுமா? அல்லது, குறைந்த காலம் இருக்கவேண்டுமா? மகிழ்ச்சி? நீண்ட காலத்துக்கா? குறைந்த காலத்துக்கா? இந்த மாணவப் பருவ ஓட்டத்தில் நீங்கள் கொஞ்ச காலம் கஷ்டப்பட்டு ஓடினால், நீங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். வெற்றியும் பெறலாம்.

குறுக்கு வழியில் வரும் மகிழ்ச்சியையும் குறுகியகாலமே நிலைக்கும் மகிழ்ச்சியையும் நாடவே நாடாதீர்கள். நீண்டகாலம் யாருக்கும் தீமை விளைவிக்காமல் நன்மை தருவதே உண்மையான மகிழ்ச்சி.

இந்த உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன? அதை என்றுமே நம் வசமாக்கிக்கொள்வது எப்படி?

மகிழ்ச்சி என்பது ஓர் உணர்வு. மனநிறைவைத் தரக்கூடிய ஓர் உயர்ந்த மனநிலை. நீங்கள் தற்போதுள்ள நிலையில் உங்களுக்கு ஏற்படும் திருப்தியே மகிழ்ச்சி. ஆனால், இது எளிதில் மாறக் கூடிய நிலை. உங்களது இந்த நிமிட வாழ்க்கையில் ஏற்படக் கூடிய நன்மதிப்பு. அந்த நன்மதிப்பை நீண்ட நாட்கள் தக்கவைத்திருப்பதே ஆத்மதிருப்தி. அதுவே உண்மையான மகிழ்ச்சி. அதுவே உங்களுக்கு நீங்கள் கொடுத்துக் கொள்ளக் கூடிய ஆகச்சிறந்த பரிசு.

மகிழ்ச்சியில் ஏற்படும் நன்மைகள்

1. உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் நொடிகளை விரட்டியடிக்கும்.

2. மன அழுத்தத்தைக் குறைக்கும். உறவுகள் விரிவடையும்.

3. சுறுசுறுப்பாய் இயங்க வைக்கும்.

4. உற்சாகத்தைத் தூண்டும். உத்வேகத்தை அதிகரிக்க வைக்கும்.

5. உங்கள் உற்பத்தித் திறனையும் செயல் திறனையும் அதிகரிக்கும்.

மகிழ்ச்சியாய் இருப்பதற்கான அடையாளங்கள்

1.வாழ்க்கை வரமாகத் தோன்றும்.
2.மனதில் உற்சாகம் கொப்பளிக்கும்.
3.கலகலப்பாக அனைவரிடமும் பழகுவீர்கள். உறவுகள் வலுப்பெறும்.
4.வாங்குவதைவிட அதிகமாக வழங்குவீர்கள்.
5.சக தோழர்களுக்கு உதவுவீர்கள்.
6.புத்திசாலியாக, படைப்பாற்றல் உள்ளவராக வளர்வீர்கள்.
7.தன்னம்பிக்கை உடையவராக மாறுவீர்கள். உங்களை நேசிக்கத் தொடங்குவீர்கள்.

உங்கள் வாழ்க்கைப் பயணம் சாதாரணமான பயணமாகிவிடக் கூடாது. அது மகிழ்ச்சிப் பயணமாக, வெற்றிப் பயணமாக இருக்க வேண்டும். வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சிப் பயணமாக மாற்றுவது எப்படி?

உங்கள் மகிழ்ச்சி நீங்கள் அடையும் வெற்றியிலோ, தோல்வியிலோ அல்ல. அந்த இரண்டையும் நீங்கள் எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதில்தான் அடங்கியுள்ளது. எனவே மாணவர்களே, உங்களின் உண்மையான மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்தால், மகிழ்ச்சி உங்கள் வசமாகிவிடும்.

மகிழ்ச்சியை வசப்படுத்துவது எப்படி?

1.உண்மையான மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே தான் உள்ளது என்பதை
நீங்கள் உணர்ந்த மறுகணமே மகிழ்ச்சி உங்கள் வசமே. உங்கள் உள்ளத்தில் விதைத்த அந்த மகிழ்ச்சி உங்கள் முகத்திலே புன்னகையாய்ப் பூக்கும்.

2.தீயவற்றிலும் நன்மையையே பாருங்கள்.

3.அடுத்தவர்களை மனதாரப் பாராட்டுங்கள். பிறரின் வெற்றிக்கு மகிழுங்கள்.

4.உங்களிடம் இல்லாததைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். அதில் முழுகவனம் செலுத்தி அதில் விற்பன்னர் ஆகுங்கள்.

5.எதிர்மறையாய் பேசுபவர்களையும் உங்களின் தன்னம்பிக்கையைச் சிதைப்பவர்களையும் தவிர்த்திடுங்கள். உங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களிடமும் தன்னம்பிக்கை உள்ளவர்களிடமும் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள்.

6.கவலை, பயம், கோபம், பொறாமை, பழிவாங்குதல் போன்ற தீய குணங்களை ஒழித்தால் மனம் முழுக்க மிஞ்சுவது மகிழ்ச்சி மட்டுமே.

7.சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடுங்கள்.

8.உங்களை நீங்கள் மிகவும் நேசியுங்கள்.

9.சிறிய பிரச்னைகளைப் பெரிதாக்காதீர்கள். மனதை கடல்போல் மாற்றுங்கள்.

ஒரு ஜென்கதை

ஜென் துறவி ஒருவரிடம் ஒரு மனிதன் வந்து, தனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டதாகவும் கவலைகளால் விரக்தி அடைந்திருப்பதாகவும் கூறினார். துறவி உடனே, அதற்கொரு மருந்து தருவதாகக் கூறி, ஒரு கோப்பை நீரில் 6 கரண்டி உப்பைக் கரைத்துக்கொடுத்து, குடிக்கச் சொன்னார்.

அவன் ஒருவாய் குடித்தவுடன், “ஐயா… ரொம்பவும் உப்புக்கரிப்பு….” என்று கூறிவிட்டு, வெளியில் துப்பினான். பிறகு, துறவி அவனை நதியோரம் அழைத்துச் சென்று, அதே 6 கரண்டி உப்பை நதியில் கரைத்தார். இப்போது அந்த நதியிலிருந்து ஒரு கோப்பை நீரைப் பிடித்து அவனைக் குடிக்கச் சொன்னார். அவனும் குடித்தான்.

“இப்போது தண்ணீர் குடித்தாயே… எப்படி இருந்தது?” என்றார்.

சுவையாக இருந்ததாக அவன் கூறினான்.

“அதே ஆறு கரண்டி உப்புதான் இங்கேயும் போட்டேன். ஏன் அங்கே கரித்த உப்பு இங்கே கரிக்கவில்லை?” என்று வினா எழுப்பினார்.

அதற்கு அவன், “ஐயா, அது கோப்பை. இது நதி…” என்று பதில் அளித்தான்.

“ஏன் உன் மனதைக் கோப்பையைப் போல் வைத்திருக்கிறாய்? அதைக் குளமாகவோ, நதியாகவோ மாற்றிக்கொண்டுவிடு. எதுவுமே துவர்க்காது. கரிக்காது. கசக்காது… எல்லாமே ஒன்று போலவே இருக்கும்….” என்றார்.

இளைஞனே… உன் மனதை விசாலமாக்கினால், அதில் அத்தனை சோகங்களும் அமுங்கிப்போய் சாந்தமும் மகிழ்ச்சியும் மட்டுமே மேலோங்கி நிற்கும்.

ஒரு சக மாணவனை பார்த்து “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்…” என்றால், “அவன் நன்றாக இருக்கிறேன்!” எனக் கூறாமல்… “அட, அதை ஏம்பா கேக்குற…. ஒரே தலைவலி தாங்கல…. கை கால் எல்லாம் ஒரே வலி… ஒரே ஜலதோஷம்… தும்மல்… இருமல்…” என அடுக்கிக் கொண்டே போனால்… அதைக் கேட்க நீங்கள் அங்கே நிற்பீர்களா? பறந்து விட மாட்டீர்கள்?

சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது… வாழ்வில் விரக்தி அடைந்த ஒருவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய இருந்தான்.

அப்போது அங்கு வந்த ஒருவன், அவனைக் காப்பாற்ற விரும்பி, “ஏன் நீ தற்கொலை செய்து கொள்ள போகிறாய்?” என்று கேட்டான்.

அதற்கு அவன் தன் சோகங்களை எல்லாம் ஒவ்வொன்றாய் எடுத்து விட்டுக் கொண்டே இருந்தான். கடைசியில் கிணற்றில் குதித்தது யார் தெரியுமா? தற்கொலை செய்ய எண்ணியவன் அல்ல. அவனைக் காப்பாற்ற நினைத்தவன். “அடப்பாவி எப்படிடா இவ்வளவு சோகத்தை நீ தாங்கிக்கிட்ட அதை கேட்கிறதுக்கே என்னால முடியலையே” எனக்கூறி கிணற்றில் தொபீரென்று குதித்து விட்டான்.

மேலே கதையில் கூறியதைப் போன்ற ஆட்கள், தங்கள் சோகத்தால் நமது மகிழ்ச்சியை கபளீகரம் செய்பவர்கள். அவர்களை விட்டு விலகியே இருக்கவேண்டும்.

நான் ஒருவரைப் பார்த்து கேட்டேன். “நீ எப்படி இருக்கிறாய்?”

“உலகத்தின் உச்சியில் இருக்கிறேன்” என பதில் வந்தது.

பதிலுக்கு அவர் என்னை கேட்டார் “நீ எப்படி இருக்கிறாய்?”

நானும் “அங்கேதான் அதே உலகத்தின் உச்சியில், உங்களோடுதான் இருக்கிறேன்” என பதில் அளித்தேன்.
உத்வேகத்தோடு இருப்பவர்களோடு தொடர்பில் இருந்தால் அவர்களின் உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். மகிழ்ச்சி பெறச் செய்யும். வாழ்க்கை நமக்கு கடவுள் அளித்த பரிசு! மகிழ்ச்சி நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளக் கூடிய மிகச் சிறந்த பரிசு!

எல்லோரும் ஏன் உன்னைப் பார்த்து புன்னகைக்கிறார்கள்? என்று ஒரு மாணவனிடம் கேட்டார்கள்.
“நான் அவர்களைப் பார்த்து புன்னகைப்பதால்.”

இந்த உலகம் ஒரு கண்ணாடி. உங்கள் செயல்களைப் பிரதிபலிக்கும். பலர் இந்தக் கண்ணாடியைப் பார்த்து முறைத்துக்கொண்டே சிரி.. சிரி.. என்றால் அது சிரிக்குமா?

ஒருவன் மிக சோகமாக இருந்தான். ஏன் எனக் கேட்டால், “எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றான்.
பிறரின் சந்தோஷம். நம் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் பிறரின் துன்பம் நம் சந்தோஷமாகவும், பிறரின் சந்தோஷம் நம் துன்பமாகவும் இருக்கவே கூடாது.

வாழ்க்கையில் இரண்டு மாற்றுகள் உண்டு.

அடுத்தவர்களை மகிழ்விக்கலாம்.

அடுத்தவர்களை மகிழ்விக்க முடியாது.

இரண்டாவதை முதலில் எடுத்துக்கொள்வோம். நம்மால் அடுத்தவர்களை மகிழ்விக்க முடியாது. நம்மால் பிறரை மகிழ்விக்க முடியாதபோது அவர்களை சோகத்தில் ஆழ்த்த நமக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

அடுத்து முதலாவதிற்கு வருவோம். அடுத்தவர்களை உங்களால் மகிழ்விக்க முடியும் எனில், ஏன் நீங்கள் அவர்களை கஷ்டப் படுத்தவேண்டும்? இரண்டையும் ஒன்றாய்ப் பார்த்தால் வாழ்வின் தாத்பரியமே இரண்டு இரண்டு வார்த்தைகளில் அடங்கும். மகிழ்வித்து மகிழ்.

அந்த கணத்தோடு பின்னிப்பிணைந்து ஒன்றாவதே மகிழ்ச்சி. இது எப்படி சிலருக்கு மட்டும் சாத்தியம்? சூழ்நிலைகள் அவர்கள் மனநிலையை நிர்ணயிப்பதில்லை. பிற மனிதர்களையும் அவர்கள் மனநிலையைத் தேர்வுசெய்ய அனுமதிப்பது இல்லை. அவர்களே தேர்வு செய்கிறார்கள். அவர்கள் படைக்கப்பட்டதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, வாழ்க்கை தங்களுக்காக மட்டுமல்ல, அடுத்தவர்களுக்காகவும் என்பதை உணர்கிறார்கள்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு செயலும் தங்கள் நன்மைக்கு மட்டுமன்றி, பிறரின் நன்மைக்கே, இப்பூலகின் நன்மைக்கே என்ற விழிப்புணர்வு வரும்போது, வாழ்க்கை அவர்களுக்கு ஆனந்தமாக மட்டுமல்ல. பேரானந்தமாக அமைகிறது.

– தொடர்ந்து வெல்லுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here