கொரோனா தடுப்பில் வெற்றி நடை!

163

-பூ. சர்பனா

இந்தியாவிற்கு வழிகாட்டும் திருப்பூர்!

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைக் காக்க ‘கிருமிநாசினி நடைபாதை’ அமைத்து நாட்டிற்கே வழிகாட்டியிருக்கிறது திருப்பூர்!

கொரோனாவை விரட்டும் திருப்பூரின் புதுமையான முயற்சிக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உட்பட அரசியல்வாதிகளும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு சென்னை, கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, திருவாரூர் போன்று தமிழக மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் ‘கிருமிநாசினி நடைபாதை’ திருப்பூரிலிருந்து ஏற்றுமதியாகிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயனின் வழிகாட்டுதலில், கிருமிநாசினி நடைபாதையை அமைத்து கொடுத்துள்ள டபிள்யூ.டி.டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷிடம் பேசினோம். “இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு போட்டும், அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்துகொண்டே இருந்தார்கள். குறிப்பாக, காய்கறிக் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில்தான் கூட்டம் கூட்டமாக இருந்தது. இதனைப் பார்த்த எனக்கும் நண்பர்களுக்கும் வருத்தம் ஏற்பட்டது. எங்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் சாரும் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிருங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் கூட்டமாக சேர்ந்தாலும், அவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க கிருமிநாசினி நடைபாதை அமைத்துள்ளதை சமூக வலைதளங்களில் வீடியோவாக பார்த்திருக்கிறேன். அதனால், மக்களுக்கு விழிப்புணர்வையும் தொற்று ஏற்படாமல் இருக்கவும் நம்மால் ஆன உதவியை செய்வோம் என்று வீடியோவில் பார்த்த கிருமிநாசினி நடைபாதை போலவே திருப்பூர் மக்களுக்கும் செய்துகொடுப்போம் என்று முடிவெடுத்தேன்.

நான் கடந்த 2004ஆம் ஆண்டுமுதல் பெரிய பெரிய டெக்ஸ்டைல்ஸ்கள், லெதர் கம்பெனிகள், காகித தொழிற்சாலைகளின் கழிவுநீரினை சுத்திகரித்து நல்ல நீராக மாற்றும் தொழில்நுட்ப கருவிகள் செய்யும் பிசினஸை இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் செய்துவருகிறேன். அதனால், கிருமிநாசினி நடைபாதை அமைப்பது எனக்கு கொஞ்சம் சுலபமானது. எனது எண்ணத்தை நண்பர்கள் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் வெளிப்படுத்தினேன். அவரும் உற்சாகமுடன் ஊக்கப்படுத்தவே, இரண்டே நாட்களில் வெற்றிகரமாக அமைத்து கொடுத்தேன். ஆறடிதான் இந்த கிருமி நாசினிப் பாதை இருக்கும்.

ஒரு நபர் உள்ளே வரும்போது உடம்புக்குள்தான் கொரோனா தொற்று இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் தொட்ட பொருட்கள், துணி, கொண்டுவரும் பை போன்ற எதில் வேண்டுமென்றாலும் கொரோனா தொற்று இருக்கலாம். அதனால், உள்ளே வருபவர்களைச் சுற்றியும் கிருமிநாசினி தெளித்தால், கிருமி சாகும் சூழல் வரும். அதற்காகவே, ஸ்பெஷல் தொழில்நுட்பக் கருவிகளும் உயர்தர குழாய்களும் சேர்த்தேன்.

கிருமிநாசினி கெமிக்கல்தான். எனவே, சுரங்கப்பாதையில் வருபவர்களுக்கு கண், மூக்கின் உள்ளே படக்கூடாது என்பதற்காக தண்ணீரை மைக்ரோவாக மாற்றி புகை மூட்டம்போல் ஏற்படுத்த டிசைன் செய்தோம். பல்வேறு பொருட்களை இதற்காக கோவையிலிருந்து வாங்கிவந்து செட் செய்தோம். இரவு ட்ரையல் பார்த்துவிட்டு காலை ஆட்சியரையும் மக்களையும் அழைத்தோம். எல்லோரும் சந்தோசப்பட்டுப் பாராட்டினார்கள். பெரிய வரவேற்பே கிடைத்துள்ளது” என்று கூறும் வெங்கடேஷ் தனது நண்பர்கள் உதவியுடன் திருப்பூரில் பாலம் அமைத்தல், குளம் தூர்வாரி மரங்கள் நட்டுப் பராமரித்தல் போன்ற பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து பேசியவர், “கிருமிநாசினி நடைபாதையை முதலில் தென்னம்பாளையம் சந்தையில் அமைத்தோம். அதுதான் திருப்பூரில் பெரிய மார்க்கெட். அது உள்ளேயே காய்கறி சந்தை, இறைச்சிக்கடைகள், உழவர் சந்தையும் உள்ளது. கடை வைத்திருப்பவர்களே இங்குதான் வந்து மொத்தமாக வாங்கிச்செல்வார்கள். ஒரு நாளைக்கு மட்டுமே குறைந்தது 5000 பேருக்குமேல் வருவார்கள். முதலில் 1 லட்சம் ரூபாய் போட்டு ஒரேயொரு கிருமிநாசினி நடைபாதையை, எனது சொந்த செலவில் ஆரம்பித்தேன்.

நல்ல பயனளிப்பதால், இப்போது திருப்பூரின் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உட்பட ஐந்து இடங்களில் நண்பர்களின் ஸ்பான்ஸர் வாங்கி வைத்திருக்கிறேன். இதற்கெல்லாம் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனின் ஊக்கமும் அவர் மக்கள்மேல் வைத்திருக்கும் அக்கறையும்தான் காரணம்.

கிருமிநாசினி நடைபாதை வீடியோ சமூக வலைதளங்களில் இந்தியா முழுக்க வைரலாகி எல்லா மாவட்டத்திற்கும் பல மாநிலங்களுக்கும் என்னிடம் இப்போது ஆர்டர் வந்து இதுவரை 40 மெஷின்களை செய்து அனுப்பியிருக்கிறேன் என்பதில் பெருமையாக உள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பதால், கிருமிநாசினி நடைபாதைக்கு ஆர்டர்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. வரும் வாரத்தில் மட்டும் 100 நடைபாதைகள் வெளிவரவிருக்கின்றன.

கிருமிநாசினி நடைபாதை மட்டும்தான் நாங்கள் அமைத்துக்கொடுக்கிறோம். சுகாதாரம் என்பதால் அந்தந்த நகராட்சியின் ஹெல்த் ஆஃபிஸர்தான் என்னென்ன கிருமிநாசினியை சேர்க்கலாம் என்று முடிவு செய்வார்.
சாதாரணமாக ஒருவர் நடந்து சென்றால் அவர்களுக்கு அறியாமலேயே கிருமிநாசினி தெளிப்பதுதான் எங்கள் ஐடியா. கையைத் தூக்கிக்கொண்டு நடந்தால் போதும். கையின் இரண்டு பக்கமும் சுற்றிலும் கிருமிநாசினி பட்டு கிருமிகள் அழிந்துவிடும்.

மக்கள் வரும்போது மட்டுமே கிருமிநாசினி தெளிப்பதற்காக சென்சார் தொழில்நுட்பத்தையும் சேர்த்திருக்கிறோம். மக்கள் வரும்போது 30 விநாடிகள் படும்படி அமைத்திருக்கிறோம். 30 விநாடிகளுக்கு யாரும் வரவில்லை என்றால் தானாக ஆஃப் ஆகிவிடும்.

சில இடங்களில் இந்த நடைபாதையை வாங்க ஆர்வமாக ஆர்டர் கொடுக்கிறார்கள். ஒருசில ஊர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை. அங்கெல்லாம் இலவசமாகவே செய்யலாம் என்றிருக்கிறேன்” என்றுகூறி நெகிழவைக்கிறார் வெங்கடேஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here