கொரோனா வார்டு ரவுண்ட் – அப்!

182

– எல்லுச்சாமி கார்த்திக்

கொரோனா வைரஸ் பரவலில் பலரும் பெரும் அச்சுறுத்தலாக சொல்வது, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமானால், சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் இடம் இருக்காது என்பதுதான். விரைவில் நலம்பெற வாய்ப்புள்ளவர்கள்கூட சரியான சிகிச்சை கிடைக்காமல் இழப்புகளை சந்திக்கலாம் என்கிறார்கள். எனவேதான், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கொரோனா வார்டுகளையும் படுக்கைகளையும் அதிகமாக தயார்படுத்தி வருகிறது தமிழக அரசு.

எப்படியிருக்கிறது கொரோனா வார்டு?

“கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பதினேழாயிரம் படுக்கை வசதிகளுடன் தமிழகம் தயார் நிலையில் இருக்கிறது” என அண்மையில் அறிவித்திருந்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாதிப்பு எண்ணிக்கை அதிகமானால் படுக்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் அரசு தயார் நிலையில் உள்ளது.

மாநிலம் முழுவதுமுள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளும், கல்லூரிகளும்கூட கொரோனாவுக்கு சிகிச்சை கொடுக்கும் தற்காலிக மருத்துவமனைகளாக மாறத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக நம்முடன் பேசிய, கொரோனா வார்டில் பணியாற்றும் அரசு மருத்துவர் ஒருவர், “ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானால் அவரை இங்கே அழைத்து வருவார்கள். நோயின் அறிகுறிகளை பொறுத்தும், அவர்களது உடல் நிலையை பொறுத்தும் இரண்டு வகையில் இந்த தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. காய்ச்சல் வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு என பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையை பொறுத்து அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

காய்ச்சல், இருமல், தும்மல் மற்றும் சுவாசிப்பதில் லேசான சிரமம் மாதிரியான அறிகுறிகள் இருந்தால் அவர்கள் காய்ச்சலுக்கான சாதாரண வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய சுகாதார துறை மற்றும் ஐசிஎம்ஆர் பரிந்துரைப்படி ஐ.வி.ஃப்ளூயிடகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற மருந்து மாத்திரைகளும் (பேராசிட்டமால், அஸீத்ரோமைசின் போன்ற மாத்திரைகள்), ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த வார்டில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்.

கடுமையான மூச்சுத் திணறல் மாதிரியான சுவாசக் கோளாறு இருப்பவர்களுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேற்கூறிய மருந்துகளை கொடுப்பதோடு செயற்கையாக சுவாசிப்பதற்கான கருவிகளும் பொருத்தப்படும். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் ஐந்து சதவிகிதத்தினர்தான் தற்போதைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

உலக பொது சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி கொரோனா தொற்று பாதிப்புள்ளவர்களுக்கு தனி அறையில் வைத்துதான் சிகிச்சை கொடுக்க வேண்டும். ஆனால், அதற்கு நமது அரசு மருத்துவமனைகளில் சாத்தியமில்லாதல் மூன்று மீட்டர் இடைவெளியில் படுக்கைகளை அமைத்து முழுவதுமாக திரையிட்டு மூடியுள்ளோம். இது தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கான ஏற்பாடு. தொடர்ச்சியாக பதினான்கு நாட்களுக்கு சிகிச்சை கொடுத்த பிறகு மீண்டும் அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படும். அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜாக முடியும். அப்படியில்லை என்றால் பாதிக்கப்பட்டவருக்கு உடல்நிலை சீராகும் வரை சிகிச்சை கொடுக்கப்படும்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளோடு பரிசோதனை முடிவுகள் வராதவர்களும் இந்த வார்டின் மற்றொரு பிரிவில் தனிமை படுத்தப் படுகின்றனர். பாலிமெரஸ் செயின் ரியாக்ஷன் என சொல்லப்படும் பிசிஆர் பரிசோதனைக்கு ரத்தம், உமிழ் நீர் மாதிரியானவற்றை கொண்டு பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகின்றன. தோராயமாக பரிசோதனை முடிவுகள் வர ஒருநாள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினிகளும் தெளிக்கப்படுகின்றன. முறையான பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டு தான் மருத்துவர்களும் செவிலியர்களும் மூன்று ஷிப்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறோம்” என்கிறார்.

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவருக்கு முக கவசம், சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு கவசம், காற்றை சுத்தப்படுத்துவதற்கான ஏர் ப்யூரிஃபயர்கள், பாதிக்கப்பட்டவர் அன்றாட செய்திகளை தெரிந்துகொள்ள நாளிதழ்கள் வழங்கப்படு கின்றன. ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்கான கருவி, நெபுலைசர் கருவிகளும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ளன. சாதாரண வார்டில் இருப்பவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா சிறப்பு வார்டில் காற்றோட்டத்திற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண வார்டுகளில் ஏசி வசதியில்லை. தீவிர சிகிச்சை வார்டில் மருத்துவமனைகளை பொறுத்து ஏசி வசதிகள் இருக்கின்றன.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவு

ஊட்டச்சத்து மருத்துவர்களின் பரிந்துரையின்படி கொரோனா வார்டில் அனுமதிக்க பட்டிருப்பவர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. காலை உணவாக இட்லி, சம்பா கோதுமை உப்புமா, முட்டை மற்றும் பால் வழங்கப்படுகிறது.

மதிய உணவாக சப்பாத்தி, புதினா சாதம், சாம்பார் சாதம், பொறியல், கேரட், பீன்ஸ், முட்டை, மிளகு ரசம், பொட்டுக்கடலை மாதிரியானவை பரிமாறப்படுகிறது.

இரவு உணவாக ரவா கிச்சடி, சப்பாத்தி, வெங்காய சட்னி, குருமா மற்றும் பால் வழங்கப்படுகிறது. அதோடு இஞ்சி மற்றும் எலுமிச்சையை தோலோடு நீரில் கொதிக்க வைத்த நீர் நாளொன்றுக்கு மூன்று முறையும், மஞ்சள் மிளகு போட்டு கொதிக்க வைத்த நீர் இரண்டு முறையும் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here