நேரம் நல்ல நேரம்!

438

-சுந்தரபுத்தன்

மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் வாழ்வியல் பயிற்சியாளர்

இதுவொரு வித்தியாசமான நெருக்கடி காலம். இந்தச் சவாலான காலகட்டத்தில் என்ன செய்யலாம்? எதிர்கால வளர்ச்சிக்கு எப்படி இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது பற்றி சென்னையைச் சேர்ந்த வாழ்வியல் மனநல மேம்பாட்டு பயிற்றுநர் உதய சான்றோன் வழங்கும் ஆலோசனைகள்…

பொதுவாக மனிதர்கள் அனைவரிடமும் காணப்படும் பழக்கம் ஒரு வேலையை ஒத்திப்போடுவது, சாக்குப்போக்கு சொல்வது, அப்புறம் செய்யலாம் என்று சமாதானம் சொல்லிக்கொள்வது. இப்படி நாம் செய்யாமல் ஒத்திவைத்த பல காரியங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் செய்து முடிப்பதற்கான பொன்னான தருணம் இது.

மாணவர்களாகிய நம் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யலாம் என்ற திட்டமிடுதலை அவர்களே வகுத்துக்கொள்ளலாம் அல்லது பெற்றோராகிய நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டலாம்.

எந்த செயலையும் தொடர்ந்து 21 நாட்கள் செய்யும்போது அது பழக்கமாகிவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தை அதாவது 6 அல்லது 7 மணி அல்லது உங்களுக்கு விருப்பமான நேரத்தில் அலாரம் வைத்து எழுந்திருங்கள். நிச்சயம் 21 நாட்களுக்கு பிறகு காலையில் எழும் செயல் பழக்கமாகிவிடும். இப்படி பல செயல்களை நாம் செய்யலாம்.

தினசரி செயல்களில் ஒரு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஒதுக்கி பெற்றோர்கள், ஆசிரியர்கள் பரிந்துரைத்த நல்ல புத்தகங்களைப் படிக்கலாம்.பார்க்கத் தவறிய உலகப் படங்களை வீட்டில் பார்க்கலாம். அதற்காக சினிமாவிலேயே மூழ்கிவிட வேண்டாம்.

மொபைல் போனில் தேவையற்ற ஃபைல்களை நீக்கலாம். நேரம் நிறைய இருக்கிறது எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி சரிசெய்யலாம். சில பாடல்கள் சில வீடியோக்களை உங்கள் மொபைல் போனில் பதிவேற்றம் செய்யலாம்.

மனதை அமைதியாக நம் சிந்தனையை வளப்படுத்த எதிலும் ஒரு இலக்கோடு பயணம் செய்ய தியானம் கற்றுக்கொள்ளலாம். தியானம் கற்று தினசரி செய்வதன் மூலம் மனக்குழப்பங்களை கவலைகளை நீக்கமுடியும்.
எளிய யோகா பயிற்சி செய்யலாம். நிறைய குருமார்கள் கற்றுத்தரும் பதிவுகள் இணையத்தில் உள்ளன. தினசரி காலை 20 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் செய்யக்கூடிய எளிமையான யோகாவை தினமும் செய்து பழகலாம்.

நடைப் பயிற்சியை வீட்டில் வராண்டாவிலோ அல்லது மாடியிலோ செய்யலாம். மேலும் எட்டு நடை பயிற்சி சார்ந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் பார்த்துப் பயன்பெறுங்கள்.

நெருங்கிய நண்பர்கள், படிப்பில் சிறந்த சக மாணவர்களிடம் நீங்கள் வாட்ஸ்அப் அல்லது போன் மூலமாக பேசி புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகளுக்கு எந்த சப்ஜெக்ட் சவாலாக இருக்கிறதோ, அதை பொறுமையாக கற்றுக்கொடுக்கலாம்.

நம்மை நாமே செதுக்கிக்கொள்ள, ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி உங்களிடம் மாற்றிக்கொள்ள என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதைப் பட்டியலிட்டு மறுபரிசீலனை செய்யலாம். அவற்றை சரிசெய்ய இந்த நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் பெற்றோர்கள் கூறும் மிகப்பெரிய குற்றச்சாட்டு, பொருளை நேர்த்தியாகவும் சரியாகவும் கையாளாமல், அங்கங்கே போட்டுவிட்டு பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது. இந்த நேரத்தில் வீட்டில் புத்தகங்கள், பொருட்களை ஒழுங்குபடுத்தலாம்.

உங்கள் பெற்றோரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். நான் ஒரு குறிப்பிட்ட நேரம் மௌனம் விரதம் இருக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க முயற்சி செய்யலாம். அந்த நேரத்தில் மனதை உள்நோக்கிச் செலுத்தி உங்கள் எண்ண அலைகளை கவனிக்கலாம். மனம் அமைதியாக இருக்கும்போது நம்மை முழுமையாக புரிந்துகொள்ளமுடியும்.

எதற்கெடுத்தாலும் போட்டியிடாமல், பிடிவாதம் பிடிக்காமல் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருக்கப் போகிறேன் என்று தம்பி தங்கைகளிடம் விட்டுக் கொடுத்துப்போகலாம்.

வாழ்க்கையில் நான் என்னவாக போகிறேன்? அதை அடைய என்ன செய்யவேண்டும்? இப்படி ஒரு திட்டமிடலுக்கு எளிமையான ஒரு செயலைச் செய்யலாம். விஷன் சார்ட் தயார் செய்யலாம். உங்களுடைய ஆசை, கனவுகள் என்ன என்பதை ஒரு சார்ட் பேப்பரில் வடிவமைக்கவேண்டும். உங்களது அறையில் அல்லது நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் வையுங்கள். இது உங்களை நெறிப்படுத்தும்.

சமையல் கற்றுக்கொள்ளலாம். இருபாலருக்குமே பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க முயற்சி செய்யலாம். வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக உங்கள் குழந்தைகளுக்கு இந்த செயல் இருக்கும்.

வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். உலக வரலாற்றை புரட்டிப் போட்ட பெஞ்சமின் பிராங்கிளின், தாமஸ் ஆல்வா எடிசன், ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கலாம். ஒரு செடிக்கு உரம் மாதிரி, நம்முடைய வெற்றிக்கு இந்த விஷயங்கள் உரமாக இருக்கும்.

பெற்றோருக்கு நம்பிக்கை அளியுங்கள். அப்பா அம்மா நான் வளர்ந்து பொறுப்பாக இருக்கேன், நான் நல்லா படிப்பேன், நான் சாதிப்பேன் போன்ற நல்ல வார்த்தைகளைக் கூறுங்கள் எதிர்மறையான வார்த்தைகளை விளையாட்டாய்க்கூட பேசாதீர்கள்.

பெற்றோர்களாகிய உங்களுக்கு மட்டுமல்ல. உலகத்தில் 180 நாடுகளில் இருக்கின்ற மக்களுக்களுக்கும்தான். எல்லாம் சரியாகும். இதுவும் கடந்துபோகும். இந்த நிலைமையும் மாறும் என்ற பாசிட்டிவான மனநிலை தேவையானது. வீட்டிலேயே இருப்போம். பொறுப்போடு நடந்துகொள்வோம்! எதிர்காலத்தை நினைத்து கவலைப்படாமல் இருப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here