நட்சத்திரங்கள் நடிப்பில் மட்டும்தான் வள்ளல்களா?

67

-ஆர்.எஸ். அந்தணன்

நிதி வழங்காமல் நழுவும் நடிகர்கள்

கட்டை வண்டி கரி என்ஜின் ஆனது! கரி என்ஜின் கரண்ட் என்ஜின் ஆனது! காலப் போக்கில் கரண்ட் என்ஜினுக்கும் றெக்கை முளைத்து புல்லட் வேகமெடுத்தது! வளர்ச்சி வேகமாக இருந்தாலும், வண்டிக்கு ஆதாரமான சக்கரங்கள் ஒருபோதும் சதுரமானதில்லை. வட்டம்தான் எப்போதும்!

இந்த மாறாத சூத்திரத்தின் மையப்புள்ளி போலவே மாறாமலிருக்கிறது பேரிடர் காலங்கள்! எல்லையிலே போரா? ஏந்துங்கள் கையை! சென்னை கொள்ளாத வெள்ளமா? நீட்டுங்கள் தட்டை! சுற்றியடிக்கிற சுனாமியா? சும்மாவாச்சும் கேட்டு வைப்போம் என்று நாலாபுறத்திலும் கை நீட்டுகிறது நாடு. முக்கியமாக நடிகர் நடிகைகளிடம்!

மக்களும், ‘தொழிலதிபர்கள் கொடுத்தார்களா? அரசியல்வாதிகள் கொடுத்தார்களா? வங்கிப் பணியாளர்கள் கொடுத்தார்களா? ஐ.ஏ.எஸ். ஆபிசர்கள் கொடுத்தார்களா? ஐ.பி.எஸ்.கள் கொடுத்தார்களா? கவுன்சிலர்கள் கொடுத்தார்களா? அவர் கொடுத்தாரா? இவர் கொடுத்தாரா?’ என்று கேட்பதேயில்லை.

எல்லாருடைய கண்களும் ஒரே துறையின் மீதுதான் குவிந்துகிடக்கிறது. அந்த ஓரிடம்தான் சினிமா. ஏனிந்த பாரபட்சம்? காலகாலமாக கதை சொன்ன புண்ணியவான்களும், அந்தக் கதையால் வளர்ந்த கதாநாயகர்களும்தான் இதற்கு காரணம். தமிழ்சினிமாவில் சூப்பர் ஹீரோ என்றால், கட்டாயம் ஒரு பாடல் காட்சி இருக்கும். அதில் கட்டு கட்டாக பணத்தை வைத்துக்கொண்டு, ஒரு கையால் சேலை வேஷ்டிகளையும் இன்னொரு கையால் பணத் தாள்களையும் எடுத்தெடுத்துக் கொடுப்பார் ஹீரோ. வரிசையில் நின்று வாங்குவார்கள் ஏழை மக்கள். சினிமாவில் பார்க்கிற பிம்பத்தை நிஜம் என்று நம்புகிறது அந்த அப்பாவி மனசு. (சினிமாவில் காட்டப்படுகிற அந்த பணம்கூட ஒரிஜனல் இல்லை என்கிற உண்மை தெரிய இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ?)

எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கி, இதோ- சிவகார்த்திகேயன் காலம் வரைக்கும் கதைகள் மாறியதே ஒழிய இந்த காட்சி மட்டும் மாறியதே இல்லை! அரிய வகை ரத்தம் போல, இந்த காட்சியை சில ஹீரோக்கள்தான் நிஜமாக்குகிறார்கள் அப்பவும் இப்பவும்!

ஜனவரி மாசம் வரைக்கும் கூட, சீனாவை சின்னாபின்னமாக்கிய கொரானோ வைரஸ் நம்ம ஊரு முட்டு சந்து வரைக்கும் வந்து நின்று கொண்டு ‘ரெண்டு இட்லி, கொஞ்சம் கெட்டி சட்னி’க்கும் கூட வேட்டு வைக்கும் என்று ஒரு தமிழனும் யோசித்திருக்க மாட்டான். அன்றாட வாழ்வின் அத்தனை ருசிகளும் அல்லாடி தள்ளாடிப் போயிருக்கிறது. காற்று வழியா வருமோ, மூச்சு வழியா பரவுமோ, படிக்கிற பேப்பர்ல ஒட்டியிருக்குமோ, குடிக்கிற காப்பியில கொட்டியிருக்குமோ என்றெல்லாம் சந்தேகத்தை கிளப்பி சந்தோஷத்தை கெடுத்துவிட்டது கொரானோ!

சராசரி பொது ஜனமாகிய நமக்கெல்லாம் இந்த சந்தோஷம் கெட்டது என்றால், ஹீரோ ஹீரோயின்களுக்கு சேமித்து வைத்த பணத்தை சிந்தாமல் சிதறாமல் காப்பாற்ற வேண்டுமே என்கிற கவலை. ரசிகன் தன் மனதில் எவ்வளவு உயரத்தில் ஒரு ஹீரோவை வைத்திருக்கிறானோ, அவ்வளவு உயரத்திற்கு அவரது கொடையும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். சிக்கலே இங்குதான் ஆரம்பிக்கிறது.

இந்த ட்விட்டர், பேஸ்புக் யுகத்தில் தனது எண்ணத்தை போட்டோ ஷாப் உதவியோடு இறக்கி வைக்கத் தயங்குவதில்லை அதே ரசிகன். உதாரணத்திற்கு சென்னையை மூழ்கடித்த 2015 வெள்ள நாட்களை எடுத்துக் கொள்வோம். ‘ரஜினியும் விஜய்யும் தத்தமது கல்யாண மண்டபங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட்டார்கள்’ என்று சோஷியல் மீடியாவில் பரப்பி விட்டார்கள். அஜீத் தன் வீட்டையே தந்து விட்டு வேறொரு வீட்டுக்கு இடம் பெயர்ந்து விட்டார் என்றார்கள். அது மட்டுமா? அத்தனை கோடி கொடுத்தார்கள். இத்தனை கோடி கொடுத்தார்கள் என்று அளந்துவிட்டார்கள்.

நீந்திப் போயாவது தெரிந்து கொள்ளலாம் என்றால் அன்றைய தினங்களில் அதற்கும் வாய்ப்பு இல்லை. அதற்கப்புறம் வந்த கஜா, தானே, ஒக்கி புயல்களின் போதும் கூட பெரிதாக அக்கறை காட்டவில்லை நம்ம ஹீரோக்கள். ஏதோ பெயரளவுக்கு சொற்பத்தை கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்.

நாட்டில் பேரிடர் என்றால் சினிமா பக்கமிருந்து முதலில் ஓடிப் போய் நிதி கொடுப்பவர் நயன்தாரா. அவரே அதற்கப்புறம் வந்த இடர் நேரத்தில் மவுனமாகி விட்டார்.

சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா அட்டாக், இன்னொரு புரளியை கிளப்பிவிட ஏதுவாக இருந்தது. அஜீத், அந்த அட்டாக்கில் உயிரிழந்த 49 வீரர்களுக்கும் 49 கோடியை அள்ளிக் கொடுத்தார் என்று போட்டோஷாப்பில் புரளி கிளப்பினார்கள் ரசிகர்கள். அதையும் நம்பி, பொது மேடைகளில் பேசிய பட்டிமன்ற பேச்சாளர்கள் சிலர், இன்னமும் அந்தக் கட்டுக்கதையை நாடு கொள்ளாமல் பரப்பி வருவது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
கொடு….

கொடுத்தால்தான் என்ன?

நாங்க கொடுக்கிற டிக்கெட் காசுதானே…?

இப்படி தங்கள் மீது ஏவப்படுகிற எல்லா அம்புகளையும் கண்டுகொள்ளாமல் கடந்து போகிற வழக்கம் சிலருக்கு இருந்தாலும், நிஜமான அக்கறையும் அன்பும் வழிய கொடுத்து உதவும் நல்ல உள்ளங்களாக பலர் திரையுலகத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

பேரிடர் நாட்களிலும் போர் மூண்ட காலத்திலும் அன்றைய முன்னணி நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஜெயலலிதா, பத்மினி என பலர் தங்கள் அக்கறையை பொருளாகவும் பணமாகவும் அள்ளிக் கொடுத்து நிரூபித்தார்கள். அப்படி சிலர் இன்றும் இருக்கிறார்கள்.

ஆனால், இந்த கொரானோ காலத்தில் தமிழக அரசுக்கு உறுதுணையாக எத்தனை நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள் என்று கேட்டால், அதிர்ச்சி கலந்த ஆயாசமே வந்து நிற்கிறது.

சினிமாவிலிருந்து தமிழக அரசுக்கு சென்று சேர்ந்த முதல் நிதி, நடிகர் சிவகார்த்திகேயனிட மிருந்து. அதற்கப்புறம் பழம்பெரும் நடிகை லதா. இவ்விருவர் தாண்டி திரையுலகத்திலிருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்தவர்களின் லிஸ்ட் நான்கு விரலைக் கூட தாண்டவில்லை.

இந்நிலையில், அரிய ஹீரோவாக இப்போது நம் கண்முன் தெரிகிறார் அஜித் குமார். தமிழ் சினிமாவின் முதல் நடிகராக, பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி மற்றும் பெப்சி என அனைத்துக்குமே அஜித் நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் என மொத்தமாக 1 கோடியே 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மற்றவர்கள் எல்லாம் இப்போதுவரை கையை இறுக்கமாக மூடிக்கொண்டிருக்கிறார்கள்.

வழக்கம்போல அவர் எங்கே? இவர் எங்கே? என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. திரைப்பட தொழிலாளர்களுக்கு ஐம்பது லட்சம் வழங்கிய ரஜினி, இந்த கட்டுரை அச்சேறும் வரைக்கும் முதல்வர் நிவாரண நிதியாக எதுவுமே கொடுக்கவில்லை. இத்தனைக்கும் அவர் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கப் போகிறார் என்றும் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன.

முதல்வர் நிவாரண நிதி வழங்கும் விஷயத்தில் ஏன் மௌனம் காக்கிறது திரைத்துறை? தமிழகத்தில் தலைவர்களுக்கு வெற்றிடம் இருக்கிறது என்கிற கருத்தை இங்கே வந்து நுழைத்தால் ஈஸியாக விடை கிடைத்துவிடும். கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இரு ஆளுமைகளும் ‘நிதி தாருங்கள்’ என்று ஒரு அறிக்கை விட்டால் போதும். க்யூவில் நின்று நிதி கொடுக்க ஓடோடி வந்த நடிகர் நடிகைகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த வசீகர வனப்பும், கரிஷ்மாட்டிக் இனிப்பும் இல்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ?
இன்னொன்றையும் யோசிக்க வேண்டி இருக்கிறது. சினிமாவிலிருந்து மாதம் ஒரு முதல்வர் வேட்பாளர் கிளம்புவதை இறந்த தலைவர்களும் சரி, இப்போதிருக்கிற தலைவர்களும் சரி, விரும்பவில்லை. விளைவு?

அரசிடம் அவர்கள் வைக்கிற சின்ன சின்ன கோரிக்கை விண்ணப்பங்களைகூட பரிசீலிப்பதில்லை. கூடுதலாக சினிமாவின் தலையில் இன்னும் கொஞ்சம் பாரத்தை ஏற்றலாமா? என்று நினைக்கிறது ஆட்சி மேலிடம்.
ஏற்கனவே மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியில் முதுகு வளைந்து போயிருக்கும் சினிமாவுக்கு தன் பங்காக கூடுதல் வரி போட்டு நோகடிக்கிறது அரசு. பொதுவான சிக்கல் இது என்றால், தனிப்பட்ட சிக்கல் வேறு வேறு.

விஜய்யின் படங்கள் எப்போது வந்தாலும் அதிமுக சார்பில் ஏதாவது ஒரு குடைச்சல் கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. சர்கார், பிகில், என்று கடந்த சில மாதங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த விஜய், அண்மையில் சந்தித்த வருமான வரித்துறை ரெய்டு காரணமாக மனம் நொந்து போனார். அதுவும் படப்பிடிப்பிலிருந்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி நெய்வேலியிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்ததை அவரால் இன்னும் ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. அப்படியிருக்க, எந்தவித புன் முறுவலோடு அவர் முதல்வரை சந்தித்து நிதி தருவார்?

மாறாக நாடெங்கிலும் இருக்கிற தனது ரசிகர் மன்றத்தின் மூலம் உதவிக் கரங்களை நீட்டுவதற்கு முடிவெடுத்துவிட்டாராம். எல்லா கிளை மன்றங்களுக்குமான வங்கி விபரம் விஜய்யின் பாக்கெட்டில். ஏற்கனவே கேரளா வெள்ளத்தின் போது இந்த பாணியிலான உதவிக்கு வெள்ளோட்டமும் பார்த்துவிட்டார் விஜய்.

‘இந்தியாவை விட்டே வெளியேறுவேன்’ என்று கமல்ஹாசன் முன்பொருமுறை சொன்னது அரசியல் குடைச்சல்களின் காரணமாகதான். அப்படியிருக்க, ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் உண்டியல் அரசு கஜனாவோடு சங்கமிக்க வாய்ப்பில்லை?

இப்படி ஒவ்வொருவரும் வலுவானதொரு காரணப் போர்வையோடு உலா வருவதால், முதல்வர் நிவாரண நிதி சினிமா ஏரியாவிலிருந்து பெருகி வருவதோ, அல்லது சிறுக வருவதோ, சந்தேகம்தான்.
இதெல்லாம் புரியாத மக்கள் என்ற அந்த அப்பாவி ரசிகர்கள்தான் ‘நம்ம ஹீரா நமக்கு நல்லது செய்வாரு’ என்று நப்பாசையோடு நம்பிக் காத்திருக்கிறார்கள்!

சினிமா தொழிலாளர்களுக்கு நிவாரணம்!

நாடு முழுவதும் ‘லாக் டவுன்’ அமல்படுத்தப்பட்டிருப்பதால் சினிமா மற்றும் டி.வி. சீரியல்களின் படப்பிடிப்புகள் முடக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு தொழிலையே நம்பி, தினசரி ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் சினிமா தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மிகவும் போராட்டமான இந்த நாட்களை அவர்கள் கடந்து வருவதற்கு, கை கொடுக்கும் விதமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதியுதவி மற்றும் பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.

தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பான ஃபெப்சியில் சுமார் 25,000 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உதவி கோரியிருந்தார் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. அவரது கோரிக்கையை ஏற்று பல்வேறு திரை பிரபலங்களும் நிதியுதவி அளித்துள்ளனர்.

தெலுங்கு சினிமா பணியாளர்களுக்கு உதவ ‘கொரோனா நெருக்கடிக்கான தொண்டு அமைப்பை’ தொடங்கியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி. இந்த உதவிகள் செய்வதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் கோடிகளில் நிதியுதவி அளித்துள்ளனர்.

பாலிவுட் திரைப்பட துறையில் பணிபுரியும் சுமார் ஒருலட்சம் தொழிலாளர் குடும்பங்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் உதவி செய்துள்ளார். ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்க அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்துள்ளார். FWICE என்கிற பாலிவுட் திரைப்படத் தொழிலாளர் சங்கத்தில் உள்ள 25,000 தொழிலாளர்களுக்கும் உதவுவதாக சல்மான் கான் வாக்குறுதியளித்துள்ளார்.

– ஜஸ்டின் துரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here