– ராம்சங்கர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். இனிமேலும், “நம்மையெல்லாம் கொரோனா ஒன்றும் செய்யாது” என்று எவரும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. கொரோனா யார், யாரை அதிகம் தொற்றியுள்ளது? அதில் யார், யார் அதிக பாதிப்பை சந்தித்துள்ளார்கள்?
நுரையீரலே நுழைவு வாயில்!
வெளியிலிருந்து நுண்ணுயிர் கள் நமது உடலுக்குள் செல்வதில் சுவாசம் முக்கிய பங்காற்றுகிறது. சாதாரண ஜலதோஷம் கூட ஒருவரிடமிருந்து இன்னொரு வருக்கு வரக்கூடும். அதேபோல்தான் கொரோனாவும். ஆனால், இது ஜலதோஷத்தைக் காட்டிலும் சற்று வீரியம் கொண்டது. எனவே, அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, புகைப்பழக்கம் கொண்டவர்கள் சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். புகை பிடிக்கும்போது அந்த புகையை சுத்திகரித்தே நுரையீரல் ஒய்ந்துவிடுகிறது. அப்போது ஒரு நுண் உயிரி நுழையும்போது அதனைத் தடுக்கும் ஆற்றல் அற்ற ஒன்றாய் நுரையீரல் மாறிடும்.
புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு வராது என்ற அலட்சியம் வேண்டாம். சுற்றுச்சூழல் மாசு, பணிபுரியும் தொழிற்சாலையில் மாசு போன்ற சூழலிலிருந்தவர்களும், மேலும் நுரையீரலுக்கு தொந்தரவு தரும் மூச்சுப்பிடிப்பு, அதீத சளியால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
சர்க்கரை உஷார்!
நீரழிவால் அவதிப்படுபவர்களுக்கு அணுக்கள் செயல்பாடு கள் ஆரோக்கிய மனிதர்களைப் போல இருக்காது. தொற்று நம்மை நோக்கி வரும்போது அதனை எதிர்த்துப் போராடும் ஆற்றல் நீரிழிவு நோயாளிகளுக்கு சற்று குறைவுதான். அதேபோல் பாதிக்கப்பட்ட உடலைச் சீரமைப்பதிலும் தாமதமாகத்தான் செயலாற்றும். எனவேதான், சாதாரண புண் ஏற்பட்டாலே அது சரியாக இயல்பானவர்களை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டால் இன்னும் சிரமம். ஆகையால், இப்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதனைக் கட்டுக்குள் வைத்திடுவது அவசியம்.
இதய பாதிப்புள்ளவர்கள் விலகி இருக்கவும்!
நம் உடலின் முக்கிய பாகம் இதயம். இதய கோளாறு ஏற்பட்டவர்கள் கொரோனாவாலும் பாதிக்கப்படுகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாதிக்கப்பட்ட இதயம் என்பதால் அவை ஆபத்தில் போய் முடியவும் வாய்ப்புகள் உள்ளது.
கர்ப்பிணிகள் கவனம்!
இந்தியாவில் கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தகவல் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால், மற்றவர்களைப் போல் இல்லாமல், இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. காரணம் மருத்துவர்கள் கொரோனாவை கொல்ல வீரியம் கூடிய மருந்துகளைத் தரும்போது அது சிசுவைப் பாதிக்கும் வாய்ப்புகள் ஏராளம். ஆனால், இதுவரை கர்ப்பிணிகளைத் தாக்கிய கொரோனா சிசுக்களை தாக்கவில்லை என்பது ஆறுதலளிக்கும் விஷயம். ஆனால் பிறந்த பின்னர் தாயிடம் தொற்றும் சாத்திய கூறுகள் உள்ளன.
மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் பாகங்களின் செயல்பாடு ஆரோக்கியமாக இருப்பதில்லை. ஆகையால் வருமுன் தடுக்கவும் வந்தபின் சீரமைக்கவும் அவர்களின் உடல் ஒத்துழைக்காது. எனவே, அவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
முதியவர்கள் முக்கியம்!
மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவிகிதம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வயதானவர் களை மட்டுமே தாக்கும் நோய்த் தொற்று என நம்பப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு நடுத்தர வயதினருக்கு பேரிடியாய் உள்ளது. இருப்பினும் இளம் வயதினர் எளிதில் மீண்டு வந்துவிடுவார்கள்.
முதியவர்களை பொறுத்தவரையில் அவர்களின் உடல் மெதுவாகச் செயல்படும். இதனால், கொரோனாஅவர்கள் உடலுக்குள் மிக வேகமாகப் பரவும். அதனைக் கட்டுப்படுத்த வயதானோர்களின் உடல் ஒத்துழைக்காது.
இது குறித்து நம்முடன் பேசிய உயிரியல் நிபுணர் நித்யா, “வைரஸ் நோய்களை தடுக்கும் திறன் இயற்கையாகவே நம் உடலில் உண்டு. எனவே, ஒருவரிடம் எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்புச் சக்திகள் வலுவாக இருக்கிறதா என்பது கேள்வி. இதுபோன்ற அசாதாரணமான சூழலில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை நாம் பலப்படுத்திக் கொள்வது மிக முக்கியமான ஒன்று.
அதற்கு முழுமையான தூக்கம் அவசியம். அதிலும் 8 மணி நேரம் தூக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த உதவும். அனைவரும் தினமும் அவசியம் உணவோடு ஏதேனும் ஒரு காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். வாரத்தில் இரண்டு தினங்களாவது கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி கொண்டது. உடல் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றைத் தூரத் துரத்தும் வல்லமை கொண்டது பூண்டு.
ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு நிகரான ஒன்று மஞ்சள். ரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.
புகையிலை நோய் எதிர்ப்பு சக்தியினை அழிக்கும் மேலும், வைரஸ் பரவும் ஆபத்துக் காலங்களில் நிமோனியாவை வரவழைக்கும். ஆகையால்தான். மது அருந்துவதையும் புகைப்பதையும் குறைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
நோய்களிலேயே பெரும் நோய், நோய் வந்துவிடுமோ என்ற பயம்தான். எனவே, பயத்தை ஒழிப்போம். விழிப்போடு செயல்படுவோம்” என்கிறார் நித்யா.