தமிழ்ப் பல்கலையில் தொலைநிலைக்கல்வி

104

-சுந்தரபுத்தன்

முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் பற்றிய அறிமுகம்

தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் ஜூலை, ஜனவரி என ஆண்டுக்கு இருமுறை தொலைநிலைக்கல்வி மூலம் வழங்கப்படுகின்றன.

தரமானக் கல்வியைத் தமிழில் தரமுடியும் என்ற நோக்கம், தமிழர் பண்பாட்டுடன் இணைந்த கல்வித்திட்டங்கள், கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை, ஊர் அருகிலேயே மையங்கள், குறைந்த கல்விக்கட்டணம் எனப் பல சிறப்புகளை தொலைநிலைப் படிப்புகள் பெற்றுள்ளன.

படிப்பின் சிறப்பு

இளங்கல்வியியல் எனப்படும் பிஎட் படிப்பு, தமிழ், வரலாறு, புவியியல், தமிழிசை, பரதம், எம்பிஏ, ஆங்கிலம், சமூகப்பணி, நூலகம் மற்றும் தகவல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், வணிகவியல், உளவியல், தாவரவியல், யோகா ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இசை ஆசிரியர், யோகா ஆசிரியர், பரத ஆசிரியர் பயிற்சிகள், பரதம், மூலிகை அறிவியல், சோதிடவியல், அக்குபங்சர், பேச்சுக்கலை, கருவி இசை (வீணை, வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், மிருதங்கம், தவில்), கல்வெட்டியல், கோயிற் கட்டடக்கலை, நட்டுவாங்கம், சுவடியியில், யோகா உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.

இசை, பரதம், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், தமிழ்ப்புலவர் பயிற்சி, சுவடியியல், யோகா, வரைகலை மற்றும் வண்ணக்கலை போன்ற பாடப்பிரிவுகளில் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. கணிப்பொறி பயன்பாட்டியல், வழிகாட்டல் மற்றும் அறிவுரை பகர்தல், இணைய சேவைகள், யோகா, வைணவம், ஸ்ரீபாஷ்யம் போன்ற முதுநிலை டிப்ளமோ படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

கல்வித்தகுதி

முதுநிலைப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஏதாவது ஒரு துறையில் மூன்று ஆண்டுகால இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கணிதம், தாவரவியல், வணிகவியல், எம்எல்ஐஎஸ் போன்ற படிப்புகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு ஏதேனும் ஒரு மூன்று ஆண்டுகால இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். டிப்ளமோ படிப்புகளுக்கு பிளஸ் டூ தேர்ச்சி அவசியம்.

சான்றிதழ் உள்ளிட்ட சில படிப்புகளுக்கு மட்டும் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மற்றும் அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் உண்டு. தொலைநிலைக்கல்வி பயில விரும்பும் மாணவர்கள், கற்றல் உதவி மையங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேரிலோ அஞ்சல் வழியாகவோ விண்ணப்பக்கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இணையதளம் வழியாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக கட்டணத்தைச் செலுத்தி மின் ரசீதினை அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம். கற்றல் உதவி மையம், அஞ்சல்வழி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறுவோர், முழு கல்விக்கட்டணத் தொகையையும் ஆன்லைன் மூலம் செலுத்தி மின் ரசீதினை அளித்தல்வேண்டும்.

முன்னாள் மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும்.

விவரங்களுக்கு: www.tamiluniversitydde.in

தொலைபேசி: 04362 – 227152

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here