கொரோனாவுக்கு பிறகு இப்படித்தான் சுழலும் உலகம்!

179

-சு.வீரமணி

உலக வரலாற்றையே புரட்டி எழுதிக் கொண்டிருக்கிறது கொரோனா. உலகின் அத்தனை எல்லைகளும் மூடப்பட்டுக் கிடக்கிறது, ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கிக் கிடக்கிறது. வல்லரசு நாடுகள் என்று நாம் பிரமித்த நாடுகள் எல்லாம் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திகைத்து நிற்கின்றன. வல்லரசான அமெரிக்கவே, உலக நாடுகளிடம் மருந்துப் பொருட்கள் கேட்டு மிரட்டலாக கெஞ்சிக்கொண்டிருக்கிறது.

வல்லரசுகள் தொடங்கி அன்றாட கூலிகள் வரை ஆட்டம் காணவைத்துள்ள கொரோனாவுக்குப் பிறகு இந்த உலகம் எப்படி இருக்கும்? உலகம் முழுவதும் உள்ள வணிகம், பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? பார்ப்போம்.

ஆட்டம் காணும் வல்லரசுகள்

2008-09 ஆண்டு உலக பொருளாதார மந்தநிலை, எபோலோ வைரஸ் தாக்குதல் என்று உலகின் பேரிடர்களின்போது எல்லாம் அமெரிக்காதான் உலக நாடுகளுக்கு பாஸ் போல செயல்பட்டது. ஆனால், இப்போது கொரோனோ வைரஸ் பெருந்தொற்றில் தனது சொந்த நாட்டு பாதிப்பையே சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. உலக நாடுகளிடம் எல்லாம் கொரோனோவுக்கான மருந்துகள், மாஸ்க்குகள் கேட்டு மிரட்டிக் கொண்டிருக்கிறது அந்நாடு.

அமெரிக்காவையே பெரும்பாலும் நம்பியிருந்த இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளின் கதியும் இப்போது அதோ கதிதான். அமெரிக்கா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகள் உட்பட பல வல்லரசு நாடுகளின் அடித்தளமும் இப்போது கொரோனாவால் ஆட்டம் கண்டிருக்கிறது. இந்த நாடுகள் இச்சரிவை சமாளிக்க பல வருடங்கள் பிடிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

இனிவரும் நாட்களில் அமெரிக்கா, சீனா வல்லரசு போட்டி உச்சக்கட்டத்தை எட்டவும், அதில் சீனா முந்தவும் வாய்ப்புள்ளது.

கோடிக்கணக்கானோர் வேலை இழப்பார்கள்!

இனிவரும் காலங்களில் உலகம் முழுவதுமே கொரோனோவால் ஏற்பட்ட முடக்கம் காரணமாக வேலையிழப்புகள் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் கொரோனோ ஊரடங்கு காரணமாக சுமார் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இதற்கு முன்பு 2008-09 பொருளாதார மந்தநிலையின் போது மொத்தமாகவே 8 இலட்சம் பேர்தான் வேலையிழந்தனர். ஆனால், இப்போது முதல் இரண்டு வாரத்திலேயே 7 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்ற செய்தி அமெரிக்கர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் இல்லை கொரோனோ காரணமாக உலக நாடுகள் அனைத்திலுமே பல கோடி பேர் வேலையிழப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் கொரோனோ பாதிப்புகளுக்கு பின்பு 13.6 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது என்று இந்திய வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. பல பெரு, சிறு நிறுவனங்களும் இனிவரும் நாட்களில் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

வங்கிகள் ஸ்தம்பிக்கும்!

இந்திய ரிசர்வ் வங்கி, கொரோனோ பாதிப்பு காரணமாக வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை 5.15 சதவிகிதம் என்ற அளவிலிருந்து 4.4 சதவீதமாக அதிரடியாக குறைத்துள்ளது, இதனால், வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட கடன்களை திரும்ப செலுத்தும் கடன்சுமை குறையும் என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்திலிருந்து 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணமாக ஏற்கனவே மந்தநிலையிலிருந்த இந்திய தொழிற்துறை இனிமேல் மீண்டெழுவது சாதாரணம் இல்லை. இதனால், இனி வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும். இதன் காரணமாக பல வங்கிகள் திவாலாகும் நிலைகூட ஏற்படலாம். பெரிய தொழில்கள் பாதிக்கப்படும்போது, அதனையே நம்பியுள்ள சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும். இதனால், பலகோடி தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழப்பை சந்திப்பார்கள்.

இதனால், வங்கிகளின் தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் உள்ளிட்ட கடன்களின் வசூல் பெரும் சவாலாகும். அதிகரிக்கும் வாராக்கடன் வசூலால் வங்கிகள் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகலாம். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் வங்கிகளின் நிலை இதுதான்.

வாகன சந்தை சரியும்

ஏற்கனவே வாகனச்சந்தை மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து நிற்கிறது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ் 6 ரக வாகனங்கள் விற்பனைக்கு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில் மார்ச் மாதமே கொரோனோ ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தியா முழுவதும் 7 இலட்சம் பிஎஸ் 4 ரக வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இனி கொரோனோ பாதிப்பிலிருந்து மீண்டு வந்தாலும் ஏற்கனவே இருக்கும் வாகனங்களை எப்படி விற்பது, புதிய வாகன உற்பத்தி எந்த நிலையில் இருக்கும் என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது வாகன உற்பத்தித்துறை.

வாகன உற்பத்தி அல்லது விற்பனை துறை பாதிக்கப்பட்டால் அதை சார்ந்து இயங்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் இதே கவலையில்தான் உள்ளனர்.

ஏற்றுமதி & இறக்குமதி சறுக்கும்!

உலகம் முழுவதும் இப்போது ஏற்றுமதி, இறக்குமதி தொழில் அனைத்தும் முடங்கிக் கிடக்கிறது. இதனால், வங்கிக்கடன், மூலதன முடக்கம், சரக்கு முடக்கம், வாராக்கடன் என்று ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மிகப்பெரும் அடியை சந்தித்துக் கொண்டுள்ளனர். நோய்த்தொற்று காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி சேவை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் இது பழைய நிலையை அடைய பல மாதங்கள் ஆகலாம். இல்லையென்றால் ஒருவருடம்கூட ஆகலாம் என்று கணிக்கின்றனர்.

தியேட்டர்கள் & ஷாப்பிங் மால்களில் கூட்டம் குறையும்!

கொரோனோ காரணமாக ஏற்படும் வேலையிழப்புகள், சம்பளக் குறைப்பு காரணமாக மக்கள் தங்களது அன்றாட, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் போராட்டமாக மாறும். இதனால், இனிவரும் காலங்களில் ஆடம்பர செலவுகள், அலங்கார செலவுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கான மவுசு இனி குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், இது சார்ந்த தொழில்களும் பெரும் சரிவடையும். இதனால், மேலும் பல கோடி தொழிலாளர்களுக்கு பணியிழப்பு ஏற்படும்.

வொர்க் ஃப்ரம் ஹோம்!

உலகின் பல நிறுவனங்களும் இப்போதைய கொரோனோ நெருக்கடி காரணமாக தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லியுள்ளனர். இந்த காலத்திலுள்ள செயல்திறனை பார்த்து இனிவரும் காலங்களில் பெரும்பாலான பணிகளை வீட்டிலிருந்து செய்ய நிறுவனங்கள் ஊக்குவிக்கும். இதன் காரணமாக அலுவலக நிர்வாக செலவுகள், பயண செலவுகள் போன்றவை குறையும் என்று நிறுவனங்கள் கணக்கு போடுகின்றன. இதனால், ஐடி துறை, வங்கிகள் உள்ளிட்ட சேவைத்துறையில் ஆன்சைட் வேலைகள் குறையும், ஆன்லைன் வேலைகள் அதிகமாகும்.

மருத்துவத் துறை வளரும்!

இந்த கொரோனோ நெருக்கடி நிலையில் உலக வல்லரசு நாடுகளே மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தத்தளிப்பதை பார்க்கிறோம். அதனால், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நாடும் தங்களின் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும். எனவே, இனிவரும் காலங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்து பணியாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரவும் வாய்ப்புள்ளது. மற்ற தொழிற்துறை சரிவடைந்தாலும், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் சந்தை வளர வாய்ப்புள்ளது.

விவசாயம் செழிக்கும்!

இந்த கொரோனோ காலங்களில் மக்கள் அதிகளவில் உணவுப் பொருட்களுக்காக அலைந்து திரிந்து அனுபவப்பட்டுவிட்டனர். அதனால், இனிவரும் காலங்களில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் பற்றிய சிந்தனை மக்களிடம் வளரலாம். மேலும் விவசாயத்திற்கு மவுசு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் வளரவும், வேளாண் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

கண்காணிப்பு அதிகரிக்கும்!

கொரோனோ காரணமாக இப்போது மக்கள் அனைவருமே அரசின் கண்காணிப்பு வளையத்தில்தான் இருக்கிறோம். இனிவரும் காலங்களிலும் இந்த கண்காணிப்பு அப்படியே தொடர வாய்ப்புள்ளது. மக்கள் கூடுமிடங்கள், பொது இடங்கள், தனியார் இடங்கள் என அனைத்துமே இனி எப்போதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வரலாம். இது மட்டுமல்லாது தனிநபர்கள் ஒவ்வொருவரின் பயண விவரங்கள், இணைய விவரங்கள், செல்போன் விவரங்கள், உடல்நல விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களுமே இனி அரசின் கண்காணிப்பின்கீழ் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. கண்காணிப்பு கருவிகள், உபகரணங்கள் தயாரிக்கும் தொழில்கள் பெருகும், அதற்கான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கு ஆபத்து!

அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பு, ஹெச்1பி விசா ஆகியவற்றில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில், சீனா- அமெரிக்கா வர்த்தகப் போர்க் காலத்தில் விசா பிரச்சனைகள் சற்று தணிந்து இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால், இப்போது கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் இக்காலகட்டத்தில் 5 கோடி பேர் வேலை இழந்துள்ளதாகவும் அதில் 33 இலட்சம் பேர் அரசின் சலுகை கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனால், வெளிநாட்டவர்களுக்கு வேலைவழங்கும் ஹெச்1பி விசா மற்றும் எல்1 விசா வழங்குவதை நிறுத்தவேண்டும் என்று பல அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விமான கட்டணம் குறையும்!

நோய்த்தொற்று பயம், தொழில் முடக்கம், பொருளாதார பேரிடர் காரணமாக தொழில்முறை பயணங்கள் மற்றும் வேலைவாய்ப்பு பயணங்கள் போன்றவை வரும் காலத்தில் பெருமளவு குறையும். இதன்காரணமாக விமானப் போக்குவரத்து துறையில் இருக்கும் நிறுவனங்கள் பெரும் நட்டத்தை சந்திக்கும், பல நிறுவனங்களை முடங்கும் அபாயமும் உண்டு. இதனால், இனிவரும் காலங்களில் விமான டிக்கெட்கள் விலை குறைவதோடு, அந்தந்த நாடுகளின் விசா கெடுபிடிகளும் குறைய வாய்ப்புள்ளது.

சுற்றுலாத்துறை சரியும்!

கொரோனோ பயம் காரணமாக இனிவரும் காலங்களில் உலக சுற்றுலா தொடங்கி உள்நாட்டு, உள்ளூர் சுற்றுலா வரை அனைத்துமே கடுமையான பாதிப்பிற்குள்ளாகும். மக்களிடமும் பணப்புழக்கம் இல்லாது போகும் பட்சத்தில் சுற்றுலா எண்ணம் என்பது மக்களிடம் குறையும். இனிவரும் காலங்களில் பொருளாதாரத்திற்கு சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள நாடுகள், நகரங்கள் நிச்சயமாக பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும். இந்தியாவில் மட்டும் சுற்றுலாத் துறையை நம்பி 5 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனோ காரணமாக இந்தியாவில் மட்டும் சுற்றுலாத்துறைக்கு 9 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி எச்சரிக்கை!

கொரோனா பரவலால் உலகப் பொருளாதாரம் கடும் பாதிப்படைந்துள்ளது. கடந்த சில வாரங்களில், அமெரிக்காவில் 1 கோடி பேரும், ஐரோப்பாவில் 1 கோடி பேரும் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில், உலக பொருளாதாரம், 310 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற முக்கிய வளர்ந்த நாடுகள் கடுமையான பொருளாதார அழிவை சந்திக்கும். கொரோனா வைரஸ் இன்னும் எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்பதை கணிக்க முடியாத சூழலில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், 2021ம் ஆண்டுதான் பொருளாதாரம் சகஜ நிலைக்கு திரும்பும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு அடிமேல் அடி!
அரவிந்த் சுப்ரமணியன் இந்திய முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர்

“கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை 2008இல் உலகை உலுக்கிய உலகளாவிய நிதி நெருக்கடியோடு ஒப்பிடுவது சரியாக இருக்காது. இந்த நெருக்கடி இதற்கு முன்பு உலகளவில் ஏற்பட்ட மற்ற நெருக்கடிகளைவிட மிகப்பெரியது. பொது சுகாதார அவசரநிலையாகத் தொடங்கி, பொருளாதார நடவடிக்கைகளை முடக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ள இந்த கொரோனா வைரஸ், உலகின் பெரும்பான்மை நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கியிருக்கிறது. இதனால், ஏற்படப்போகும் வேலையிழப்புகளும், பொருளாதாரச் சேதங்களும் வரலாறு காணாத அளவுக்குப் பெரிதாக இருக்கும்.

இது ஒரு அசாதாரணமான நெருக்கடி. பொதுவாக பொருளாதார நெருக்கடி என்பது பொருட்களுக்கான கிராக்கி – அளிப்பு சமநிலையில் இல்லாமல் போவதாலும், நிதித் துறை சார்ந்த பிரச்சினைகள் பொருட்களின் உற்பத்தியை பாதிப்பதாலும் ஏற்படும்; பல நேரங்களில் குறிப்பிட்ட சில துறைகள் மட்டும் பாதிக்கப்படும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரசுகள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளால் பல நாடுகளில் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஏற்கனவே வேகமிழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்த பொருளாதாரத்துக்கு, கொரோனாவால் ஏற்படப்போகும் பாதிப்புகள் மிகவும் தீவிரமானதாக இருக்கும். இந்தியாவின் மருத்துவ – சுகாதார அமைப்பு வலுவற்ற ஒன்றாக இருப்பதால், தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளித்து உயிரிழப்புகளைக் குறைப்பதற்குமே பெரியளவில் பொருளாதார வளங்கள் தேவை. மேலும், பொருளாதாரம் முடக்கப்படுவதால் கோடிக்கணக்கான முறைசாராத் தொழிலாளர்கள் நிர்கதியாய் நிற்கும் அவலம் ஏற்படலாம்”

மிகப்பெரிய எமர்ஜென்ஸி!
ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்

“இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய எமர்ஜென்ஸியாக கொரோனா ஊரடங்கு உள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் ஏற்படவிருக்கும் பொருளாதார சிக்கல்களை சரி செய்வது தொடர்பாக, அரசு இப்போதே திட்டமிட வேண்டும். 2008-09 பொருளாதார சரிவு அல்லது நிதி நெருக்கடி ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், அப்போது நம் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல முடிந்தது. நம் நிதி நிலைமையும் அரசு நிதி அமைப்பும் வலுவாக இருந்தன. இவை அனைத்தும் இன்று இல்லாத நிலை உள்ளது.

நாட்டின் ஏழை மக்கள் மற்றும் சம்பளமில்லாத கீழ் நடுத்தர மக்கள் நீண்ட காலமாக வேலை செய்ய முடியாமல் போன நிலையில் இவர்கள் பிழைப்புக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். முக்கியத்துவமற்ற செலவினங்களை அரசு முற்றிலும் தவிர்த்து உடனடித் தேவைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதே வேளையில் முதலீட்டாளர்களுக்கு உறுதி செய்யும் விதமாக தனித்துவமான நிதிக்குழு அமைக்கவேண்டும், இடைக்கால கடனும் வழங்க வேண்டும்.

ஏற்கெனவே சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகின்றன. அவர்கள் தங்களை தக்கவைத்துக் கொள்ள போதிய நிதி ஆதாரங்களின்றி இருப்பார்கள். நம்மிடம் உள்ள குறைந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு அனைவரையும் காப்பாற்ற முடியாது. எனவே, பெரிய நிறுவனங்கள் தங்கள் சப்ளையர்களான சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி புரிய வேண்டும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். மத்திய ரிசர்வ் வங்கி இத்தகைய செயல்பாடுகளைச் செய்ய ஆர்பிஐ சட்டம் மாற்றப்பட வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here