சும்மா இருப்பது அவ்வளவு சிரமமா?

452

-எம்.கலீல்ரஹ்மான்

சிலரின் அனுபவங்கள்

87 வருடத்தில் இது புதுசு!
பழனியப்பன்

எனக்கு இப்போது 87 வயசாகிறது. என்னுடைய வாழ்க்கையில் இதுபோல் நோய்க்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கிறது இதுதான் முதன்முறை. காய்ச்சல், சளி, இருமல் எல்லாம் சாதாரண நோயாகத்தான் இருந்தது. ஆனால், இதிலிருந்துதான் இந்த கொடூர கொரோனா வைரஸ் பரவுவதாக சொல்கிறார்கள். கேட்கவே பயமாக இருக்கிறது.

நோய் பரவாமல் இருப்பதற்காகத்தான் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள். அதை உணர்ந்தாலும், வீட்டிலேயே இருக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும் வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது இன்னும் சிரமம். டர்க்கி டவலை தண்ணியில் நனைத்து, போர்த்திக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறேன். என்ன செய்ய? வெளியே போனால் நோய் தொற்றிக்கொள்ளும். அதனால் வீட்டிலேயே இருந்து டிவியில் செய்தியை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பொழுதே போகலை. கொஞ்ச நேரம் பேரன் பேத்திகளோடு விளையாடுவேன்.

செலவு மிச்சம், மனசுக்கு நிம்மதி!
திரிபுரசுந்தரி

எனக்கு மூன்று பிள்ளைகள். அவர்களுக்குக் கல்யாணம் கட்டிக்கொடுத்து தனித்தனியா இருக்கிறார்கள். இப்போது நானும் அவரும் மட்டும்தான் வீட்டில் இருக்கிறோம். என்றைக்காவது ஒருநாள் 144 தடை உத்தரவு போடுவார்கள். ஆனால், இம்மாதிரியெல்லாம் இவ்வளவு நாட்கள் ஊரடங்கு உத்தரவு போட்டதில்லை. இதுதான் எனக்கு முதல் அனுபவம்.

ஊரடங்கால் இந்த நாட்களில் பணம் அதிகமாக செலவாகவில்லை. அது மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது. வெளியே எங்கேயும் போகவில்லை. அதேபோல விபத்து, உயிரிழப்பு போன்ற கெட்ட செய்தியை கேட்கவில்லை. ஆனால், கொரோனா நோயால் உயிரிழப்பு என்று கேள்விப்படும்போது மனசுக்கு வேதனையாகத்தான் இருக்கிறது.

என்னுடைய பிள்ளைகளுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் அவர்களை அவங்க அவங்க வீட்டில் பத்திரமாக இருங்கள் என்று சொல்லிவிட்டேன். பொழுதேபோகலைதான். சிலசமயம் கோலம் வரைந்து பார்ப்பேன். இல்லாவிட்டால் தாயம் விளையாடுவேன். வெளியே எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். மொட்டைமாடியில் கொஞ்சநேரம் நடப்போம்.

ஆன்லைனில் வாழ்கிறோம்,
கார்த்திகேயன்

நான் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படிப்பவன். வீட்டிற்குள்ளேயே இருப்பது முதல் இரண்டு மூன்று நாட்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், போகப்போகப் பழகிவிட்டது. இது எனக்குப் புதுமையான அனுபவம்தான். அதேநேரம், இந்த ஊரடங்கு நாட்களில் அம்மா – அப்பாவோடு இருப்பது ரொம்ப சந்தோஷம்.

அம்மா சமைத்து தருகிற சாப்பாட்டை நல்லா சப்பிட்டுவிட்டு, டிவி பார்ப்பது செல்போனில் கேம் விளையாடுவது என்று பொழுதைக் கழிக்கிறேன். ஒரே ஒரு வருத்தம் நண்பர்களோடு ஊர் சுத்த முடியவில்லை என்பதுதான். வெளியே போனால் போலீஸ் அடிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதனால் வீட்டிற்குள்ளேயே இருக்கிறேன்.
எனக்கு இது கஷ்டமாகத் தெரியவில்லை. மற்ற நாட்களில் சாயங்கால வேளையில் நண்பர்கள் எங்கேயாவது சந்தித்துப் பேசுவோம். இப்போது அதுபோல் நேரடியாகச் சந்தித்தது பேசமுடியவில்லை என்றாலும் வீடியோகால் மூலமாகத் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.

நேரம் காலம் இன்றி எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம்; எப்போது வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம்; அதேபோல எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது புதுமையான அனுபவம்தான்.

ஆனந்தம் விளையாடும் வீடு!
மேகலா

நான் பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை. கடந்த ஒன்பது வருடங்களாக விடுதியில் தங்கியே படித்து வருகிறேன். எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் இருந்து இப்போதுதான் அதிக நாட்கள் வீட்டில் தங்கியிருக்கிறேன்.

இந்த ஊரடங்கு நாட்களில் வெளியே எங்கும் செல்லாமல் அம்மா, அப்பா, தங்கையோடு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், எனது தோழிகளுடன் இருப்பது போல ஜாலியாக இருக்க முடியவில்லை. நான் விடுதியில் இருக்கும்போது வகைவகையாக நல்ல உணவுகளை சாப்பிட்டாலும் அம்மா கைப்பட சமைத்த உணவை சாப்பிடுவதில் இருக்கும் சுவையே தனிதான். இந்த பதினைந்து நாட்களிலேயே கொஞ்சம் வெயிட் போட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு நான் வீட்டிலேயே இருப்பதால் அம்மா, அப்பா, தங்கை எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். எனக்கு பிடித்ததை சமைத்து தருகிறார்கள். நானும் வேண்டியதைக் கேட்டு வாங்கி சாப்பிடுகிறேன். நண்பர்கள் நினைவு வந்தால் உடனே போனை போட்டு பேசி பொழுதைக் கழிக்கிறேன். அதேவேளையில், பொழுதுக்கு தூங்கவும் மறப்பதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here