கொரோனா வைரஸ் பரவல்… இந்தியக் கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்கள்

466

-முனைவர் ம.வ.சீனிவாசன்

உலகத்தில் 185 நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா கல்விரீதியாக பல்வேறு சவால்களை உருவாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி ஏறத்தாழ 150 கோடி குழந்தைகள், 6.3 கோடி ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சில கோடி மற்ற ஊழியர்கள் கொரோனாவால் கற்றல் மற்றும் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தியக் கல்வி அமைப்பு உலகத்திலேயே மிகப்பெரிய ஒன்று என்றால் மிகையாகாது. ஏறத்தாழ 30 கோடி பள்ளிக் குழந்தைகள், இளைஞர்கள் 16 லட்சத்துக்கும் அதிகமான கல்விநிலையங்களில் படிக்கின்றனர். கல்வித் துறையில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆசிரியர்கள், பள்ளி உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். கல்வித் துறையில் படிப்பவர்கள் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட அமெரிக்காவின் மக்கள்தொகைக்கு ஒப்பானது. கல்விநிலையங்களில் கொரோனாவின் பாதிப்பை இதன்மூலம் உணரமுடியும்.

அடுத்த மூன்று மாதங்கள் கல்வித்துறைக்கு முக்கியமானது. ஒருபுறம் படிப்பை முடிக்கும் கல்வியின் பல்வேறு இறுதி வருடத்தில் (10, 12, பட்டம், முதுகலைப் பட்டம், பட்டயம்) குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி, அடுத்த வகுப்புக்கோ உயர்கல்வி நிறுவனங்களில் சேரவோ வகை செய்ய வேண்டும். வேலை தேட, வேலையில் சேர முற்படுவோருக்கு சான்றிதழ்கள் தரப்பட வேண்டும். அதே சமயம் கீழ் வகுப்புகளுக்கு பாடங்களை நடத்தியாக வேண்டும்.

பெற்றோர்களை 6-8 மணி நேரத்துக்கு தினமும் விடுதலை செய்தாக வேண்டும்! நோய் ஒழிப்பு மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டாலும், அரசும் இந்திய சமூகமும் அடுத்த, குறைந்தபட்சம், 12 மாதங்களுக்கு கொரோனாவின் பாதிப்பைக் கற்பித்து குழந்தைகளை, இளைஞர்களை அழைத்துச் சென்றாக வேண்டும். எது முக்கியம்?

திட்டமிடல் அவசியம்

பெரும்பாலான இந்திய கல்வி நிறுவனங்கள் குழந்தைகளை வாகனங்களில் சுற்றியுள்ள கிராமங்கள், நகரங்களின் தெருக்களில் இருந்து, 40-50 கிலோமீட்டர் தூரம் வரை சென்று அழைத்துக் கொண்டு வந்து தங்கள் வகுப்பறைகளில் கற்பிக்கின்றன. ரயில்களில் 100-150 கிலோ மீட்டர் வரை தினமும் வந்து படிக்கின்றவர்களும் உண்டு. கொரோனா வைரஸ் வகுப்பறையில் வந்தால் லட்சக்கணக்கான கிராமங்களுக்கும் நகரத் தெருக்களுக்கும் மிக வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. எனவே கொரோனா தொற்று நோய்க்கு முழுமையான தீர்வு கிடைக்கும்வரை உலகத்திலேயே மிகவும் அதிகமான இளம்வயதினரைக் கொண்ட இந்தியா சரியாகத் திட்டமிடவேண்டும்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோடை விடுமுறை அல்லது பல தேர்வுகளைச் சந்திக்கும் மாதங்கள். என்னைக் கேட்டால் இந்த நாட்களில் கீழ்வகுப்புகளுக்கு இறுதித்தேர்வை சந்திக்காத குழந்தைகளுக்கு இளைஞர்களுக்கு விடுமுறை அளித்துவிடலாம்.

இதன் மூலம் கல்வி நிலையங்கள் வழியாக கொரோனா பரவுவது 75-80 சதவீதம் வரை தடுக்கப்படும். போட்டித்தேர்வுகள், இறுதி வகுப்புத் தேர்வுகளை மட்டும் தக்க பாதுகாப்புடன் வகுப்பறைகளை கிருமி நீக்கம் செய்து ஜூன் மாதத்தில் நடத்தலாம். தொழில்நுட்பம் இதற்கு உதவிசெய்யும்.

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் கொரோனா நோய்க்கான அறிகுறியுடன் தேர்வுகளைச் சந்திக்க வருபவர்களுக்கு தனியாக அறைகளை தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்யலாம். தேர்வு நேரத்தை மாணவர்கள் தகுந்த இடைவெளியுடன் வந்து எழுதுவதற்கான நேரம் கிடைக்கும்படி மாற்றியமைக்கலாம். கூட்டமாக தேர்வு மையத்தில் நுழைவதற்கான சூழலைத் தவிர்க்கலாம். முடிந்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியொரு நாளில் தேர்வுகள் நடத்தலாம். கல்விக்கனவுகளைச் சுமக்கும் குழந்தைகளையும் இளைஞர்களையும் கனிவுடனும் கரிசனத்துடன் பார்க்கும் நாடு இந்தியா என்பதை அவர்களுக்கு உணர்த்தும் தருணமிது.

ஆன்லைன் கல்வி?

தனியார் கல்வி நிறுவனங்களில் அதிகமானவர்கள் படிக்கும் நாடுகளில் இந்தியாதான் உலகிலேயே முதலிடம். இங்குள்ள 80 சதவீதம் கல்லூரிகள், 40 சதவீதம் குழந்தைகள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் தனியாரால் நிர்வகிக்கப்படுபவை. சில கல்வி நிறுவனங்கள், இணையம் மூலமாக பாடங்களை நடத்த ஆரம்பித்துவிட்டதை பெருமையாக டெலிவிஷனில் சொல்லிக் கொள்கின்றன. சில மொபைல் செயலி மூலமாக சொல்லித்தரும் நிறுவனங்கள், தங்களை மேலும் விளம்பரப்படுத்திக்கொள்ள சில நாட்கள் இலவசமாக பாருங்கள் என்று அறிவித்துள்ளன. இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பள்ளிகளில் மின்சார வசதிகூட இல்லாதபோது இந்த அறிவிப்புகள், இந்திய கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் காட்டுகின்றன.

வீட்டில் தொடர்ந்து மின்சார வசதி, இன்டர்நெட், ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் போன்றவை இருக்கும்பட்சத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான தரமான தொலைநிலைக்கல்வி சாத்தியம்.

முதற்கட்டமாக எல்லா அரசு தொலைக்காட்சி சானல்களில் ரேடியோக்களில் குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் வகுப்புரீதியான இந்திய மொழிகளிலும், ஆங்கிலவழியிலும் பாடங்களை நடத்தலாம். ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில்நுட்பக் குழு உதவியுடன் பாடங்களை நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும். தங்கள் வீட்டிலேயே 20-30 நிமிடம் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போனில் பதிவுசெய்து அனுப்பும் காணொலிப் பதிவுகளை அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் ஒப்புதல் அளித்த பின் ஒளிபரப்பலாம்.

தொலைக்காட்சி வகுப்புகள்

அறிவியல் மற்றும் பல செயல்பாடுகள் இன்டர்நெட்டில் குவிந்துகிடக்கின்றன. அவை எந்தெந்த பாடங்களுக்கு உகந்தவை என்பதை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே அடையாளம் கண்டுபிடித்து கலைத்திட்ட குழுவுக்கு அனுப்பினால், அதை மொழிபெயர்த்து மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம். இதனுடன் பாடங்கள் சம்பந்தப்பட்ட சினிமாக்கள், ஆவணப்படங்களை அடையாளம் கண்டு ஒளிபரப்பலாம். இவை எந்த வகுப்பு, எந்த பாடம், கருத்து என்பதையும் தெளிவாக முன்கூட்டி காலஅட்டவணையுடன் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வகுப்பிலும் அடுத்த வகுப்புக்குப் போகும்போது புதிய ஆசிரியர்களை மாணவர்கள் சந்திப்பதால், தொலைக்காட்சியில் புதிய முகங்கள் நடத்தும் பாடங்களை நடத்துவதைப் பார்ப்பதற்கு தயக்கம் இருக்காது என்று தோன்றுகிறது.

பொதுத்தேர்வுகள்

நாம் எல்லோரும் அதிகமாக கவலைப்படுவது 10, 12வது பொதுத்தேர்வுகள். வழக்கமாக பெரும்பாலான பள்ளிகள் அந்த வருடத்துக்கான பாடங்களை ஆகஸ்டு (தனியார்) அக்டோபரில் (அரசு) முடித்துவிட்டு மீதி நாட்கள் ரிவிசன் என்கிற பெயரில் திரும்பத் திரும்ப நடத்தி பொதுத்தேர்வுகளுக்கு குழந்தைகளைத் தயார் செய்கின்றன. என்னைக் கேட்டால் இந்த மூன்று மாதங்கள் விடுமுறையால் பெரிதாக பாதிப்பு எதுவும் வந்துவிடப் போவதில்லை.
அப்படி ஒரு கவலை இருந்தால், ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் 2-3 படங்களையோ தலைப்புகளையோ நீக்கி விட்டு பொதுத்தேர்வு நடத்தலாம். இதனால் பாடத்திட்டரீதியாக பெரிய இழப்பு வந்துவிடப் போவதில்லை. இதனால் குழந்தைகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீதான பாடச்சுமை சற்றே குறையும். மேலும் அக்டோபரில் முடிப்பதற்கு பதிலாக ஜனவரி – பிப்ரவரி வரை பாடங்கள் நடத்தும்படி அறிவுறுத்தலாம்.

ஐந்தாவது வரையிலான ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளைப் பொறுத்தவரை தற்போது கவலைப்பட வேண்டாம். அவர்களிடம் அதிகபட்சமாக நாம் எதிர்பார்ப்பது, அடிப்படை திறன்களான ஏதாவது ஒரு மொழியில் எழுதுவது படிப்பது எளிமையான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை போடுவது. நான்காவது ஐந்தாவது வகுப்புகளில் சற்று சிரமம் பார்க்காமல் 3 மாதங்களுக்கு அப்புறமும் குழந்தைகளுக்கு நம் ஆசிரியர்களால் நடத்திவிட முடியும்.

கட்டணத்தில் சலுகை?

இந்தியாவில் நடுத்தர, மேல்தட்டு வர்க்கம் மட்டுமல்ல வறுமைக்கோட்டுக்கு அருகில் உள்ள குடும்பங்களிலிருந்தும் லட்சக் கணக்கான குழந்தைகள் இளைஞர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள். கொரோனா இவர்களின் இந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. அந்த குடும்பங்கள் புலம்பெயர்ந்து சென்றவர்கள் என்ற பட்சத்தில் இந்த குடும்பங்களின் குழந்தைகள் படிப்பை பாதியில் விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். மீண்டும் வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகலாம்.

கல்வி நிறுவனங்கள் இந்த வரப்போகும் வருடம் மட்டும் கட்டணம் வசூலிப்பதில் சற்றே கரிசனத்துடன் இருக்கலாம். டில்லியில் இப்போதே ஒரு தனியார்கல்வி நிலையம் கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக எந்த சுற்றறிக்கையையும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது! இதுதான் இந்தியாவின் லாபநோக்கற்ற கல்வியின் இன்னொருமுகம்!

ஊதியத்தில் கரிசனம்

உயர்கல்வி பாடப்புத்தக வெளியீட்டாளர்கள் சிலர் தங்கள் வெளியீடுகளை இலவசமாய் இன்டர்நெட்டில் படிக்க அனுமதி வழங்கியிருக்கிறார்கள். போதிய பயிற்சி தராமல் தயார் படுத்தாமல் தொலைநிலைக்கல்வியை ஆசிரியர்கள், குழந்தைகள் மீது திணிக்காமல் மத்திய மாநில அரசுகள் செயல்படவேண்டும். வரும் வருடத்துக்கான கல்வித்துறைக்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ள தொகை முன்னமேயே மிகக்குறைவு.
அது கொரோனா நிதி என்ற பெயரில் காணாமல் போய்விடக்கூடாது. நிறைய தனியார் பள்ளிகளில் / அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு மே, ஜூன் மாதங்களில் சம்பளம் தரப்படுவதில்லை. இந்த வருடம் கல்வி நிறுவனங்கள் கரிசனத்துடன் இருப்பது அவசியம். அவர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் பள்ளி மூடிய நாட்களுக்கான சம்பளம் தருவது அவசியம். மனிதநேயம்மிக்க செயல். “காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது” என்ற வள்ளுவர் கூற்றுக்கு தகுந்த செயல் இது.

கல்வி நிலையங்களில் மருத்துவ வசதி

கொரோனாவிற்குத் தீர்வு கிடைத்த பின் கல்விநிலையங்கள் மருத்துவரீதியிலான பல்வேறு அடிப்படை வசதிகளை உருவாக்க நேரிடலாம். பள்ளி நுழைவாயிலில் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்ய தொழில்துட்பம் வரலாம். காய்ச்சல் சளி போன்றவை இருந்தால், அவர்கள் திருப்பி அனுப்பப்படலாம். ஒவ்வொரு பள்ளிக்கும் மருத்துவ ஆலோசகர்கள் நியமிப்பது கட்டாயமாக்கப்படலாம். குழந்தைகள் வகுப்பறைகளில் உட்காருவதற்கான முறைகள் மாறலாம்.

ஒவ்வொரு பள்ளியும், கல்விநிலையமும் அவை இருக்கும் ஊரின் அரசு, பதிவுபெற்ற தனியார் மருத்துவமனையோடு முறையாக தொடர்பில் இருக்கும்படி, அங்கே படிக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கிய நிலையையும் மாதாமாதம் பதிவுசெய்யும்படி நேரிடலாம். இதற்கு இந்திய அரசுகள் நம் நாட்டுக்குத் தேவையான மருத்துவ ரீதியான அடிப்படை வசதிகளை மேம்படுத்த இப்போதாவது முன்வர வேண்டும்.

குழந்தைகளுக்கு மதிய உணவு

பள்ளி மூடப்பட்ட நிலையில் மதிய உணவு கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளின் வீடுகளில் அரிசி, கோதுமை, பருப்பு பொது விநியோக முறையில், கடைகளில் கொஞ்சம் அதிகமாக தரவேண்டியது, கொண்டுசேர்ப்பது மிக அவசியம். உலகிலேயே ஊட்டச்சத்து குறைவாக உண்ணும் குழந்தைகள் மிக அதிகமான இருக்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. சில குழந்தைகள் பள்ளிக்கு வர விரும்பாமல் நின்றுவிடலாம்.

கொரோனாவிற்குத் தீர்வு கண்ட பிறகு பள்ளிக்கு வராமல் இடைநின்ற குழந்தைகளை பள்ளிக்குக் கூட்டிவருவது ஆசிரியர்களின் இன்னொரு தலையாயக் கடமை. அந்த குழந்தைகளின் பெற்றோர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது சமூகத்தின் தலையாயக் கடமை.

விழிப்புணர்வுப் பயிற்சி

எதிர்வரும் நாட்களில் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் குறிப்பாக கிராமங்களில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா மற்றும் உடல்நலக்கல்வி பற்றிய பயிற்சி விரைவில் தந்தாக வேண்டும். ஏனெனில் நிறைய கிராமங்களில் ஏன் நகரங்களிலும் கூட வெளியூரில் இருந்து சமீபத்தில் வந்தவர்களை கண்மூடித்தனமாக ஒதுக்கிவைக்கும் நடைமுறை தொடங்கிவிட்டது. இதனால் மதுரையில் அநியாயமாக ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாம் அறிந்ததே. பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தூய்மையுடன் இருத்தல், கொரோனாவின் அறிகுறி, அதிலிருந்து காத்துக்கொள்ள வேண்டிய முறைகள், அதையும் மீறி வந்துவிட்டால் மேற்கொண்டு செய்யவேண்டிய மருத்துவ சிகிச்சை பற்றிய முழுமையான கல்வியை குழந்தைகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் கற்றுத்தரவேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

குறிப்பு: கட்டுரையில் உள்ள கருத்துக்கள் எனது தனிப்பட்ட கருத்துக்களே.
கட்டுரையாளர்: முனைவர் ம. வ. சீனிவாசன், பொருளியல் பேராசிரியர், சமூக அறிவியல் கல்வித்துறை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT), புதுடில்லி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here