அரிசி பருப்பு இருக்கு காய்கறி பழமும் இருக்கு தோட்டத்துல விளையுது வாட்டமெல்லாம் விலகுது!

118

-சு.வீரமணி

ஊரடங்கில் உற்சாகமாக இருக்கும் சில விவசாயக் குடும்பங்கள்

கொள்ளை நோய் ஒன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை தாண்டி, நமது மாநிலத்திலேயே பல நூறுபேர் நோயாளிகள் இருக்கின்றனர் என்றபடியே நமது வீதிவரைக்கும் வந்துவிட்டது கொரோனா கிருமி. இருந்தாலும் ஊரடங்கையும் மீறி காய்கறி, மளிகை, இறைச்சி என்று காரணம் சொல்லி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் விரைந்துகொண்டுதான் இருக்கின்றன. சந்தைகளில், சாலைகளில், இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

கொரோனாவைவிட அன்றாட வாழ்வை நகர்த்துவதே மக்களின் தலையாய பிரச்சினையாக ஆகியிருக்கிறது. ஒரு நாள்கூட மக்களால் தனது வீடுகளுக்குள் சுயசார்பாக வாழமுடியாத மோசமான சூழலில் இப்போது நிற்கிறோம் என்பதை கொரோனா நமக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. இந்த ஊரடங்கிலும் தினமும் இரண்டு முறையாவது கடைக்கும் சந்தைக்கும் சென்றால்தான் இப்போது குடும்பங்கள் இயங்கும் என்ற நிலையை கோரோனா பேரிடர் காலத்தில் உணரமுடிகிறது.

ஆனால், ஒருமுறைகூட வீட்டை, தோட்டத்தை விட்டு வெளியில் வராதவர்களும் நம் ஊர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரிடம் பேசினோம். இவர்கள் காய்கறி, மளிகை, இறைச்சி என்று எதற்காகவும் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வராதவர்கள்.

நுகர்வுதான் எல்லாவற்றுக்கும் காரணம்!

தாமரைக்கண்ணன், விவசாயி, கண்ணந்தங்குடி கீழையூர், ஒரத்தநாடு கொரோனா என்று இல்லை இன்று நம்மை அகலாமல் சூழ்ந்துள்ள அத்தனை சிக்கல்களுக்கும் காரணம் நம்முடைய நுகர்வுதான். போதைபோல நம்மை ஆட்கொண்டுவிட்ட நுகர்வினால்தான், ஆட்கொல்லி நம்மை துரத்தும் போதுகூட மக்கள் வீதிகளில் விரைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த ஊரடங்கு நாட்களில் நான் வீட்டையும் தோட்டத்தையும் விட்டு எங்கேயும் செல்லவில்லை.

அரிசி என்று இல்லை கடலை, உளுந்து, பயறு வகைகள் அனைத்தையும் எனது தோட் டத்திலேயே விளைவிக்கிறேன் அதுபோல என்னால் விளைவிக்க முடியாத சிறுதானியங்களை, அந்தந்த விவசாயிகளிடம் பண்டமாற்று முறையில் வாங்கிக்கொள்கிறேன். அதனால், எப்போதும் கடைகளில் அரிசி, தானியங்கள் வாங்குவதில்லை.

எனது வீட்டில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. அதனால், உணவுக்கு தேங்காய் வாங்குவ தில்லை. அதுபோல தேங்காய் எண்ணையும் நாங்களே ஆட்டிக்கொள்வோம். சமையலுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை நாங்களே ஆட்டி வைத்துக்கொள்வோம். வீட்டில் மாடு இருப்பதால் பால், மோர், நெய் எதுவும் வெளியில் சென்று வாங்கவேண்டிய தேவை இல்லை.

நமது சூழலுக்கு மிகவும் உகந்தது வாழைப் பழங்கள்தான். அதனால், எனது தோட்டத்தில் விதவிதமான வாழை ரகங்களை பயிரிட்டுள்ளேன். அதுபோல நாட்டு பழங்களான கொய்யா, மாதுளை போன்ற பழங்களும் வீட்டிலேயே உள்ளது.

எனது தோட்டத்திலேயே சிறிய அளவிலான இடத்தில் மீன் குட்டை வைத்துள்ளேன். இதில் கெளுத்தி, குறவை, கெண்டை போன்ற நாட்டு மீன் ரகங்களை வளர்க்கிறேன். எனக்கு தேவையான நேரத்தில் தூண்டில் மூலமாக மீன்பிடித்து சாப்பிட்டுக் கொள்வேன். கோழி இறைச்சி சாப்பிடுவோர் வீட்டிலேயே கோழி வளர்த்து சாப்பிடலாம்.
இந்த கொரோனா காலத்தில்தான் மக்களுக்கு சுயசார்பின் அருமை புரிந்துள்ளது. கிராமத்தில் இடம், தண்ணீர், நேரம் இருந்தும்கூட மக்கள் காய்கறிகளை பயிர் செய்வதில்லை. அதனால், அடிக்கடி நகரத்திற்கு செல்லும் சூழல் உள்ளது. கொரோனா காரணமாக சென்னை போன்ற ஊர்களில் இருந்து இப்போது ஊருக்கு திரும்பியுள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் என்னிடம் நாட்டு காய்கறி விதைகளைகளை வாங்கிச்சென்று வளர்க்க தொடங்கியுள்ளனர், இது நல்ல தொடக்கம்.

ஒவ்வொரு பேரிடரின்போதும் நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். இப்போது கொரோனா நமக்கு கற்று தந்துள்ள பாடம் சுயசார்புதான். சூழலியல் விஞ்ஞானிகள் உலகில் இனிமேல் இதுபோன்ற பேரிடர்கள் அடிக்கடி நடக்கும் என்கின்றனர். அதனை எதிர்கொள்ளவேண்டுமென்றால் சுயசார்புடன் இருப்பதே முக்கியம்.
வீட்டுத் தோட்டத்தால் ஆரோக்கியம் நிச்சயம்!

மகேஷ், விவசாயி, புன்னைநல்லூர், தஞ்சாவூர்

கொரோனா நோய்த்தொற்றினால் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் நான் எந்த தேவைக்காகவும் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. ஏனென்றால், எனது வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் எப்போதுமே என்னிடம் சேமிப்பில் இருக்கும். கொரோனா என்று இல்லை பொதுவாகவே நான் எப்போதுமே கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவ தில்லை. எனக்கு தேவையான பொருட்களை பெரும்பாலும் எனது தோட்டத்திலேயே விளைவித்துக்கொள்கிறேன்.

நகரங்களில் உள்ள மக்கள் அன்றாட தேவைகளுக்காக தினமும் கடைத்தெருக்களுக்கு செல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இன்னும் கிராமத்தில்தான் வாழ்கின்றனர், அவர்கள் ஏன் தினமும் கடைகளுக்கு செல்கின்றனர் என்று எனக்கு புரிவதேயில்லை.

கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரின் வீட்டிலும் நெல் விளைகின்றது. ஆனால், அவர்கள் நெல்லை உடனடியாக விற்பனை செய்துவிட்டு, மாதாமாதம் கடைகளில் அரிசி வாங்கி சாப்பிடுகின்றனர். நம் முன்னோர்கள் குதிர் என்று தானிய சேமிப்பு கிடங்கு வைத்திருப்பார்கள். அதில் உணவுக்கு தேவையான நெல்லை சேமித்துவைத்து அவ்வப்போது வீட்டிலேயே அவித்து அரைத்துகொள்வார்கள். இப்போது அந்த நடைமுறைகள் முற்றிலும் இல்லை. அதனால்தான் அரிசிக்கு அல்லாடும் நிலை உருவாகிவிட்டது. இனிமேலாவது விவசாயிகள் மற்றும் கிராமங்களில் உள்ளோர் அறுவடை காலங்களில் நெல்லை அவித்து ஒருவருடத்திற்கு தேவையான அளவு சேமித்து வைத்துக்கொள்ளலாம். நான் அப்படித்தான் சேமித்து வைத்துள்ளேன்.

எனது வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் எங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகள், கீரைகள் பயிரிட்டு அன்றாடம் அறுவடை செய்துகொள்வேன். வெங்காயம், தக்காளி, வெண்டை, கத்திரி, முள்ளங்கி, முருங்கை, கொத்தவரை, பூசணி, சுரைக்காய், பீர்க்கன் போன்ற காய்கறிகள் என் தோட்டத்திலேயே விளைகிறது. நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள இடத்தில் வீட்டுத்தோட்டம் போட்டால், காய்கறி செலவும் மிச்சம், ஆரோக்கியமும் நிச்சயம். வீட்டில் இடம் இல்லாதவர்கள் மாடித்தோட்டம் போடலாம்.

எனது தோட்டத்தில் கொய்யா, மாதுளை, சீத்தாப்பழம், வாழை, தென்னை, சப்போட்டா போன்ற பழமரங்கள் உள்ளன. அவற்றிலிருந்து வீட்டுக்கு தேவையான பழங்களை நாங்களே விளைவித்துக்கொள்கிறோம், நீங்களும் சிறிது முயற்சி செய்தால் இது முடியும்.

பெரும்பாலான பொருட்களை நானே விளைவித்துக்கொள்வேன் என்றாலும் சில பொருட்கள் எங்கள் ஊரில் விளையாது. மிளகு, பூண்டு, மல்லி போன்ற அத்தகைய மளிகைப் பொருட்களை ஆண்டுக்கு ஒருமுறை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்கிறோம். அதனால், மளிகைக்கடைக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை.

இதுபோல நீங்களும்கூட சிறிதளவு முயற்சி செய்தாலே உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை முழுமையாக உங்கள் வீட்டு தோட்டத்திலேயே விளைவித்துக்கொள்ளமுடியும்.

நமது கிராமங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை நூறு சதவீதம் சுயசார்புடன்தான் இயங்கியது. ஆனால், இப்போது நம்முடைய அதீத நுகர்வுதான் இரண்டுவாரம்கூட நம்மை வீட்டில் தாக்குபிடிக்க விடாமல் துரத்துகிறது. எனது வீட்டில் நான் சேமிப்பில் வைத்திருந்த அரிசியை எனது கிராம மக்களுக்கு இந்த நெருக்கடி சூழலில் கொடுத்துள்ளேன். அதுபோல என் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் மக்களுக்கு கொடுத்து வருகிறேன். விவசாயி என்பவன் எப்போது கொடுப்பவனாக இருக்கவேண்டுமே தவிர, வாங்குபவனாக இருக்கக்கூடாது.

திட்டமிட்டால் சாத்தியம்தான்!

வீர பிரபாகரன் – சுபாதேவி, தஞ்சாவூர்

இவர்கள் தஞ்சையின் நகர்ப்பகுதியில் வசிப்பவர்கள். விவசாய நிலம், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க வாய்ப்பில்லாதவர்கள். இவர்களும் இந்த கொரோனா ஊரடங்கின்போது முழுமையாக வீட்டைவிட்டு வெளியில் வராமல் சமாளிக்கின்றனர். இவர்கள் தங்கள் அனுபவங்களை சொல்கிறார்கள்.

“கொரோனாவின் கோரமுகம் தெரிந்தவுடனே நான் முழுமையாக வரப்போகும் 21 நாட்களுக்கு திட்டமிட்டேன். ஏனென்றால், நாம் வெளியில் செல்லாமல் இருப்பது நாட்டுக்கு மட்டுமல்ல, வீட்டுக்கும் நல்லது என்று முடிவெடுத்தேன்.

உணவுக்கு அதிகளவில் தேவையான காய்கறி என்றால் அது வெங்காயம், தக்காளிதான். எனவே, நல்ல நிலையில் 20 நாட்கள் தாங்கக்கூடிய அளவுக்கு அந்த காய்கறிகளை வாங்கி முறையாக சேமித்து வைத்தேன். மேலும் எளிதில் வீணாகாத உருளை, கருணைக்கிழங்கு, காரகருணை, சவ்சவ், முள்ளங்கி போன்ற காய்கறிகளை வாங்கி சேமித்து வைத்துக்கொண்டேன். வத்தல் வகைகள் போன்றவற்றை வாங்கி வைத்திருந்ததால் எளிதாக சமாளிக்க முடிந்தது.

ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப்பொருட்களை சரியாக திட்டமிட்டு வாங்கி சேமித்து வைத்துக்கொண்டோம். அரிசி, தானியங்கள், எண்ணெய் வகைகள் அனைத்தையுமே தேவையான அளவு வாங்கி வைத்தோம்.

வீட்டில் குழந்தைகள் உள்ள காரணத்தால் பழங்கள் அத்தியாவசியம். எனவே, வாழைக் காய்களை வாங்கி வைத்துவிட்டேன். அது மெதுவாக பழுக்க, பழுக்க சாப்பிட்டோம். எளிதில் வீணாகாத கொய்யா, மாதுளை போன்ற பழங்களை வாங்கி முதல் ஒருவாரம் சாப்பிட்டோம். மேலும் பேரிச்சை, திராட்சை, பாதாம் போன்ற உலர் பழங்களை வாங்கி வைத்துக்கொண்டேன்.

குழந்தைகள் அடிக்கடி நொறுக்குத் தீனிகள் கேட்பார்கள். எனவே, வீட்டில் நாங்கள் இருக்கும் நேரத்தை பயனுள்ள நேரமாக மாற்ற நாங்களே இணையத்தை பார்த்து, உறவினர்களிடம் கேட்டு மிக்சர், முறுக்கு, அதிரசம், லட்டு, சிறுதானிய இனிப்புகள் போன்ற பல பலகாரங்களை செய்ய கற்றுக்கொண்டோம். இதனை குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள், உடலுக்கும் ஆரோக்கியத்துடன் இருந்தது.

இறைச்சி உண்பதை இந்த ஊரடங்கு நேரத்தில் மட்டும் ஒத்தி வைத்தோம். அதனால், வெளியில் எங்குமே செல்லவேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. ஒரு மாதத்துக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்குவதாலும், பலகாரங்களை வீட்டிலேயே செய்ததாலும் இந்த மாதம் மட்டும் மாத பட்ஜெட்டில் மூவாயிரம் ரூபாய்க்கும் மேலாக மிச்சப்பட்டுள்ளது. இதுபோல திட்டமிட்டு செலவு செய்தால் பொருளாதாரமும் மிச்சம், ஆரோக்கியமும் கிடைக்கும்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here