ஆன்லைன் வகுப்புகள்… அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

328

-சுந்தரபுத்தன்

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி மூலம் புதுமை படைத்துவருகிறார்கள் அரசுப் பள்ளி வணிகவியல் ஆசிரியர்கள் கார்த்திக்கேயன் மற்றும் முத்துச்செல்வம். இப்படியும் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட வைத்துள்ளனர் இந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

ஊரடங்கு காரணமாக பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. வீட்டிலேயே வழிகாட்டுதலின்றி மாணவர்கள் தவிக்கும்வேளையில், அவர்களை தேர்வுக்குத் தயார்படுத்தும்விதமாக ஆன்லைனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் இந்த ஆசிரியர்கள். அரசுப் பள்ளி மாணவர்களுடன் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக இருவரும் பயிற்சியளித்துவருகிறார்கள்.

ஆன்லைன் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரான கரூர் மாவட்டம், ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன், “தமிழகம் முழுவதும் உள்ள ஆர்வமுள்ள ஆயிரத்திற்கும் அதிகமான அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி வணிகவியல் பாட ஆசிரியர்களை முதலில் வாட்ஸ்அப் குழுக்களின் மூலமாக ஒன்றிணைத்தோம். அதைத்தொடர்ந்து அவர்களைத் தனித்தனிக் குழுக்களாகப் பிரித்தோம். அடுத்து அவர்களுக்கு ஜூம் கிளவுட் மீட்டிங்ஸ் என்ற அப்ளிகேஷன் உதவியுடன் மடிக்கணினி மூலமாகவும், செல்லிடப்பேசி மூலமாகவும் ஆன்லைன் வழியாக பயிற்சி அளித்துவருகிறோம்” என்றார்.

பயிற்சிபெறும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி வணிகவியல் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே பாடம் சார்ந்த கருத்துக்களை வீடியோக்களாக உருவாக்கி, தங்களுடைய மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குழுக்களின் மூலமாக பகிர்ந்துவருகிறார்கள். மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதிலளித்து வழிகாட்டுவதன் மூலம் அவர்களை தேர்வுக்குத் தயார்படுத்திவருகிறார்கள்.

ஆன்லைனில் பயிற்சியளிக்கும் மற்றொருவர் மதுரை மாவட்டம், மணிநகரம் அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை வணிகவியல் ஆசிரியர் முத்துச் செல்வம், “தமிழக அரசு முதுகலை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கியிருக்கும் விலையில்லா மடிக்கணினி மூலமாகத்தான் எங்களுடைய ஆன்லைன் முயற்சி சாத்தியமானது. இதன்மூலம் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

“மாணவர்களைப் பிரிந்திருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் எப்படி தேர்வுக்கு தயாராவார்களோ என்று பயந்து கொண்டிருந்தோம். இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளின் வழியாக அவர்களைத் தேர்வுக்கு தயார்படுத்திவருவதில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறோம். மாணவர்களும் ஆர்வமுடன் கற்றுக் கொள்கிறார்கள்” என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார் பயிற்சிபெறும் ஆசிரியை வெண்ணிலா. ஆன்லைன் பயிற்சிகளைப் பெறும் மாணவர் இளையராஜாவுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. “பொதுத்தேர்வில் மீதமிருக்கும் கணக்குப்பதிவியல் பாடத்திற்கு எப்படி தயாராவது என்று பயந்து கொண்டிருந்தேன். இந்த வகுப்பின் மூலமாக பயம் போய் நம்பிக்கை அதிகரித்துள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here