நம் வாழ்க்கை நம் கையில்!

411

– ஜஸ்டின்துரை

கொரோனாவை வீழ்த்த தமிழகம் தீவிரம்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலில் தமிழகம் இப்போது இரண்டாவது நிலையில்தான் இருக்கிறது; என்றாலும் ‘சமூக பரவல்’ என்னும் மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. எப்படி தடுக்கப் போகிறது தமிழகம்?

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக ஐம்பதுக்கும் மேல் உள்ளது. ஏப்ரல் 14 வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173ஆக அதிகரித்து, நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மாவட்ட வாரியாக பார்க்கும்போது அதிகபட்ச கொரோனா பாதிப்புகள் சென்னை மற்றும் கோவையில் பதிவாகியுள்ளது.

கொரோனா பரவலில் தமிழகம் ‘சமூக பரவல்’ என்னும் மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ள முதலமைச்சர், கொரோனாவை இரண்டாவது நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் நம்பிக்கையளித்துள்ளார். கொரோனா பரவலை மூன்றாவது நிலைக்கு செல்லாமல் எப்படி தடுக்கப் போகிறது தமிழகம்?

எப்படி தடுக்கப் போகிறது தமிழகம்?

மருத்துவர் சென்பாலனிடம் கேட்டோம். “மொத்த நோயாளிகளில் 20-30 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று எங்கிருந்து வந்தது எனக் கண்டறிய முடியாவிட்டால் நாம் சமூகப் பரவல் நிலை எனும் மூன்றாம் நிலையை எட்டி விட்டோம் என்று அர்த்தம்.

நோயின் மூலத்தைக் கண்டறிய முடியாத நோயாளிகளின் சதவீதம் ஆரம்பத்தில் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனடிப் படையில்தான் தமிழக முதலமைச்சர் நாம் மூன்றாம் நிலையை நோக்கி செல்கிறோம் என்று அறிவித்துள்ளார். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைப் பார்க்கும்போது நாம் விரைவில் அந்த நிலையை எட்டிவிடுவோம் என்றே தோன்றுகிறது. மும்பையை பொறுத்தவரை ஏற்கனவே சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதாகக் கருதப்படுகிறது.

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உடைய நாடுகளில் சமூகப் பரவல் ஏற்பட்டால், மந்தை நோய் எதிர்ப்பு (Herd Immunity) மட்டுமே நோயின் பரவலைத் தடுக்கும், வேறு வழிகள் கிடையாது என்பது பரவு நோயியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

சமூகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு வைரஸ் தாக்கி, அதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு, அந்த நோய் எதிர்ப்பு சக்தியால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது தடைபடும். அல்லது பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு பரவுவது தடைபடும். கொரொனா வைரஸைவிட வேகமாகப் பரவும் தட்டம்மை வைரஸின் பரவல் தடுப்பூசி மூலமே முடிவுக்கு வந்தது.

தடுப்பூசி இல்லாத நோய்களுக்கு நோய் தாக்குதல் மூலமாகத்தான் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் வைரஸ் கண் அழற்சி நோயில் இதை நாம் கண்டிருப்போம். திடீரென பரவ ஆரம்பிக்கும். பெரும்பான்மை மக்களைத் தாக்கி நோயை ஏற்படுத்தும். அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற்ற பின் பரவு சங்கிலி அறுந்து அதுவாகவே மறைந்து விடும். அதுபோல கொரொனாவும் பெரும்பான்மை மக்களைத் தாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி அதன் பிறகு மறைந்துவிடும் என்பது பரவு நோய் ஆராய்ச்சியாளரின் கணிப்பாக உள்ளது.

மந்தை நோய் எதிர்ப்பை நம்பும் நிலையில், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது தீவிர பாதிப்பிற்கு ஆளாகும் வகையின் கீழ் உள்ள மக்களின் உடல்நிலை பற்றிதான். வயதானவர்கள், சர்க்கரை நோய் உடையவர்கள், நுரையீரல் பிரச்சினை உடையவர்கள், சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொள்பவர்கள், சமீபத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தோர் போன்றோருக்கு நோய் பரவாமல் தடுக்க நாம் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். முடிந்த அளவு இவர்களுக்கும் மற்ற மனிதர்களுக்குமான தொடர்பைத் துண்டிக்க வேண்டும்.

அதேபோல, சமூகப் பரவல்தான் தொடங்கி விட்டதே எப்படியும் நமக்கு வந்துவிடும், பிறகு எதற்கு இத்தனைக் கட்டுப்பாடுகள் எனக் கவனக்குறைவாக இருப்பதும் ஆபத்தானது. கவனக்குறைவால் குறைந்த கால அளவில் பெருமளவு நோயாளிகளுக்கு நோய் தொற்று பரவி அனைவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனையை நாடும் சூழல் நேரலாம். இதனால் மருத்துவ வசதிகள் அனைவருக்கும் சரிவரக் கிடைக்காமல் இறப்பு விகிதம் அதிகமாகும்.
இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்பதெல்லாம் ஒட்டுமொத்த சமூக பாதிப்பை கணக்கில் கொண்டு கூறப்படும் மருத்துவ வார்த்தைகள். தனிப்பட்ட நபரின் பாதிப்பை பொறுத்தல்ல. எனவே, இவற்றை சுய ஆபத்தாகக் கருதி அதிக பீதியும் அடையத் தேவை இல்லை. அதேநேரம் அலட்சியமும் தேவையில்லை.

முன்னிருப்பதை விட அதிகக் கவனமாக இருந்து இதையும் கடந்து வருவதுதான் நம்முன் இருக்கும் வழி.
மேலும், ‘லாக் டவுன்’ தொடங்கி முதல் 14 நாட்கள் கடந்துவிட்டது. கொரோனா தொற்றின் அதிகபட்ச இன்குபேசன் காலத்தைக் கடந்துவிட்டோம். இனிமேல் கண்டறியப்படும் புதிய தொற்றுகள் அனைத்தும் இந்த ‘லாக் டவுன்’ காலத்தில் பரவியவை எனக் கூறலாம்’’ என்கிறார் அவர்.

ரேபிட் டெஸ்ட் என்றால் என்ன?

தற்போதுள்ள மருத்துவப் பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பதை உடனடியாகக் கண்டறிய முடியாது. ரத்தம் மற்றும் சளி உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே முடிவு தெரியும். மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்வது குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் 19 பரிசோதனை கூடங்கள் இருந்தாலும், ஒரு நாளைக்கு 600 பேர் வரை மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.
தற்போதுவரை 12,746 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரிசோதனை கருவிகள் போதிய அளவு இல்லாத நிலையில், தொற்று பாதிப்பை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கொரோனா நோய் தொற்றுள்ளவர்களை அரை மணி நேரத்தில் சோதனை செய்து கண்டறியக்கூடிய, 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை (Rapid Testing Kit) வாங்க ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு.

ரேபிட் டெஸ்ட் என்றால் என்ன? கொரோனா கண்டறிய இது எப்படி உதவும்? பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.

“தற்போது ஆர்.டி – பிசிஆர் RT-PCR (Reverse Transcriptase Polymerase Chain Reaction) டெஸ்ட் முறையில்தான் கொரோனா இருக்கிறதா இல்லையா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த டெஸ்டில் இருக்கும் சவால் என்னவென்றால், இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில் சமூகப்பரவல் நடந்துள்ளதா என்பதை அறிவதற்கு மேற்சொன்ன பரிசோதனையை செய்தால் நமக்கு ரிசல்ட் கிடைக்க ஒரு நாள் ஆகிறது. கொரோனா வைரஸ் படுவேகமாக பரவுவதால் அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க நமக்கு இன்னும் வேகமான பரிசோதனை முடிவுகள் தேவை.

மேலும், பிசிஆர் டெஸ்ட் காஸ்ட்லியாக இருக்கிறது. ஒரு பரிசோதனைக்கு ரூபாய் 4,500 ஆகிறது. இதைக்கொண்டு லட்சக்கணக்கில் பரிசோதனை செய்தால் கொரோனாவுக்கான நிதி ஒதுக்கீட்டில் கணிசமான பங்கை பரிசோதனைக்கே செலவிட வேண்டிவரும். இதற்கு மாற்றாகவும் துரிதமாக பரிசோதனை செய்ய உதவுவதே ரேபிட் டெஸ்ட்.

இதில் நாம் வைரஸை நேராக பார்க்க மாட்டோம். மாறாக வைரஸ் உள்ளே வந்திருந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் செய்யும் எதிர்வினையைக் கொண்டு நோயின் தன்மையை உடனடியாக அறிய முடியும்.
அதாவது ஒருவரை வைரஸ் தாக்கினால் அந்த வைரஸுக்கு பெயர் ‘ஆண்ட்டிஜென்’ எனப்படும். இவர்கள் வெளியூர் கலவரக்காரர்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு ஊருக்குள் இவர்கள் நுழைந்து விடுகிறார்கள். முதலில் கண்ணில் தெரியும் அனைவரையும் அடிப்பார்கள். திடீரென்று இப்படிப்பட்ட தாக்குதல் நடப்பதால் ஊருக்குள் இருந்து எந்த எதிர்வினையும் இருக்காது.

பிறகு அந்த ஊர் மக்கள் சுதாரித்துக் கொண்டு கலவரக்காரர்களை தடுக்க முற்படுவார்கள். இவர்கள் தான் ‘IgM ஆண்ட்டிபாடிகள். அடுத்து கொஞ்ச நேரம் கழித்து போலீசுக்கு தகவல் கிடைக்கும். போலீஸ் கலவர இடத்திற்கு வந்து அடக்கும். இந்த போலீஸ் தான் ‘IgG’ ஆண்ட்டிபாடிகள். போலீஸ் வந்தவுடன் அந்த ஊர் தாங்கள் எதிர்வினை ஆற்றுவதை நிறுத்திவிட்டு அவரவர் வீடுகளுக்குள் சென்று விடுவார்கள். கலவரம் அடக்கப்படும்.
அந்த கலவரம் முடிந்த பின் கூட அந்த ஊரை கலவரம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அதை ‘ஹாட்ஸ்பாட்’ லிஸ்ட்டில் சேர்த்து அங்கேயே ஒரு போலீஸ் பூத் உருவாக்கி எப்போதும் அங்கு காவலர்கள் இனிவரும் காலங்களிலும் இருந்து கொண்டே இருப்பார்கள் அல்லவா.

இப்போது மேற்சொன்ன விஷயத்தை அப்படியே கொரோனாவுக்கு பொருத்திப்பார்த்தால் இந்த பரிசோதனை எப்படி வேலை செய்கிறது என்று புரிந்துவிடும்.

வெளியிலிருந்து வரும் வெளியூர் கலவரக்காரர்கள்தான் புதிய கொரோனா வைரஸ்கள் (Antigen = nCoV2019). இவை ஊருக்குள் வந்து களேபரம் செய்துகொண்டு இருக்கின்றன. அந்த ஊரிலிருந்து எந்த ஒரு எதிர்வினையும் ஏற்படாத அந்த காலகட்டம்தான் ‘Window Period’. கொரோனா வைரஸ் உள்ளே வந்து ஏழு நாட்கள் வரை நமது எதிர்ப்பு சக்தியிடம் இருந்து எந்த எதிர்வினையும் இருக்காது. இந்த காலத்தை ‘பரிசோதனையில் அறிய முடியா காலம்’ என்று கூறலாம்.

பிறகு கலவரக்காரர்களின் வருகையை அறிந்து வெளியே வரும் அந்த ஊர் மக்கள்தான் ‘IgM’ ஆண்ட்டிபாடிகள். இந்த ஆண்ட்டிபாடிகள் ஏழாவது நாளிலிருந்து 13-வது நாள் வரை ரத்தத்தில் இருக்கும். அதற்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும்.

அடுத்து போலீஸ் வரும். இவைதான் IgG ஆண்ட்டிபாடிகள். பதினான்காவது நாளிலிருந்து ரத்தத்தில் தெரிய ஆரம்பிக்கும். போலீஸ் (IgG) வந்துவிட்டபடியால் அந்த ஊர் மக்கள் (IgM) உள்ளே சென்றுவிடுவார்கள். எனவே, IgM பதின்மூன்றாவது நாளுக்கு பிறகு தெரியாது.

அதற்குப்பிறகு எப்போது ரத்த பரிசோதனை எடுத்தாலும் IgG ஆண்ட்டிபாடி தெரியும். இதுதான் போலீஸ் அந்த ஊரிலேயே ஏற்படுத்தும் செக்யூரிட்டி பூத்துக்கு ஒப்பாகும். எனவே, கொரோனா வைரஸ் உள்ளே நுழைந்து ஏழு நாள் வரை இந்த பரிசோதனையில் கண்டறிய முடியாது என்பது இதன் பாதகம். இருப்பினும் நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு முன்னர் சொன்ன RT-PCR பரிசோதனை செய்தால் பாசிடிவ் என்று அறியமுடியும்.

ஏழு நாட்களிலிருந்து பதின்மூன்று நாட்களுக்குள் பரிசோதனை செய்தால் IgM பாசிடிவ் என்று வரும் (21 நாட்கள் வரை நீடிக்கலாம்). இதில் கோவிட்-19 இல் முக்கியமான பிரச்சினை என்னவென்றால், 0-28 நாட்கள் முழுவதும் ஒரு தொற்றாளர் அவருக்கு அறிகுறி இருந்தாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி, நோயைப்பரப்பும் தன்மையுடன் இருப்பார்.

எனவே, சமூகப் பரவலை அறிவதற்கு நம்மிடம் இருக்கும் எளிய ஆயுதமாக இந்த ரேபிட் கிட்கள் செயல்படும். இதன் மூலம் கண்டறியப்படும் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு அவர்களின் தொடர்புகள் அறியப்பட்டு சங்கிலித்தொடர் அறுக்கப்படும். இதன் மூலம் தமிழகம் எதிர்நோக்கி இருக்கும் ஆபத்தான முழு வீச்சில் பரவும் மூன்றாம் நிலையை நாம் அடைவதை விட்டும் தவிர்த்துக்கொள்ளவும் அல்லது தள்ளிப்போடவும் முடியும்.

செயற்கை நோய் எதிர்ப்பு சக்தி

கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் 80 சதவீத மக்களுக்கு, கொரோனாவுடன் போர் புரிந்ததில் இவர்களது ரத்தத்தில் ‘ஆண்ட்டிபாடிகள்’ உருவாகியிருக்கும். நோய் குணமடைந்தவர்களிடம் இருந்து குணமடைந்த 1 முதல் 2 மாதத்தில் ரத்தத்தில் இருக்கும் இந்த ஆண்ட்டிபாடிகளை எடுத்து இப்போது ஆபத்தான நிலையிலிருக்கும் மக்களுக்கு கொடுத்து நோயின் தன்மையை குறைக்க முடியும். அதன் மூலம் பல உயிர்களுக்கு நீட்சி வழங்க முயற்சி செய்ய முடியும். செயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் இம்முறைக்கு ‘கன்வெலசென்ட் பிளாஸ்மா தெரபி’ (CONVALESCENT PLASMA THERAPY) என்று பெயர். நோய் குணமடைந்த ஒருவரின் உதிரத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை எடுத்து நோயை எதிர்க்க வலுவில்லாதவருக்கு கொடுத்து நோய் தன்மையை குணமாக்குவது.

இந்த முறையை கேரள மாநிலம் உபயோகித்து சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. இதே முறையில் தென் கொரியா, சீனா போன்ற நாடுகள் தங்களது நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் (FDA) இந்த முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இம்முறையிலான சிகிச்சை முக்கிய பங்காற்றும். எனவே, இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் மக்களை அருவருப்புடன் பார்க்க வேண்டாம். அவர்களை ஒதுக்கித்தள்ள வேண்டாம். அவர்களை மனதால் அரவணைப்பது நமக்கான பொறுப்பு.’’ என்கிறார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here