விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!

136

சு. வீரமணி

கொரோனாவுக்கு தப்பிய நாடுகள்; ரகசியம் என்ன?

உலக நாடுகளுக்கு எல்லாம் இப்போது ஒரே பொது மொழி, பயம் தான். பாரபட்சம் இல்லாமல், ஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லா நாடுகளையும் எல்லா வீடுகளையும் எல்லா வர்க்கங்களையும் அலறவிட்டு கொண்டிருக்கிறது கொரோனா. உலகின் அங்கீகரிக்கப்பட்ட 195 நாடுகள் மற்றும் யாருமே அறியாத சிறிய தீவுக் கூட்டங்கள் அனைத்திலும்கூட தனது கால்தடத்தைப் பதித்திருக்கிறது கொரோனா. ஆனால், இந்த பெரும் தொற்றுநோயிலிருந்தும் மிக சொற்பமாக சில நாடுகள் தப்பித்துள்ளன.

எப்படி?

கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிய இந்த நாடுகள், சில மாதங்களுக்கு முன்பே விமானப் போக்குவரத்தினை நிறுத்திவிட்டன. அதுபோல அகப்புற சூழல் காரணமாக இந்த நாடுகளுக்குள் உள்நாட்டு பயணமும் மிகவும் குறைவு.

துருக்மெனிஸ்தான்

மத்திய கிழக்கு நாடான ஈரானில் கொரோனா தொற்றால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதன் அண்டை நாடான துர்கமேனிஸ்தானில் எந்தவொரு பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. குறிப்பாக இந்த நாட்டிலிருந்து ஈரானுக்கு மருத்துவ உதவியையும் உணவுப் பொருள்களையும் வழங்கி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் வட கொரியா போலவே இந்த நாட்டிலும் மக்கள் பயணம் செய்வதைக் கட்டுப்படுத்தியதே ஆகும். மேலும், ஈரானில் கடுமையாக வைரஸ் தொற்று பரவியபோதே அதுகுறித்து தமது நாட்டு மக்களிடம் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதோடு சுற்றுப்புறத்தையும் சுகாதாரமான முறையில் பராமரித்து வருகிறது இந்நாட்டு அரசு.

தஜிகிஸ்தான்

கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவை கிழக்கு எல்லையாக கொண்ட நாடு இது. சீனாவில் கடுமையாக கொரோனா வைரஸ் தாக்கியபோதே சுதாரித்துக்கொண்ட தஜிகிஸ்தான் தனது எல்லைகளை மூடிவிட்டது. அதுபோலவே விமானப் போக்குவரத்து, பொது போக்குவரத்துகளையும் நிறுத்தி மக்கள் பயணத்திற்கும் தடை விதித்ததன் காரணமாக கொரோனா பிடியில் அகப்படாமல் இருக்கிறது.

ஏமன்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு. கடந்த பல ஆண்டுகளாக தொடரும் போர்ச்சூழல் இந்நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் சிதைத்துள்ளது, இந்நாட்டிலுள்ள எண்ணெய் வளம் தீர்ந்துவிட்ட காரணத்தால் இம்மக்கள் மிகவும் வறுமையில் உழல்கின்றனர், அரபு நாடுகளிலேயே ஏழைநாடு என்றால் அது ஏமன்தான். இதனால் இந்த நாட்டிற்கு தொழில், வணிகம், சுற்றுலா என்று உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து மிகமிகக்குறைவு. அதுபோல போர்ச்சூழல் காரணமாக உள்நாட்டிற்குள்ளாகவே போக்குவரத்தும் மிகவும் குறைவு. இதுவே இங்கு கொரோனா நோய்த்தொற்று இதுவரை இல்லை என்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

லெசொத்தோ

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் ஆப்ரிக்கா நாட்டின் எல்லைகளால் நான்குபுறமும் சூழ்ந்துள்ள நாடு லெசோத்தோ, இருந்தபோதும் இந்த நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பது ஆச்சரியம் தரும் தகவல்.

லெசோத்தாவில் வைரச் சுரங்கங்கள் நிறைய உள்ளன. ஆனாலும், இந்த நாட்டில் முழுக்கவும் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையில்தான் மக்கள் வசிக்கிறார்கள். பொருளாதாரத்திற்கு முழுக்கவும் தென் ஆப்ரிக்காவை சார்ந்திருந்தாலும், இந்த நாட்டில் முறையான சாலைவசதிகூட கிடையாது. இப்போதும்கூட இங்குள்ள மக்கள் பல ஊர்களுக்கும் குதிரைகள் மூலமும், நடந்தும்தான் செல்லவேண்டும். இந்த ஊரில் பொழுதுபோக்கு சாதனம் என்றால் அது ரேடியோதான். டிவி இந்த நாட்டில் மிகமிக அரிது. அந்தளவுக்கு பின்தங்கிய நாடு லெசோத்தோ. இதனால், இந்த நாட்டில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கொரோனா பரவுவது சிரமம் என்று சொல்லப்படுகிறது.

காமரோஸ்

ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள பல எரிமலைத் தீவுக்கூட்டங்கள் அடங்கிய நாடு காமரோஸ். இந்த நாட்டில் இதுவரை கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த நாட்டில் மிகக்கொடுமையான வறுமை நிலவுகிறது. இதன் காரணமாக இந்த நாட்டுக்கு பெருமளவில் விமானப் போக்குவரத்து இல்லை. விமானப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் இந்த நாட்டுக்கு கொரோனோ தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை. இருந்தபோதும் இந்த நாடும் இப்போது கொரோனா தொற்று ஏற்படாத வகையில் எல்லைகளைப் பலப்படுத்தி, மக்களைக் கண்காணித்து வருகிறது; பொது போக்குவரத்தையும் தடைசெய்து வைத்துள்ளது.

சவுவ் டோமே & பிரின்சிபி

ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள தீவு நாடு இது. இந்த நாட்டிற்கும் பெரிய அளவிலான விமான போக்குவரத்தோ அல்லது இதர போக்குவரத்தோ கிடையாது. இந்த நாட்டிலுள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை நம்பி வாழ்கின்றனர். அதனால், இவர்களுக்கு வெளியுலக தொடர்புகள் மிகக்குறைவு. இதன் காரணமாக இந்த நாட்டிற்கு கொரோனா நோய்த் தொற்றிற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.

பொதுவாகவே ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவையும்கூட, இங்குள்ள நாடுகளில் கொரோனா பரவாததற்கு மற்றொரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

வடகொரியா

உலகில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத நாடு என்றால் அது வடகொரியாதான். ஆனால், இப்போதைய கொரோனா பதட்டத்தில் பெரும் அமைதி அந்த நாட்டில் நிலவுகிறது. கொரோனாவின் உற்பத்தி தளமான சீனாவின் அண்டை நாடான வடகொரியாவில் இதுவரை ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற செய்தியை உலகநாடுகள் முழுமையாக நம்பவில்லை.

வடகொரியாவின் எல்லைகள் ஜனவரி மாதம் முதலே முழுமையாக மூடப்பட்டது. அதன்காரணமாக இங்கு கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. வடகொரியாவில் இருக்கும் கடுமையான சட்டங்கள் மற்றும் கொடூரமான தண்டனைகள் காரணமாக மக்கள் முழுமையான ஊரடங்கை கடைபிடித்தே ஆகவேண்டும். இதுவும், இந்த நாட்டில் கொரோனா பரவியிருக்காது என்பதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

மறுபுறம், எல்லையில் பணியற்றிய ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று இருந்தும் அதனை வடகொரியா மறைக்கிறது என்றும் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்நாட்டினர் ரூபாய் நோட்டுகள், கப்பலிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஆகியவற்றில் தொற்று நீக்கம் செய்து வருகின்றனர். மேலும், தண்ணீர்த் தொட்டிகள் நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றையும் சுத்தப்படுத்தி வருகின்றனர் என்ற செய்திகளும் பரவி வருகிறது.

பாதிக்கப்படாத தீவுகள்

கொரோனா தொற்றிலிருந்து சில நாடுகள் தப்பியதைப்போலவே தெற்கு பசிபிக் கடற்கரையில் உள்ள பெரும்பாலான தீவுகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இவற்றில் குக் தீவுகள், மார்சல் தீவுகள், மைக்ரொனேசியா, நாவுரு (Nauru), பாலாவு (Palau), சாமோ (Samoa), சாலமன் தீவுகள், துவாலு (Tuvalu) மற்றும் வனுவாது (Vanuatu), டாங்கா (Tonga) ஆகியன அடங்கும். இந்த தீவுகளின் மக்கள் தொகை சில ஆயிரங்கள் அல்லது சில இலட்சங்கள் மட்டும்தான்.

குட்டி குட்டி தீவுகளாக இவை இருப்பதால் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய வாய்ப்புகள் மிகக்குறைவு. அதுபோலவே வெளிநாடுகளிலிருந்து விமானப் போக்குவரத்து மற்றும் கடல்வழி போக்குவரத்து ஆகியவை தடைசெய்யப்பட்ட காரணத்தால் இத்தீவுகள் இப்போதுவரை பாதுகாப்பாக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here