உலக நாகரிகங்களில் ஓர் உலா – 26

14

– முனைவர் வைகைச்செல்வன்

கீழடி காட்டும் தமிழர் பண்பாடு!

தமிழக வரலாற்றிலும் தமிழர்களின் வாழ்வியல் முறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கீழடி அகழ்வாராய்ச்சி, ஆற்றங்கரை நாகரிகம் என்ற வெளிப்பாட்டு நிலையிலிருந்து, தமிழர் நாகரிகம் என்று வற்றாத வரலாற்றைப் பேசும் அளவிற்கு நகர்ந்து வந்துள்ளது. பண்டைய வரலாற்றில் தொன்மையான நாகரிகத்தைக் கொண்டது தமிழர் இனம் என்பதை உணர்ந்து உலகமே ஒரு கனம் திரும்பிப் பார்க்கிறது. மேலும் இந்த ஆராய்ச்சியின் மூலம் மக்கள் செழுமையான வாழ்க்கையை வாழ்ந்ததற்கான தரவுகள் கிடைத்துள்ளதன் வாயிலாக, தமிழர் நாகரிகத்தின் பண்பாட்டு அடையாளத்தை மீட்டுருவாக்கத்திற்கும் புத்துருவாக்கத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள கட்டுமான பொருட்களான செங்கல் மற்றும் கூரை ஓடுகளில் 80 சதவீதம் சிலிக்கா மண்ணும் 7 சதவீதம் சுண்ணாம்பும் கலந்துள்ளதையும், சுண்ணாம்புச் சாந்து 97 சதவீதம் பயன்படுத்தி கட்டிடம் எழுப்பியிருப்பதையும் காணும்போது, அக்கால மக்கள் மிகவும் தரமான கட்டுமான பொருட்களைப் பயன்படுத்தி இருப்பதால், அவை இன்றளவும் வலிமையாக நீடித்து நிற்பதற்கான சான்றாகத் திகழ்கிறது. செங்கல் கட்டுமானத்தில் வீடுகள், தொழில் கூடங்கள், வணிகம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் நகர நாகரிகத்தைப் பறைசாற்றும் விதமாக கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வெளிக்கொணரப்பட்ட மட்கலன்கள் மூலம், வட இந்தியாவின் கங்கைச் சமவெளி பகுதியில் நகரமயமாதலும் வைகைக் கரையின் நகரமயமாதலும் ஒரே காலகட்டம் என்பதையும் உணர்த்துகிறது.

மேலும் சுடுமண் பொம்மைகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், கருப்பு, சிவப்பு ஆகிய இரு வண்ணங்களால் ஆன மண்பாண்டங்கள், சூது பவளங்கள் என பல்வேறு பொருட்களும் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு ஆதிச்சநல்லூர், கொடுமணல், அரிக்கமேடு போன்ற பகுதிகளில் பல்வேறு புதைபொருட்கள் கிடைத்திருந்தாலும் கூட, கீழடிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு என்றால், அவை இவ் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள பானை ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதுதான். இவற்றில் குவிரன், ஆத(ன்) என முழுமையடையாத எழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ஆதன் என்ற பெயர், அதன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் வாயிலாக, அக்கால மக்கள் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துக்களில், நெடிலைக் குறிக்க எந்த ஒலிக்குறியிடும் பயன்படுத்தும் வழக்கம் இல்லை என்பது புலனாகிறது.

தமிழ் பிராமிக்கு முந்தைய வரி வடிவங்களாக விளங்கிய குறியீடுகள், பெருங்கற்கால மற்றும் இரும்புக்கால மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் எழுத்து வடிவமாகத் திகழ்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் பிராமி எழுத்து வடிவத்தை, ‘தமிழி’ என்றும் ‘பண்டைத் தமிழ் எழுத்துக்கள்’ என்றும் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த இடங்களில், இதற்கு முந்தைய அகழ்வாராய்ச்சியில், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மோதிரங்களும் கண்டறியப்பட்டன. தமிழகத்தில் 32க்கும் மேற்பட்ட ஊர்களில் சங்ககாலத்தைச் சார்ந்த தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 110 குகைக் கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மனித நாகரிகத்தின் சிறந்த கண்டுபிடிப்புகளில் பானையும் அதை வனையும் சக்கரமும் சிறந்தவையாகக் கருதப்படுகிறது. அகழ்வாராய்ச்சியின் அகரம் போன்றவையாகக் கருதப்படுவது பானை ஓடுகளாகும். சிந்துவெளி முத்திரைகளுக்கும் தமிழி எழுத்துகளுக்கும் இடையிலான இணைப்புச் சங்கிலியாக கீழடி பானைக் கீறல்களை நாம் பார்க்க முடியும். இந்தப் பானைக் கீறல்களில் சிந்துவெளியில் கிடைத்த கீறல்கள் அமைந்துள்ளன. ஆகவே, அதன் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்க வேண்டும். மேலும், இம்மாதிரி கீறல்களைக் கொண்ட பானை ஓடுகள் தமிழகத்தில்தான் 75 சதவீதம் கிடைத்துள்ளது. கீழடியில் மட்டுமல்ல, கொற்கை, அழகன் குளம் ஆகியவற்றிலும் இதுபோன்ற பானை ஓடுகள் கீறல்களுடன் கிடைத்திருக்கின்றன.

கீழடியில் கிடைத்துள்ள பானை ஓடுகளின் சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப் பொருளான ஹேமடைட் என்பதையும், கருப்பு நிறத்திற்கு கரிமப் பொருளான கரியையும் பயன்படுத்தி உள்ளனர் என்பதை ஆய்வாளர்களின் தரவுகளின் வாயிலாக அறிய முடிகிறது. இத்தாலியின் ‘பைசா’ பல்கலைக் கழக அறிக்கையின்படி, கீழடியில் கிடைத்த மண்பாண்டங்களின் தொழில்நுட்பம், தனிமங்களின் கலவை, களிமண்ணின் தன்மை என அனைத்துமே கி.மு.6ம் நூற்றாண்டிலிருந்து, கி.மு.2ம் நூற்றாண்டு வரை ஒரே மாதிரி இருந்துள்ளதாகத் தெரிய வருகிறது. மேலும் அந்நாட்டின் அறிக்கையில், சில பானை ஓடுகளின் மாதிரிகள் தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள மண்ணின் தன்மையை ஒத்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வணிகர்கள், தொழில் சார்ந்தோர், பயணியர் ஆகியோரிடையே வணிக பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதையும் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

அக்காலப் பெண்கள் தங்கத்தால் தங்களை அலங்கரித்துக் கொண்டதற்கான அடையாளமாக 7 ஆபரணத் துண்டுகள், பல்வேறு மதிப்புமிக்க கற்களால் ஆன வளையல்கள், செம்பினால் செய்யப்பட்ட அணிகலன்கள், கண்ணாடி மணிகள், சுடு மண்ணால் ஆன மணிகள், தந்தத்தினால் ஆன வளையல் துண்டுகள் என ஏராளமான அணிகலன்கள் கிடைத்துள்ளன. இதன் மூலமாக அக்கால மக்கள் வளமையுடன் இருந்ததற்கான சான்றுகளை எடுத்துரைக்கிறது.

மதுரை மற்றும் பிற பகுதிகளில் ‘பாண்டி’ என்ற பெயரில் விளையாடப்படும் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், தாயம் விளையாடுவதற்கான பகடைக்காய்கள் போன்றவையும் கிடைத்துள்ளன. இவ்விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் சுட்ட சுண்ணாம்புகளால் செய்யப்பட்டுள்ளன. இத்தொல்பொருட்கள் அனைத்தும் சங்ககாலத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரின் விளையாட்டுக்களையும் கண் முன்னே பிரதிபலித்துக் காட்டுகின்றன.

வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் கார்னீலியம் கற்களால் ஆன மணிகளும் கிடைத்துள்ளன. அத்துடன் ரோம் நாட்டில் கி.மு.2ம் நூற்றாண்டில் வழக்கத்திலிருந்த அரிட்டைன் பானை ஓடு மண்ணடுக்கின் மேல் நிலையில் கிடைத்துள்ளது. பொதுவாக ரௌலட்டட் பானை ஓடுகள் ரோம் நாட்டுப் பானைகள் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய ஆய்வுகள் அவை இந்திய நாட்டுப் பானை வகையைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெளிவுபடுத்துவதுடன், ரோம் நாட்டு தொழில்நுட்பத்தை மையமாக வைத்து, உள்ளூரில் வனையப்பட்ட மட்கலன்கள் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதக்குல நாகரிகத்தின் மிகத் தொன்மையான கலை வடிவமாகக் கருதப்படுபவை சுடுமண்ணினால் ஆன உருவங்களேயாகும். இச்சுடுமண் உருவங்கள் செய்வதற்கு மிகப்பெரிய தொழில்நுட்பமோ, கருவிகளோ பயன்படுத்தாத காலகட்டத்தில், மனிதன் தனது கைகளினாலேயே அத்தகைய சுடுமண் சிற்பத்தைச் செய்திருப்பதன் வாயிலாக, நம் முன்னோர்கள் கலைத்திறனில் எத்தகையதொரு அபாரத் திறமை படைத்திருந்தார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது. அது மட்டுமல்லாமல், பழங்கற்கால மனிதன் தனது உணவு வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்ட கருவிகளைக் கூட கல்லில் செதுக்கி இருப்பதுதான் வியப்பின் வெளிச்சம். அதன் பின்னர் காலப்போக்கில் பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைந்த பிறகு, தனது எண்ணங்களை வண்ணங்களாக்கி பாறை ஓவியங்களாக வரைந்து, களிமண் அல்லது வண்டல்மண் மற்றும் தண்ணீர் ஆகிய மூலப்பொருட்களைக் கொண்டு அழகிய சுடுமண் உருவங்களைப் படைக்க முயற்சித்தான்.

அத்தகைய சுடுமண் உருவங்களைத் தகுந்த வெப்பத்தில் சூளையில் வைத்து சுடும் தொழில்நுட்பத்தையும் அறிந்து வைத்திருந்தான். அவர்களின் இத்தகைய திறமைகளை நாம் காண்கிற போது ஆச்சரியத்தில் திளைக்க வைக்கிறது.

கீழடி அகழாய்வுகளில் சுடுமண்ணால் ஆன 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், பிற அணிகலன்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அணிகலன்கள் யாவும் தங்கம் மற்றும் இரும்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்டுள்ளன. ஆனால், வழிபாடுகள் தொடர்பான தொல்பொருட்கள் எவையும் தெளிவான முறையில் கிடைக்கப்பெறவில்லை என்பதையும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

வைகை ஆற்றுக் கலாச்சாரம் என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படும் கீழடி பள்ளிச்சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் நடந்த அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு. 1000-இல் தென் இந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள்ளே செல்லவும், வெளியே வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் – என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென் இந்தியாவில் முதன்முறையாகக் கீழடியில் மட்டும்தான் கிடைத்திருக்கிறது. இதன் வாயிலாக, தமிழர்களின் பெரும் கனவு என்பது நீண்ட தொன்மை உடையது என்பதை கீழடி அகழாய்வு நிரூபிக்கிறது.

(நாகரிகம் நடைபோடும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here