ஆ… அப்படியா? -தமிழக அரசு மருத்துவமனைகளில் தொற்று நோய் நிபுணர் இல்லை!

326

– பூ. சர்பனா

உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, கொரோனா தொற்றுநோய். இதிலிருந்து உலகம் மீண்டாலும் தொற்றுநோய் கிருமிகள் தாக்குதல் இனி அவ்வப்போது தொடரலாம் என அதிர்ச்சியளிக்கிறார்கள் மருத்துவத் துறை சார்ந்தவர்கள். இதனைவிட அதிக அதிர்ச்சியளிப்பதாக உள்ளது, தமிழக அரசு மருத்துவமனைகளில் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் ஒருவர்கூட இல்லை இன்னும் தகவல். தமிழக அரசு மருத்துவமனைகளில் அதற்கான படிப்பும் இல்லை!

இது உண்மையா?

“அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை எளிய மக்கள் கொரோனா போன்ற 50 சதவீத தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுதான் சிகிச்சைக்கே வருகிறார்கள். ஆனால், தொற்றுநோய்க்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி (Infectious Disease) படிப்பே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இல்லாததால், அதற்கான சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஒருவர்கூட அரசு மருத்துவமனைகளில் இல்லை” என்று நாம் பேசிய மக்கள் நல மருத்துவர்கள் அனைவரும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளித்தார்கள்.

படித்து நிபுணத்துவம் வாய்ந்தவர்களுக்கே சவாலாக இருக்கின்றன கொரோனாவைப்போல புதிது புதிதாக பரவும் தொற்றுநோய்கள். அப்படியிருக்க, அதற்கான படிப்பும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இல்லை; மருத்துவ நிபுணர்களும் இல்லையென்றால் தொற்றுநோய்களால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்?

இந்தியாவிலேயே இல்லை!

இது தொடர்பாக நம்முடன் பேசிய டாக்டர் கருணாநிதி, “இந்தியாவிலேயே மிகவும் பிரம்மாண்டமான மற்றும் பழைமையான மருத்துவக் கல்லூரி சென்னையிலுள்ள அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைதான். ஆசியாவிலேயே மிகப்பெரிய குழந்தைகள் நல மருத்துவமனை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைதான். இதயநோய், நரம்பியல், வயிறு, மூட்டு, கேன்சர், இரத்தம், நெஞ்சக மற்றும் டி.பி., சர்க்கரை வியாதி மற்றும் நாளமில்லா சுரப்பி என எந்த உறுப்பில் பிரச்சினை என்றாலும் அதற்கு சிகிச்சை அளிக்க டி.எம். (Doctorate of Medicine) படித்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு நிபுணர்கள் இருக்கிறார்கள். இவர்கள், எம்.பி.பி.எஸ்., எம்.டி. முடித்துவிட்டு டி.எம். எனப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளை முடித்துவிட்டு சிகிச்சை அளிக்கிறார்கள்.

ஆனால், தற்போது கொரோனா போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு எம்.டி. (Doctor of Medicine) பொது மருத்துவம் படித்த பொது மருத்துவர்கள்தான் சிகிச்சை அளிக்கிறார்கள். காரணம், தொற்றுநோய்க்கான ஆராய்ச்சி படிப்பு முடித்த (Infectious Disease) சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ நிபுணர் ஒருவர்கூட அரசு மருத்துவமனைகளில் இல்லை.

ஆனால், தமிழகத்தில் அப்போலோ, குளோபல் போன்ற பிரபல தனியார் மருத்துவமனைகளில் தொற்றுநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கான, பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன” என்கிறார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் கருணாநிதி, “இதயம், நரம்பியல், வயிறு, குடல் போன்ற சிகிச்சைகளுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் இருப்பதுபோல தொற்றுநோய்களை தடுக்க வெளிநாடுகளில் சிறப்பு படிப்புகளே உண்டு. இங்கிலாந்திலுள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் ட்ராப்பிகல் மெடிசன், அமெரிக்காவிலுள்ள தி நியூயார்க் செண்டர் ஃபார் ட்ராவல் அண்ட் ட்ராப்பிகல் மெடிசன் என சிறப்பு படிப்புகள் உள்ளன. இங்கு, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பிரபல தனியார் மருத்துமனைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் எய்ம்ஸ், வேலூர் சி.எம்.சி. ஆகியவற்றில் மட்டுமே தொற்றுநோய்க்கான டி.எம். எனப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் உள்ளன. தமிழகத்தில், தொற்றுநோய்க்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர் இல்லாததற்கு காரணமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆராய்ச்சிப்படிப்பு இல்லை என்பதுதான்.

இந்தியாவிலேயே சுகாதாரத்துறையிலும் மருத்துவக் கல்வியிலும் முன்னோடியான தமிழகத்திலேயே இல்லை என்னும் போது, இந்தியாவில் வேறு எந்த மாநில அரசு மருத்துவக் கல்லூரியில் தொற்றுநோய்க்கான படிப்பு இருக்கும்? எங்கும் இல்லை. இதனையே ஒரு காரணமாக சொல்லி தமிழக அரசு சமாளிக்கலாம். ஆனால், சர்க்கரை நோய்க்கான சிகிச்சை அளிக்கும் டிப்ளோமா இன் டயபட்டாலஜி, முதியோருக்கான சிகிச்சை அளிக்கும் எம்.டி. ஜீரியாட்ரிக்ஸ், மூட்டு பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் டி.எம். ருமாட்டாலஜி போன்ற படிப்புகள் வேறு எந்த மாநிலத்திலும் கொண்டுவரப்படுவதற்கு முன் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில்தான் கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 50 சதவீதம் பேர் மலேரியா, டி.பி., ஹெச்.ஐ.வி. போன்ற தொற்றுநோய்களுடன்தான் அரசு மருத்துவனைகளுக்கு வந்து குவிகிறார்கள். ஆனாலும், சுகாதாரத் துறையில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலேயே, 50 சதவீதம் பேருக்கு குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்கள் இல்லை, அதற்கான படிப்பும் இல்லை என்பது எவ்வளவு பெரிய மருத்துவ அவலம்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

அரசு டாக்டர்கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை?

இதுகுறித்து, அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ராமலிங்கத்திடம் பேசினோம். “அனுபவம் வாய்ந்த எம்.டி. பொது மருத்துவம் படித்த டாக்டர்களே தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியும். அதேநேரத்தில், தொற்றுநோய்க்கான ஃபெல்லோஷிப் ஆராய்ச்சி படிப்பைக் கொண்டுவந்தால் நிச்சயமாக இன்னும் சிறப்பான முறையில் கொரோனா போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியும்.

அப்போலோ, குளோபல், சி.எம்.சி. வேலூர் போன்ற மருத்துவமனைக்கு சென்றோ அல்லது வெளிநாட்டிற்கு சென்றோ ஒரு எம்.டி. டாக்டர் , இன்ஃபெக்ஷியஸ் டிசீஸ் குறித்து படித்துவிட்டு வருகிறார் என்றால், அவருக்கு அரசாங்கத்தில் எந்த சலுகையும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால், அப்படி படித்து முடித்துவிட்டு வருவதற்குள் அவர் ஏற்கனவே இருந்த அரசுப் பணியிடம் இன்னொரு எம்.டி. டாக்டரால் நிரப்பப்பட்டுவிடும். இதனால்தான், தொற்றுநோய் குறித்த ஆராய்ச்சி படிப்புக்கு அரசு எம்.டி. டாக்டர்கள் யாரும் செல்ல ஆர்வம் காட்டவில்லை.

சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை என்பது பெயரளவில்தான் உள்ளது. சாதாரண, தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதே தவிர தொற்றுநோய்கள் குறித்த எந்த ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. காரணம், அந்த தண்டையார்ப்பேட்டை அரசு மருத்துவமனை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதுவே, தமிழக பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து போதுமான நிதியை ஒதுக்கி தொற்று நோய்க்கான ஆராய்ச்சிப் படிப்பையும் கொண்டுவந்தால் நிச்சயம் கொரோனா போன்ற தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட முடியும். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில்கூட இடவசதி உள்ளது. அங்கேயேகூட ஆரம்பிக்கலாம்” என்று ஆலோசனை சொல்கிறார்.

எப்படித்தான் டாக்டர்கள் சமாளிக்கிறார்கள்?

எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி. மருத்துவர்களுக்கு தொற்றுநோய் குறித்த பயிற்சி எந்தளவுக்கு அளிக்கப்படுகிறது என்று கூறும் டாக்டர் கருணாநிதி, “எம்.பி.பி.எஸ். படிக்கும்போது பெரும்பாலும் மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு முறிவு சிசிச்சைக்கான பயிற்சிகள்தான் அளிக்கப்படுகின்றன. அதற்குப் பிறகுதான், தோல், கண், காது – மூக்கு – தொண்டை, மயக்கவியல், மனநலம் உள்ளிட்ட சிகிச்சைகள் கற்றுக்கொடுக்கப்படும். இதில், தொற்றுநோய் குறித்து ஒரேயொரு பாடம் மட்டுமே வருவதால் கூட்டு நுண்ணோக்கியை வைத்துப் பார்க்கும் அளவுக்குத்தான் படிக்கிறார்கள்.

எம்.பி.பி.எஸ். முடித்ததும் எம்.டி. மருத்துவம், எம்.எஸ். அறுவை சிகிச்சை என மூன்று வருடங்கள் முதுநிலைப் படிப்பை படிப்பார்கள். எம்.டி. படிப்பின் இறுதித் தேர்வில்கூட இதயம், மூளை, வயிறு உள்ளிட்ட சிகிச்சைகள் குறித்துதான் பெரும்பாலும் அதிகக் கேள்விகள் கேட்கப்படும். மேலும், எம்.டி. முதுநிலைப் படிப்பில் ஒரு பேப்பர் தொற்றுநோய் குறித்து இருக்குமே தவிர எம்.டி. மகப்பேறு, எம்.டி. குழந்தைகள் நலம், எம்.டி. மயக்கவியல் போன்று தொற்றுநோய்க்கு எம்.டி. படிப்பு தனியாக இல்லை.

ஆனால், இப்படிப் படித்துவிட்டு வரும் மருத்துவர்கள்தான் அரசு மருத்துவமனைகளில் கொரோனா போன்ற தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் தொற்றுநோய் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துதான் பெரும்பாலான எம்.டி. டாக்டர்கள் தொற்றுநோய் குறித்த சிகிச்சையையே கற்றுக்கொள்கிறார்கள்” என்று மேலும் அதிர்ச்சியளிக்கிறார்.

“பொதுமக்களுக்கு மட்டுமல்ல, கொரோனா போன்ற தொற்றுநோய் பிரிவில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இந்தப் படிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” என்கிறார், க்ளினிகல் இன்ஃபெக்ஷியஸ் டிசீஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா எனப்படும் இந்திய தொற்றுநோய் மருத்துவர்கள் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளரும் பிரபல தொற்றுநோய் சிறப்பு சிகிச்சை நிபுணருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன்.
தொடர்ந்து, “வெளிநாடுகளில் கார்டியாலஜி, மெடிக்கல் கேஸ்ட்ரோ எண்ட்ராலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, நியூனெட்டாலாஜி, நெஃப்ராலஜி, நியூராலஜி, ருமாட்டாலஜி, ஹெப்பாட்டலஜி, க்ளினிக்கல் ஹேமாட்டாலஜி போன்ற டி.எம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மெடிசன் படிப்புகளை வைத்திருப்பதுபோலவே இன்பெக்ஷியஸ் டிசீஸ் படிப்பையும் டிம்.எம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பாக வைத்திருக்கிறார்கள். மேற்கண்ட அனைத்து டி.எம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளும் வெளிநாட்டைப் போலவே இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுவிட்டன.

இதனால், தற்போது, ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்தான் தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால், தொற்றுநோய்களுக்கு மட்டும் எம்.டி பொது மருத்துவர் போதும் என்று விட்டுவிட்டார்கள். இனிமேலும் அப்படி அலட்சியமாக இருந்துவிட முடியாது.

ஹெச்.ஐ.வி. போன்ற தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கவே எம்.டி. பொது மருத்துவர்களுக்குப் பயிற்சி போதுமானதாக இல்லை. அதேபோல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில்தான் தொற்றுநோய் ஏற்பட்டு மிக அதிகமாக உயிரிழப்புகள் ஏற்படும். அதற்கான, தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் இருந்தால்தானே அரசாங்கத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்யமுடியும்? அந்த, தொற்றை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதே சவாலானதுதான்.

பல, தொற்றுநொய்களுக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள் நோயை குணப்படுத்துவதில்லை. இதுபோன்ற, சூழல்களில் எப்படி சிகிச்சை அளித்து குணப்படுத்துவது என்பது இன்பெஷிஸ் டிசீஸ் குறித்த சிறப்பு பயிற்சிகள் மூலம்தான் தெரிந்துகொள்ளமுடியும்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் குளோபல், வேலூர் சி.எம்.சி. ஆகிய மருத்துவமனைகளுக்கு இரண்டு வருட இன்ஃபெஷியஸ் டிசீஸ் குறித்த புரோகிராம் (பயிற்சிகள்) வழங்க அனுமதி கொடுத்திருக்கிறது. இதுதவிர, டி.என்.பி. எனப்படும் நேஷனல் போர்டு படிப்பு உள்ளது. அப்போலோ சென்னை, அப்போலோ ஹைதராபாத், மும்பை இந்துஜா ஹாஸ்பிட்டல், அஹமதா பாத் ஸ்டெர்லிங் ஹாஸ்பிட்டல் ஆகிய மருத்துவமனைகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளன. இந்தியாவில் இதற்காக படித்தவர்கள் 100 பேர்தான் இருக்கிறார்கள். அதுவும், வெளிநாட்டில் என்னைப் போன்று படித்துவிட்டு வந்தவர்கள் 10 பேர்தான் இருக்கிறார்கள். அமெரிக்கன் போர்டு பயிற்சி பெற்றவர்களில் நான் உட்பட 5 பேர்தான் இருக்கிறோம்.

இந்தியாவில் எம்.டி. முடித்திருந்தாலும் அந்த எம்.டி. படிப்பை அமெரிக்காவில் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். மீண்டும், அமெரிக்காவில் எம்.டி. மூன்று வருடம் முடித்து பிறகு டி.எம். இன்ஃபெக்ஷன் டிசீஸ் படிப்பை இரண்டு வருடம் படித்து தேர்ச்சிபெற்றுத்தான் இன்ஃபெக்ஷியஸ் டிசீஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆனேன். ஆனால், எத்தனை எம்.டி. டாக்டர்களால் இப்படி வெளிநாடு போய் படிக்கமுடியும்? அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அரசு மருத்துவர்களுக்கு அரசாங்கம்தான் இதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.

ஒரு இருதய நோயாளிக்கு நிமோனியா போன்ற நோய்த்தொற்று ஏற்பட்டால் உடனே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்துவிடுவார். இறப்பிற்கு காரணம் மாரடைப்பு என்று எழுதுவார்கள். ஆனால், உண்மையான காரணம் ஹார்ட் அட்டாக் அல்ல. ஹார்ட் பேஷண்டுக்கு தொற்றுநோய் ஏற்பட்டதால் உடனே ஹார்ட் அட்டாக்கை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டது. தொற்றுநோய் வரவில்லை என்றால் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்காது. இதை, தடுக்கவேண்டுமென்றால் முன்கூட்டியே தடுப்பு மருந்துகளை இருதய நோயாளிகளுக்கு பயன்படுத்தவேண்டும்.

குறிப்பாக, கொரோனா போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எப்படி பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதற்கும் தொற்றுநோய் சிறப்பு நிபுணர்கள் மிகவும் முக்கியம். இதற்கெல்லாம், வெளிநாட்டைப்போல இரண்டு அல்லது மூன்று வருடங்கள் படிக்கும் டி.எம். எனப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு தேவை. இதற்கான, துறை நிச்சயமாக தேவை” என்கிறார்.

பயிற்சி இல்லாத போர் வீரர்கள்!

கழிவுநீர், திறந்த வெளியில் மலம் கழித்தல், குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டுதல் என பொதுசுகாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது தொற்றுநோய்கள் வருவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. அதிலிருந்து பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத்தொற்று போன்றவற்றால் தொற்றுநோய்கள் பரவுகின்றன.

காலரா, டைஃபாய்டு, யானைக்கால், டிப்தீரியா, ஆந்திராக்ஸ் போன்ற 70 சதவீத தொற்றுநோய்கள் பாக்டீரியாவால் ஏற்படுகின்றன. ஹெச்.ஐ.வி., பன்றிக்காய்ச்சல், அம்மை, மீசில்ஸ், கொரோனா போன்ற 20 சதவீத தொற்றுநோய்கள் வைரஸ்களால் பரவுகின்றன. அரிப்பு போன்ற 10 சதவீத தொற்றுநோய்கள் ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சைக் கிருமியால் பரவுகிறது.

பாக்டீரியாவுக்கு செல்சுவர் உண்டு. அதனால், ஆண்டிபயாடிக் எனப்படும் சிகிச்சை மருந்துகளால் அதன் சுவரை தாக்கி பாக்டீரியாவை கொன்றுவிடலாம். மேலும், பாக்டீரியா என்பது ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து நான்கு என இனப்பெருக்கம் செய்யும்.

வைரஸுக்கு செல்சுவர் இல்லை. அதனால், அழிப்பது கடினம். அதுவும், கொரோனா போன்ற வைரஸானது நுரையீரலில் போய் ஒட்டிக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் இனவிருத்தியை செய்துவிடும். மேலும் கொரோனா வைரஸ் தொற்றியவரின் தும்மல், இருமல், சளி மூலம் மற்றவருக்கு எளிதாக பரவிவிடுகிறது.

ஃபங்கஸ் என்பது கை, கால், தொடை இடுக்கும் போன்ற இடங்களில் உற்பத்தியாகி அரிப்பை ஏற்படுத்தும். மேலும், இதை ஆப்பர்ச்சனிட்டி இன்ஃபெக்ஷன் என்று சொல்வார்கள். வைரஸால் ஒருநபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உடலில் அதிகமாக வளர ஆரம்பித்துவிடும் பூஞ்சைத்தொற்று. இது, மிகவும் ஆபத்தானது.

பொதுசுகாதாரத்தை சிறப்பாக வைத்துக்கொள்ளும் அமெரிக்கா, லண்டன், இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலேயே தொற்று நோய்களுக்கான சிறப்புப் படிப்புகள் உள்ளன. ஆனால், 50 சதவீதம் தொற்றுநோய்கள் மோசமான பொது சுகாதாரத்தால் பரவும் இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதற்கான படிப்பு இல்லை.

இன்றைக்கு, கொரோனாவிலிருந்து எப்படி மீள்வது என்றே தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறோம். நாளை, கொரோனாவைவிட மிகப்பெரிய தொற்றுநோய் வரலாம். அதற்கு, நம் அரசு மருத்துவமனைகளில் நிபுணர்களையும் சிகிச்சை முறைகளையும் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டுமல்லவா? கொரோனா ஒரு போர் என்கிறது அரசு. பயிற்சியே கொடுக்காமல் போருக்கு அனுப்புவது தெரிந்தே வீரர்களை பலிகொடுப்பதற்கு சமமல்லவா?” என்பதுதான் மருத்துவர்களின் கேள்வி.

தமிழகம் சாதிக்கும்!

சரி, இந்தப் படிப்பை அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏன் கொண்டுவரவில்லை? தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபுவிடம் கேட்டோம். “இதுபோன்ற பெரியளவிலான தொற்றுநோய் இப்போதுதான் முதல்முறை வந்துள்ளது. இதுகுறித்து, விழிப்புணர்வும் இப்போதுதான் வந்துள்ளது. எனவே, இனி இந்த படிப்புக்கான தேவையும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் இன்ஃபெக்ஷியஸ் டிசீஸ் படிப்பு கண்டிப்பாக வரும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here