-எல்லுச்சாமி கார்த்திக்
ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்கள்தான் இருக்கிறது. ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இப்போது இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதை உறுதிப்படுத்துவதுபோல் விமான நிறுவனங்கள் டிக்கெட் முன்பதிவை தொடங்கிவிட்டன; ரயில்கள் மீண்டும் ஓட தயாராகின்றன. சரி, ஊரடங்கு முடிந்த பிறகு எதெல்லாம் செய்யலாம்? எதெல்லாம் செய்யக்கூடாது?
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் சமூக தொற்றாக பரவிடக்கூடாது என்பதற்காகத்தான் 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மத்திய அரசாங்கம். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தடை போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 14ஆம் தேதியோடு ஊரடங்கு காலம் முடிகிறது. ஆனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறதே தவிர குறையவில்லை. எனவே, ‘ஊரடங்கை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்’ என மருத்துவர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
‘அப்படி நடந்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பெரிதும் பாதிக்கப்படுவர்’ என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
மருத்துவர்களா பொருளாதார நிபுணர்களா, யார் சொல்வதைக் கேட்கப் போகிறது மத்திய அரசு? ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்படவில்லை என்றால் நாம் எதெல்லாம் செய்யலாம்? எதெல்லாம் செய்யக்கூடாது? பேரிடர் மேலாண்மை நிபுணர் சஞ்சய் மவுலிக்கிடம் பேசினோம்.
“ஜனதா ஊரடங்கு (மார்ச் 22) முடிந்த பிறகு தெருக்களில் சிலர் கூட்டமாக குழுமி ஆரவாரம் செய்ததை போலவே 21 நாட்கள் முடிந்த பிறகும் கூட்டமாக வீதிகளில் இறங்க வாய்ப்புகள் உள்ளன. எப்போதும் போலவே நகர பகுதிகளில் வசிப்பவர்கள் சினிமா, மால், உணவகம் என பெருந்திரளாக பொது இடங்களில் கூடலாம். கார்ப்பரேட் கம்பனிகள் துவங்கி சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்தும் தன் வேலையாட்களை வழக்கத்தை விடவும் கூடுதல் நேரம் (OVER TIME) பணி செய்யும்படி நிர்ப்பந்திக்கலாம்.
வேலைக்கு திரும்ப வேண்டிய நிர்பந்தத்தினால் சிறு நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் இருப்பவர்கள் பெருநகரங்களை நோக்கி பொது போக்குவரத்தில் படையெடுக்க கூடும்.
ஊரடங்கினால் வீட்டுச்சிறையில் இருப்பவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்போது கொரோனா ஒரு பெருந்தொற்று நோய் என்பதேகூட மறக்கடிக்கப்படலாம். அப்படியெல்லாம் நடந்துவிட்டால் ஊரடங்கு நாட்களில் மக்கள் அனைவரும் தீவிரமாக கடைபிடித்து வந்த சமூக விலகல் என்பதே கேள்விக்குறியாகி விடும். மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் அது நடந்தால் கொரோனா தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆட தயாராகி விடும்.
இந்த ஊரடங்கு, கொரோனா வைரஸ் பரவலை தாற்காலிகமாக கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதை முதலில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காகவும், சிகிச்சை கொடுப்பதற்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காகவும் இந்த நாட்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் வேகத்தை ஊரடங்கின் இறுதி நாட்களில்தான் கணிக்க முடியும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம் இருக்கும் என சில ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. அதை தடுக்க நோய் தொற்று அறிகுறியோடு இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்வதுதான் தற்போதைக்கு தீர்வு என அமெரிக்கா சொல்கிறது.
அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்காமல் போனாலோ அல்லது சில தளர்வுகளை அறிவித்தாலும் இப்போது இருப்பதை போலவே எல்லோரும் அடுத்த சில நாட்களுக்கு எல்லோரும் வீட்டிலிருந்தால் நாட்டையே காப்பாற்றி விடலாம். குறைந்தபட்சம் அதற்கான வாய்ப்புகள் இருப்பவர்களாவது அதை செய்யலாம். முடியாதவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகவும், அடுத்தவர்களின் பாதுகாப்பிற்காகவும் முகமூடிகளை அணிந்துகொண்டு வெளியில் செல்லலாம்.
எதுவாக இருந்தாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகள் தொடங்கி படிப்படியாக ஊரடங்கிற்கு நாமே விலக்கு கொடுக்கலாம். அவசியம் இருந்தால் மட்டுமே பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம்” என்கிறார்.
இது குறித்து நம்முடன் பேசிய மருத்துவர் புகழேந்தி, “இந்த ஊரடங்கு எவ்வளவு தூரம் கொரோனா விவகாரத்தில் நன்மையை கொடுக்கும் என்று வைராலஜி சம்பந்தமான ஆய்வு மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். அரசாங்கம் ஊரடங்கை நீட்டிக்காமல் தற்காலிகமாக விலக்கிக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் பிஸிக்கல் டிஸ்டன்சிங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
கூட்டம் அதிகமுள்ள இடத்தில் செல்லாமல் இருப்பதுதான் பிஸிக்கல் டிஸ்டன்சிங். இது சம்பந்தமாக போதுமான விழிப்புணர்வை மக்களிடையே கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்தால் மீண்டும் லாக் டவுன் முடிவிற்கு வர வாய்ப்புகள் இருக்கிறது.
இருமல், காய்ச்சல், மூச்சு திணறல்தான் கொரோனாவுக்கான அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன. ஆனால், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களில் 40 சதவிகித நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் எதுவுமே இல்லை எனவும் பரிசோதனை முடிவுகள் சொல்கிறது. அதனால், தற்போது நடைமுறையில் உள்ள ரேப்பிட் ஆன்டி பாடி டெஸ்டை தவிர்த்துவிட்டு கொரோனா தொற்றை துல்லியமாக சொல்லும் பி.சி.ஆர் டெஸ்டை அனைவருக்கும் செய்யலாம். அதன் மூலம் கொரோனா வைரஸ் அதிகம் பரவுகின்ற ஹாட்ஸ்பாட்டுகளில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் சமூக தொற்று பரவ ஆரம்பித்து விட்டதாக வைராலஜி நிபுணரான ஜாக்கப் ஜான் தெரிவித்துள்ளார். இதையெல்லாம் களைய அரசாங்கமும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அரசாங்கம் மக்களோடு கலந்தாலோசித்து விட்டு திட்டமிடலாம்” என்கிறார்.