விழுங்கத் துடிக்கும் கொரோனா விழிபிதுங்கும் தமிழகம்!

15

– ஜஸ்டின் துரை

என்ன செய்ய வேண்டும் மக்கள்? எப்படி தற்காத்துக் கொள்வது?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் இரண்டாம் இடத்துக்கு நகர்ந்துள்ளது தமிழ்நாடு. மார்ச் 31ஆம் தேதியிலிருந்து, ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 55-க்கும் மேற்பட்டதாக உள்ளது. அவ்வாறெனில் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் மூன்றாம் நிலையான சமூகப் பரவலை எட்டிவிட்டதா? எப்படி சமாளிக்க போகிறது தமிழகம்?

இனிதான் அதிக கவனம் தேவை!

கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் மூன்றாம் நிலையான சமூகப் பரவலை இன்னும் எட்டவில்லை என கூறும் தமிழக சுகாதாரத்துறை, “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் டெல்லியில் மத அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

எஞ்சியவர்கள் வெளிநாட்டு, வெளிமாநில பயண வரலாறு கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டினர். இவர்களோடு தொடர்பில்லாத உள்ளூர்வாசிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே, தமிழகம் கொரோனா பரவலில் இரண்டாம் கட்டமான வெளிநாட்டிலிருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவும் நிலையில்தான் உள்ளது. மூன்றாவது கட்டமான உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவும் சமூகப் பரவல் நிலையை இன்னும் எட்டவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது. ஆனால், அதேநேரம் தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதியாக அறிவித்துள்ளது மாநில சுகாதாரத்துறை.

ஏப்ரல் 6 அன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 571. 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக பார்க்கும்போது அதிகபட்ச கொரோனா பாதிப்புகள் சென்னையில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், கொரோனா தீவிரத்தை எப்படி குறைக்கப் போகிறது தமிழகம்? கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் விரைவில் மீளுமா? மருத்துவர்கள் சிலரிடம் பேசினோம்.

இது தொடர்பாக நம்முடன் பேசிய மருத்துவர் சென்பாலன், “மார்ச் மாதம் 30ஆம் தேதிவரை தமிழ் நாட்டில் 2,040 கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தன. அதில் 67 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. அதுவரை ஒரே ஒரு நோயாளிதான் கொரோனா தொற்றால் இறந்திருந்தார். ஆனால், அதன்பின் நிலைமை வெகுவேகமாக மாறியது.

ஏப்ரல் 5 ஆம் தேதியில் 4,612 பரிசோதனைகளில் 571 நோயாளிகள் என்று திடீரென அதிகரித்தது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்து அதிக நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இன்னும் சந்தேகத்திற்கிடமான நோயாளிகளின் 400க்கும் மேற்பட்ட முடிவுகள் வரவேண்டியுள்ளன. தினமும் 5, 10 என அதிகரித்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 70, 80 என்ற வேகத்தில் அதிகரிக்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கேற்ப இறப்புகளும் அதிகரிக்கின்றன.

தமிழக அரசு கைவசம் 3,300 வெண்டிலேட்டர்களும், 23,000 படுக்கை வசதிகளும் உள்ளதாக அறிவித்துள்ளது. கணக்கீட்டிற்காக 5 சதவிகித கொரோனா தொற்று நோயாளிகளுக்கு செயற்கைச் சுவாசம் தேவைப்படும் எனக் கொண்டால் தற்போதைய வசதிகளை வைத்து தமிழ்நாட்டில் 60,000 நோயாளிகள் வரை சமாளிக்க முடியும் எனத் தோராயமாகக் கணிக்கலாம். அதற்கு மேல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வசதிகள் போதுமானதாக இருக்காது.

இதுவரை தமிழகத்தில் 485 நோயாளிகள் கண்டறியப்பட்டாலும் நோயின் தீவிரத்தன்மை குறைவாகவே உள்ளது.
மகாராஷ்டிராவில் 635 நோயாளிகளில் 34 பேர் இறந்துள்ளனர். குஜராத்தில் 122 நோயாளிகளில் 11 பேர் இறந்துள்ளனர். அதேநேரம் தமிழ்நாட்டில் 485 பேரில் 5 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு நமது வலிமையான பொது சுகாதாரத்துறை கட்டமைப்பும் முக்கிய காரணம்.

ஆனால், இனி வருங்காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கையும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தால் தமிழ்நாட்டு சுகாதாரத் துறையால், இதே அளவில் இறப்பு விகிதத்தை வைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். மேலும், பல மாநிலங்களில் தொற்று அதிகரிக்கும் போது மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் உதவிகளும் குறையும். தொடர்ச்சியான, கடுமையான பணிச்சுமை காரணமாக சுகாதாரத்துறை பணியாளர்களும் சோர்வுக்கு ஆளாவார்கள். முகவுறை, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை மேலும் அதிகமாகும்.

இவை அனைத்தையும் நோக்கும்போது நோயாளிகளின் எண்ணிக்கை இனி வருங்காலங்களில் முக்கியக் காரணியாக விளங்கப் போகிறது. உலகம் முழுவதும் நெருக்கடி நிலவும் காலத்தில் திடீரென வெண்டிலேட்டர்களை பெருமளவு அதிகப்படுத்துவதோ, மற்ற வசதிகளை அதிகப்படுத்துவதோ இனி இயலாத செயல். நம்மால் செய்யக்கூடிய செயலாக இருப்பது நோயின் பரவலை மட்டுப்படுத்துவதும் நோயாளிகள் திடீரென அதிக எண்ணிக்கையில் உருவாவதைத் தடுப்பதும்தான். இந்த இரண்டின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டின் வருங்கால கொரோனா சிகிச்சை உள்ளது’’ என்கிறார்.

ஊரடங்கு முடிந்தாலும் இடைவெளி அவசியம்
பொதுநல மருத்துவர் .ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம்.

“டெல்லி நிஜாமுதீன் மார்க்க கூட்டத்தில் பல மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர். மேலும், அந்த கூட்டத்தில் வெளிநாடுகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டதை அறிவோம். இதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவே அதே கூட்டத்தில் பங்குபெற்ற பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் குறித்த தகவல் பெறப்பட்டது. இதற்குப் பெயர் ‘CASE TRACING FROM A COMMON SOURCE’.

அதாவது ஒரு பொது இடத்தில் சில நாட்கள் குழுவாக தங்கியிருந்தவர்களுள் சிலருக்கு நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், அதே இடத்தில் பங்கு பெற்ற மற்றவர்களையும் சோதிக்கும் முறை தான் CASE TRACING ஆகும்.

தமிழகத்திலிருந்து சமய பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மக்களை குறித்து அறிந்து அவர்களது முகவரிகளை கண்டு அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்குப் பெயர் FACILITY QUARANTINE.

இவ்வாறு செய்தவற்கு, ஒருவருக்கு நோயின் அறிகுறிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. குவாரண்டைன் என்றால் நோயின் அறிகுறி தோன்றுவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவரை தனிமைப்படுத்துவது ஆகும்.

எனவே, டெல்லி மர்கஸில்(மாநாட்டில்) கலந்துகொண்ட மக்களை மருத்துவமனையிலோ அல்லது அவர்களது வீட்டிலேயோ தனிமைப்படுத்துவது என்பது அறிகுறி இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி, தனிமைப்படுத்துதல் மிக முக்கியமானது.

கொரோனா வைரஸ் நம் உடம்புக்குள் செல்லும் போது முதலில் தொண்டையில்தான் தங்குகிறது. பின்னர், தொண்டையில் உள்ள வைரஸ் மெல்ல, மெல்ல கீழ் இறங்கி நுரையீரலில் படிகிறது. இதனால், நுரையில் பாதிக்கப்படுகிறது. எனவே, தனிமைப்படுத்திய நபர்களுக்கு தொண்டைத்தடவல் (Throat swab test) பரிசோதனை செய்யப்படும். கொரோனாவை ரத்தப் பரிசோதனை மூலம் இப்போதைக்கு கண்டறியும் பரிசோதனை இந்தியாவிற்கு வரவில்லை. எனவே, தேவைப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் தொண்டைத்தடவல் பரிசோதனை மேற்கொள்வர்கள்.

டெஸ்ட் ரிசல்ட் பாசிடிவாகவும் வரலாம், நெகடிவாகவும் வரலாம். கொரோனா அறிகுறி உள்ளவர்களை சோதிக்கும் போது முதலில் நெகட்டிவ் என வந்தாலும் பின்னர் பாசிட்டிவ் என எந்த நேரத்திலும் மாறலாம். எனவே, நெகட்டிவ் என வந்தவர்களையும் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பது அவசியம்.

கொரோனா பாதித்த ஒருவரை நாம் ஆறடி தூரத்துக்குள் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் சந்தித்தால் வைரஸ் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் மிக அதிகம். கோவிட்-19 பாதிக்கப்பட்டோரில் 80 சதவிகிதம் பேருக்கு சாதாரண தொற்றாக இது கடந்து சென்றுவிடும். அசாதாரண அறிகுறிகளான மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத்திணறல் ஆகியவை 20 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தென்படும். எனவே, பாசிடிவ் என்றால் தாங்கள் 80 சதவிகிதம் சாதாரண நோய் தொற்றுக்குள் வருகிறீர்களா? அல்லது சிகிச்சை தேவைப்படும் 20 சதவிகிதம் தீவிர தொற்றுக்குள் வருகிறீர்களா? என்பதை நோய் குறிகள்தான் முடிவு செய்யும்.

அதுவரை அவர்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது சிறந்தது சில இடங்களில் மருத்துவர்கள் நீங்கள் 80 சதவிகிதம் சாதாரண நோய் தொற்றுடன் இருப்பதை அறிந்தால் உங்களை வீட்டுக்கே அனுப்பி ஹோம் குவாரண்டைனில் வைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு. நாம் 80 சதவிகிதம் சாதாரண நோய் தொற்றுக்கு கீழ் வருவோமாயின் நமக்கு வெறும் வைரஸ் காய்ச்சலுக்கு தேவையான சாதாரண சிகிச்சை போதுமானது. எனவே, அனைவருக்கும் க்ளூகோஸ் போடுவது, ஆக்சிஜன் வைப்பது போன்ற சிகிச்சைகள் தேவைப்படாது. உங்களுக்கு தேவையான சிகிச்சையை மருத்துவக்குழு முடிவு செய்து சிறப்பாக செய்யும். எனவே, வீணான பயம் அச்சம் தேவையற்றது.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களும் கொரோனா வைரஸ் குறித்த முழு எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 21 நாட்கள் லாக் டவுன் என்பது சேதத்தை குறைக்க அல்லது தள்ளிப்போட அல்லது அதற்குள் நாம் தயாராவது ஆகியவற்றுக்காக மட்டுமே. எனவே, ஒருவேளை ஏப்ரல் 14க்குப் பிறகு ‘லாக்டவுன்’ தளர்த்தப்பட்டாலும், சமூக இடைவெளி எனும் வலுவான ஆயுதத்தை மட்டும் வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட வேண்டாம். ஒருவருக்கு இன்னொருவருக்கும் இடையே ஆறடி இடைவெளி எப்போதும் அவசியம். அநாவசியமாக கூட்டம் கூடுவது தவறு. கைகளை சோப் போட்டு அடிக்கடி கழுவிக்கொண்டே இருக்க வேண்டும்.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் இப்போது அனைவரும் மாஸ்க் அணிவது குறித்த அறிவுரையை வழங்கியிருக்கிறது இது தொற்று நோய் பரவுவதை பெருமளவு குறைக்கிறது. எனவே, துணியால் செய்த மாஸ்க் அணிந்து அடுத்த மூன்று மாதங்கள் வெளியே செல்வது நல்லது’’ என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here